Tuesday, March 18, 2014

தேர்தலோ.. தேர்தல் !


மக்களால் மக்களுக்கு

பாடப் புத்தகத்தில்
இப்படித்தான் இருந்தது
மக்களால் மக்களுக்கு மக்களாட்சி..

ஒரு நாள்
சாரை சாரையாக வந்தார்கள்
வெள்ளை ஆடையில் நல்லவர்கள் ஆனார்கள்
உங்கள் வீட்டுப் பிள்ளை
உங்கள் காலடியில் கிடப்பேன்
என்றெல்லாம் சொல்லி ஓட்டுக் கேட்டார்கள்

வழக்கம் போல்
ஜெயிக்கவும் தோற்கவும் ஆனார்கள்

வெற்றி பெற்றவர்கள்
அவரவர் முடிந்ததை
அவரவருக்குத் தேவையான வரை
கக்கத்தில் கட்டிக் கொண்டார்கள்..

நேரமிருக்கும்போது மக்களைச் சந்தித்து
குறை கேட்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்
அல்லது சந்திப்பையே தவிர்த்தார்கள்

தேர்தல் நாள் அறிவித்தவுடன்
திரும்பவும் அந்த நாள் வந்தது
இந்த தடவை குத்தகை
யார் கைக்கு போகுமென்பது
எண்ணிக்கை முடிந்த பிறகு தெரியும்...

சொல்ல மறந்து விட்டேன்
பாடப் புத்தகத்தில்
இப்படித்தான் இருக்கிறது
மக்களால் மக்களுக்கு மக்களாட்சி....

தலைவர்கள் வருகிறார்கள்..

தேர்தலுக்கும்
இடைத் தேர்தலுக்கும்
வெள்ளம் வந்தாலும்
தீ வைத்துக் கொண்டாலும்
கட்சியினர் இல்லத் திருமணத்திற்கும்
உதவிகள் வழங்கவும்
கடைகள் திறப்பிற்கும்
எங்கள் தலைவர்கள்
அன்று ஒரு நாள் மட்டும் பார்க்க வருகிறார்கள்
நோயுற்றிருக்கும் நோயாளியை
பார்க்க வருவது போன்றும்
மீதியுள்ள நாட்களை மறந்தும்.... !

கட்சிகள்

அடர் கருமை நிறத்தில்
சாக்கடை..
அதன் ஓரத்தில்தான்
எம் மக்களின் இல்லங்கள்..
எம் குழந்தைகள்
அள்ளி விளையாடுவதும்
குளித்து மகிழ்வதும்
அங்கேதான்..
எல்லா சமையத்திலும்
கழிப்பதும் அங்குதான்..
அங்கேயும்
எம்மை
காக்க வந்த
ரட்சகர்களான
கட்சிகளின் கொடிகள்
மட்டும்
அழுக்கில்லாமல்
உயரத்திலேயே பறக்கின்றன !


4 comments:

  1. ஒருநாள் மட்டுமே வரும் தலைவர்களை நம்பித்தான் இந்த நாடு தன்னை ஒப்புக்கொடுக்கிறது- ஐந்து வருடத்துக்கொருமுறை வரும் நாளில்! நல்ல கவிதை.

    ReplyDelete
  2. @Chellappa Yagyaswamy
    நன்றிங்க..

    ReplyDelete
  3. எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கவிதைகள் இளங்கோ .


    தளம் LOAD ஆக நிறைய நேரம் ஆகின்றது ...

    ReplyDelete
  4. @ஜீவன் சுப்பு
    நன்றிங்க..

    நிறைய இணைப்புகள் இருப்பதால் தாமதாமாக இருக்கும் என நினைக்கிறேன். நேரம் இருக்கும்பொழுது சரி செய்கிறேன்.

    ReplyDelete