Saturday, January 30, 2010

ஜெயமோகன் - கோவை வாசகர் சந்திப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கடந்த 23/01/2010 அன்று கோவையில் நடைபெற்ற அவருடைய வாசகர் சந்திப்புக்கு வந்திருந்தார். ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடனை தவிர தெரிந்த முகம் எதுவும் இல்லை. ஆதலால் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு கவனித்தேன். எதாவது பிரச்சினை என்றால் ஓடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதால் ஓரமான இருக்கை.

சிறிது நேரம் கழித்து என்னை சுற்றியும் இருக்கையை போட்டு விட்டார்கள். கூட்டம் முடியாமல் நம்மை வெளியே விட மாட்டார்கள் என மனதிற்குள் பயம். நாம்தான் முகத்தில் எதையும் காட்டி கொள்ள மாட்டோமே !. சிறிது நேரம் கழித்து நாஞ்சில், ஜெயமோகன் என மேடைக்கு வந்தார்கள்.


வரவேற்பு முடிந்தவுடன், கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்வி கேட்டவர்கள் கேட்ட தொனியை பார்த்த பொழுது, 'ரூம் போட்டு யோசிச்சு இருப்பங்களோ' என தோன்றியது. இந்த கூட்டத்தில்தான் முதன் முதலாக கோவை ஞானி அவர்களை பார்த்தேன். இதுவரைக்கும் அவரை நான் பார்த்ததில்லை.


ஒரு சில கேள்விகளின் பதில்கள் புரிந்தன. சில கேள்விகளும், பதில்களும் புரியவில்லை. இது எனக்கு மட்டும்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். மார்க்சியம் பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது. நெறைய படிக்க வேண்டும் என தோன்றியது. மற்றவர்கள் கேட்ட கேள்விகளில் நான் கேட்க நினைத்த கேள்வி அடியோடு மறந்து விட்டது.

கூட்டம் முடிந்தவுடன் ஜெயமோகன் மேடையை விட்டு கீழே வந்தார். அவரிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என அருகில் சென்றேன். வாசகர்களால் புடை சூழ இருந்தார். சிறிது நேரம் கழித்து கிடைத்த இடைவெளியில், 'நான்தான் இளங்கோ.. அடிக்கடி மெயில், சாட்ல வருவேனுங்க...' என்றேன். 'அது நீங்கதானா.. !' என்று புன்னகைத்தார். பேசி கொண்டும் கேள்விகள் கேட்டு கொண்டே இருந்தார்கள் சுற்றி இருந்தவர்கள். அவரிடம் சொல்லிவிட்டு நடக்கலானேன். கூடவே ஒரு புகைப்படமும். என்னுடைய செல்லில் புகைப்படம் எடுத்த அன்பருக்கும், அனுமதி அளித்த ஜெயமோகனுக்கும் என் நன்றிகள்.


இது நான் கலந்து கொண்ட முதல் எழுத்தாளர் சந்திப்பு. கேள்வி கேட்ட வாசகர்கள் தாங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றார்கள். ஜெயமோகனே ஒரு கட்டுரையில் சொன்னது போல "ஒருவருடைய விடைகள் இன்னொருவருக்கு சரியாக இருப்பதில்லை" என்ற வாக்கியம் மனதில் வந்து போனது.

No comments:

Post a Comment