Friday, April 23, 2010

ரெயினீஸ் ஐயர் தெரு

நீங்கள் குடியிருக்கும் தெருவில் எத்தனை பேர் உங்களுக்கு பழக்கம்?. எல்லாரிடமும் நிறைய பழக்கம் வேண்டாம், ஒரு புன்னகையை பகிர நேரம் இருக்கிறதா ?. எதிர் வீடு மற்றும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் பெயர்கள் தெரியுமா?.

நேரம் இல்லாமை ஒரு புறம் இருந்தாலும், நாம் அந்த காலத்தில் தாத்தா பாட்டிகள் இருந்தது போல இருக்க முடிவதில்லை. டிவி, சீரியல் என எதுவுமே இல்லாத அந்த காலத்தில் அவர்களுக்கு நேரம் போவது பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம்தான்.

எங்கள் கிராமத்தில் மழை பெய்தால் வீதிக்கு புது மண் வரும் , அந்த மழை ஈரத்து மண்ணில் மெத்து மெத்தென பாதம் படிய நடப்பது ஒரு சுகம். சிமெண்டும், தாரும் கலந்த இந்த பெரு நகரங்களில் மழை பெய்தால் சாக்கடை மண்ணும், பாலிதீன் பைகளும் தான் தெருவில் விரவி இருக்கின்றன.

வண்ணநிலவன் அவர்கள் எழுதியுள்ள 'ரெயினீஸ் ஐயர் தெரு' நாவலில் வரும் தெருவில் மொத்தம் ஆறே வீடுகள் தான் இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் வித விதமான மனிதர்கள், அவர்களின் ஆசைகள், ஏக்கங்கள், நோய்கள், துக்கங்கள் என விவரிக்கிறது நாவல். பெரிய நாவலாக இல்லாமல் மொத்தம் 94 பக்கங்களில் முடிந்து விடுகிறது நாவல். நமது தெருக்களின் கதையை ஒரு நாவலில் அடக்க முடியுமா என்ன ?. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கதைகள், வாசல் படியை போல நிச்சயமாக இருக்கும். வீட்டையும் நம்மையும் இணைப்பது தெருக்கள்தானே.

நாவலில் வரும் டாரதி, அற்புத மேரி, எஸ்தர், எபன், கல்யாணி, தியோடர், மங்களவல்லி சித்தி, ஜீனோ, சாம்சன், பிலோமி, இடிந்த கரையாள், ஆசீர்வாதம் பிள்ளை என அத்தனை மாந்தர்களையும் நம்முடைய தெருவில் கூட காண முடியும். கதை என்று எதுவும் இல்லை, ஒவ்வொருவரை பற்றியும் ஒரு சித்தரிப்பு மற்றும் சில வாக்கியங்கள் அவ்வளவுதான். தெருவின் கதையை முடிக்க முடியுமா என்ன?.

நாவலில் எனக்கு பிடித்த சில வார்த்தைகள் இங்கே;

அவளை போலவே எவ்வளவோ பெண் பிள்ளைகள் இந்த மாதிரி தாயில்லாமல் பெரியம்மா வீட்டில் வளர்ந்து கொண்டிருக்கலாம்தான். ஒருவேளை அவர்களுக்கு எல்லாம் இவளை போலவே மழையும், நடை வாசல் கல்படியும் கூட பிடித்திருக்கலாம். அவளுடைய எபன் அண்ணனை போன்ற பையன்கள் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள். இதுபோல வீடுகளுக்கு நடுவே கல்லறையை கொண்ட தெருவில் வாழ்ந்து வர மாட்டார்கள். எதிர்த்த வீட்டில் இருதயத்து டீச்சர் இருக்கவே மாட்டாள். நிச்சயமாக சொல்ல கூடியது ஒன்று உண்டு. பிறந்த சிறிது காலத்துகுள்ளகவே தாயை பிரிந்து தன்ன தனியாக இரை பொறுக்கி தெரியும் இந்தக் கோழி குஞ்சுகள் இருக்கவே இருக்காது.

அளவற்ற ஆனந்தத்தையும் , அமைதியையும் ஊரிலிருந்து கொண்டுவந்து எல்லோருக்கும் காட்டிவிட்டு எடுத்துக் கொண்டு போனாள் எஸ்தர் சித்தி.

இதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. அவரவர்கள் போக்கில் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள் அல்லது நேசமுடனிருந்து பிரியம் செலுத்துகிறார்கள். வெறுப்பதற்கு அதிகமான விஷயம் எதுவும் வேண்டியதில்லை. எதாவது ஒரு சிறு நிகழ்ச்சி, ஊரார் பார்த்து அருவருக்கிற ஒற்றைகொரு காரியம் போதும். வெறுப்பது, எப்போதுமே இலகுவானது.

ரெயினீஸ் ஐயர் தெரு மனுசர்கள் எல்லாருமே மழையின் அடிமைகள். மழை பெரும் துக்கத்தை அளித்தது. ஆயினும் மழையை விரும்பாமல் போய்விடவில்லை . மழை காலத்தில் பயத்தோடும், ஆனந்தத்தோடும் வீடுகளுக்கு உள்ளிருந்து வேடிக்கை பார்த்தார்கள்.

துன்பங்கள் அறவே ஒழிந்து போய்விடவில்லை. சிறிதே வீரியத்தை இழந்து போயிருந்தன. அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருஷம் வரையிலும் கூட நீடித்திருக்க போகிற துக்கம் இப்போதும் இருந்தது.

நாவல் இப்படி முடிகிறது;

மழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது.

குறிப்பு:
நாவல் : ரெயினீஸ் ஐயர் தெரு
வண்ணநிலவன்
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 96
விலை: 70

2 comments:

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//மழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது.//

அப்படியென்றால் மழை பெய்து கொண்டே இருக்கலாம்..

இளங்கோ said...

அதனாலதான் என்னவோ இப்பொழுது எல்லாம் அடிக்கடி மழை வருவதில்லையோ என்னவோ :)
நன்றி பிரகாஷ்

Post a Comment