இப்பொழுது உள்ளது போல டிவி சானல்கள் இல்லாத காலத்தில் சர்க்கஸ் என்பது எல்லோருக்கும் வியப்பை அளித்தது. யானை, சிங்கம், ஒட்டகம் என விலங்குகளை பார்க்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். வில்லாக உடம்பை வளைத்து சர்க்கஸ் காட்டும் அந்த மக்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்?. நாடோடிகளாக திரிந்த அவர்கள், அத்தனை விலங்குளை எப்படி சமாளிக்கிறார்கள், அவர்களுடைய குழந்தைகள் எங்கே படிப்பார்கள், சொந்தமாக ஒரு இடம் கூட அவர்களுக்கு இல்லையா என்ற கேள்விகளுக்கு விடையே இல்லையோ?. ஒரே ஊரில் வாசம் செய்யும் நமக்கு அவர்கள் விசித்திரம் நிரம்பியவர்களாக தெரிகிறார்கள். சார்லி சாப்ளினின் "தி சர்க்கஸ்" படம் பார்க்கும் பொழுது, நம்மை அறியாமலே பல முறை சிரிக்கின்றோம். ஒருவன் கோமாளியாய் தன்னை வருத்தி கொண்டு நடித்தாலும் அவனை பார்த்து சந்தோசம் கொள்ளும் உலகம் இது. உங்களால் ஒருவரை சிரிக்க வைக்க முடிந்தால், அதுவே உங்களின் திறமை. மற்றவரை சிரிக்க வைப்பது என்பது எளிதான செயல் அல்ல. படத்தின் துவக்கத்தில் இருந்து, முடியும் வரை சாப்ளினே நம்மை குத்தகைக்கு எடுத்து கொள்ளுகிறார். வசனங்கள் இல்லாமல் அவரின் நடிப்புக்கே உலகம் மயங்கி இருக்கும்....