Thursday, November 4, 2010

பட்டாசைச் சுட்டு சுட்டு..


நரகாசுரர்கள், கிருஷ்ணர்கள், தீபாவளி போன்றவை பொய் எனக் கூறினாலும்,

அப்படி ஒரு சண்டையே நடக்கவில்லை எனக் கூறினாலும்,

இது திணிப்பு என்று கூறிக் கொண்டாலும்,

பெரிய கடைகளின் விளம்பரங்கள், காசை இழுக்கும் பண்டிகை, கரியாக்கும் பண்டிகை எனச் சொல்லிக் கொண்டாலும்.......................

"ஹை.. புது டிரஸ் நல்லா இருக்குப்பா.. இன்னும் ரெண்டு மத்தாப்பு பெட்டி வாங்கி கொடுங்க " என்ற நச்சரிப்பிற்கும்,

"இந்த தீபாவளிக்கு என் பையன் எடுத்து கொடுத்த புடவை" என்ற மகிழ்ச்சிக்கும்,

"பயிறு பாயசம் சூப்பரா இருக்கு" என்று வயிறு நிறைந்த நிறைவுக்கும்,

"எத்தனை நாள் ஆச்சு.. எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு.." என்பதற்கும்

இது போன்ற சிறு சிறு சந்தோசங்களுக்கு ஆகவேனும் அடுத்த வருடமும் வேண்டும் தீபாவளி.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஒரு பட்டாசுப் பாடல்:

Tuesday, November 2, 2010

புதிய இடம்: சுருளி அருவி



சென்ற வாரத்தில் ஒரு நாள் நண்பனின் திருமணத்துக்காக நிலகோட்டைக்கு நண்பர்கள் சென்றோம். இதுவரைக்கும் செல்லாத இடங்கள். கரூர் டூ மதுரை நெடுஞ்சாலையில் பயணித்து நிலகோட்டையை அடைந்து, மணமக்களை வாழ்த்திய பெரும் வாழ்த்து அட்டைகளையும், ஒலி பெருக்கிகளையும் தாண்டி மண்டபத்துக்குள் நுழைந்தோம். காலை உணவை முடித்து, மணமக்களை வாழ்த்தி ஒரு புகைப்படத்திற்கு சிரித்து விட்டு வெளியே வந்தோம்.

நான் உட்பட நண்பர்கள் நான்கு பேருமே அலுவலுக்கு விடுமுறை போட்டிருப்பதால், வெளியே எங்காவது சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவோம் என்று முடிவு செய்தோம். சாலையை அடைந்து சிலரிடம் 'பக்கத்தில் எங்காவது சுற்றி பார்க்கற மாதிரி இடங்கள் எதாவது இருக்குங்களா ?' என்று கேட்டோம். கும்பக்கரை அருவி, சுருளி அருவி, வைகை என்றார்கள். நண்பனின் அப்பாவிடமும் கேட்டதில் 'சுருளி அருவி நல்லா இருக்கும். அங்க போயிட்டு வாங்க' என்றார். எங்கள் வண்டி சுருளி அருவியை நோக்கிப் பயணித்தது.



நீண்ட நாட்களுக்குப் பின்னர் நண்பர்கள் அனைவரும் வெளியே செல்வதால் சந்தோசமாக இருந்தது. வழியில் தோன்றிய வழிகாட்டிகளையும், மக்களிடமும் கேட்டு அருவியை அடைந்தோம். தமிழ்நாடு இன்னும் முழுதாக விவசாயத்தை விட்டு விடவில்லை என வழியில் இருந்த வயல்களும், கதிர்களை அறுத்து சாலையில் போட்டிருந்ததும் பறைசாற்றின.



வழியில் ஒரு பெரியவரிடம் கேட்க, வழியைச் சொன்ன அவர் மேலும் 'தம்பி, தப்பா நெனச்சுக்காதிங்க. சில பேரு வந்து தண்ணில விழுந்து பிரச்னை ஆகிடுது, எங்கயோ இருந்து வர்ரிங்க. பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க' என்றார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினோம். எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு பதிவில் 'அவ்வப்போது வழியில் தோன்றும் மனித மேன்மை கூசச் செய்கிறது' என்று கூறியிருந்தார். அப்படிதான் எங்களுக்கும் தோன்றியது.



அருவிக்கு கொஞ்சம் முன்னால் திராட்சைத் தோட்டங்கள் நிரம்பிய சாலையில் ஒரு அம்மா திராட்சைக் கூடையோடு அமர்ந்திருக்க ஒரு ரெண்டு கிலோ வாங்கி கொண்டு புறப்பட்டோம். நாங்கள் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கியதும், அங்கே இருந்த குரங்கார்கள் எங்களை நோக்கின. அருவிக்கு கொஞ்ச தூரம் இறங்கி நடக்க வேண்டும் என்பதால், கொஞ்சம் திராட்சை கொத்துகளை கையில் எடுத்துக் கொண்டு நடந்தோம். எங்களையே முறைத்துக் கொண்டு நான்கைந்து குரங்குகள் வந்து கொண்டிருந்தன, திராட்சைக்கு தான் வருகிறார்கள் என்று புரிந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு நடந்தோம். கொத்தை எடுத்த குரங்குகள், அழகாக ஒவ்வொரு திராட்சையாக திங்க ஆரம்பித்தன.



அருவி, ஆறு, ரயில், மழை, மலை, யானை போன்றவை எவ்வளவு தடவை பார்த்தாலும் சலிக்காது என்பார்கள். மழைக் காலம் என்பதால் தண்ணீர் நிறைய வருவதாகச் சொன்னார்கள். சிறிய அருவி, ஆனால் வேகம் அதிகம். மொத்து மொத்தென்ற விழுந்த குளிர் தண்ணீரில் நடுங்கிக் கொண்டே குளித்தோம்.



ஒரு அரை மணித் துளிகள் அருவியில் நனைந்து விட்டு வண்டிக்கு வந்தால் நம் குரங்குகள் மேலே ஏறி விளையாடியதில் முன் கண்ணாடி முழுவதும் மண்ணும், துப்பப்பட்ட திராட்சைத் தோல்களும் ஒட்டி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைப் பிடித்து வந்து கழுவி விட்டு கிளம்பினோம்.

ஒரு கடையில் சாப்பிட்டு விட்டு, வீடுகளுக்கு கொஞ்சம் சேர்த்து திராட்சைகளை வாங்கி விட்டு, திராட்சைத் தோட்டக்காரரிடம் கேட்டு தோட்டத்தை சுற்றிப் பார்த்து விட்டு, கூடுகளை நோக்கித் திரும்பும் பறவைகளாக வீடுகளை நோக்கிப் பயணித்தோம்.



(அருவிக்கு அருகில் இருந்த ஒரு பெரும் மாமரம்)