Tuesday, November 2, 2010

புதிய இடம்: சுருளி அருவி



சென்ற வாரத்தில் ஒரு நாள் நண்பனின் திருமணத்துக்காக நிலகோட்டைக்கு நண்பர்கள் சென்றோம். இதுவரைக்கும் செல்லாத இடங்கள். கரூர் டூ மதுரை நெடுஞ்சாலையில் பயணித்து நிலகோட்டையை அடைந்து, மணமக்களை வாழ்த்திய பெரும் வாழ்த்து அட்டைகளையும், ஒலி பெருக்கிகளையும் தாண்டி மண்டபத்துக்குள் நுழைந்தோம். காலை உணவை முடித்து, மணமக்களை வாழ்த்தி ஒரு புகைப்படத்திற்கு சிரித்து விட்டு வெளியே வந்தோம்.

நான் உட்பட நண்பர்கள் நான்கு பேருமே அலுவலுக்கு விடுமுறை போட்டிருப்பதால், வெளியே எங்காவது சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவோம் என்று முடிவு செய்தோம். சாலையை அடைந்து சிலரிடம் 'பக்கத்தில் எங்காவது சுற்றி பார்க்கற மாதிரி இடங்கள் எதாவது இருக்குங்களா ?' என்று கேட்டோம். கும்பக்கரை அருவி, சுருளி அருவி, வைகை என்றார்கள். நண்பனின் அப்பாவிடமும் கேட்டதில் 'சுருளி அருவி நல்லா இருக்கும். அங்க போயிட்டு வாங்க' என்றார். எங்கள் வண்டி சுருளி அருவியை நோக்கிப் பயணித்தது.



நீண்ட நாட்களுக்குப் பின்னர் நண்பர்கள் அனைவரும் வெளியே செல்வதால் சந்தோசமாக இருந்தது. வழியில் தோன்றிய வழிகாட்டிகளையும், மக்களிடமும் கேட்டு அருவியை அடைந்தோம். தமிழ்நாடு இன்னும் முழுதாக விவசாயத்தை விட்டு விடவில்லை என வழியில் இருந்த வயல்களும், கதிர்களை அறுத்து சாலையில் போட்டிருந்ததும் பறைசாற்றின.



வழியில் ஒரு பெரியவரிடம் கேட்க, வழியைச் சொன்ன அவர் மேலும் 'தம்பி, தப்பா நெனச்சுக்காதிங்க. சில பேரு வந்து தண்ணில விழுந்து பிரச்னை ஆகிடுது, எங்கயோ இருந்து வர்ரிங்க. பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க' என்றார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினோம். எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு பதிவில் 'அவ்வப்போது வழியில் தோன்றும் மனித மேன்மை கூசச் செய்கிறது' என்று கூறியிருந்தார். அப்படிதான் எங்களுக்கும் தோன்றியது.



அருவிக்கு கொஞ்சம் முன்னால் திராட்சைத் தோட்டங்கள் நிரம்பிய சாலையில் ஒரு அம்மா திராட்சைக் கூடையோடு அமர்ந்திருக்க ஒரு ரெண்டு கிலோ வாங்கி கொண்டு புறப்பட்டோம். நாங்கள் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கியதும், அங்கே இருந்த குரங்கார்கள் எங்களை நோக்கின. அருவிக்கு கொஞ்ச தூரம் இறங்கி நடக்க வேண்டும் என்பதால், கொஞ்சம் திராட்சை கொத்துகளை கையில் எடுத்துக் கொண்டு நடந்தோம். எங்களையே முறைத்துக் கொண்டு நான்கைந்து குரங்குகள் வந்து கொண்டிருந்தன, திராட்சைக்கு தான் வருகிறார்கள் என்று புரிந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு நடந்தோம். கொத்தை எடுத்த குரங்குகள், அழகாக ஒவ்வொரு திராட்சையாக திங்க ஆரம்பித்தன.



அருவி, ஆறு, ரயில், மழை, மலை, யானை போன்றவை எவ்வளவு தடவை பார்த்தாலும் சலிக்காது என்பார்கள். மழைக் காலம் என்பதால் தண்ணீர் நிறைய வருவதாகச் சொன்னார்கள். சிறிய அருவி, ஆனால் வேகம் அதிகம். மொத்து மொத்தென்ற விழுந்த குளிர் தண்ணீரில் நடுங்கிக் கொண்டே குளித்தோம்.



ஒரு அரை மணித் துளிகள் அருவியில் நனைந்து விட்டு வண்டிக்கு வந்தால் நம் குரங்குகள் மேலே ஏறி விளையாடியதில் முன் கண்ணாடி முழுவதும் மண்ணும், துப்பப்பட்ட திராட்சைத் தோல்களும் ஒட்டி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைப் பிடித்து வந்து கழுவி விட்டு கிளம்பினோம்.

ஒரு கடையில் சாப்பிட்டு விட்டு, வீடுகளுக்கு கொஞ்சம் சேர்த்து திராட்சைகளை வாங்கி விட்டு, திராட்சைத் தோட்டக்காரரிடம் கேட்டு தோட்டத்தை சுற்றிப் பார்த்து விட்டு, கூடுகளை நோக்கித் திரும்பும் பறவைகளாக வீடுகளை நோக்கிப் பயணித்தோம்.



(அருவிக்கு அருகில் இருந்த ஒரு பெரும் மாமரம்)


Sunday, October 31, 2010

சின்னஞ்சிறு துளிகள் (31/10/2010)

விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் ஒருவர் பள்ளிகளில் கழிப்பறை இல்லாததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். தனியார் பள்ளியோ, அரசுப் பள்ளியோ முறையாக எந்தப் பள்ளிகளிலும் கழிவறை வசதிகள் இல்லை. அரசுப் பள்ளிகளில் இன்னும் கொடுமை. அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அந்த நரகத்தைப் பற்றி. பசங்கள் கூட பரவாயில்லை, கொஞ்சம் பெரிய பெண்கள் எல்லாம் என்ன செய்வார்கள்?. எவ்வளவோ இலவசங்களை அள்ளி வழங்கும் அரசுகள் கொஞ்சம் கவனித்தால் நமது செல்வங்கள், பள்ளியில் ஒரு பிரச்சனையிலிருந்து தப்பி விடுவார்கள்.

********************************

தன்னை பாதித்த சம்பவமாக ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆனந்த விகடனில்;

"ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வைத்தியனாதபுரம் என்ற கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளி ஒன்று இயங்குகிறது. வெறும் பத்துக்குப் பத்து அறையில் ஒன்று முதல் ஆறு வகுப்பு வரையிலும் 25 மாணவர்கள் படிக்கின்றனர். எல்லோரும் ஒரே அறையில்தான் அமர்ந்திருக்க வேண்டும். ஒரு மேசை, நாற்காலி கூடக் கிடையாது. மிக மிகக் குறைந்த சம்பளத்தில் அந்தப் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியை வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார். 'ஒரே அறையில் ஆறு வகுப்பு மாணவர்களையும் எப்படிச் சமாளிப்பீர்கள்?' என்று அவரிடம் கேட்டேன். 'ஒன்று, இரண்டாம் வகுப்பினருக்கு போர்டில் எழுதிப்போட்டு படிக்கச் சொல்வேன். மூன்று, நான்காம் வகுப்பினரை எதிர் திசையில் திரும்பி அமர்ந்து படிக்கச் சொல்வேன். ஐந்து ஆறாம் வகுப்பு மாணவர்களை மற்ற திசையில் திரும்பி அமரச் சொல்லி நான் பாடம் நடத்துவேன்' என்றார். கல்விச் சேவையில் தமிழ்நாடு உச்சிக்குப் போய்விட்டது என்று பீற்றிக்கொள்வது எத்தனை அயோக்கியத்தனம்? "

********************************

கோவையில் இரண்டு குழந்தைகளை கடத்திக் கொண்டு போய் வாய்க்காலில் தள்ளி விட்டு வந்துள்ளான் ஒருவன். பள்ளிக்கு கூட்டிச் செல்லும் கால் டாக்ஸி மூலம் அவன் அவர்களைக் கடத்திக் கொண்டு போயுள்ளான். பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் இக்கட்டான சூழலில் தப்பிக்க வழி முறைகளைச் சொல்லிக் கொடுக்கலாம். முன் பின் தெரியாத ஒருவன் வெளியே எங்கேனும் கூப்பிட்டால் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தலாம். பாவம் அந்தக் குழந்தைகள். ஒரு குழந்தையின் உடல் கிடைத்து விட, இன்னொரு குழந்தையின் உடலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

செல் போனால் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அந்தக் குழந்தைகளை கடத்தியவனை காட்டிக் கொடுத்தது செல் போன் தான். அவனைப் பிடிப்பதற்குள் வாய்க்காலில் தள்ளி விட்டான். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கடத்தப்பட்ட சிறுவனை வழியில் காட்டிக் கொடுத்ததும் செல் போன் தான்.

********************************

ஒரு நாள் காலையில் தொலைக்காட்சியில் ஜெயலலிதா அம்மா ஒரு பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தார். சிக்கென்ற உடையில் பினனால் சிறகுகள் போன்ற அலங்காரத்துடன் ஆடிக் கொண்டிருந்த அந்த பாடலை வீட்டில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த போது 'இப்போ இந்த பாட்டை அம்மா பார்த்துட்டு இருந்தாங்கன்னா என்ன நெனப்பாங்க' என்றேன். அப்போ தங்கமணி 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு நெனப்பாங்க' என்று ஒரே போடா போட்டாங்க பாருங்க, ஒரே சிரிப்பு மழைதான்.

********************************

என்னைப் பாதித்த சின்ன விடயங்கள் பற்றி இனி எழுதலாம் என்று நினைக்கிறேன். இதே தலைப்பை வேறு யாராவது வைத்திருந்தால், எனக்குத் தெரியப்படுத்தவும். நான் மாற்றிக் கொள்கிறேன். நன்றி.