Wednesday, November 17, 2010

சத்துணவுக்காக ஒன்றரை கி.மீ


இன்றைய தின மலரில் "சத்துணவுக்காக" ஒன்றரை கி.மீ., தட்டுடன் நடந்து செல்லும் மாணவச் செல்வங்களைப் பற்றி ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

அந்தச் செய்தியின் சுட்டி:
சத்துணவுக்காக 3 கி.மீ., தூரம் நடந்து செல்லும் மாணவர்கள்

ஒரு மந்திரி வருகிறார் என்றால் புதுச் சாலைகள் ஓரிரு நாட்களில் போட முடிந்த இவர்களால், இந்தக் குழந்தைகளுக்கு ஒரு கட்டிடம் அமைத்து தர இயலவில்லை. சரி இந்தக் குழந்தைகளுக்கு செலவு செய்ய நிதி இல்லை போலும்.

ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆனந்த விகடனில் - "கல்விச் சேவையில் தமிழ்நாடு உச்சிக்குப் போய்விட்டது என்று பீற்றிக்கொள்வது எத்தனை அயோக்கியத்தனம்? " என்று கூறியது முற்றிலும் உண்மை.

நன்றி : தினமலர் - புகைப்படம் மற்றும் செய்தி.


Monday, November 15, 2010

சொல்லிக்கொடுத்த பாரதி..


தமிழ் மேல் எனக்கும் ஆர்வம் ஏற்பட காரணம் மகாகவி பாரதியார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டிகளுக்கும், கட்டுரைப் போட்டிகளுக்கும் வேண்டி பாரதியைப் படிக்க ஆரம்பித்தவன் நான். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் கவிதைகள் என்னை ஈர்த்தன.

ஒரு கவிஞராக, காதலராக, போராட்ட குணம் நிரம்பியவராக, தமிழ் ஆர்வம் மிக்கவராக, எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து உயிர்களையும் நேசித்த ஒரு மா மனிதன் பாரதி.

"காக்கை குருவி எங்கள் சாதி
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம் " - என்று நேசித்தவர் பாரதி.

சாதி வெறியும் தீண்டாமையும் மிகுந்திருந்த காலத்தில் 'சாதிகள் இல்லையடி பாப்பா.. ' என்று ஓங்கி குரல் கொடுத்தவர் பாரதி. ஆனால் காலங்கள் மாறியும் இன்னும் சாதிக் கொடுமை தீரவில்லை பாரதி.

இந்தக் கவிதையை யார் படித்தாலும், சிறு மாற்றமாவது மனதில் வரும்.

"தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் மிக வாடித் துன்புற்று பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போல்
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ.. "

"தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" - ஒரு சிறு பொறி கூட ஒரு பெரும் காட்டை அழித்து விடும் என்று அக்னிக் குஞ்சாய் முழங்குகிறார்.

"தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்து விடுவோம்" - என்னும் வரிகளில் அந்த மா மனிதனின் உள்ளம் தெரிகிறது.

இன்னும் நிறைய இருக்கிறது, பாரதியைப் பற்றி எழுத நினைத்தால் எவ்வளவோ வந்து விழுகின்றன.. இன்னும் ஒரு நாள் மற்றொரு பதிவில்...

என்னையும் தமிழை நேசிக்க வைத்த மகா கவிக்கு என் நன்றிகள்.

***************
ஒரே பாரதி புலம்பல் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். நானும் ஒரு சில வரிகள் இங்கு எழுதுகிறேன் என்றால் அதற்கு பாரதியைப் போன்றவர்களும், எனக்கு தமிழ் சொல்லித் தந்த ஆசிரியர்களுமே காரணம். இந்தப் பதிவு எனது நூறாவது பதிவு. இந்நேரத்தில் அவர்களுக்கு இந்தப் பதிவின் மூலமாக என் நன்றிகளையும், இந்த எழுத்துக்களை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கூடவே பயணிக்கும் அனைத்து நண்பர்களுக்கு - என் வணக்கங்களும் நன்றிகளும்.

படம் தந்து உதவிய கூகிளாண்டவருக்கு நன்றி.