Friday, June 22, 2012

பல்லி வீடு

சுற்றிக் கொண்டே இருக்கின்றன
பல்லிகள் வீட்டுக்குள்
சிலர் பயப்பட
சிலரோ கண்டும் காணாமலும் இருக்கிறார்கள்

பேசும் பொழுதோ
குளிக்கும் பொழுதோ
உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன
எங்காவது ஓரிடத்தில் இருந்து..

ஒரு போதும்
நம் ரகசியங்களை
அது சொல்லிவிடப் போவதில்லை..

இரையை
முழுதாக விழுங்குவது போல்
ரகசியங்களை விழுங்கியிருக்க கூடும்
அல்லது தகுந்த நேரம் பார்த்து
காத்திருக்கவும் கூடும் !

Monday, June 18, 2012

விசாரிப்பு

இன்றைக்குத்தான் அந்த அலுவலர் வந்தார்
கேள்விகள் கேட்டார்
அடிப்படைக் கேள்விகள் முடிந்து
'பிரிட்ஜ் இருக்குங்களா?' - இருக்கிறது என்றேன்
'வாஷிங் மெசின்' - இருக்கிறது என்றேன் 
'லேண்ட் லைன்' - அதுவும் இருக்கிறது என்றேன்

பாரதி பாப்பாவுக்கு தானே சொன்னார்..
'சாதிகள் இல்லையடி' என்று
மற்றவர்கள் கேட்கலாம், தப்பில்லை...

'என்ன சாதி' - அதையும் சொன்னேன்

'சொந்த வீடா' - அதற்கும் பதில் சொன்னேன்
'அவ்வளவுதான்' என விடைபெற்றார் அவர்

ஆமாம், இவ்வளவு கேள்விகள் அரசாங்கம் கேட்கிறது...
விலைவாசி உயர்வு, விவசாயி தற்கொலை
ஊழல், அரசியல்வாதிகளின் சொத்துக்கள்
கல்வி, அடிப்படைத் தேவைகள்
இன்னும் பலவும் என
எங்களிடம் ஆயிரமாயிரம் கேள்விகள்...

பதில் தருவீர்களா? 


Wednesday, June 13, 2012

காட்டை வளர்த்தவர்


அஸ்ஸாம் மாநிலத்தில், ஆற்றின் ஓரத்தில் ஒரு காட்டையே உருவாக்கி உள்ளார் ஜாதவ் பயங்(jadav payeng) என்பவர்.

இவரின் சிறுவயதில், ஆற்றின் மணல் கலந்த திட்டுகளில், மரம் வளர்க்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. அவரும் அதில் ஒருவராக இருந்திருக்கிறார். நாளடைவில் அந்தத் திட்டத்தில் கலந்து கொண்ட எல்லோரும் அங்கிருந்து அகன்று விட, இவர் மட்டும் தன் குடும்பத்துடன் அந்தக் காட்டுக்குள்ளேயே தங்கி, மரங்களை வளர்த்துள்ளார். முதலில் மூங்கில் மரம் மட்டும் வளர்ந்த அந்த மண்ணில், எறும்புகளை கொண்டு போய் அங்கே விட்டு, மண்ணை வளமாக்கி அனைத்து மரங்களையும் நட்டு இன்று அதை ஒரு பெரிய வனமாக மாற்றி இருக்கிறார் ஜாதவ் பயங். காட்டின் பரப்பு முன்னூறு ஹெக்டேர்.

இவர் எடுத்த இந்த முயற்சியால் இன்று அந்தக் காட்டில் பல பறவைகளும், விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன. இதற்கு முன்னர் மரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி என்கிற தலைப்பில் அய்யாசாமி அய்யாவைப் பற்றி எழுதி இருந்தேன். அவரும் இயன்ற அளவு மரங்களை வளர்த்தவர். மரங்களை வெட்டித் தள்ளி, பணம் சம்பாதிக்கும் மனிதர்களுக்கு மத்தியில் இவர்களைப் போன்றவர்களே நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள்.



எங்கேயோ ஓடிக் கொண்டிருக்கும் இந்த தலைமுறை, இவர்களைப் பற்றி அறிந்திருக்குமா?. அல்லது, நமது அரசுகள் தான் மரம் வெட்டப் படுவதைத் தடுத்து, இவர்களைப் போன்றவர்களை ஊக்குவிக்கப் போகிறதா?. இருக்கும் கொஞ்ச நஞ்ச வளத்தையும் காப்பாற்ற வேண்டியது நம் எல்லோரின் கடமை அல்லவா. அடுத்த தலைமுறைக்கு, மரம் இல்லாத பூமியை பரிசளிக்கப் போகிறோமோ?. அடுத்த தலைமுறை என்பது வேறு யாரோ அல்ல, நம் மகன், பேரன்கள்தான் என்பதை எப்போது உணரப் போகிறோம் நாம்?

நாமும் இயன்ற அளவு மரங்களை வளர்ப்போம். மரம் வெட்டப்படுதலைத் தடுப்போம்.

நன்றி: புதிய தலைமுறை

படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி


Monday, June 11, 2012

எழுத்தின் வல்லமையும் ஒரு குறும்படமும்

அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகள், கதைகள் என்று சொல்வதை விட, நம்மைச் சுற்றியிருக்கும் மக்களின் வாழ்க்கை குறிப்புகள் போன்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

அவரின் தளத்தில் வெளியாகியிருக்கும், உடனே திரும்பவேண்டும் என்ற கதையில், நம்மூரில் பேருந்தில் இருக்கை பிடிக்க சண்டை போடுவதைப் போல, விமானத்தில் இருக்கை பிடிக்க அவர் பட்ட துன்பங்களைச் சொல்லுகிறார். கதை படிக்கும்போது சிரிப்பு வந்தாலும், சொல்ல முடியாத ஒரு வேதனை இல்லை மனத் துயரம் என்னை ஆட்கொண்டது. அந்த இடத்தில் அவருக்கு உதவும் முன்பின் தெரியாத மனிதர்களால் தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

*******

முன்னரே, சித்ரா என்ற குறும்படத்தைப் பார்த்து மனது ஒரு மாதிரியாக இருந்தது. இப்பொழுது, அந்தப் படத்துக்கு 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்' விருதை அறிவித்திருப்பதை தனது தளத்தில்  பகிர்ந்திருந்தார் அ.முத்துலிங்கம். இந்தக் குறும்படத்தை இதற்கு முன்னர் நீங்கள் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள். குறுகிய நேரத்தில், ஒரு தகப்பனின் வலியையும், மனைவியின் கண்ணீரையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் விதம்... நீங்களே பாருங்களேன்.







Friday, June 1, 2012

சினிமா : செவென் சாமுராய் (Seven Samurai)

ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசேவாவின் படம் செவென் சாமுராய். நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய கதை. ஒரு மலையோர விவசாய கிராமத்தில், மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.  கிட்டத்தட்ட ஐம்பது குடும்பங்கள் மட்டுமே இருக்கும் அந்தக் கிராமத்தில் பண்டிட்கள் என்னும் திருடர்கள் கூட்டமாக வந்து பொருட்களைத் திருடியும், பெண்களை இழுத்துக் கொண்டும் சென்றுவிடுகிறார்கள். மிகுந்த பலசாலிகளாகவும், துப்பாக்கி போன்ற புதிய ஆயுதங்கள் வைத்திருப்பதாலும் ஒவ்வொரு முறையும் கிராமத்தினர் அவர்களிடம் நிறைய இழக்கிறார்கள். உழைப்பு ஒன்றே தங்களுக்கு தெரிந்தது என்றிருக்கும் அந்த கிராம மக்கள், திருடர்களிடமிருந்து எப்படித் தப்பித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை.




ஒவ்வொரு முறையும் திருடர்களிடம் படும் துன்பம் தாங்காமல், அக்கிராம மக்கள் ஊரிலுள்ள முதியவரிடம் ஆலோசனை கேட்கிறார்கள். அம்முதியவர், 'ஒரு காலத்தில் எல்லாக் கிராமங்களிலும் இந்தப் பிரச்சினை இருந்தது. ஒவ்வொரு கிராமத்தினரும் பண்டிட்களிடம் நிறைய இழந்தார்கள். ஆனால் ஒரேயொரு கிராமம் மட்டும் அவர்களிடமிருந்து தபபித்தது ஏனெனில், அந்தக் கிராமத்தினர் சாமுராய்களை காவல் காக்க அமர்த்தியிருந்தனர். எனவே திருடர்களால் அந்தக் கிராமத்தின் பக்கம் கூட வர முடியவில்லை' எனக் கூறுகிறார். 

மக்களோ 'சாமுராயை வேலைக்கு அமர்த்துவது சரிதான். ஆனால், நம்மிடம் அவர்களுக்கு கொடுக்க எதுவுமில்லியே. உணவு மட்டும்தான் நம்மால் அவர்களுக்கு கொடுக்க முடியும்' என்கின்றனர். முதியவர் 'எனவே, நாம் பசித்திருக்கும் சாமுராய்களைத் தேடி வேலைக்கு அமர்த்த வேண்டும்' எனச் சொல்கிறார்.



கிராமத்திலிருந்து ஒரு சிலர் சாமுராய்களை தேடி, பக்கத்து நகரத்துக்கு கிளம்புகின்றனர். அவர்களால் அவ்வளவு எளிதாக சாமுராய்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில், உணவுக்காக மட்டும் வேலைக்கு வரும் சாமுராய்களைத் தேடுவதென்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு சில சாமுராய்கள் கோபப்பட்டு அவர்களை விரட்டி விடுகிறார்கள்.

ஓரிடத்தில் ஒரு திருடனிடம் மாட்டிக்கொண்ட குழந்தையைக் காப்பாற்றும் துறவி போன்ற ஒரு சாமுராயை அவர்கள் சந்திக்க நேர்கிறது.  அவரின் பெயர் காம்பி. அவரைப் பின்தொடர்ந்து சென்ற கிராமத்தினர், அவரிடம் பேச, அவரும் அந்தக் கிராமத்துக்கு வர ஒப்புக்கொள்கிறார். ஆனால், மலை சூழ்ந்திருக்கும் அந்தக் கிராமத்தைப் பாதுகாக்க குறைந்தது ஏழு சாமுராய்கள் வேண்டுமென்று கூறுகிறார். ஏழு பேர் இருந்தால்தான் உங்கள் கிராமத்தைப் பாதுகாக்க முடியுமென்றும் அவர் சொல்ல, அவருடன் சேர்ந்து மீதிப் பேரை தேடுகிறார்கள்.  அவரே தலைவராக இருந்து மற்ற சாமுராய்களை தேட உதவுகிறார்.



ஆறு சாமுராய்கள் சேர்ந்துவிட, ஒரு சாமுராய் மட்டும் அவர்களுக்கு கிடைக்கவேயில்லை. இதற்கு முன்பிருந்தே காம்பியைத் தொடர்ந்து கொண்டிருந்த, ஒரு குடிகாரன் போன்ற ஒருவன் விடாமல் அவர்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். வேறு வழியில்லாமல் அவனையும் அவர்கள் சேர்த்துக்கொள்கிறார்கள். முன்னர் அவன் சொன்ன பொய்ப் பெயரான கிகிசியோ என்ற பெயரிலேயே அவனை அழைக்கிறார்கள்.

அவர்களை கூட்டிச் சென்ற இரு கிராம ஆட்களும், கிராமத்தை எட்டும் முன்பே கத்திக் கொண்டே செல்கிறார்கள். சாமுராய்கள் கிடைத்துவிட்டார்கள் எனக் கிராமத்தினர் மகிழ்ச்சியடைவார்கள், அவர்களை வரவேற்க சந்தோசமாக வருவார்கள் என எதிர்பார்த்த வேளையில், கிராமம் வெறிச்சோடிக் கிடக்கிறது. திறந்திருந்த சன்னல்கள், வாசல்களை மூடிக் கொள்கின்றனர் கிராமத்தினர்.




கிராமத்துக்கு வரும் சாமுராய்கள், தங்கள் பெண்களைக் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள் என்று பயப்படுகிறார்கள் கிராம மக்கள். ஒரு விவசாயி, தன் அழகான பெண்ணின் கூந்தலை ஒண்ட வெட்டி விட்டு ஆண் போல இருக்கச் சொல்கிறார். எனவே ஒருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து சாமுராய்களை வரவேற்கவில்லை.

அந்தச் சமயத்தில், பண்டிட்கள்(திருடர்கள்) வந்து கொண்டிருப்பதற்கான எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பிக்கிறது. உடனே எல்லா கிராம மக்களும், தங்கள் வீட்டை விட்டு அலறியடித்துக் கொண்டு, சாமுராய்கள் நின்று கொண்டிருந்த திடல் போன்ற இடத்துக்கு வருகிறார்கள். சாமுராய்கள் அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு, யாரு மணியை அடித்தது என்று வினவ, நான்தான் அடித்தேன் என்று கிகிசியோ சொல்கிறான். கிராம மக்களை காப்பாற்ற வந்திருக்கும் நம்மை வரவேற்க வராமல் ஒளிந்து கொண்ட இவர்களை வரவைக்கவே நான் எச்சரிக்கை மணியை அடித்தேன் என்று சொல்ல, மற்ற சாமுராய்கள் புன்னகைக்கிறார்கள்.



தலைவர் காம்பி கிராம வரைபடம் போட்டு, யார் யாரை எங்கே நிற்க வைப்பது என்று திட்டம் போடுகிறார். சாமுராய்கள், கிராம மக்களும் சண்டைப் பயிற்சி அளிக்கிறார்கள். இப்பொழுது அந்தக் கிராமமே பண்டிட்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது.

கிட்டத்தட்ட நாற்பது பண்டிட்கள் இருக்கும் அந்தக் கூட்டத்தை அவர்கள் வெல்ல வேண்டும். கிராமத்தினரிடம் இருந்த குதிரைகளை இதற்கு முன்னரே அவர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். பண்டிட்கள் வந்து விட்டதை அறிந்து கொண்ட மக்களும், சாமுராய்கள் தயாராக இருக்கிறார்கள். எல்லாப் பக்கமும் பாதுகாப்பு இருப்பதால், பண்டிட்கள் எந்தப் பக்கம் இருந்து வந்தாலும் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.



பண்டிட்கள் கிராமத்தை நோக்கி வந்து விட்டனர். இரண்டு மூன்று நாட்கள் நடக்கும் சண்டையில், ஒவ்வொரு பண்டிட்களாக கொல்கின்றனர். இவர்கள் பக்கமும் ஒரு சில கிராமத்தினர், சாமுராய்கள் என இழக்கிறார்கள். இறுதி நாளன்று கொட்டும் மழையில், சரியான தூக்கமில்லாமல், உணவில்லாமல், பண்டிட்களை எதிர்க்கிறார்கள். கடைசியில், நான்கு சாமுராய்களை இழந்த பின்னர் வெற்றி கிடைக்கிறது.

இறுதி காட்சியில்,  காம்பி இப்படிச் சொல்கிறார்;

We've lost yet again
With their land, the farmers are the victors.. not us  
(நாம் திரும்பவும் இழந்திருக்கிறோம், வெற்றி பெற்றவர்கள் இந்த மக்களே)

கிராம மக்கள், பாட்டுப் பாடிக்கொண்டு விதை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் தள்ளி ஒரு சின்னக் குன்றின் மீது நான்கு சாமுராய்களின் சமாதி அமைந்திருக்கிறது. அவர்களின் சமாதி மேல், சாமுராய்களின் வாள், ஒரு சின்னக் கொடியுடன் இருக்கிறது.

                               *********************************************

* கிகிசியோ பாத்திரம்தான் படம் நெடுக நம்மை புன்னகைக்க வைக்கிறது, கோபப்பட்டுக் கொண்டே, நம்மை சிரிக்க வைக்கும் அந்த முகம் எப்பொழுதும் மறக்காது.

* ஒரு சாமுராய், கிராமப் பெண்ணை காதலிக்க, அது தெரிந்த விவசாயி தகப்பன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அந்த பண்டிட்கள் உன் பெண்ணை இழுத்துக்கொண்டு போவதை விட, ஒரு சமுராய் அவளைக் காதலிப்பது ஒன்றும் தப்பில்லை என்று கூறினாலும் விவசாயி அதை மறுக்கிறார். இறுதியில் அந்தக் காதலும் கைவிட்டுப் போகிறது.

* பண்டிட்கள் தங்கி இருக்கும் ஒரு கூடாரத்துக்கு நெருப்பு வைக்கிறார்கள் கிராமத்தினர். வெளியே ஓடிவரும் ஒரு பெண், அந்தக் கிராம ஆளைப் பார்த்ததும், அலறிக்கொண்டு திரும்ப தீக்குள் புகுந்து கொள்கிறாள். அக்கிராம ஆளின் மனைவி அப்பெண் என்பதும், முன்னர் பண்டிட்கள் அவளைக் கவர்ந்து சென்று விட்டனர் என்பதும் தெரிகிறது.

* பார்க்க வேண்டிய மிக முக்கியமான படம். அதிலும் அந்த சண்டைக் காட்சிகள், உண்மையாக சண்டை நடந்திருந்தால் எப்படி இருக்குமோ அது போலவே இருக்கும்.


                             *********************************************