Saturday, January 30, 2010

ஜெயமோகன் - கோவை வாசகர் சந்திப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கடந்த 23/01/2010 அன்று கோவையில் நடைபெற்ற அவருடைய வாசகர் சந்திப்புக்கு வந்திருந்தார். ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடனை தவிர தெரிந்த முகம் எதுவும் இல்லை. ஆதலால் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு கவனித்தேன். எதாவது பிரச்சினை என்றால் ஓடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதால் ஓரமான இருக்கை.

சிறிது நேரம் கழித்து என்னை சுற்றியும் இருக்கையை போட்டு விட்டார்கள். கூட்டம் முடியாமல் நம்மை வெளியே விட மாட்டார்கள் என மனதிற்குள் பயம். நாம்தான் முகத்தில் எதையும் காட்டி கொள்ள மாட்டோமே !. சிறிது நேரம் கழித்து நாஞ்சில், ஜெயமோகன் என மேடைக்கு வந்தார்கள்.


வரவேற்பு முடிந்தவுடன், கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்வி கேட்டவர்கள் கேட்ட தொனியை பார்த்த பொழுது, 'ரூம் போட்டு யோசிச்சு இருப்பங்களோ' என தோன்றியது. இந்த கூட்டத்தில்தான் முதன் முதலாக கோவை ஞானி அவர்களை பார்த்தேன். இதுவரைக்கும் அவரை நான் பார்த்ததில்லை.


ஒரு சில கேள்விகளின் பதில்கள் புரிந்தன. சில கேள்விகளும், பதில்களும் புரியவில்லை. இது எனக்கு மட்டும்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். மார்க்சியம் பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது. நெறைய படிக்க வேண்டும் என தோன்றியது. மற்றவர்கள் கேட்ட கேள்விகளில் நான் கேட்க நினைத்த கேள்வி அடியோடு மறந்து விட்டது.

கூட்டம் முடிந்தவுடன் ஜெயமோகன் மேடையை விட்டு கீழே வந்தார். அவரிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என அருகில் சென்றேன். வாசகர்களால் புடை சூழ இருந்தார். சிறிது நேரம் கழித்து கிடைத்த இடைவெளியில், 'நான்தான் இளங்கோ.. அடிக்கடி மெயில், சாட்ல வருவேனுங்க...' என்றேன். 'அது நீங்கதானா.. !' என்று புன்னகைத்தார். பேசி கொண்டும் கேள்விகள் கேட்டு கொண்டே இருந்தார்கள் சுற்றி இருந்தவர்கள். அவரிடம் சொல்லிவிட்டு நடக்கலானேன். கூடவே ஒரு புகைப்படமும். என்னுடைய செல்லில் புகைப்படம் எடுத்த அன்பருக்கும், அனுமதி அளித்த ஜெயமோகனுக்கும் என் நன்றிகள்.


இது நான் கலந்து கொண்ட முதல் எழுத்தாளர் சந்திப்பு. கேள்வி கேட்ட வாசகர்கள் தாங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றார்கள். ஜெயமோகனே ஒரு கட்டுரையில் சொன்னது போல "ஒருவருடைய விடைகள் இன்னொருவருக்கு சரியாக இருப்பதில்லை" என்ற வாக்கியம் மனதில் வந்து போனது.

Wednesday, January 27, 2010

கூண்டுக் கிளி

கரும் பச்சை அடர்ந்த
மதில்சுவரின் கடைசியில்
கூண்டுக் கிளியோடிருந்தார் ஜோஸ்யர்...
வெளிவந்த கிளி
எனக்கு எடுத்த சீட்டில்
கண்ணனும் ராதையும்...

ஜோஸ்யரின் பேச்சில்
நானும் கிளியும்
மயங்கி இருந்தோம்..

கேட்டுவிட்டு நடக்கலானோம்
கிளி உள்ளேயும்
நான் வெளியேயும்
கண்ணன்களையும், ராதைகளையும் தேடி...

நமக்கு கூட வாய்க்க கூடும்..
கூண்டுக் கிளிக்கு ?

Sunday, January 10, 2010

தி சர்க்கஸ் (The Circus)

இப்பொழுது உள்ளது போல டிவி சானல்கள் இல்லாத காலத்தில் சர்க்கஸ் என்பது எல்லோருக்கும் வியப்பை அளித்தது. யானை, சிங்கம், ஒட்டகம் என விலங்குகளை பார்க்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். வில்லாக உடம்பை வளைத்து சர்க்கஸ் காட்டும் அந்த மக்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்?.


நாடோடிகளாக திரிந்த அவர்கள், அத்தனை விலங்குளை எப்படி சமாளிக்கிறார்கள், அவர்களுடைய குழந்தைகள் எங்கே படிப்பார்கள், சொந்தமாக ஒரு இடம் கூட அவர்களுக்கு இல்லையா என்ற கேள்விகளுக்கு விடையே இல்லையோ?. ஒரே ஊரில் வாசம் செய்யும் நமக்கு அவர்கள் விசித்திரம் நிரம்பியவர்களாக தெரிகிறார்கள்.



சார்லி சாப்ளினின் "தி சர்க்கஸ்" படம் பார்க்கும் பொழுது, நம்மை அறியாமலே பல முறை சிரிக்கின்றோம். ஒருவன் கோமாளியாய் தன்னை வருத்தி கொண்டு நடித்தாலும் அவனை பார்த்து சந்தோசம் கொள்ளும் உலகம் இது. உங்களால் ஒருவரை சிரிக்க வைக்க முடிந்தால், அதுவே உங்களின் திறமை. மற்றவரை சிரிக்க வைப்பது என்பது எளிதான செயல் அல்ல.


படத்தின் துவக்கத்தில் இருந்து, முடியும் வரை சாப்ளினே நம்மை குத்தகைக்கு எடுத்து கொள்ளுகிறார். வசனங்கள் இல்லாமல் அவரின் நடிப்புக்கே உலகம் மயங்கி இருக்கும். என்னமாய் நடித்து இருக்கிறார். ஒரு சர்க்கஸ் ஆளை போலவே படத்தில் வருகிறார். அனைத்து காட்சிகளிலும் அவரின் உழைப்பு தெரிகிறது. அதுவும் குரங்கு மூக்கை கடிக்க, அதன் வால் வாயில் நுழைய நடிக்கும் பொழுது அந்த மகா நடிகனின் நடிப்பு நம்முள் ஆச்சயர்யத்தை உருவாக்குகிறது.


எதிர் பாராமல் சர்க்கஸ் கம்பனியில் வேலை கிடைத்து, அங்கே ஒரு பெண்ணை பார்த்து காதல் கொள்ளுகிறார். அதற்குள் அவள் இன்னொருவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். புதிதாக வந்தவன் கயிற்றில் மேலே நடக்கும் பொழுது, எல்லாரும் பயந்திருக்க சாப்ளின் மட்டும் மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறார், ஏன் எனில் அவள் அவனைத்தான் காதலிக்கிறாள். இறுதியில் அவனும் சர்க்கஸை விட்டு வெளியேற, சாப்ளினும் வேறு காரணங்களுக்காக வெளியேற்ற படுகிறார்.


சாப்ளினை தேடி வரும் நாயகி, உன்னை விட்டு போக மாட்டேன் என்று அழ, அவளை தேற்றி அவளின் காதலனிடம் சேர்த்து, கல்யாணம் செய்து வைக்கிறார். சர்க்கஸ் கம்பனி கிளம்ப தயாராக இருக்கும் பொழுது, புதுமண தம்பதிகளை அவர்களுடன் அனுப்பி வைக்கிறார் சாப்ளின்.


சர்க்கஸ் கம்பனியின் எல்லா வண்டிகளும் கெளம்பி போன பின்னர், தனி ஒரு ஆளாய் அங்க நிற்கிறார் சார்லி. புழுதி பறக்க, சூரியன் மறைய, கூடாரம் அடிக்க போட்ட ஒரு வட்டத்தில் நின்று கொண்டிருக்கிறார். சிறிது நேரம் அமர்கிறார். மெதுவாக திரும்பி பார்த்து விட்டு, தனது வழக்கமான நடையில் அந்த வட்டத்தை விட்டு வெளியேறுகிறார் சாப்ளின்.

ஒரு வட்டத்துக்குள் தங்கி இருக்கும் நாம் எப்பொழுது அதை விட்டு விடுதலை பெறுவோம் என்பது போல அவரின் நடிப்பு இருக்கிறது. சிரிப்பதற்கு மட்டும் பார்க்க வேண்டிய படம் அல்ல இது, சக உயிரின் மேல் எந்த அளவுக்கு நாம் அன்பு செலுத்த வேண்டும் என்பதை போதிக்கும் படம்.

http://www.youtube.com/watch?v=YEIzkT1eFgc&feature=related
http://www.youtube.com/watch?v=JF38g4z_l_4&NR=1

Saturday, January 2, 2010

புத்தாண்டே வருக வருக...

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

போன வருடம் போல் இல்லாமல்
இந்த வருடம்
டாஸ்மாக் விற்பனை குறையட்டும்.. !!
இலவசங்கள் கொடுக்காமல்
நம் அரசியலாளர்கள் இருக்கட்டும்... !!
முடிந்தால்
விலைவாசி குறைக்கட்டும்... !!
கல்வி விலை குறையட்டும்...!!
தரமில்லாத சினிமாக்கள்
குறையட்டும்...!!

இவற்றில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட, இந்த வருடம் சிறப்பானதே...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...