ஈரம் படிந்த வீடு
==============
எப்படி விடுபட்டேன்.. நான் மட்டும்!
ஒரு சொல், ஒரு ஜாடை
ஒரு முகக்குறி காட்டியிருந்தால்
அந்த இரவில்
நிழலாய் தங்கியிருப்பேனே உன்னோடு..
தொப்பூழ் கொடி சுவாசம்
தந்த தாயே நீ
மாரடைத்து இறந்த அந்த சுவாச
கணத்தில் என் முகம் ஓடிற்றா அம்மா
தகர மயானம் முன் குவிந்த
விராட்டிப் படுக்கையில் நீ
இரட்டை வடம் மார்புச் சங்கிலி மேல்
மூத்தவனுக்கு குறி.
அன்னம் பொங்கி அடுப்படியில் வெந்த
உன் வலது கரத்தில்
குறடு நுழைத்து வெட்டியா வளையலோ
அடுத்தவனுக்கு.
மகளே உனக்கு என்னம்மா
வேண்டுமென்ற அப்பாவிடம்
கொடிக்கம்பியில் காயும் உன்
நைந்த உள் பாவாடை காட்டி
அழுகிறேன் பெருங்குரலில்..
- பா. சத்தியமோகன் (ஆனந்த விகடன்)
அருமை. தலைப்பும் கூட பொருத்தம்
ReplyDelete