சகீனாவின் முத்தம் - முத்தம் பெறுவது எளிதா ?

விவேக் ஷான்பாக் எழுதிய நாவலான காச்சர் கோச்சர் போன்றே ஒரு சிறு குடும்பத்தைப் பற்றிய கதை சகீனாவின் முத்தம். கதை சொல்லும் முறையில் சுற்றியிருக்கும் அனைவரின் அன்றாடத்தையும், கடந்த காலத்தையும் நேர்த்தியாக சொல்லிச் சொல்கிறார் விவேக் ஷான்பாக். தலைப்புக்கும் நாவலில் இருக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் கதையின் முக்கிய திருப்பமே இந்த தலைப்புதான். 

வெங்கி எனப்படும் வெங்கடரமணன், மனைவி விஜி மற்றும் அவர்களின் ஒரே மகளான ரேகா. இவர்களின் வாழ்க்கையில் நான்கைந்து  நாட்கள் கதைதான் இந்நாவல் என்றாலும், வெங்கட்டின் நினைவுகள் மூலம் பழைய கதை சொல்லப்படுகிறது. வெங்கட்டும் விஜியும் கணிணித்   துறையில் வேலை செய்பவர்கள். அவர்களின் மக்கள் ரேகா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி. ரேகா ஒருநாள் வெங்கட்டின் சொந்த ஊருக்குச் சென்ற வேளையில், இங்கே அவளைத் தேடி அவளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்து போகிறார்கள். அவளுடைய செல்போனுக்கு கூப்பிட்டால் போன் போகவில்லை என்று சொல்கிறார்கள்.  'அவள் இங்கே இல்லை. எந்த தொலைபேசித் தொடர்பும் எங்கள் ஊரில் இல்லை. அவளாக கூப்பிட்டால்தான் உண்டு'  என்று அவர்களை அனுப்பிவிடுகிறார்கள். அடுத்த நாளும் வேறு சில பெரிய ஆட்களை கூட்டிக் கொண்டு வந்து விசாரிக்கிறார்கள்.

வெங்கட் தன்னுடைய சித்தப்பா அந்தண்ணா-விடம் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கிறான். அவரைப் பார்க்கத்தான் ரேகா அங்கே சென்றிருக்கிறாள். தனியாக அந்த கிராமத்தில் வசிக்கும் அவருக்கு ரேகாவின் மீது பாசம் அதிகம். எப்பொழுது விடுமுறை விட்டாலும் ரேகா அங்கே சென்று விடுவாள். ஊரில் உள்ள தோட்டங்களை அவர்தான் பார்த்துக்கொள்கிறார். போன் வசதி இல்லாததால் பக்கத்து ஊருக்கு வந்து அங்கிருந்தே மற்றவர்களைத் தொடர்பு கொள்ள முடியும்.


அந்தண்ணா அடுத்த நாள் கூப்பிட்டு, 'ரேகா வந்து விட்டாளா' என அவரே விசாரிக்க, அவள் இங்கே வரவில்லை என்று சொல்கிறான் வெங்கட். முன்தினம் கிளம்பிய மகள் இன்னும் இங்கே வந்து சேரவில்லை,  ஏதோ தப்பாக நடந்திருக்கிறது என எண்ணிக்கொண்டு ஊருக்கு நாமே செல்வோம் அங்கே சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று கணவன் மனைவி இருவரும் கிளம்புகிறார்கள். அங்கே சென்றால் அந்த ஊரில் உள்ள சுரேஷ் என்னும் நபரை அவள் சந்தித்தால் என்றும், அவன் பத்திரிக்கைத் துறையில் வேலை செய்கிறான் என்றும்  அந்தண்ணா சொல்கிறார். சுரேஷிடம் சென்று விசாரித்தால், 'அவள் நல்ல அறிவுள்ள பெண். ஒரு காரியமாக சென்று இருக்கிறாள். இன்றே திரும்பி விடுவாள்' என்று சொல்பவன் அவள் எதற்காக சென்றால் என்றோ, இவன் எதற்காக அவளை அனுப்பி வைத்தான் என்று சொல்லவோ மறுக்கிறான்.

எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் சுரேஷ் சொல்ல மறுக்க, அன்று மாலையே ரேகா திரும்பி வருகிறாள். வந்த பின்னரும் அவளிடம் கேட்க அவளும் சொல்ல மறுக்கிறாள். முன்பிருந்தே, பெண்களை அடக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவன் வெங்கட். இளவயதுப் பெண்களின் காதல், அவர்களின் நண்பர்கள், தொடர்புகள் என நோண்டிக்கொண்டே இருக்கிற ஒரு அப்பா அவன். அவளின் மனைவி விஜி ரேகாவுக்கு ஆதரவாக இருக்கிறாள். அம்மா மகள் இருவரும் நன்றாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் வெங்கட்டிடம் எதையும் சொல்வதில்லை. 

வெங்கட்டின் அம்மாவுடைய தம்பியான ரமணன் சின்ன வயதிலேயே தாய் தந்தையை இழந்து விடுகிறார். உடனே வெங்கட்டின் அப்பா, அங்கே இருக்கும் மாமனாரின் பேரில் உள்ள சொத்தை விற்று தன்னுடைய பெயரில் நிலம் வாங்கிப் போடுகிறார். தனது தம்பிக்கு தந்து விடுமாறு அக்காவான வெங்கட்டின் அம்மா சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவன் பெரிய பிள்ளை ஆன பின்னர் அதனை அவனுக்கே தந்து விடுகிறேன் எனச் சொல்லி சமாளிக்கிறார். ரமணன் வளர்ந்து பெரியவன் ஆகி வெளியூர் சென்ற பின்னரும் அவனுடைய சொத்தை அவனிடம் ஒப்படைக்க மறுக்கிறார். நல்ல வளமான பூமி என்பதால் பிறகு பார்க்கலாம் எனச் சொல்லியே வருடங்கள் போகிறது.

அவ்வப்பொழுது ஊருக்கு வந்து போகும் ரமணன், தனது அக்காவுக்கு கடிதம் எழுதுகிறான். ஆனால் அதன் வார்த்தைகள் யாருக்கும் புரிவதில்லை. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிய வார்தைகளாகத் தெரிகிறது. ஒரு கடிதத்தில் 'சகீனாவின் முத்தம் பெறுவது எளிது.  சகீனாவின் மேல் எனக்கு பயமில்லை' என்று படிக்கிறார்கள். அவன்  ஆனால் அவனின் சிறுவயது தோழன் ஒருவன் எனக்கு அவனின் எழுத்து புரியும் எனச் சொல்லி அதன் உண்மையான அர்த்தத்தை படிக்கிறான். அது 'சாவின் மேல் எனக்கு பயமில்லை. சாவினால் முக்தியைப் பெறுவது எளிது'  என்றும், என்னைத் தேடி ஒரு பெண் வருவாள், அவளிடம் என்னுடைய சொத்துக்களை ஒப்படைக்கவும் என எழுதி இருக்கிறான். மேலும் ஏதோ ஒரு இயக்கத்தில் சேர்ந்து இருக்கும் ரமணனை போலீஸ் தேடுவதால் , இந்தக் கடிதம் மற்றும் பழைய கடிதங்கள் அனைத்தையும் எரித்து விடுங்கள் எனச் சொல்லி கடிதத்தை முடிக்கிறான் ரமணன். இது பழைய கதை. 

இப்பொழுது ஊரில் இருந்து ரேகாவுடன் பெங்களூர் திரும்புகிறார்கள். இங்கே வந்தால் வீடு உள்ளே பூட்டி இருக்கிறது. உள்ளே யார் இருக்கிறார்கள், எதைத் தேடி வந்திருக்கிறார்கள் என்று வெங்கட்டுக்கு புரியவில்லை. உள்ளே திறந்து பார்த்தால் கழிவறை ஜன்னல் வழியே வந்து போயிருக்கிறார்கள். பின்னர் காவல் நிலையம் சென்று புகார் அளித்து அவர்கள் கேட்ட பின்னர் தான், என்னென்ன திருடு போயிருக்கிறது எனப் பார்க்கிறான். 

மூன்று தலைமுறை மனிதர்கள் வந்து போகும் இந்த நாவலில், இளைய தலைமுறையான ரேகா எதற்கும் பயப்படாதவளாக இருக்கிறாள். 'வீட்டுக்கு வந்து உன்னைக் கேட்டு மிரட்டினார்கள்' என்றால் அதெல்லாம் ஒன்றும் ஆகாது, நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறாள். வெங்கட் ஒன்றும் புரியாமல் பார்க்கிறான். கடந்த கால நிகழ்வுகள், கசப்புகள், சந்தோசங்கள் என கதை சொல்லிக் கொண்டே போகிறது. தன்னுடைய தம்பிக்கு கிடைக்க வேண்டிய சொத்தை அபகரிக்க நினைக்கும் தனது புகுந்த வீட்டு மனிதர்களை திட்டுகிறார் வெங்கட்டின் அம்மா. சொல்லப்போனால் இங்கே ஒவ்வொரு மனிதனின்  வாழ்க்கையும்   வெங்கட்டின் மாமா ரமணனின் கையெழுத்தைப் போல  சிடுக்குகள் நிறைந்தது.  

இந்நாவலைத் தமிழில் கே.நல்லதம்பி அவர்கள் அழகாக  மொழிபெயர்த்துள்ளார். 

சகீனாவின் முத்தம்
விவேக் ஷான்பாக்
தமிழில் - கே.நல்லதம்பி
காலச்சுவடு பதிப்பகம்

Comments

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்