திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் - அ.கா. பெருமாள்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் பற்றி அ.கா. பெருமாள் அவர்கள் எழுதிய ஆய்வு நூல் 'ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் (திருவட்டாறு கோவில் வரலாறு)' . ஒரு கோவிலைப் பற்றி என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அவை அனைத்தையும்  மிகச் சிறப்பாக இப்புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார்.

கோவிலின் வழிபாட்டு முறைகள், வரலாறு, சிற்பங்கள், கதைகள், இலக்கியங்களில், ஆழ்வார் பாடல்களில் இக்கோவில் சுட்டிக்காட்டப்பட்ட இடம் மற்றும் வாய்மொழிக் கதைகள் என ஒன்று விடாமல் எழுதியுள்ளார் ஆசிரியர். 

ஒரு கோவில் என்பது சாதாரண இடம் அல்ல. பல நூற்றாண்டுகள் முன்பே கட்டப்பட்டு, சில மாற்றங்கள் காலப்போக்கில் உருவாகி இன்று நம்முன் வலிமை குன்றாமல் நிற்கிறது. "ஒரு ஆலயத்தின் சிறப்பிற்கு பத்து விசேஷக் குணங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.  அந்த ஆலயம் பழமையானதாய், பாரம்பரிம் உடையதாய் இருத்தல்;  கோவிலுடன் தொடர்புடையதாக ஓலை ஆவணங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் கிடைத்தல்;  கோவிலுக்கும் வட்டார வரலாற்றுக்கும் மிகுந்த தொடர்பு இருத்தல்; புராணங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருத்தல், தலபுராணங்கள் இருத்தல்;  கோவிலில் பெருமளவு சிற்பங்கள் இருத்தல்; கோவிலில் உற்சவங்கள் நடத்தல்;  கோவிலைப் பற்றி பக்தி இயக்கக்காரர்கள் பாடியிருத்தல்; கோவிலின் மேல் அரசு நம்பிக்கையும் மக்கள் தொடர்பும் இருத்தல் என்பவை அந்த பத்து மரபுகள். இவை எல்லாமே திருவட்டாறு கோவிலுக்கு உள்ளன" என்று விவரிக்கிறார் அ.கா. பெருமாள். 

"மேற்கு நோக்கிய வாசலை உடைய ஸ்ரீகோவிலின் கருவறையில் உறைந்த ஆதிகேசவன் பாம்பின் மேல் பள்ளிகொண்டபடி இருக்கிறார். 16008 சாளக்கிராமங்களால் உருவாக்கப்பட்ட படிமத்தின் மேல் கடுசர்க்கரை சாந்து பூசப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த சயன விக்கிரகம் 6.60 மீட்டர் நீளமுடையது. 

ஆதிகேசவன் ஐந்து தலையுடைய சேஷனின் மூன்று மடிப்பு கொண்ட அரவணையில் சமசயன நிலையில் பள்ளி கொண்டிருக்கிறார். இவர் தென்வடலாக கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார். முகம் சற்று மேல்நோக்கிப் பார்ப்பது போல் அமைந்தது. பிரகாசமான சிறுமுறுவலுடன், பார்ப்பவரின் மனத்தைச் சலனமற்றதாக்கும் ஜால வித்தையுடன் காட்சி அளிக்கும் அபூர்வமான படிமம் இது.

கேசவனுக்கு இரண்டு கைகள். வலது கை மடிந்து முகத்தை நோக்கி சிம்மகர்ண முத்திரை காட்டுகிறது. இடது புஜம் கிடையாக நீட்டி கைத்தலத்தையும் விரல்களையும் தளிர் இலை போல் தொங்கவிட்டு பிரசாரித ஹஸ்தமாய் அமைந்து விளங்குகிறது. கிரீட மகுடம், அழகிய அணிகள் என இந்த முழுப் படிமமும் பாம்பணை மேல் முழுமையாக சயனித்த நிலையில் உள்ளது. " என்று ஆதிகேசவன் பற்றி சொல்கிறார் ஆசிரியர். 


"ஆதிகேசவரின் விக்கிரகம் கடுசர்க்கரை யோகத்தால் ஆனது; அதனால் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. அர்ச்சக விக்கிரகத்திற்கே அபிஷேகம் நடக்கிறது. மூலவரை அர்ச்சனா மூர்த்தியின் உருவில் ஆவாகனப்படுத்தி மூர்த்தி பூஜை செய்வது முறைப்படியாக நடக்கிறது" என்கிறார்  அ.கா.  பெருமாள். கடுசர்க்கரைப் படிமம் தயாரிக்க என்ன விதமான பொருள்கள் பயன்படுத்தப்படும் என்றும், அதன் முறைகளையும் விவரிக்கிறார். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் தூள், ஆற்று மண், புற்று மண், நண்டு மண், யானைக்கொம்பு மண், கடல் மண், மலைச்சிகர மண், பால் வரும்  மரப்பட்டைகளின் சாறு, சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள் என பல்வேறு பொருட்கள் பயன்படுத்தி இப்படிமம் செய்யப்படுகிறது. 

சிற்பங்களைக் பற்றிக் குறிப்பிடும்போது கோவிலில் உள்ள எல்லா சிற்பங்களையும் எண்ணி கணக்கு வைத்துக் கொண்டு எழுதுகிறார். சிவன் கோவிலில் வைணவச் சிற்பங்களும், வைணவக் கோவிலில் சைவ சிற்பங்களும் இருக்கும். பெரிய ஆலயங்களில் இரண்டு சமயத்தைச் சார்ந்த கதைகளும், சிற்பங்களும் கலந்தே இருக்கிறது. திருவட்டாறு கோவிலில் உள்ள சிற்பங்களை பற்றிச் சொல்லும்போது, "இந்த வைணவக் கோவிலில் சைவம் தொடர்பான சிற்பங்கள் 266 உள்ளன. இச்சிற்பங்களில் மிகப் பெரும்பாலானவை சுற்றுப் பிரகாரத் தூண்களில்தான் காணப்படுகின்றன. சிவனின் பிற வடிவங்களான அர்த்தநாரீஸ்வரர், காலசம்ஹாரர், கங்காளநாதர், கஜசம்ஹார மூர்த்தி, பைரவர் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன." என்று எண்ணிக்கை உட்பட ஆய்வு செய்து எழுதுகிறார்  அ.கா. பெருமாள்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருவட்டாறு பெருமாளைப் பற்றி ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் பற்றி ஒரு கட்டுரையில் சொல்கிறார் அ.கா. பெருமாள் அவர்கள். தன்னுடைய நெஞ்சுக்கு சொல்வதாக நம்மாழ்வார் பாடிய ஒரு பாடல் இங்கே;

அருள்பெறுவர் அடியர்தம் அடியனேற்கு ஆழியான் 
அருள்தருவான் அமைகின்றான்; அது நமது விதிவகையே 
இருள் தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான் வேண்டேன் 
மருள் ஒழிநீ; மடநெஞ்சே! வாட்டாற்றான் அடிவணங்கே  

மடநெஞ்சே, திருவட்டாறு தலத்தில் பள்ளி கொண்டுள்ள ஆதிகேசவன் இருக்க, அவனை நீ அடிவணங்கு. அடியார் தம் அடியேனான எனக்கு அருள்புரியும் ஆழியான் இப்பொழுது இருக்க, இப்புவியில் இனியொரு பிறவியை நான் வேண்ட மாட்டேன்.  அறியாமை உடைய மனமே உனது மயக்கத்தை ஒழித்து விடு.

பின் இணைப்பாக பிரபந்த பாடல்களும், 108 திருப்பதிகள் பற்றிய குறிப்பும் அங்கே மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் பற்றிய குறிப்பும், திருவட்டாறு கோவிலைச் சுற்றியுள்ள பன்னிரு சிவன் கோவில்கள் மற்றும் மாசி மாதம் சிவராத்திரியன்று  அங்கே  நடக்கும் சிவாலய ஓட்டம் பற்றிய குறிப்பும் என ஒன்று விடாமல் இந்த ஆய்வு நூல் விளக்குகிறது. 


Comments

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்