Monday, October 28, 2013

ஒன்பது மற்றும் பதினொன்றாம்(+1) வகுப்புகள் தேவையா?

பத்து மற்றும் +2 வகுப்புகள் மாணவர்களுக்கு முக்கியமானவை. அடுத்து என்ன படிக்கலாம் என இந்தத் தேர்வுகளில் வரும் மதிப்பெண்களை வைத்தே முடிவு செய்ய முடியும். பொதுத் தேர்வுகளாக இருக்கும் இந்த இரண்டு வகுப்புகளையும், மாணவர்கள் முறையே ஒன்பது மற்றும் +1 முடிந்து ஒரு வருடம் மட்டுமே(!) படித்து தேர்வு எழுத வேண்டும் என்று இருக்கிறது.

உண்மையில் ஒரு வருடம் மட்டுமா மாணவர்கள் படிக்கிறார்கள்?

தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், +2 பாடத்தை +1 வகுப்பிலும் எடுக்கிறார்கள். அப்படி என்றால், இந்த மாணவர்கள் இரண்டு வருடம் படிக்கிறார்கள். முக்கியமான நாட்கள் தவிர, வருடத்தின் அனைத்து நாட்களும் பள்ளி உண்டு. காலை 8 மணிக்கு முன்னரே ஆரம்பிக்கும் வகுப்புகள், மாலை வேளைகளில் தான் முடிகின்றன. சில மாணவர்கள், வீடு திரும்பிப் பின்னர் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கும் செல்கிறார்கள். காலாண்டு, அரையாண்டு விடுமுறைகள் கிடையாது. விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதிகாலை துவங்கி, இரவு பத்து மணி வரைக்கும் படிக்கிறார்கள். திரும்ப, திரும்ப படிப்பதால்.. புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் என்ன இருக்கும் என்று மனப்பாடமாகத் தெரிகிறது. படிக்காத மாணவர்களுக்கு என்று பள்ளியிலேயே தனியாக வகுப்புகள் வேறு  உண்டு.

ஆக, இவர்கள் இரண்டு வருடம் முட்டி மோதிப் படிக்க, அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரு வருடம் மட்டுமே படித்து இவர்களுடன் போட்டி போடுகிறார்கள். ஆசிரியர்கள் இல்லாமல், அதுவும் தகுந்த ஆசிரியர்கள் இல்லாமல், நிறைய விடுமுறை நாட்களோடு, தகுந்த வழிகாட்டுதல்கள் இன்றிப் படிக்கிறார்கள். இதில் எங்கேயோ இருக்கும் தமிழகத்தின் கடைக்கோடி கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களும் உண்டு.

படிப்பது ஒன்றும் தப்பில்லை தான், ஆனால் போட்டி (அ) தேர்வு  என்று வரும்போது, பயிற்சிக் காலம் என்பது சரிசமமாக இருக்க வேண்டும் அல்லவா?.

ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்புகள் ஒன்றும் தேவையற்றதாக இல்லை. ஆனால், அதைப் படித்தால் பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் பெறுவது எப்படி?. நமது நோக்கமே, நிறைய மதிப்பெண்கள் தான், அதைப் பெற 10 மற்றும் +2 வகுப்புகள் தான் தேவையே தவிர, மற்ற வகுப்புகள் தேவை இல்லை என நினைக்கின்றனர்.

பிறகு எதற்காக 9 மற்றும் +1 வகுப்புகள்?.

- அனைத்துப் பள்ளிகளிலுமே, நேரடியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை எடுக்க ஆரம்பிக்கலாமே.

- ஒரு வருடமாக இருக்கும் பாடத் திட்டத்தை இரண்டு வருடம் படிப்பது போலச் செய்யலாமே. [ஒருவேளை எட்டாம் வகுப்பிலேயே அதையும் சொல்லிக் கொடுத்தாலும் சொல்லிக் கொடுப்பார்கள் :( ]

- 9 மற்றும் +1 வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தினால், அதையும் கண்டிப்பாக படித்துத் தான் தீர வேண்டும்.

இவை எல்லாம் கல்வி அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்குமா, இருந்தும் ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள். இல்லை, அவர்கள் அப்படி இருப்பதுதான் நமது சாபமா?.

7 comments:

  1. இந்த இடர்பாடு தீர்வது போல் தெரியவில்லை...

    ReplyDelete
  2. மதிப்பெண் மட்டுமே நோக்கமாகிப் போன கல்வி முறையே சரியல்ல

    ReplyDelete
  3. மாணவர்களுக்கு மனப்பாடம் செய்யும் போட்டி தான் இது !

    ReplyDelete
  4. @ திண்டுக்கல் தனபாலன்
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ Srini Vasan

    அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  5. இன்றைய கல்வி முறையை அலசும் நல்ல பதிவு...

    ReplyDelete
  6. தேர்வே இல்லாத முறை வந்தா நல்லாருக்கும்னு தோணுது ...!

    - ஒரு வருடமாக இருக்கும் பாடத் திட்டத்தை இரண்டு வருடம் படிப்பது போலச் செய்யலாமே. [ஒருவேளை எட்டாம் வகுப்பிலேயே அதையும் சொல்லிக் கொடுத்தாலும் சொல்லிக் கொடுப்பார்கள் :( ]
    :)

    ReplyDelete
  7. நீங்கள் என்ன மாதிரியான சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தாலும், நாமக்கல்லில் சில பள்ளிகள் அதைத் தங்களுக்கு ஏற்றவாறு வளைத்துக்கொண்டு, குழந்தை பிறந்த உடனேயே +2 வுக்குப் பாடம் ஆரம்பிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? (அந்நாடு தோறும் அவ்வூரில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறதே!) - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete