Friday, September 13, 2013

ஜே.ஜே: சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி (நாவல்)

புத்தகம் வாங்கி பல வருடங்கள் ஆனாலும்,  முதலில் முழுவதும் படிக்க முடியாமல் திணறினேன். அல்லது இப்புத்தகம் கோரும் உழைப்பை நான் கொடுக்கவில்லை. நாவல், வழக்கமான கதை சொல்லல் முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது  காரணமாக இருக்கலாம். இடையில் மூன்று நான்கு தடவை திரும்ப திரும்பப் படித்தேன். படிக்கும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு பகுதி, ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது. இன்று இரவு இந்த புத்தகத்தை, மீண்டும் படித்தால் கூட எனக்கு அது புதிய வாசிப்பாகவே இருக்கும்.

பாலு என்கிற வாசகன் மூலம், ஜே ஜே எனும் மலையாள எழுத்தாளரைப் பற்றிச் சொல்லிச் செல்லும் நாவல் தான் ஜே ஜே: சில குறிப்புகள். ஜே ஜே வின் பிறப்பு முதல் அவன் இறப்பு வரை, அவன் பழகியவர்கள், நண்பர்கள், காதலி, அவன்  எழுதியவை என சொல்லிச் செல்கிறது நாவல். பாலுவின் பார்வையில் நாவல்  சொல்லப் பட்டாலும், ஜே ஜே வின் வாழ்க்கைச் சித்திரமாக இருக்கிறது நாவல். 


வழக்கமான கதைப்போக்கு, வருணனைகள், கற்பனை சித்திரங்கள் என்று ஏதுமில்லை.நாவல் எழுதிப் பல ஆண்டுகள் ஆனாலும், இன்றைய சூழலுக்கு மிகப் பொருந்திப் போகிறது. ஓரிடத்தில் இப்படி வருகிறது 'என் கவிதையை ரசிக்க கூடிய ஒரு வாசகன் கிடைத்து விட்டான்  என்ற சந்தோசத்தில் இருந்தேன். அடுத்த நிமிடமே சட்டைப் பையில் இருந்து அவன் ஒரு கவிதையை எடுத்து நீட்டினான்'.

இன்னொரு இடத்தில 'சிவகாமி அம்மாளின் சபதம் நிறைவேறி விட்டதா?' என்று ஜே ஜே கேட்பது போல வருகிறது. தான் வரைந்த ஓவியத்தில் சூரியன் இல்லை என்று ஒருவர் சொல்ல, 'சூரியன் வானத்திலிருக்கும் என நம்புகிறேன்' என்று சொல்கிறான் ஜே ஜே. முற்றிலும் தமிழ் வார்த்தைகளை மட்டும் கொண்ட,  'பொங்குமாக்கடல்'  பத்திரிகையின் ஆசிரியரான தாமரைக்கனி ஜே ஜே என்ற வார்த்தைகளைக் கூட 'சே சே' என்றுதான் போடுவேன் என்கிறார்.

நாவலில் இருந்து சில வரிகள்;

*******************

எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க, அது அதற்கான இடைவெளி தேவைப்படுகிறது. சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி.

*******************

பாதைகள் என்று எதுவுமில்லை. உன் காலடிச் சுவடுகளே உனக்கான பாதையை உருவாக்குகிறது.

*******************

என்னதான் வேதனை என்றாலும், என்னதான் துன்பம் என்றாலும் எப்போதும் சில பறவைகள் சூரியனை நோக்கியே பறந்து செல்வதை என்னவென்று சொல்ல. இராப் பகல், ஓய்வு ஒழிவு இல்லாமல் பறக்கின்றன அவை. முன்செல்லும் பறவைகள் கருகி விழுவதைக் கண்ணால் கண்டும், அதிக வேகம் கொண்டு பறக்கின்றன. பறத்தலே கருகலுக்கு இட்டுச் செல்கிறது என்ற பேரானந்தத்தில் சிறகடிக்கின்றன. கருகிய உடல்கள் மண்ணில் வந்து விழும்போது, கூரைக் கோழிகள் சிரிக்கக் கூடும். காகங்கள் சிரிக்கக் கூடும். சற்றுக் குரூரமான, கொடுமையான சிரிப்புதான்.

அப்போதும் சூரியனை நோக்கிப் பறக்கப் புறப்படும் பறவைகளின் சிறகடிப்பே அச்சிரிப்புக்குப் பதில்.


*******************

மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசத்திற்கு மாற்றாகப் புத்தகங்கள் இருக்க முடியாது. ஏசு எழுப்பிய குரல் அவர் முன் நின்றிருந்த ஜனங்கள் மனதில் எவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தியிருக்கும்! அதனால்தான் மனிதன் எவ்வளவோ படித்த பின்பும், எவ்வளவோ தெரிந்த பின்பும் மற்றொரு பெரிய குரலைத் தேடிப் போகிறான். குரல் தன்னுடன் பேசுவது போல அச்சு பேசாது என்பது வாசிப்பின் ஒரு நிலையில் அவனுக்குத் தெரிகிறது.

*******************



படங்கள்: இணையத்தில் இருந்து. நன்றி 


6 comments:

  1. //அல்லது இப்புத்தகம் கோரும் உழைப்பை நான் கொடுக்கவில்லை. நாவல், வழக்கமான கதை சொல்லல் முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது காரணமாக இருக்கலாம். //

    உண்மைதான் ...! ஒரு புளிய மரத்தின் கதையை வாசித்த பின் எனக்கும் ஏறக்குறைய இதே எண்ணம் தான் ...!

    நாவலில் இருந்த சில வரிகள் ... அருமை .. படிக்க வேண்டும் ...!

    ReplyDelete
  2. குரல் தன்னுடன் பேசுவது போல் அச்சு பேசாது - என்பது உண்மையான வார்த்தை. சு.ரா.வின் தாடியைப் போன்றே அவரது எழுத்தும் குறுகலாகவும் அதே சமயம் வன்மையாகவும் தொனிப்பது. (புளிய மரத்தின் கதையையும் பல அமர்வுகளில் தான் முடிக்க முடிந்தது. அது தான் அவரது தனித்தன்மை).

    ReplyDelete
  3. @ஜீவன்சுப்பு
    @Chellappa Yagyaswamy
    நன்றிங்க

    ReplyDelete
  4. சில எழுத்தாளர்கள் நிதானமாகத்தான் நம்முள் இறங்குவார்கள். மேலோட்டமாக இவர்களின் எழுத்துக்களைப் படிக்கவே முடியாது. திரு சு.ரா. வும் இப்படிப்பட்டவர்களில் ஒருவர் என்று நினைக்கிறேன்.

    படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் புத்தகம். எப்போது என்று தெரியவில்லை. உங்களது கருத்துக்கள் உடனே புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது.

    சுருக்கமாக தெளிவான புத்தக அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  5. @Ranjani Narayanan

    தங்களின் வருகைக்கு நன்றிகள்..
    புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்..

    ReplyDelete
  6. நிச்சயம். வெகு விரைவில் படிக்கிறேன்.
    உங்களது இடுகைகளை தொடர்ந்து படிக்கிறேன். பழைய இடுகைகளையும் படிக்கிறேன்.

    ReplyDelete