உப்பு மிகச் சாதாரணமாக கிடைக்கிறது இப்பொழுது. ஆனால், ஒருகாலத்தில் மிக அதிக வரி விதிக்கப்பட்டு எளியோர் வாங்கமுடியாத விலையில் இருந்த ஒரு பொருள் அது. ஒரு குடும்பத்தின் ஒரு வருடத்துக்கான உப்பின் விலை, ஒருவனுடைய இரண்டு மாத சம்பளமாகும். வருட சம்பளத்தில் ஆறில் ஒரு பங்கு உப்புக்கு மட்டுமே செலவு செய்யவேண்டிய கொடுமை.
1750 ஆம் வருடங்களில், கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் ஆட்சியை நடத்திய பிரிட்டிஷ் பிரபுக்கள் உப்பு, பாக்கு போன்றவற்றுக்கு வரியை அதிகப்படுத்தினர். எளிய மக்கள் உப்பை அதிக விலைகொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். வரியோடு சேர்ந்த உப்பின் விலை அதிகமாக இருந்ததால், கடத்தல் அதிகரித்து தரம் குறைந்த உப்பு கலப்படம் செய்யப்பட்டு சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனையாகியது. கடத்தலைத் தடுக்க இந்தியாவின் குறுக்காக புதர் மற்றும் மரங்களினால் ஆன வேலி உருவாக்கி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்தச் சாவடியில் எண்ணற்ற காவல் அதிகாரிகள் பாதுகாப்பில் குறைந்த கூலியில் அமர்த்தப்பட்டனர்.
இந்த புத்தகத்தை எழுதிய ராய் மாக்ஸம் இங்கிலாந்தில் ஒரு பழைய புத்தகத்தில் இந்த வேலியைப் பற்றிய குறிப்பைப் படிக்கிறார். இதற்கு முன்னரே இந்தியாவுக்கு பல முறை வந்திருக்கிறார். எனவே, இந்தியாவைப் பற்றி எந்த ஒரு குறிப்பு அல்லது புத்தகம் கிடைத்தாலும் அதைப் படிக்கிறார். அப்படித்தான் உப்பு வேலி பற்றிய குறிப்பைப் படிக்கிறார். உப்புக்காக ஒரு வேலி என்பது அவரைத் தூண்டுகிறது. பல நூறு மைல்களுக்கு நீண்டிருந்த வேலி இப்பொழுது கண்டிப்பாக சில இடங்களிலாவது இருக்கவேண்டும் என நினைத்து இந்தியா வருகிறார். ஆனால் அவ்வளவு எளிதாக அவரால் அதைக் கண்டறிய முடிவதில்லை. அப்படி ஒரு வேலி இருந்தது என்பதற்கான எந்த தடயமும், எந்த பதிலும் அவருக்கு கிடைப்பதில்லை. திரும்பவும் இங்கிலாந்துக்குச் சென்று , பழைய ஆவணக் காப்பகங்களில் தேடுகிறார். ஒரு சில வரைபடங்கள் அதில் சிக்கினாலும் தெளிவாக எதுவும் இல்லை. ஒரு வரைபடத்தை முன்மாதிரியாக கொண்டு திரும்பவும் இந்தியாவுக்கு வந்து தன் தேடலைத் தொடங்குகிறார்.
அந்த வரைபடத்தை வைத்து தேட ஆரம்பிக்கிறார். ஆனால் அது இயலாமல் போகவே திரும்பச் செல்கிறார். மூன்றாவது முறையாக, 1998ல் திரும்பவும் வருகிறார். இந்த முறை வேலியைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் இத்தோடு கைவிட்டுவிடுவதென நினைக்கிறார். ராய் உப்பு வேலியைப் பற்றிய எந்த ஆவணம் என்றாலும் அதைக் குறிப்பெடுத்து வைக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் ஆவணக் காப்பகங்களை பயன்படுத்துகிறார். ஆங்கிலேய அதிகாரிகள் எழுதி வைத்திருந்த குறிப்புகள், அறிக்கைகள் என எல்லாவற்றையும் படித்து இந்தப் புத்தகத்திலும் கொடுத்துள்ளார். ஒரு பெரிய நிறுவனம் செய்ய வேண்டியதை, தனி ஒரு மனிதனாக வேலியைத் தேடி மூன்று வருடங்கள் இந்தியாவுக்கு வருகிறார்.
ஒரு விவசாய நாட்டில் பஞ்சம் என்பது நிகழ முடியாதது. இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு பக்கம் பஞ்சம் என்றாலும் இன்னொரு பக்கம் விளைச்சல் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் பஞ்சம் இருந்தது, மக்கள் இறந்தனர், ஏன் அதற்கு என்ன காரணம் என்பது நம் வரலாற்றில் இருப்பதில்லை. அப்படி ஏழை மக்கள் இறந்து போனதற்கு, அதிக வரியினால் உப்பு பெற முடியாமல் இருந்ததே என நிறுவுகிறார் ராய். உப்பு குறைபாடு என்பது, வெப்ப நாட்டில் மிகுந்த உடல் உபாதைகளை உருவாக்க கூடியது எனச் சொல்கிறார். காலரா போன்ற கொள்ளை நோய்கள் அதிகமான மக்களை இறப்புக்குத் தள்ளியதற்கும் காரணம் உப்பு குறைபாடே எனச் சொல்கிறார்.
இந்திய வரலாறு என்பது எங்கேயும் ஆவணமாக இருப்பதில்லை. நம் கல்வி நிலையங்களும், பேராசிரியர்களும், பல்கலைக் கழகங்களும் புத்தகத்தில் படித்து இன்னொரு புத்தகத்தையே உருவாக்குகின்றனர். இந்த உப்புவேலியை ஒரு அயல் நாட்டவர் வந்து தேடுகிறார். நமக்கு அதைப் பற்றி எதுவும் தெரிவதில்லை. அவர் தேடும்பொழுது செயற்கைக்கோள் மூலமாக படம் பிடித்து தரும் ஒரு அரசு நிறுவனத்தை அணுகுகிறார். அவ்வாறு படம் கிடைத்தால், மரங்கள் செறிவாக இருக்கும் பகுதியை அறிந்துகொள்ளலாம் என முயல்கிறார். ஆனால் அவர்கள் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேட்க, ராய் அதை மறுத்து தானே சுற்றி தேட ஆரம்பிக்கிறார். உண்மையில் அந்த அரசு நிறுவனம் அவருக்கு உதவி செய்திருக்க வேண்டுமல்லவா?. ஆனால் அப்படிச் செய்யமாட்டார்கள்.
இந்தப் புத்தகத்தில் ராய், மகாத்மா காந்தி ஏன் உப்பு சத்தியாகிரகம் செய்ய தண்டி யாத்திரை செய்தார் என தரவுகளோடு விளக்குகிறார். நில வரி மற்றும் வணிக வரிக்கு எதிராக போராட்டம் நடத்தலாம் என தனது கட்சி குழுவினர் தெரிவித்தாலும், ஏழை மக்களைப் பாதிக்கும் உப்பு வரியே முதன்மையாக நீக்க வேண்டும் என போராட ஆரம்பிக்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால், உப்பு வரியை பிரிட்டிஷார் நீக்கம் செய்யாமல் உற்பத்தி செய்யும் இடத்தில் மட்டும் வரியை நீக்குகின்றனர். காந்தி கதர் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் என அடுத்தடுத்து நகர்கிறார். இந்திய வரலாற்றில் பிரிட்டிஷாருக்கு பெரும் வருவாயையும், ஏழை மக்கள் மாண்டு போவதற்கும் காரணமாக இருந்த உப்பு வரி இந்தியா விடுதலை பெறுவதற்கு ஆறு மாதம் முன்னர்தான் நீக்கப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்க முக்கியமான ஆளுமையாக இருந்தவர் ஹியூம் (Allan Octavian Hume). ராய் புதர் வேலியை கண்ட இட்டவா மாவட்டத்தில் ஹியூம் ஆங்கிலேயப் பணியில் இருந்திருக்கிறார். பின்னர் அவர் சுங்கத் துறையிலும் பணிபுரிகிறார். அவருக்கு கீழ்தான் இந்த சுங்க வேலியும் இருந்திருக்கிறது. ஆனால், அவருடைய நாட்குறிப்புகளில் ஒரே ஒரு முறை மட்டுமே வேலி பற்றி எழுதியிருக்கிறார். அவருடைய பணி ஓய்வுக்குப் பின்னர், தேசிய காங்கிரஸ் அமைக்கிறார். காங்கிரஸ் ஆரம்பித்த பின்னர் 25 வருடங்கள் கழித்தே காந்தி உள்ளே வருகிறார். உப்பு யாத்திரை தொடங்குகிறார்.
ஆக்ரா, ஜான்சி போன்ற இடங்களில் வேலி சென்றதற்கான எந்த அடையாளங்களும் இப்போதில்லை. அந்த வேலி இருந்த இடங்களில் அதனை ஒட்டிய விவசாய நிலங்களுடன் உழுது சேர்க்கப்பட்டிருந்தன அல்லது அதன் மேல் சாலை போடப்பட்டிருந்தது. மண்ணைக் கொட்டி உயரமான இடத்தில் வேலி அமைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் அமைக்க வசதியாக இருந்திருக்கிறது. சளைக்காமல் தேடுகிறார் ராய். அதைக் கண்டுபிடிக்கும் நாளும் வருகிறது. இட்டவா என்னும் மாவட்டத்தில் சம்பல் மற்றும் யமுனை நதிகளுக்கு இடையில் உள்ள கிராமத்தில் (பலிகர் கிராமம்), ஒரு முதியவர் இன்னும் மீதியுள்ள வேலியைக் காண்பிக்கிறார். சம்பல் கொள்ளைக்காரர்களுக்கு பேர் போன இடம். எதற்காக மூன்று வருடங்கள் தேடினாரோ, இன்று அதைக் கண்டடைந்துள்ளார் ராய்.
ராய் இப்படிச் சொல்கிறார்; "கடந்த மூன்று வருடங்களில் இந்தியா குறித்தும் இந்தியர்கள் குறித்தும் சிறிது தெரிந்துகொண்டேன். ஆங்கிலேயரின் இந்தியா குறித்து அதிகம் தெரிந்துகொண்டேன். முதலில் நான் ஒரு ஆங்கில மடமையின் ஆதாரமாகத்தான் வேலியை நினைத்திருந்தேன். அது உண்மையில் ஆங்கிலேய அடக்குமுறையின் அசுர முகம் என்று கண்டடைந்து அதிர்ச்சியுற்றேன். "
உப்பு வேலி
ராய் மாக்ஸம் (Roy Moxham)
தமிழில்: சிறில் அலெக்ஸ்
பதிப்பு: எழுத்து
உலகின் மிகப்பெரிய உயிர்வேலியைக் கண்டடைவதற்கான ஒரு வரலாற்று ஆய்வாளனின் தேடல்.