Monday, October 2, 2023

படையல் - ஜெயமோகன்

மதுரையை நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தை களமாக வைத்து ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு படையல். மராட்டியர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் என தொடர்ந்து படையெடுப்பு நடத்திய காலம். நாயக்கர் ஆட்சி சிறப்பாக நடந்தாலும் தொடர்ந்த போரின் விளைவாக அதிகாரத்தை கைப்பற்ற போராட்டம், அதிக  வரி என மக்கள் சந்திக்கும் இன்னல்கள் அதிகம். இந்தத் தொகுப்பில் ஜெயமோகன் ஆறு கதைகளை எழுதியுள்ளார். 


கந்தர்வன் 



மழை இல்லாமல் விளைச்சல் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அரசோ வரியை அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. விளைச்சல் இல்லாத காலத்தில் வரியை எப்படி கொடுப்பது எனத் தெரியாமல் மக்கள் திணறுகிறார்கள். மன்னனிடம் சொல்லலாம் என்றால் சுத்தியிருந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் மன்னன் அருகில் நெருங்க விடவே இல்லை. ஓலை கொண்டு செல்லும் நபர்களைத் தண்டித்தும், சில ஆட்களை கொன்றும் விடுகிறார்கள். 

மிகுந்த பக்தியுள்ள நாயக்க மன்னன் நல்லவன் தான். குறைகளை சொன்னால் வரியைக் குறைப்பான். ஆனால் அவனைச் சந்திக்க சுற்றி இருப்பவர்கள் விடுவதில்லை. எனவே ஊர்த் தலைவர்கள் சேர்ந்து மன்னன் முன்னால் யாராவது கையில் ஓலையுடன்  விழுந்து தற்கொலை செய்ய வேண்டும் எனச் சொல்கிறார்கள். பின்னர் மன்னன் நிச்சயம் காது கொடுத்து கேட்பான். 

தாய்தந்தை இல்லாமல் கோவிலில் வளர்ந்து வரும் அணைஞ்ச பெருமாளிடம் சொல்கிறார்கள். நல்ல உடற்கட்டுடனும், தைரியமும் உள்ள அவன் சரியென்கிறான். மன்னன் கோவிலுக்கு வரும்போது கோபுரத்தில் இருந்து விழ வேண்டும் என்பது திட்டம். வரியே கட்டாத  அவன் விழுந்தால் பிரச்சினை வருமென்பதால் அவனை அந்த ஊரில் அரிசிக்கடை வைத்திருக்கும் முருகப்பன் எனச் சொல்லிவிடலாம் எனத் தீர்மானிக்கிறார்கள். 

முருகப்பன் தன் மனைவி வள்ளியம்மையை திட்டிக்கொண்டே இருக்கிறான். கோவிலில் இருக்கும் அணைஞ்ச பெருமாளை அவள் நினைத்துக்கொள்வதாக எண்ணித் திட்டுகிறான். நல்ல திடகாத்திரமாக இருக்கும் அணைஞ்ச பெருமாளை ஊரில் உள்ள எல்லாப் பெண்களும் தான் கண்கொண்டு பார்க்கிறார்கள்.  திரும்ப திரும்ப அவன் பெருமாளுடன் தொடர்பு படுத்தி பேசுவதால், "அதனால் என்ன" என்று கேட்கும் வள்ளியம்மையை அவன் அடித்தும் விடுகிறான். 

திட்டமிட்டபடி அணைஞ்ச பெருமாள் கோபுரத்தில் இருந்து மன்னன் முன் வீழ்ந்து உயிர் துறக்கிறான். ஒரு கந்தர்வன் பறந்து வருவது போல கீழே வந்து மரணிக்கிறான். மன்னன்  அவன் கையில் இருந்த ஓலையை வாங்கிப் பார்த்து, இவனுக்கு இறுதி மரியாதையை சிறப்பாகச் செய்யுங்கள், மற்ற விஷயங்கள் கண்டிப்பாக விசாரிக்கப்படும் என்று சொல்லிவிட்டு திரும்பிச் செல்கிறான். அவன் வீர மரணம் அடைந்ததால் கல் நட்டு வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள் அவனின் கூட்டத்தார். இறந்தது முருகப்பன் என்பதால் அவன் மனைவி வள்ளியம்மையை கூட்டி வருகிறார்கள். கதறிக்கொண்டே வரும் அவள், அணைஞ்ச பெருமாள் உடலைப் பார்த்ததும் திகைத்து நிற்கிறாள். உடலுக்கு சிதை மூட்டியதும் அவளும் உடன் சிதையில் குதித்து அவனைத் தழுவிக்கொண்டு இறக்கிறாள். முருகப்பன் ஊரைச் சேர்ந்தவர்கள் திகைத்து நிற்கிறார்கள். 

கோபுரத்தில் இருந்து விழுந்தவன் எறிமாடனாகவும், அவனுடன் சிதையேறிய மனைவி உடன் நின்ற நங்கையாகவும் கோவில் கொண்டு மக்களால் வணங்கப்படுகிறார்கள். 


யட்சன் 

கந்தர்வன் கதையின் தொடர்ச்சியாக யட்சன் கதை. இப்பொழுது இறந்தது முருகப்பன். ஆனால் அவன் உயிரோடு இருக்கிறான். மனைவி சிதையேறிவிட்டாள் என்பதை அறிந்து திகைக்கிறான். அவன் ஊரைச் சேர்ந்த சிலர், 'நீ உயிரோடு இருப்பதால்  கோபுரத்தில் இருந்து குதிக்கச் சொன்னவர்களுக்கு பிரச்சினை வரும். எனவே அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள் ' எனச் சொல்லவும் அவன் பயப்பட்டு ஊரை விட்டு போய்விடுகிறான். 

முருகப்பன் போன இடத்தில் நன்கு சம்பாதிக்கிறான். தாசிப் பெண்டிருக்கு எல்லாப் பணத்தையும் செலவழிக்கிறான். பெண்டிர் தொடர்பால் தொழு நோயாளி ஆகி, பின்னர் யாரும் அவனை அண்டவிடுவதில்லை. முருகப்பன் பல வருடங்கள் கழித்து தன் மனைவி கோவில் கொண்டுள்ள ஊருக்கு வருகிறான். உடல் மெலிந்து ஆளே மாறிப் போயிருப்பதால் அங்கே அவனை யாருக்கும் தெரியவில்லை. எறிமாடனின் கோவிலில் அமர்ந்து கொண்டு 'கட்டியவன் நான் இருக்க. கண்டவனுக்கு தீப்பாஞ்ச சிறுக்கி உங்களுக்கு தெய்வமா?' என்று வணங்க வருபவர்களைத் திட்டுகிறான். கோவில் கொண்டு அமர்ந்துள்ள அணைஞ்ச பெருமாளையும் வள்ளியம்மையையும் கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறான். 

ஒருநாள் அவன் அங்கேயே இறந்தும் போகிறான். அவனுக்கும் அங்கே ஒரு கல்லை எதிரில் நட்டி விடுகின்றனர். எறிமாடனையும், தன் மனைவியையும் வெறித்துப் பார்த்துக்கொண்டு யட்சனாக எதிரில்  அமர்கிறான் முருகப்பன். 

எரிசிதை 

பெரிய ராணி மங்கம்மாவின் புதல்வன் இறந்துவிட, மருமகள் சின்ன முத்தம்மாள் கர்ப்பமாக இருப்பதால் அவளைக் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறார்கள். அவளோ யாரிடமும் எதுவும் பேசாமல், உணவையும் குறைத்துக் கொள்கிறாள். தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை நினைத்து அவள் மகிழ்வதும் இல்லை. பிள்ளை பிறந்த பின்னர் தன்னை சிதையேற்றி விடுவார்கள் என நினைத்து பயப்படுகிறாள். 

வேலைக்காரியான நாகலட்சுமியிடம் கொஞ்சம் நெருங்கி பேசுகிறாள். ராணி படும் இன்னல் கண்டு தேற்றுகிறாள். ராணியின் கருவைக் கலைக்கவும் வேலைக்காரி மூலம் முயல்கிறார்கள். நாகலட்சுமியும் சின்ன முத்தம்மாளிடம் சென்று, இந்த மருந்தைக் குடித்தால் உங்களுக்கு எல்லாவற்றிலுமிருந்தும் விடுதலை என்கிறாள். சரி நான் அப்புறம் குடிக்கிறேன் என்று வாங்கி வைக்கிறாள் ராணி. ஆனால் அந்த இரவு அவளுக்கு வரும் ஒரு கனவின் மூலம் அந்த திட்டம் முறியடிக்கப்படுகிறது. தாய்மை வெல்கிறது. 

====

இத்தொகுதியில் உள்ள மற்ற கதைகளான படையல், மங்கம்மா சாலை மற்றும் திரை ஆகிய கதைகளும் முக்கியமானவை. திரை கதையில் ராணி மீனாட்சி தாயுமானவர் மேல் கொண்ட விருப்பு பற்றி பேசுகிறது. திருச்சியை விட்டு சென்றுவிடும் அவரை திரும்ப வரவழைக்க ராணி விரும்புகிறார். அதற்கு தூதனையும் அனுப்புகிறார். அவன் மூலம் கதை சொல்லப்படுகிறது. அவர் திரும்ப வர மறுத்துவிடுகிறார். ராணி மீனாட்சி சந்தா சாகிப்பின் நயவஞ்சக படையெடுப்பால் இறக்கிறார். 

கள்வர்களும் கொலைகாரர்களும் உள்ள சாலையை ராணி மங்கம்மா எப்படி மாற்றினார் எனச் சொல்கிறது மங்கம்மா சாலை கதை. திறமை வாய்ந்த கள்வர்களை கொல்வது சுலபமில்லை என அறிந்து ராணி தன் படையுடன் சென்று எப்படி அவர்களை தன் ஆட்சியில் கீழ் கொண்டுவந்தார் என விவரிக்கிறது. 


No comments:

Post a Comment