Wednesday, December 29, 2010

சிறு துளிகள் (29/12/2010)

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லோருடைய கனவுகளும் இந்த வருடம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


(மேலே உள்ள புகைப்படம் நான் முன்பு எடுத்தது, வாழ்த்து சொல்ல தேடிக் கண்டுபிடித்தேன் :) ) .

ஊழல் தலைவர்கள்

உங்களிடம் ஒருவர், 'நீங்கள் ஊழல் செய்கிறீர்கள்' என்று சொன்னால், என்ன சொல்லுவீர்கள். 'ஆமாம்', 'இல்லை' என்று இரண்டு பதில்கள். இதற்கும் மேலாக நீங்கள் ஊழல் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை பட்டியலிடுவீர்கள். அதை விடுத்து, 'எனக்கு முன்னால் இருந்தவன் ஒருவன். அவன் செய்யாததையா நான் செய்து விட்டேன், அவன் என்ன செத்தா போனான்?' என்று கேட்பீர்களா?. எங்க கிராமத்துல அடிக்கடி சொல்லுவார்கள் 'ஏண்டா.. அவன் கெணத்துல உளுந்தானா.. நீயும்மா போய் உழுவே?'. ஆக எல்லாத் தலைவர்களும் தப்பித்து விட்டு கடைசியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நம்மை கிணத்துக்குள் தள்ளி விட்டுதான் போவார்கள்.

சுனாமி

இந்த வருடமும் சுனாமி தினம் வந்து போனது. மீண்டும் ஒருமுறை வந்தால் தடுக்க நம்மிடம் ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நிதியை மட்டும் ஒதுக்கிவிட்டு என்ன செய்து கொண்டிருகிறார்கள் எனத் தெரியவில்லை. பாதிக்கப் பட்டவர்கள் இன்னும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

விலைவாசி



இது வரை வெங்காயம் தான் விலை ஏறுகிறது என்றார்கள். இன்று தக்காளி கிலோ அறுபது ரூபாய். இப்படியே போனால் எல்லாக் காய்கறிகளும் நூறு ரூபாய்க்கு மேல்தான் கிடைக்கும் போல. விலை ஏறுவது போல, சம்பளமும் ஏறாதே. வாடகை, பள்ளி கட்டணம் எனக் கட்டி விட்டு மீதி இருக்கும் காசில் எங்கே போய் காய்கறிகள் வாங்க. சரி, வெங்காயம், காய்கறிகள் போடாத சமையல் செய்ய பழகிக் கொள்ள வேண்டியதுதான். காய்கறிகள் விலை ஏறினால், கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பொருட்களும் விலை ஏறும். சரி, அப்படிதான் நாம் கொடுக்கும் காசு, விவசாயிகளின் கைகளுக்கு போனாலாவது பரவாயில்லை. அத்தனையும் இடைத் தரகர்கள் கைகளில்.

இந்த வருடப் பொங்கல் இனிக்காது போல இருக்கிறது.


விருது, பேட்டி

மூன்றாம் கோணம் தளத்தில் என்னைப் பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அதைப் படிக்க பேட்டி. மூன்றாம் கோண நண்பர்களுக்கு என் நன்றிகள்.

இந்த வருடம் எனக்கு விருது கொடுத்த "ஆஹா பக்கங்கள்" திரு. எம் அப்துல் காதர் அவர்களுக்கு என் நன்றிகள்.





மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துக்கள்..


Monday, December 27, 2010

அலைதல்
















வானுயர்
கட்டிடங்களின் மேல்
எங்கிருந்தோ வந்த
பொன்வண்டு ஒன்று
பறந்து கொண்டிருக்கிறது..
அது அறிந்திருக்க வாய்ப்பில்லை
அதற்கான உணவு
இந்நகரத்தில் இல்லையென...



படம்: http://www.orangecounty.in/lifescapes/once-upon-a-bug/ தளத்தில் இருந்து. நன்றி


Friday, December 24, 2010

விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில்..




ஒரு கடைத் தெருவுக்கு நாம் சென்றால் நமக்குத் தேவையான பொருட்களை வாங்கி விட்டுத் திரும்பி விடுவோம். ஆனால் அந்த கடைத் தெருவில்தான் எத்தனை விதமான மனிதர்கள். தி நகர், ரங்கநாதன் தெருவையே எடுத்துக் கொள்ளுங்கள். பூ விற்கும் பெண்கள், கைக்குட்டை சாக்ஸ் விற்பவர்கள், சின்ன சின்ன பிளாஸ்டிக் பொருள் விற்பவர்கள், ஐஸ் கிரீம் கடைகள், துணிக் கடைகள், பாத்திரக் கடைகள், நகைக் கடைகள், கடைக்கு வாங்க எனக் கூவிக் கொண்டிருப்பவர்கள், ஹோட்டல்கள், நகைக் கடைகள், பழச் சாறு கடைகள், பேக்கரிகள், அந்த கூட்டத்திலும் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், மெதுவாக நடப்பவர்கள், வேகமாகப் போகிறவர்கள், வீதி பெருக்குபவர்கள், திருடர்கள்... என எத்தனை விதமான மக்கள். இது போன்ற கடைத் தெருவில் வாழும் மக்களின் வாழ்வைச் சுற்றி எழுதியவர் திரு. ஆ.மாதவன் அவர்கள்.




கடந்த ஞாயிறு அன்று கோவையில், ஆ.மாதவன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்திய விழாவுக்கு சென்றிருந்தேன். இது வரையிலும் மாதவன் அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நிறையப் புத்தகங்களிலும், குறிப்பாக திராவிட ஏடுகளில் நிறைய எழுதியிருக்கிறார் என்பது எனக்கு அப்பொழுதுதான் தெரியும். ஒருவேளை, அவரின் கதைகளை எங்காவது படித்திருந்தாலும் கூட அவரின் பெயர் என் நினைவில் இல்லை. இனிமேல் அவரின் பெயர் மறக்காது, அதற்கு இந்த விழாவே காரணம்.

ஒரு சில எழுத்தாளர்கள் மட்டும் வெளிச்சத்தில் இருக்க, சிலரைப் பற்றி வெளியே தெரிவதில்லை. அவர்கள் எழுதியதும் வெளியே தெரிவதில்லை. அப்படி இருக்கும் கால கட்டத்தில், மூத்த எழுத்தாளர்களைப் பற்றி, நல்ல இலக்கியங்களைப் பற்றி விவாதித்து வெளிக் கொணர வேண்டியது அவசியம். இந்த விழாவை நடத்தி, ஆ.மாதவன் என்னும் 'கடைத்தெருவின் கலைஞனை' என் போன்றோருக்கு அறிமுகம் செய்வித்த 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட' நண்பர்களுக்கு என் நன்றிகள்.




திருப்பூர் மற்றும் கோவையை சேர்ந்த பதிவர்கள் வந்திருந்தார்கள். பதிவர்களை அன்பே சிவம் முரளி அவர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். விழா முடிந்த பின்னர் முரளி மற்றும் திருப்பூர் பதிவர்கள் ஒன்றாகவே கிளம்பினோம். ஆ.மாதவன் அவர்களின் 'கிருஷ்ணப் பருந்து' நாவல் நான் வாங்குவதற்குள் தீர்ந்து விட்டது. பிறகு, அவரின் 'ஆ.மாதவன் கதைகள்' தொகுப்பையும், ஜெயமோகனின் 'கடைத்தெருவின் கலைஞனை' யும் வாங்கிக் கொண்டேன்.

விழாவில் ஜெயமோகன், நாஞ்சிலார், வேத சகாய குமார், புனத்தில் குஞ்ஞப்துல்லா, மணிரத்தினம், எம்.. சுசீலா, கோவை ஞானி ஆகியோர் கலந்து கொண்டார்கள். புனத்தில் அவர்கள் மலையாளத்தில் பேசி, அதை ஜெமோ அவர்கள் தமிழில் மொழி பெயர்த்தார். அவர் பேசும்பொழுது, 'ஒருவன் எந்த மொழியில் கனவு காணுகிறானோ.. அதுதான் அவன் தாய் மொழி' என்றார்.



ஆ.மாதவன் அவர்கள் தனது ஏற்புரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார். விழா முடிந்ததும், சுசீலா அம்மாவிடம் சென்று 'நான்தான் இளங்கோ.. எப்படி இருக்கீங்க?' என்றேன். 'நீங்கதான் இப்படிக்கு இளங்கோவா?' என்று நலம் விசாரித்து விட்டு விடை பெற்றார்கள். ஆ.மாதவன் அவர்களிடம், கையெழுத்துப் பெற்றுக்கொண்டு நாங்களும் திரும்பினோம். அடுத்த நாள் நாஞ்சில் நாடனுக்கு 'சாகித்ய அகாடாமி விருது' அறிவிக்கப்பட்டது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த இடைப் பட்ட நாட்களில், ஆ.மாதவன் சிறுகதை தொகுப்பிலிருந்து பாச்சி(சொல்வனத்தில் பாச்சி), கோமதி, தூக்கம் வரவில்லை, நாலு மணி போன்ற கதைகளைப் படித்தேன். அனைத்துக் கதைகளுமே தெருவில் இருப்பவர்களைப் பற்றிய கதை. அனைத்துக் கதைகளையும் படித்து விட்டு மீண்டும் எழுதுகிறேன்.

இப்படி ஒரு விழாவை நடத்திய இலக்கிய வட்ட நண்பர்களுக்கு மீண்டும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

தொடர்பு பதிவுகள்:
ஜெயமோகன்: விஷ்ணுபுரம் விருது விழா 2010
எம்.ஏ.சுசீலா: விஷ்ணுபுரம் வட்ட நினைவுகள்...1.


Tuesday, December 21, 2010

உலரும் குருதி















ரீங்காரமிட்டு
சுற்றி சுற்றி வந்தது
பெரும் கொசுவொன்று...
இரண்டு மூன்று முறை
அடிக்க முயற்சித்தும் தப்பி விட
இம்முறை தவற விடக் கூடாதென
ஆடாமல் அமர
முன்கையில் வந்தமர்ந்து
குருதி ருசியில் சொக்கியது..

ஓங்கி அடித்த அடியில்
வெளிவந்த குருதி
இப்பொழுது
என் உடம்பிலும் இல்லை
கொசுவின் உடம்பிலும் இல்லை
காற்றில் உலர்ந்து கொண்டிருந்தது..!

படம்: இணையத்தில் இருந்து. நன்றி.

பின்குறிப்பு: கவனிக்க, இதை நான் கவிதை லேபிளில் அடைக்கவில்லை !! :)


Sunday, December 19, 2010

சலூன்


சுத்தற சேரும், மேல காத்தாடியும் இருந்த அந்த 'ராஜா' சலூனுக்குள் போகலாமா, வேண்டாமா என்று மனசுக்குள் ஒரே குழப்பம். சலூனுக்குள் போகவே பயமாக இருந்தது. வருவது வரட்டும்னு உள்ளே போயிட்டேன். உள்ளே போனால், ஒருவருக்கு முடி வெட்டிட்டு இருந்த கடைக்காரர் என்ன என்பது போலப் பார்த்தார். "கட்டிங் பண்ணனும்" என்றவுடன், "அங்க உட்காரு" என்றார். உட்கார்ந்த இடத்தில் இரண்டு மூன்று நியூஸ் பேப்பர்கள் கிடந்தன. டேப்பில் ஏதோ ஒரு பாட்டு பாடிக் கொண்டிருந்தது.

முன்னாடி, பின்னாடி எனப் பெரிய பெரிய கண்ணாடிகள சுவத்துல மாட்டி இருந்தன. காலி இடத்தில் ஒரு பக்கம் விஜயகாந்தும், இன்னொரு பக்கம் ரஜினி காந்தும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நியூஸ் பேப்பரில் வந்த சில நடிகைகளின் படத்தை ஒரு இடத்தில் ஒட்டி வெச்சிருந்தாங்க. ஒரு இருபது நிமிசம் கழிச்சு, முடி வெட்டிட்டு இருந்தவர் கிளம்ப, என்னைப் பார்த்து "வாங்க.." என்று சேரைத் தட்டினார் கடைக்காரர்.

இது வரைக்கும் அந்த மாதிரி சேர்ல உக்காந்தது இல்ல, அதுனால ஒரு மாதிரியா இருந்துச்சு. ஏறி உட்கார்ந்ததும், கடைக்காரர் அழகா ஒரு பாட்டில்ல இருந்து தண்ணிய தலைக்கு அடிக்க ஆரம்பித்து, முடி வெட்ட ஆரம்பித்தார். தலை குனிஞ்சிருந்த எனக்கு அப்பா கூட நேத்து சண்டை போட்டது நினைவுக்கு வந்தது.

நேத்து அப்பா, "டேய்.. நாளைக்கு பள்ளிக்கோடம் முடிஞ்சு, முடி வெட்டிட்டு வந்திரு. கரடிக் குட்டி மாதிரி எத்தன முடி பாரு. பஸ் ஸ்டாண்ட்ல இருந்து சந்தைக்கு போற ரோட்ல, காப்பிக் கடை முக்குல இருக்குற பழனிச்சாமி கிட்ட வெட்டு. அவன்தான் அஞ்சு ரூவா வாங்குவான். மத்தவங்க எல்லாரும் அதிக ரூவா வாங்குவாணுக" என்றார்.

"போப்பா.. எனக்கு அந்தக் கடைய பிடிக்கவே இல்ல" என்றேன். போன வாரம், மூர்த்தி ஒரு கடைக்கு அவனுக்கு முடி வெட்டும்போது கூட்டிட்டுப் போனான். பெரிய கண்ணாடி, காத்தாடி அப்படின்னு அழகா இருந்துச்சு. அடுத்த தடவை முடி வெட்டுனா, அங்கதான் போகணும்னு முடிவு பண்ணிட்டேன் அன்னைக்கே. அந்த சலூன் பேரு 'ராஜா சலூன்'.

"முடி வெட்டுறதுல என்னடா.. பிடிக்கறது.. பிடிக்காதது. எதைச் சொன்னாலும் மூஞ்சிய ஒரு மாதிரி வெச்சுக்க" என்று ஒரு சத்தம் போட்டார்.

அடுத்த நாள் காலையில் மறக்காமல், பத்து ரூபாய் குடுத்தார். திரும்பவும் பழனிச்சாமி கடைக்கே போகச் சொல்ல, ஏதாவது சொன்னால் அடி விழுகும் என்று நினைத்து "சரிப்பா " என்றேன்.

கடைசிப் பீரியட் முடிந்து வெளியே வந்ததும், அந்தக் கடைக்கே போகணும்னு முடிவு பண்ணிட்டேன். போன தடவ வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமத்தான் போச்சு முடி வெட்டுறது. வழக்கமா, மணியன் வீட்டுக்கு வந்து முடி வெட்டிட்டு போயிருவாப்ல, நான் சின்னப் பையன்ல இருந்து அவருகிட்டதான் வெட்டிட்டு இருக்கேன். வீட்டுக்கு வெளியே இருக்குற வேப்ப மரத்தடியில ரெண்டு முக்காலிகளப் போட்டு உட்கார்ந்து முடி வெட்டி விட்டுட்டுப் போயிடுவார். அதுவும் குனிய வெச்சு, பின்னாடி கழுத்துக்கு கீழே கத்தி படும்போது ஒரு மாதிரியா குறுகுறுப்பா இருக்கும். "ஆடாத தம்பி" என்று சொல்லிக்கொண்டே தலையை கெட்டியாப் பிடிச்சுக்குவார்.

பள்ளிக்கோடம் போனா பசங்க எல்லாம் முடி வெட்டுனத பார்த்து கிண்டல் அடிப்பாங்க. ஆனா, ஒண்ணு ரெண்டு வாரத்துல முடி வளர்ந்து 'கிராப்' சரியாப் போயிடும். இந்த கிண்டலுக்கு வேண்டியே அடுத்த தடவ மணியன் கிட்ட முடி வெட்டக் கூடாது அப்படின்னு நெனப்பேன், ஆனா அப்பா விட மாட்டார். ஏதோ ஒரு அதிசயம் போல, இந்த தடவ ஒரு மாசத்துக்கும் மேல ஊருக்குப் போன மணியன் திரும்பவே இல்ல. அப்பாவே வளர்ந்த முடியப் பார்த்துட்டு, டவுன்ல வெட்டிட்டு வரச் சொல்லிட்டார்.

எந்தக் கடைக்கு போகலாம்னு ஒரே கொழப்பமா இருந்துச்சு, 'ராஜா' சலூன்ல பணம் அதிகம் வாங்கிட்டா என்ன பண்ணுறது. அப்பா திட்டுவாரேன்னு பயம் வேற. ஆனா, இன்னைக்கு மட்டும் அந்த முக்கு கடைக்கு போகவே கூடாது. மூர்த்தி கிட்டயாவது எவ்ளோ பணம் ஆகும்னு கேட்டிருக்கலாம், அவன் கிட்டயும் கேட்கல. அவன் இன்னைக்கு லீவு. பத்து ரூபாதான் இருக்குதுல்ல, அதுக்கு மேல கேட்க மாட்டாங்க அப்படின்னு எனக்கு நானே நெனச்சுட்டு, 'ராஜா' கடைக்குள்ளே வந்தாச்சு.

'ராஜா' கடைக்காரர், எனக்கு முடி வெட்டிட்டு இருந்தார். மேல போர்த்துன துண்டு, சுத்திலும் கண்ணாடி, டேப் பாட்டு அப்படின்னு நல்லாத்தான் இருந்தாலும், எவ்ளோ பணம் கேப்பாங்களோ அப்படின்னு பயம்தான். பத்து ரூபாய்க்கு உள்ளே கேட்டா பரவா இல்ல, பத்து ரூபாய்க்கு மேல கேட்டா என்ன பண்றது. வெட்டி முடிச்சுட்டு, இன்னொரு துண்டால முடிய தட்டி விட்டார் கடைக்காரர். "எந்திரி தம்பி.. இந்தா சீப்பு" என்று ஒரு சீப்பை கையில் கொடுத்து சீவச் சொன்னார். சீவி முடித்ததும், மேலே இருந்த முடிகளை தட்டி விட்டேன். அப்பவும் சட்டையில் இருந்து ஒரு சில முடிகள் போகவே இல்ல.

கொஞ்சம் பயமாகவே "அண்ணா.. எவ்ளோங்க.. " என்றேன். "ஏழு ரூவா தம்பி" என்றார். "அப்பாடா" என மனசுக்குள் நினைச்சிட்டு, மீதி சில்லறைய வாங்கிக் கொண்டு "நான் வர்றேனுங்க.." என்று சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பினேன். பஸ்ல வரும்போது அப்பா கிட்ட என்ன சொல்லுறதுன்னு பயம் வேற.

வீட்டுக்கு வந்ததும் "முடி அப்படியே இருக்கு.. இன்னும் ஒண்ட வெட்டச் சொல்லி இருக்கலாம்ல... எங்கடா முடி வெட்டுன.. " என்று கேட்டார் அப்பா.
"ராஜா சலூன்ல" என்றேன்.
"அது என்ன பழனிசாமி கடையா? "
"இல்லப்பா.. இது வேற கடை"
"நெனச்சேன்.. நீ அங்க போக மாட்டேன்னு.. இவன் எவ்ளோ வாங்குனான்.."
"ஏழு ரூவாப்பா.. "
"ம்ம்... பத்து ரூபாயையும் குடுக்காம வந்தியே. அதுவரைக்கும் நல்லது"
"ஏங்க.. அவனப் போய்த் திட்டிட்டு.. நான் வெந்தண்ணி காய வைக்கிறேன்..." என்று துணைக்கு வந்தார் அம்மா.

அதோடு பிரச்னை முடிந்தது. அடுத்த தடவை முடி வெட்டிட்டு வரும்போது எவ்ளோ ஆச்சு என்று அப்பா கேட்கவே இல்லை. பல வருடங்கள் கழித்து வெளிநாட்டில் ஆறு மாதம் தங்க நேர்ந்த போது முடி வெட்ட குடுத்த காசு, இந்திய மதிப்பில் சுமார் அறுநூறு ரூபாய் என்பது அப்பாவுக்கு இன்னும் தெரியாது.

படம்: http://www.lonelyplanetimages.com தளத்தில் இருந்து. நன்றி.

Friday, December 17, 2010

தி சர்க்கஸ் (The Circus)

இது ஒரு மீள் பதிவு !

இப்பொழுது உள்ளது போல டிவி சானல்கள் இல்லாத காலத்தில் சர்க்கஸ் என்பது எல்லோருக்கும் வியப்பை அளித்தது. யானை, சிங்கம், ஒட்டகம் என விலங்குகளை பார்க்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். வில்லாக உடம்பை வளைத்து சர்க்கஸ் காட்டும் அந்த மக்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்?.


நாடோடிகளாக திரிந்த அவர்கள், அத்தனை விலங்குளை எப்படி சமாளிக்கிறார்கள், அவர்களுடைய குழந்தைகள் எங்கே படிப்பார்கள், சொந்தமாக ஒரு இடம் கூட அவர்களுக்கு இல்லையா என்ற கேள்விகளுக்கு விடையே இல்லையோ?. ஒரே ஊரில் வாசம் செய்யும் நமக்கு அவர்கள் விசித்திரம் நிரம்பியவர்களாக தெரிகிறார்கள்.



சார்லி சாப்ளினின் "தி சர்க்கஸ்" படம் பார்க்கும் பொழுது, நம்மை அறியாமலே பல முறை சிரிக்கின்றோம். ஒருவன் கோமாளியாய் தன்னை வருத்தி கொண்டு நடித்தாலும் அவனை பார்த்து சந்தோசம் கொள்ளும் உலகம் இது. உங்களால் ஒருவரை சிரிக்க வைக்க முடிந்தால், அதுவே உங்களின் திறமை. மற்றவரை சிரிக்க வைப்பது என்பது எளிதான செயல் அல்ல.


படத்தின் துவக்கத்தில் இருந்து, முடியும் வரை சாப்ளினே நம்மை குத்தகைக்கு எடுத்து கொள்ளுகிறார். வசனங்கள் இல்லாமல் அவரின் நடிப்புக்கே உலகம் மயங்கி இருக்கும். என்னமாய் நடித்து இருக்கிறார். ஒரு சர்க்கஸ் ஆளை போலவே படத்தில் வருகிறார். அனைத்து காட்சிகளிலும் அவரின் உழைப்பு தெரிகிறது. அதுவும் குரங்கு மூக்கை கடிக்க, அதன் வால் வாயில் நுழைய நடிக்கும் பொழுது அந்த மகா நடிகனின் நடிப்பு நம்முள் ஆச்சயர்யத்தை உருவாக்குகிறது.


எதிர் பாராமல் சர்க்கஸ் கம்பனியில் வேலை கிடைத்து, அங்கே ஒரு பெண்ணை பார்த்து காதல் கொள்ளுகிறார். அதற்குள் அவள் இன்னொருவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். புதிதாக வந்தவன் கயிற்றில் மேலே நடக்கும் பொழுது, எல்லாரும் பயந்திருக்க சாப்ளின் மட்டும் மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறார், ஏன் எனில் அவள் அவனைத்தான் காதலிக்கிறாள். இறுதியில் அவனும் சர்க்கஸை விட்டு வெளியேற, சாப்ளினும் வேறு காரணங்களுக்காக வெளியேற்ற படுகிறார்.


சாப்ளினை தேடி வரும் நாயகி, உன்னை விட்டு போக மாட்டேன் என்று அழ, அவளை தேற்றி அவளின் காதலனிடம் சேர்த்து, கல்யாணம் செய்து வைக்கிறார். சர்க்கஸ் கம்பனி கிளம்ப தயாராக இருக்கும் பொழுது, புதுமண தம்பதிகளை அவர்களுடன் அனுப்பி வைக்கிறார் சாப்ளின்.


சர்க்கஸ் கம்பனியின் எல்லா வண்டிகளும் கெளம்பி போன பின்னர், தனி ஒரு ஆளாய் அங்க நிற்கிறார் சார்லி. புழுதி பறக்க, சூரியன் மறைய, கூடாரம் அடிக்க போட்ட ஒரு வட்டத்தில் நின்று கொண்டிருக்கிறார். சிறிது நேரம் அமர்கிறார். மெதுவாக திரும்பி பார்த்து விட்டு, தனது வழக்கமான நடையில் அந்த வட்டத்தை விட்டு வெளியேறுகிறார் சாப்ளின்.

ஒரு வட்டத்துக்குள் தங்கி இருக்கும் நாம் எப்பொழுது அதை விட்டு விடுதலை பெறுவோம் என்பது போல அவரின் நடிப்பு இருக்கிறது. சிரிப்பதற்கு மட்டும் பார்க்க வேண்டிய படம் அல்ல இது, சக உயிரின் மேல் எந்த அளவுக்கு நாம் அன்பு செலுத்த வேண்டும் என்பதை போதிக்கும் படம்.







Sunday, December 12, 2010

பாரதி








சாதிகள்
பெண் கொடுமைகள்
படித்தவர்கள் செய்யும் சூது
வேடிக்கை மனிதர்கள் என்று
நிறைந்து கிடக்கும்
எமது காணி நிலங்களில்
உனது அக்கினிக் குஞ்சுகளை
தேடிக் கொண்டிருக்கிறோம் பாரதி
ஒருநாள் அகப்பட்டு
அவைகளை வெந்து தணிப்போம்
என்ற தாகத்தோடு.

Friday, December 10, 2010

பனைமரத்து நிழலின் சிரிப்பு


குறிப்பு: கொஞ்சம் நீண்ட கதை. ரொம்ப வருடங்கள் முன்னர் எழுதியது. பழைய காகிதங்கள் கிடைக்க வலையில் ஏற்றி விட்டேன். !

*********************************

ஏதாவதொரு காலைப்பொழுது எனக்கு பனைமரத்தின் கீழ்தான் விடியும். அப்படிப்பட்ட நாட்கள் அநேகமாக சித்திரை மாத வெயில் சுழற்றி அடிக்கும் நாட்களாக இருக்கும். ஊரிலிருந்து சொந்தக்காரர்கல் யாராவது வந்தாலோ, இல்லை அம்மா ஊருக்குப் போனாலோ “நொங்கு” இருக்கும். ஏதொ பிள்ளையார் கோயிலில் பொங்கல் வாங்கற மாதிரி விடிஞ்சும் விடியாத காலங்கார்த்தால பெரிய போசியோட நொங்கு வாங்கப் போயிரணும்.

ஊரில் எத்தனையோ பேர் நொங்கு எடுத்தாலும், எங்க அம்மாவுக்கு ஊமையனிடம் தான் வாங்க வேண்டும் என்ற வைராக்கியம். அதற்கு காரணம், மத்தவங்க ஒரு ருபாய்க்கு இரண்டு நொங்கு என்றால் இவன் மூன்று போட்டுக் கூடவே நாலைந்து சேர்த்தும் தருவான். சீசன் சூடு பிடிக்கும் நாட்களில் கூட ஒன்றிரண்டு கொரைப்பானே தவிர மத்தபடி போசியை நப்பியே தருவான் என்பதால் அம்மாவுக்கு சந்தோசம். அதனால், எங்க ஊட்டு கிழிந்த துணிகளும், பழைய கொழம்பும் கொஞ்சம் தள்ளி இருக்கிற அவனின் குடிசைக்குள் தஞ்சமடையும்.

பட்டப்பேரு தான் ஊமையனே தவிர, அவனோட பேரு கருப்புசாமி. பேச முடியாது என்பதால்தான், அவனுக்கு முன்னால் ஊரார் அப்படிக் கூப்பிட மாட்டார்கள். ஆனால், ஊமையன் என்பது அவனுக்கு சுட்டுப் பெயராகவே மாறிவிட்டது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சண்டையும், சச்சரவும் நிரம்பிய குடிசையாகத்தான் ஊமையனின் குடிசை இருக்கும். குடிசையைப் பிய்த்துக் கொண்டு, கருப்பனின் குலசாமி கருப்பராயன் கொட்டியதில் அவனுக்கு என்னவோ ரெண்டு பையனும் நாலு புள்ளையும் தான். மூத்த பொண்ணுங்க இரண்டையும் சொந்தத்திலேயே கட்டிக் கொடுத்துவிட மீதி ரெண்டு பையனும் ஒரு புள்ளையும் தான் சத்துணவுக்காக பள்ளிக்கோடத்துக்கும், விளையாட்டுக்காக அப்பனுக்கும், ஆத்தாளுக்கும் உதவிக் கொண்டிருந்தார்கள்.

கருப்பன் பொண்டாட்டி பேரு காளியம்மா. பேரு மட்டும் தான் காளியம்மா, மத்தபடி கோவமெல்லாம் வராது. புள்ளைங்க போடற சண்டையைத் தீர்த்து வைக்கவே அப்பப்போ காளியாத்தா அவதாரம் எடுப்பா. கருப்பட்டி கூடையைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு சந்தைக்குப் போகும் போது கூடவே ஒரு புள்ளையையும் கூட்டிக் கொண்டு போவாள். அதற்கும் யார் அவள் கூடப் போவது என்று சண்டையாகவே இருக்கும்.

நொங்கு வாங்கப் போறன்னிக்கு, சேவக் கூவுற நேரத்துல கெளம்பிடணும். இல்லாட்டி கருப்பன் நொங்க எடுத்துட்டு சைக்கிள்ல பக்கத்து டவுனுக்குப் போயிருவான்.

பல்லு கூட வெளக்காம, அன்னிக்கு எந்தக் காட்டுல அவன் நொங்கு எடுக்கறானோ அங்க போயிரணும். அவன் வீட்டில் வளரும் எலும்பு நாய் உட்பட கூப்பன் கார்டில் உள்ள அத்தனை பேரும் அந்த காட்டுல இருகிறதால, காடே திருவிழா கண்ட இடம் போல இருக்கும்.

கயிற்றை காலில் கட்டிக்கொண்டு, பனை மரத்தில் சரசரவென ஏறி குலை குலையாய் தொங்கும் காய்களில் பதம் பார்த்து வெட்டி போடுவான் ஊமையன். மரமேறும் போதே, கை சாடையிலேயே எல்லாரையும் தள்ளிப் போகச் சொல்லிருவான். மேலிருந்து குலை விழுந்த வேகத்தில் காய்கள் தனியாக பிரிந்து நாலாப் பக்கமும் உருண்டோடும். ஒவ்வொரு மேலிருந்து குலையை கயித்தில் கட்டி கீழே இறக்குவான். அப்போது காய்கள் தனியாக ஓடாது. காளியம்மாளும், அவளின் வாரிசுகளும், காடு பூர எறைஞ்சு கெடக்கும் குலைகளையும், காய்களையும் ஒரே இடத்தில் போட்டு வெப்பாங்க.


முனியப்பன் கோவிலில் கெடா வெட்டும்போது ஒரே வீச்சில் வெட்டற அருவா மாதிரியே ரெண்டு மூணு அருவாள கருப்பன் வெச்சிருப்பான். பாறையில அரச்ச மண்ணுல தான் அந்த அருவாள பட்டை தீட்டுவான். அப்படியே வெளக்கி வெச்ச குத்து வெளக்கு மாதிரி தகதகன்னு இருக்கும் பட்டை தீட்டுனதுக்கு அப்புறம். தொட்டாலே சீவிருமோ அப்படிங்கற பயம் அந்த அருவாளப் பாத்தாலே வந்திரும்.

குமிச்சு வெச்ச பனங் குலைகள தனித் தனிக் காய்களா மொதல்ல பிரிச்சிட்டு, அருவாளக் கையில எடுத்தா அப்புறம் முடியற வரைக்கும் விசுக்.. விசுக்.. அப்படிங்கற சத்தம்தான் கேக்கும். காய எடுத்து அப்படியே ஒரு சுத்து உருட்டி, குல்லா போட்ட மாதிரி இருக்கற தொக்க எடுத்துட்டு, அளந்து வெச்ச மாதிரி சுத்தியும் மூணு வெட்டு. அத அப்படியே திருப்பி வெச்சு, கைப்புள்ளையோட கன்னத்த தட்டற மாதிரி மூணு வெட்டு வெட்டி நெம்புனா நொங்கு வெளியில எட்டிக் குதிச்சிரும். அத அப்படியே பனை ஓலை வெச்ச கூடையிலே போட்ருவான் கருப்பன்.

இதுல என்னன்னா, நொங்கு ஒடையாம எடுக்கரதுலதான் இருக்கு எல்லாமே, நொங்கு உடைஞ்சு தண்ணி வெளியில வந்துட்ட அதக் கழிச்சு உட்ருவாங்க அப்படிங்கரதாலே, உடைஞ்சதுகள வேடிக்கை பாத்துட்டு இருக்கற எங்களுக்கு குடுத்துருவாங்க. இது ஒருபுறமிருக்க, அவன் ஊட்டு கத்துக் குட்டிகளெல்லாம் மொண்ண அருவாள வெச்சுட்டு பிஞ்சுக் காய்களா வெட்டிட்டு இருப்பாங்க. பிஞ்சுக் காயிலிருந்து நொங்கு எடுக்க முடியாது, மேலே ஒரு வெட்டு வெட்டி கொடுத்தா, பெருவிரல உட்டு, வாய் பக்கத்துல வெச்சு உறிஞ்சுனா, காலைல சோறே நொங்குதான் . சூப்பிப் போட்ட பிஞ்சுப் புருடைகளப் பொடிப் பொடியா வெட்டி மாட்டுக்கு போட்ருவாங்க. மாடுகளும் அதத் தின்னு அசை போட்டு சீரணிக்கும். ஒரு கண்ணு ரெண்டு கண்ணுள்ள நொங்க விட மூணு கண்ணுள்ள நொங்கு எடுக்கறது சுலபம்.



இப்படித்தான் போயிட்டிருந்துச்சு அவங்களின் பொழப்பும். நொங்கு சீசனெல்லாம் முடிஞ்சு போயி தெளுவு எறக்கிட்டு இருந்தான் கருப்பன். நொங்கு வாசம் போயி கருப்பட்டி மணக்க ஆரம்பிச்சது அவனோட சாலைல. அப்பா நடந்ததுதான் இது.

"ஏண்டி, அந்தப் பொடாக்காநில தண்ணி ஊத்தச் சொன்னேனே? ஊத்துனியா ? இந்தா உங்கப்பனுக்கு இந்த காப்பித் தண்ணிய குடுத்துட்டு வெரசா வா" அப்படின்னு கத்திட்டே வந்த கெழவிதான் கறுப்பனப் பெத்த ஆத்தா. பல்லுப் போனாலும் சொல்லுப் போகாதும்பாங்க மாதிரி கெழவிக்கு நாக்கு மட்டும் அப்படியே இருக்கு. வாயில வர்றதெல்லாம் மொளகாப் பொடி தடவுன மாதிரி காரசாரம்தான் இருக்கும்.

"கொண்டா" அப்படின்னு, தூக்குப் போசிய வாங்கிட்டு போறவதான், அடுத்த கண்ணாலத்துக்கு காத்துட்டு இருக்கற கருப்பனோட மூணாவது புள்ள ஈசுவரி. தெளுவு எறக்கிட்டு இருந்த அப்பனுக்கு காப்பி கொடுக்கப் போனவ, பக்கத்துக் காட்டுல மரம் ஏறிட்டிருந்த குப்பன்கிட்ட மனசக் கொடுத்துட்டா.

அவ பண்றது ஒண்ணும் தப்பில்லைதான். ஆனா கருப்பனும், குப்பனோட அப்பனும் கீரியும் பாம்பும் மாதிரி. அவன் போறபக்கம் இவனும், இவன் போறபக்கம் அவனும் போக மாட்டாங்க. அதென்ன பகையோ, என்னமோன்னு ஊருக்கே மறந்து போச்சு. ஆனா சிறுசுக ரெண்டு பேருக்கும் பகையும் தெரில, சொந்தமும் புரில. பெருசுக ரெண்டும் வானத்தையும், பூமியையும் பார்த்துட்டு நிக்க இவங்க ரெண்டு பேரும் மனசப் பரிமாறிட்டாங்க.

இப்படித்தான் ஒரு நா, ஊரே தூங்கி எந்திரிக்காத வேளையில மசமங்க ரெண்டு பேரும் கெளம்பிட்டாங்க. எங்க போனாங்க, என்ன ஆனாங்கன்னு ஆருக்கும் தெரில. ஊருல உள்ளவங்க, சொந்த பந்தம்னு எல்லாரும் வந்துட்டுப் போயிட்டு இருக்காங்க ரெண்டு ஊட்லயும். கலியாணம் கண்ட இடமா இல்ல எழவு கண்ட கண்ட இடமான்னு எல்லாருக்கும் சந்தேகம். யாரு யாரைத் திட்டறாங்கன்னு புரிபடாத மாதிரி ஒரே சத்தம். திடு திப்னு பொம்பளைகளோட ஒப்பாரிச் சத்தம் வேற. கெழவி போட்ட ஒப்பாரிதான் ரொம்ப சத்தம்.

"ஊரெல்லாம் சொத்து வாங்கி
பாரெல்லாம் பார்த்து நிக்க
பாவி மக போனாளே
சொல்லாம கொள்ளாம.. "

"பெத்த மனசு கதிகலங்க
வளர்த்தெடுத்த உசுரு உருக
காணமப் போனாளே
எங்க மகராணி.. "

வந்தவங்கள ஒக்காரச் சொல்லி, காப்பித்தண்ணியக் கொடுத்து, எப்படிக் காணமப் போனாங்கன்னு சொல்லி சொல்லியே சடைஞ்சு போயிட்டாங்க ரெண்டு ஊட்டு ஆளுகளும். வந்தவங்க துக்கத்த கேட்டுட்டு சும்மா போகாம "எனக்கு அப்பவே தெரியும். ஆனாலும் வெளிய சொல்லல" அப்படின்னு குசுகுசுன்னு பேசிக்கறாங்க. கண்ணுல தண்ணி ஒழுக, எல்லாத்தையும் அமைதியாப் பார்த்துட்டு இருந்தான் கருப்பன். வெளியூர்ல கட்டிக் கொடுத்த மூத்த பொண்ணுங்க ரெண்டும் வந்து ஆத்தாளையும், அப்பதாளையும் கட்டிட்டு அழுகுறாங்க.

"எங்க போயி தேட, பேசாம வகுராம்பாளயத்துப் பூசாரிகிட்ட போயி மை வாங்கிட்டு வந்து தடவிப் பார்த்துர வேண்டியதுதான்" அப்படின்னு குரலேடுத்தது ஒரு பெருசு. மை போட்டுப் பார்த்தா திருட்டுப் போன பொருளோ இல்ல காணமப் போனா பொருளோ எங்கிருந்தாலும் கண்டு பிடிச்சுர்லாம்னு ஊர்ல பேசிக்குவாங்க.

"ரெண்டு நாள் பார்த்துட்டு போலீசுல சொல்லிரலாம்" இது காளியாத்தாளின் தம்பி.

"திக்குக்கு நாலு பேரு போயி தேடிக் கண்டுபிடிச்சு, அவங்க ரெண்டு பேரையும் வெட்டி பொலி போட்டுறனும்" அப்படின்னு சொன்னவன் ஈசுவரியின் மொறை மாமன்.

ஊருப் பொம்பளைக அத்தன பேரும், வெத்தலயப் போட்டு மென்னுக்கிட்டே குசுகுசுன்னு காதுக்கு உள்ளையே பேசிக்கறாங்க. என்னதான் பேசுராங்கலோன்னுட்டு ஒண்ணு ரெண்டு சிறுசுக 'ஆ' னு பார்த்துட்டு இருக்குதுக. மேச்சலுக்குப் போகாத ஆடு மாடுகளுக்கு காஞ்ச சோளத் தட்டையும், கழு தண்ணியையும் வெச்சிட்டு இருந்தா கடைசி மக. அந்த அஞ்சறிவு சீவனுக கூட மூச்சு உடாம, அசை போட்டுட்டு இருக்குது தட்டப்பயிர. அப்பப்போ, தலயத் தூக்கி புதுசு புதுசா வர்ற மனுசங்களப் பார்த்து அதுகளோட கண்ணுல கூட ஒரு பயம்.

அந்தி சாயற நேரத்துல, தேடிப்போன ஆளுக எல்லாரும் திரும்பி வந்துட்டாங்க. தேடாத எடமே இல்லியாம். தேடிப் போன ஆளுக எல்லாம் தண்ணியப் போட்டுட்டு மப்புலையே பேசினாங்க. சீமண்ண கொலாப்பு ரெண்டு திகுதிகுன்னு எறிஞ்சுட்டு இருக்குது சாலையில. காத்தாலே இருந்தே சோறு தண்ணி இல்லாததால ஆளாளுக்கு அங்கங்க சாஞ்சுட்டும் கால நீட்டியும் உக்காந்துட்டு இருந்தாங்க. அந்திப் பொழுதுக்காகவாவது எதாச்சும் பண்ணலாம்னுட்டு வெங்காயத்த தொளிச்சிட்டு இருந்தாங்க சொந்தக்காரப் பொம்பளைங்க.

"சரி, போனவ போயிட்டா. அழுதுட்டே ஒக்காந்துட்டு இருந்தா பொழப்பு நடக்குமா?. அடுத்த சோலியப் பார்க்க வேண்டியதுதானே. போனவ திரும்பி வந்தா சேர்த்துக்குங்க" ன்னு ஒரத்த கொரல்ல சொல்லுச்சு தூரத்துப் பெருசு ஒன்னு.

அதக் கேட்டவுடனே, சாஞ்சு உக்காந்துட்டு இருந்த கருப்பன் விறுவிறுன்னு எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தான். பார்த்துட்டு, பக்கத்துல இருந்த சொம்புத் தண்ணிய எடுத்து தல மேல ஊத்திட்டான். ஊத்துன வேகத்துலேயே அந்த சொம்ப விட்டெரிய, அது போயி நங்குன்னு ஒரு ஓரமா உக்காந்துடுச்சு. காத்திருந்த கூட்டத்துக்கு திக்குன்னு ஆகிப் போச்சு நெலம. கெழவியும், காளியாத்தாலும் இந்தக் காட்சியப் பார்த்துட்டு குய்யோ முறையோனு கத்தி அழுகை ஆரம்பிச்சுட்டாங்க. நனைஞ்ச தலையோட பித்துப்பிடிச்ச மாதிரி முழிச்சுப் பார்த்துட்டே உக்கார்ந்தான் கருப்பன். 'தலை முழுக்கிட்டேன்னு சொல்லாம சொல்லிட்டன் கருப்பன்' ன்னு ஊரே பேசிட்டு இருக்குது.

உறவும் சொந்தமும் ரெண்டொரு நாளுலேயே சொல்லிட்டு சோலியப் பாக்க கெளம்பிட்டாங்க. ரெண்டு மூணு நாளா வெளிய தல கட்ட முடியல. அப்படியே வெளிய போனாலும் பாக்கற ஊர்க்காரங்க பார்வையில கரிசனமா இல்ல பழிப்பான்னு புரிபடல. ரெண்டு வாரம் கழிச்சு எங்க இருக்குராங்கற விசயம் தெரிஞ்சு போச்சு. ஆனாலும், யாரும் போய்ப் பார்க்க ஆசப் படவே இல்ல.

கோயம்புதூருக்குப் பக்கத்துல ஒரு ஊருல குப்பனோட தூரத்துச் சொந்தக்காரன் ஒருத்தன் இருந்தான். அவனோட ஊட்டுக்குதான் அடக்கலம் போனாங்க ரெண்டு பேரும். பெத்தவங்க வந்து பாப்பங்கனுட்டு நாலு மாசமா பாத்துட்டு இருந்தாங்க. ஆனா, அவங்க யாரும் வரவே இல்ல. இந்த இடப்பட்ட காலத்துல ஏதோதோ வேலைக்கு ரெண்டு பேரும் போயி குடும்ப வண்டி ஓடிட்டு இருந்துச்சு. அடுத்த வாரம் வந்தா மார்கழி போயி தை மாசம் பொறக்குது. பொங்கலுக்கு என்ன ஆனாலுஞ் செரி ஊருக்குப் போலாம்னு முடிவு பண்ணிட்டாங்க.

ஆறாம் நம்பர் பஸ்ஸ விட்டு எறங்கினவுடனே, ஏர்ற ஆளுக ஒரு மாதிரி பாத்துட்டே சிரிச்சாங்க. ரெண்டு பேருக்கும் என்ன சொல்றதுன்னு தெரியாம வெறும் தலைய மட்டும் மாடு மாதிரி ஆட்டிட்டு விறுவிறுன்னு நடக்க ஆரம்பிச்சுட்டாங்க. "இப்பதான் வர்றீங்களா?" கேட்டாங்க வழியில பார்த்த ஊர்க்காரங்க. ஒன்னு ரெண்டு பேரு சிரிச்சாங்க. என்ன கேட்டாலும் "ஆமா" ன்னு மட்டும் சொல்லிட்டு வந்துட்டே இருக்காங்க.

சால வாசலுக்கு வந்ததும் நின்னுட்டாங்க ரெண்டு பேரும். வெளையாடிட்டு இருந்த தம்பியும், தங்கச்சியும் இவங்களப் பார்த்துட்டு போலாமா, வேண்டாமான்னு நெனச்சிட்டே "அம்மா" னு கத்திட்டாங்க. "என்னாடா" னுட்டு வெளிய வந்த காளியாத்தா ரெண்டு பேரையும் பார்த்ததும், கைய ஓங்கிட்டு அடிக்க வந்துட்டா பெத்த மகள. சத்தம் கேட்டு பொடக்காநில இருந்த கெழவி ஒருபக்கம், காளியாத்தாள தடுத்துட்டு வெச்ச ஒப்பரில ஊரே கூடிருச்சு.

"என்னதான் இருந்தாலும், வளர்த்த பாசம் போயிடுமா? திரும்பி வந்திருக்காங்க. உள்ள கூப்பிட்டுப் போ காளியாத்தா" அப்படின்னு சொன்னாங்க ஊர்ப் பெருசுங்க. விஷயம் தெரிஞ்சு தெளுவு எறக்கப் போன கருப்பன் திரும்பி வந்து, ரெண்டு பேரையும் வெறிச்சு வெறிச்சுப் பார்த்தான்.

கறுப்பனப் பார்த்ததும் பயந்து போனாங்க ரெண்டு பேரும். எந்த அருவா எந்த தலைய வெட்டுமொன்னு பார்த்துட்டு இருந்துச்சு ஊரு. கெழவி அழுகுர சத்தத்த விட வேறெந்த சத்தமும் கேக்கல. நாய் கூட வாய்க்குள்ளேயே உருமிட்டு நிக்குது. கொஞ்ச நேரம் பார்த்துக்கிடேயிருந்த ஈசுவரி "அப்பா" னுட்டு ஓடிப்போயி கால்ல உளுந்துட்டா. பின்னாடியே போன புருசனும் கால்ல உளுலாமா, வேண்டாமான்னு யோசனை பண்ணிட்டிருந்தான். கீழ உளுந்தவ இன்னும் எந்திருக்கவே இல்ல.

"தப்புத்தாம்பா. நான் பண்ணினது தப்புதான். என்ன மன்னிச்சிருப்பா" புலம்பி அழுகுறா ஈசுவரி. பின்னாலிருந்த காளியாத்தா, ரெண்டு கையையும் தூக்கிட்டு அடிக்க வந்தவ, அவ வயித்துப் பக்கம் பார்த்துட்டா. கொஞ்சம் பூசுன மாதிரி இருந்துச்சு வயிறு. அடிக்க வந்தவ அடிக்காம அப்படியே நின்னு போயிட்டா. அப்பன் காலப் புடிச்சுட்டு இருந்தவ, அப்படியே பின்னாடி திரும்பி பெத்தவள கட்டிப் பிடிச்சிட்டு அழுகுறா. காளியாத்தாளும் கீழ உக்காந்துட்டு மகள கட்டிப் புடிச்சுட்டு அழுகுறா.

"இப்படியே மாத்தி மாத்தி அழுதுட்டேயிருந்தா எப்படி? நல்லா நாளும் அதுவுமா வந்திருக்கற புள்ளைக்கு கோழியடிச்சு கொளம்பு வெச்சு ஊத்து" அப்படிங்குது பல்லுப்போன ஒரு பெருசு.

கருப்பன் காளியாத்தாளப் பார்த்து ஒத்தக் கையத் தூக்கி உள்ள கூட்டிட்டுப் போன்னுட்டான். இதுக்குதான் காத்திருந்த மாதிரி அவளும் மகளக் கூட்டிட்டுப் போயிட்டா. "ஹ்ம்ம்... என்னென்னவோ நடக்கும், செத்த நேரமாவது போகும்னு வந்தா பொசுக்குன்னு போயிருச்சு" ன்னு பேசிட்டே கலைஞ்சு போறாங்க ஊருசனம் மொத்தமும்.

குப்பனோட ஊட்டுக்குத் தெரிஞ்சு போயி ரெண்டு மூணு பேரு வந்து பார்த்துட்டுப் போயிட்டாங்க. "நாளைக்கு நாள் நல்லாயிருக்கறதால புள்ளையும் மருமவளும் வரட்டும்"னு ஆசப் படறாங்களாம் குப்பனோட ஊட்டுல. அதையும் சொல்லிட்டுப் போனாங்க வந்தவங்க.

வெளிய வந்த ஈசுவரி திண்ணைல ஒக்காந்துட்டு இருந்த அப்பனையே பார்க்குறா. போன நாலு மாசத்துக்கு முன்னாடி, ஓடிப்போறதுக்கு மொத நா உக்காந்து அழுதது நெனவுக்கு வருது.

எங்கியோ வெறிச்சுப் பார்த்துட்டு இருந்த கருப்பன் ஒண்ண நெனச்சு உள்ளுக்குள்ளேயே சிரிச்சிட்டு இருக்கான். நரம்பில்லாத நாக்கு நாலையும் பேசும், அதுனால பேச வேண்டியத மட்டும் பேசுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா, மக ஊட்ட விட்டுப் போன அன்னிக்கும் கருப்பன் கெட்டதா பேச முடியல. அன்னிக்கு எதாவது அவன் பேசற மாதிரி இருந்து எதையாவது சொல்லியிருந்தா இன்னுக்கு மகளப் பார்க்கும்போது அது நெனவுக்கு வராமலா போயிருக்கும் ?. மத்தவங்க எல்லாம் தான் பேசுனத அப்புறமா நெனச்சுப் பார்ப்பாங்களா?. அந்த விதத்துலா, தான் கொடுத்து வெச்சவந்தான்னு நெனச்சுட்டு, தூரத்தில தெரிஞ்ச பனை மரத்தப் பார்த்து சிரிச்சிட்டு இருக்கான் கருப்பன்.

படங்கள்: இணையத்தில் இருந்து. நன்றி.

Wednesday, December 8, 2010

காதல் செய்வீர் உலகத்தீரே!

உலகம் என்ன சொல்லும்
என்கிறாய்
உன்னையும் என்னையும் தவிர
உலகத்தில்
யாருமில்லை கண்ணே !

*********************************

நீ
வெட்டி விலகிச்
செல்லும் போதெல்லாம்
வெட்ட வெட்ட
மீண்டும் தழைக்கும் தாவரமென
வளர்கிறது
உன்மேலான என் பிரியம் !

*********************************

தென்றலாய் நடந்தாய்
மணியாய் சிரித்தாய்
தண் நிலவாய்ப் பார்த்தாய்
ஒரு நாள்
கவிதையாய்ப் பேசியபோதுதான்
நான் கவிதை கிறுக்க ஆரம்பித்தேன் !

*********************************

Monday, December 6, 2010

பயோடேட்டா : மழை


பெயர்: மழை

சாதனை: உயிர்கள் தோன்ற காரணமாக இருந்தது

இருப்பிடம்: வானம், பூமி, ஆறு, கடல் முதற்கொண்டு உங்கள் வீட்டின் நீர் பிடிக்கும் பாத்திரங்கள் என அனைத்திலும்.

நிறம்: இல்லை

பிடித்த இடம்: என்னை நேசிப்பவர்கள் மற்றும் என்னை எழுதும் கவிஞர்களின் மனம்.

பிடித்தவர்கள்: மரம் வளர்ப்பவர்கள்

பிடிக்காதவர்கள்: மரம் + காடுகளை அழிப்பவர்கள், சுற்றுச்சூழலைக் கெடுப்பவர்கள்.

எரிச்சல்: வெயில் காலங்களில் மழை இல்லை என்று புலம்பிவிட்டு, மழை பெய்யும் காலங்களில் 'எப்பதான் இந்த மழை நிக்குமோ?' எனத் திட்டும் மனிதர்களைக் கண்டால்.

நீண்ட கால சாதனை: இன்னும் பெய்து கொண்டிருப்பது, உயிர்களை வாழ வைப்பது.

சோகம்: முன்காலம் போல் மும்மாரி எல்லாம் பொழிய முடியாமல், குறைவாக பெய்வது. (இதற்கே மக்கள் 'வரலாறு காணாத மழை, வீட்டில் வெள்ளம்' என்று செய்தியில் சொல்லுகிறார்கள்).

பிடித்த குறள் : விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

**********************************

நன்றி: மழைப் படம் கொடுத்த கூகிள் ஆண்டவருக்கு.


Wednesday, December 1, 2010

வெதச்சவனும் வளர்த்தவனும்..















நடு மக,
புருஷன் பணம் வேணும்னு
கேக்குறான்னு தேம்பிக்கிட்டு இருக்க
கட்டி இருந்த நாலு வெள்ளாட்டுல
ஒன்னப் புடிச்சு
சந்தையில விக்கப் போனா
தெக்க வூட்டு ஆத்தா...

ஆட்ட வித்துப் போட்டு
பேரன் ஆட்டுக் கறி வேணும்னு
போன வாரம் கேட்டது
நெனவுக்கு வர
வாங்கலாம்னு எட்டி வெக்கையில
புள்ளைக்கு பணம் பத்தாமப் போனா
என்ன பண்றது அப்படின்னுட்டு...

வெதச்சவனும் வளர்த்தவனும்
என்னைக்கு அதத் தின்னிருக்கான்னு
பொலம்பிட்டு வெறுங்கையோடு
நடந்து போகிறாள் சந்தையிலிருந்து..



****************
படம்: இணையத்திலிருந்து நன்றி.
****************