Friday, August 2, 2024

காட்டில் உரிமை - மகாசுவேதா தேவி

நாடு, ஊர் என்ற பிரிவினை இல்லா காலத்தில் ஒரு பழங்குடி பரந்து விரிந்த காட்டில் ஒரு முளைக் குச்சியை அடித்து, தனது எல்லையை நிறுவி அங்கே தனது குடும்பத்தை நடத்துகிறான். பின்னர் அவன் குலம் பெருக அவ்விடம் ஊராக, கிராமமாக பிரபலம் அடைகிறது. அதன் பின்னர் அரசாங்கமும், பணக்கார மனிதர்களும், வட்டிக்கு விடுபவர்களும் அவர்களின் நிலத்தை அபகரிக்கிறார்கள். தன் நிலமும், அதில் செய்த விவசாயம் மட்டுமே அறிந்த அந்தப் பழங்குடிகள் பின்னர்  என்ன செய்வார்கள்?. 



தங்கள் சுயத்தை மீட்க அதிகாரத்தின் மேல் போருக்குச் சென்ற பழங்குடிகள் பற்றிய உண்மைக் கதை காட்டில் உரிமை. நம் நாட்டை பிரிட்டிஷ் மன்னர்கள் ஆண்ட 18ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் நிகழ்ந்தது. 

முண்டா பழங்குடிகளிடம் இருந்து நிலத்தை அபகரித்துக் கொள்கிறார்கள் ஜமீன்தார்கள், வட்டிக்கு பணம் குடுக்கும் லேவாதேவி ஆட்கள், மற்றும் ஆங்கிலேயர். ஆங்கிலம் தெரியாத முண்டாக்கள் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தாலும் வெல்ல முடிவதில்லை. மேலும் வழக்கு தொடுத்த காரணத்துக்காக மேலும் மேலும்  இன்னல்களையே சந்திக்கிறார்கள். உதாரணத்துக்கு, முன்பு தன் நிலமாக இருந்து இப்போது  ஜமீன்தாரின் உடமையாக இருக்கும் நிலத்தில் காலம் முழுதும் கூலி இல்லாமல் வேலை செய்யவேண்டும். வழக்காட மொழியும் தெரியாமல், நீதியும் கிடைக்காமல் வறுமையிலேயே இருக்க வேண்டிய சூழல். தெரியாமல் அவசரத்துக்கு வட்டிக்கு பணம் வாங்கி விட்டால், இருக்கும் சுதந்திரமும் போய் விடுகிறது. 

ஒரு காலத்தில் மூன்று வேலையும் அரிசி சோறு உண்ட முண்டா பழங்குடிகளுக்கு, இப்பொழுது காட்டோ எனப்படும் கஞ்சிதான் உணவு. அரிசி சோறு கிடைப்பதே இல்லை. இந்தச் சூழலில் தான் பீர்ஸா முண்டா பிறக்கிறான். அவன் பிறக்கும்போதே நல்ல சகுனங்கள் தோன்றியது என மக்கள் பேசுகிறார்கள். கிறித்துவ மிஷனில் கல்வி கற்கும் பீர்ஸா முழுதும் முடிக்காமல் அங்கே இருந்து வெளியேறுகிறான். முண்டா குடிகளைப் பற்றி அங்கே இருக்கும் பாதிரியார் தரக்குறைவான வார்த்தைகளை விட வெகுண்டு வெளியேறுகிறான். நன்றாக படிக்கும் மாணவனான பீர்ஸா பின்னர் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. 





"சுதந்திரம் இல்லாமல் இருக்கும் நமக்கு மத கொண்டாட்டமோ, விழாக்களோ எதுவுமே தேவை இல்லை. யாருக்கும் அடிமையாக இல்லாத முண்டாவே நமது கனவு." எனக் கூறும் பீர்ஸா தன்னுடைய புதிய வழிக்கு பீர்ஸாயித் எனப் பெயரிடுகிறான். அவன் இப்பொழுது பகவான் என்று அழைக்கப்படுகிறான். அவனின் ஒரு சொல்லுக்கு அந்த சமூகம் காத்திருக்கிறது. அவனின் தந்தையான சுகானாவுக்கு தன் மகன் பகவான் ஆனதில் சந்தோசம். பகவானின் தந்தையான அவனுக்கு ஊரில் இப்பொழுது பெரிய மரியாதை. ஆனால் தாய் கருமிக்கோ தன் மகன் தன்னை விட்டுப் போய்விடுவான் என அழுகிறாள். சேர்த்து வைத்த செல்வம் போல் இருந்த மகன் கைவிட்டுப் போய் விடுவானோ எனப் புலம்புகிறாள் முண்டாவின் தாய். 

ஒரு டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் முண்டாக்கள் பீர்ஸாவின் தலைமையில் காவல் துறையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கிறார்கள். துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், வாகனங்கள் கொண்ட காவல் துறையின் மீது முண்டாக்கள் சிறு அம்புகள் கொண்ட வில்லுடன் போரிடுகிறார்கள். அரசு இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்குகிறது. பீர்ஸா சிலருடன் காட்டுக்குள் சென்று ஒளிகிறான். ஒவ்வொரு கிராமங்கள் தோறும் அவனை சல்லடை போட்டுத் தேடுகிறார்கள். முண்டாக்களின் வீட்டில் உள்ள தானியங்கள், அரிசி, நிலத்தின் பட்டா என எல்லாவற்றையும் அபகரிக்கிறார்கள். 

பீர்ஸா பொறி வைத்து பிடிக்கப்படுகிறான். சிறையில் யாருடனும் பேச முடியாமல் தனிமைச் சிறையில் வைக்கப்படுகிறான். கை கால்களில் கட்டி இருக்கும் இரும்புச் சங்கிலிகளை அந்த சின்ன இடத்தில் அவன் இழுத்து நடக்கும் ஓசையே அவனின் பேச்சு. ஒருநாள் அச்சத்தம் நின்று போய்விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் சிறையில் தண்டிக்கப்பட்டு காலரா பாதித்து இறந்ததாகச் சொல்லி பீர்ஸாவின் உடலை யாருக்கும் தெரியாமல் எரித்து விடுகிறது ஆங்கிலேய காவல்துறை. விசாரணை கைதியாகவே முண்டாக்களின் பகவான் இறந்து போகிறான். 

பீர்ஸாவுக்கு முன்பே தன்னை இவர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பது தெரிந்திருந்தது. தன்னைச் சேர்ந்தவர்களிடம் எதற்கும் பயப்பட வேண்டாம், முண்டா ஒருநாளும் பயப்பட மாட்டான், நான் இல்லையென்றாலும் நமது போராட்டமான உல்குலான் நடக்கும் எனச் சொல்கிறான். 

வரலாற்றில் முண்டா கலகம் எனக் குறிக்கப்படும் இந்நிகழ்ச்சி சுதந்திரத்துக்கு முன்பு நடந்தது. இக்கலகத்தை ஆட்சியாளர்கள் அப்பொழுதே அடக்கி விட்டாலும், நாம் ஏன் இப்படி இருக்கிறோம், நமது உரிமைகள் என்ன, சுதந்திரத்தின் அருமை என்ன மக்கள் உணர்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. 

காட்டில் உரிமை கதை, தன் மக்கள் படும் துயரம் தாளாமல் அரசாங்கத்தை நோக்கி போர் தொடுத்த ஒரு மாவீரனின் வரலாறு. 


காட்டில் உரிமை - மகாசுவேதா தேவி
சாகித்திய அகாதெமி 
தமிழாக்கம்: சு. கிருஷ்ணமூர்த்தி 


No comments:

Post a Comment