தொட்டியில் அல்லி வளர்ப்பு

எங்காவது வெளியே போகும்போது அல்லி, தாமரை போன்ற மலர்களைப் பார்க்கும்போது நம் வீட்டில் நாமும் வளர்த்துப் பார்க்க வேண்டும் எனத் தோன்றும். நான்கு அல்லது ஐந்து மாதத்திற்கு முன்னால் நர்சரியில் சிறு தொட்டியில் இரண்டு இலைகள் மட்டுமே இருந்த அல்லி செடியை வாங்கி வந்தோம். அங்கே இருந்தவர் பிங்க் நிறம் என்று சொன்னார்.


வாங்கி வந்த சிறு தொட்டியை அப்படியே இன்னொரு பெரிய அகன்ற தொட்டியில் வைத்தோம். சில கலர் மீன்களை வாங்கி தொட்டியில் விட்டோம். ஓரிரண்டு இலைகள் தழைத்து வந்து அப்படியே சிறிதாக இருந்தன. இலைகள் பெரிதாக வளரவும் இல்லை. Youtube ல் சில அல்லி வளர்ப்பு சம்பந்தமான வீடியோக்கள் பார்த்தால் இலைகள் பெரிதாக இருந்தன.



சரி பெரிய தொட்டியில் மாற்றிப் பார்க்கலாம் என்று களிமண்ணும் கொஞ்சம் செம்மண்ணும் கலந்து பெரிய தொட்டியில் அல்லிச் செடியை மாற்றி விட்டேன். மாற்றிய பின்னர் கொஞ்ச நாட்கள் அப்படியே இருந்தது. முன்பிருந்ததை விட இலைகள் நல்ல நிறமாகி வந்தன. சிறு இலைகளாகவே இப்போதும் தழைத்து வந்தது. மீன்கள் இருப்பதால் எந்த விதமான உரங்களும் பயன்படுத்தவில்லை. இரண்டு முறை மட்டும் வாழைப்பழத் தோலை சிறிது சிறிதாக வெட்டி ஒரு முழு இரவும் ஊறவைத்து அடுத்த நாள் தொட்டியில் கலந்தேன்.   


இரண்டு மாதங்கள் சென்ற பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இலைகள் பெரிதாக தழைத்து வந்தன. ஒரு மொட்டு வந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு மூன்று நாட்களில் மொட்டு மலர்ந்தது. பிங்க் நிறத்தில் பூ வரும் என்று பார்த்தால் மலர்ந்தது  நீல வண்ண அல்லி. இந்த நிறமும் நன்றாக இருக்கிறது.



மூன்று நான்கு நாட்கள் சென்ற பின்னர் பூ வாடிவிட்டது. அடுத்த முறை இரண்டு மொட்டுக்கள், அந்த பூக்கள் பூத்து முடிந்ததும் ஒன்றின் பின்னால் ஒன்று என மூன்று பூக்கள். சிறு இடைவெளி விட்டு இப்பொழுது நான்கு மொட்டுக்கள் உள்ளன.




இப்போது இரண்டு வாரம் ஒருமுறை பகுதி தண்ணீரை மட்டும் அவ்வப்பொழுது மாற்றி வருவதைத் தவிர எதுவும் செய்வதில்லை. நன்றாக வெய்யில் படும் இடத்தில் தொட்டியை வைக்க வேண்டும். முதல் முறை அல்லி வளர்த்து பூ விட்டதில் மிக்க மகிழ்ச்சி. அடுத்ததாக தாமரை முயற்சித்துப் பார்க்க வேண்டும். 



Comments