Friday, September 13, 2013

ஜே.ஜே: சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி (நாவல்)

புத்தகம் வாங்கி பல வருடங்கள் ஆனாலும்,  முதலில் முழுவதும் படிக்க முடியாமல் திணறினேன். அல்லது இப்புத்தகம் கோரும் உழைப்பை நான் கொடுக்கவில்லை. நாவல், வழக்கமான கதை சொல்லல் முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது  காரணமாக இருக்கலாம். இடையில் மூன்று நான்கு தடவை திரும்ப திரும்பப் படித்தேன். படிக்கும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு பகுதி, ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது. இன்று இரவு இந்த புத்தகத்தை, மீண்டும் படித்தால் கூட எனக்கு அது புதிய வாசிப்பாகவே இருக்கும்.

பாலு என்கிற வாசகன் மூலம், ஜே ஜே எனும் மலையாள எழுத்தாளரைப் பற்றிச் சொல்லிச் செல்லும் நாவல் தான் ஜே ஜே: சில குறிப்புகள். ஜே ஜே வின் பிறப்பு முதல் அவன் இறப்பு வரை, அவன் பழகியவர்கள், நண்பர்கள், காதலி, அவன்  எழுதியவை என சொல்லிச் செல்கிறது நாவல். பாலுவின் பார்வையில் நாவல்  சொல்லப் பட்டாலும், ஜே ஜே வின் வாழ்க்கைச் சித்திரமாக இருக்கிறது நாவல். 


வழக்கமான கதைப்போக்கு, வருணனைகள், கற்பனை சித்திரங்கள் என்று ஏதுமில்லை.நாவல் எழுதிப் பல ஆண்டுகள் ஆனாலும், இன்றைய சூழலுக்கு மிகப் பொருந்திப் போகிறது. ஓரிடத்தில் இப்படி வருகிறது 'என் கவிதையை ரசிக்க கூடிய ஒரு வாசகன் கிடைத்து விட்டான்  என்ற சந்தோசத்தில் இருந்தேன். அடுத்த நிமிடமே சட்டைப் பையில் இருந்து அவன் ஒரு கவிதையை எடுத்து நீட்டினான்'.

இன்னொரு இடத்தில 'சிவகாமி அம்மாளின் சபதம் நிறைவேறி விட்டதா?' என்று ஜே ஜே கேட்பது போல வருகிறது. தான் வரைந்த ஓவியத்தில் சூரியன் இல்லை என்று ஒருவர் சொல்ல, 'சூரியன் வானத்திலிருக்கும் என நம்புகிறேன்' என்று சொல்கிறான் ஜே ஜே. முற்றிலும் தமிழ் வார்த்தைகளை மட்டும் கொண்ட,  'பொங்குமாக்கடல்'  பத்திரிகையின் ஆசிரியரான தாமரைக்கனி ஜே ஜே என்ற வார்த்தைகளைக் கூட 'சே சே' என்றுதான் போடுவேன் என்கிறார்.

நாவலில் இருந்து சில வரிகள்;

*******************

எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க, அது அதற்கான இடைவெளி தேவைப்படுகிறது. சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி.

*******************

பாதைகள் என்று எதுவுமில்லை. உன் காலடிச் சுவடுகளே உனக்கான பாதையை உருவாக்குகிறது.

*******************

என்னதான் வேதனை என்றாலும், என்னதான் துன்பம் என்றாலும் எப்போதும் சில பறவைகள் சூரியனை நோக்கியே பறந்து செல்வதை என்னவென்று சொல்ல. இராப் பகல், ஓய்வு ஒழிவு இல்லாமல் பறக்கின்றன அவை. முன்செல்லும் பறவைகள் கருகி விழுவதைக் கண்ணால் கண்டும், அதிக வேகம் கொண்டு பறக்கின்றன. பறத்தலே கருகலுக்கு இட்டுச் செல்கிறது என்ற பேரானந்தத்தில் சிறகடிக்கின்றன. கருகிய உடல்கள் மண்ணில் வந்து விழும்போது, கூரைக் கோழிகள் சிரிக்கக் கூடும். காகங்கள் சிரிக்கக் கூடும். சற்றுக் குரூரமான, கொடுமையான சிரிப்புதான்.

அப்போதும் சூரியனை நோக்கிப் பறக்கப் புறப்படும் பறவைகளின் சிறகடிப்பே அச்சிரிப்புக்குப் பதில்.


*******************

மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசத்திற்கு மாற்றாகப் புத்தகங்கள் இருக்க முடியாது. ஏசு எழுப்பிய குரல் அவர் முன் நின்றிருந்த ஜனங்கள் மனதில் எவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தியிருக்கும்! அதனால்தான் மனிதன் எவ்வளவோ படித்த பின்பும், எவ்வளவோ தெரிந்த பின்பும் மற்றொரு பெரிய குரலைத் தேடிப் போகிறான். குரல் தன்னுடன் பேசுவது போல அச்சு பேசாது என்பது வாசிப்பின் ஒரு நிலையில் அவனுக்குத் தெரிகிறது.

*******************



படங்கள்: இணையத்தில் இருந்து. நன்றி 


Wednesday, September 11, 2013

பேருந்து நிலையமும் ஒரு சிறுமியும்

நூறு நிமிடத்தில் கோவையை வந்தடையும் ஈரோ-100 பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தேன்.

கொஞ்ச நேரத்தில் ஒரு சிறுமி, கையில் சிறிய ஜெராக்ஸ் தாள்களுடன் ஏறினாள். எண்ணெய் காணாத தலையும், அழுக்கு உடையுமாக இருந்தவள், எல்லோரிடமும் அந்தத் தாள்களை நீட்டிக் கொண்டிருந்தாள். ஒரு சிலர் வாங்கிக் கொண்டார்கள். சிலர் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். எனக்குப் பக்கத்து இருக்கையில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள்.  அவர்களிடம் தாளைக் கொடுத்தவள், அப்படியே பின்னால் சென்றாள்.

திரும்பி வரும்பொழுது, இந்த இரண்டு இளைஞர்களும் ஒரு பத்து ரூபாய்த் தாளை அவளுக்கு கொடுத்தார்கள். இந்தப் பக்கம் திரும்பியவள், என்னிடமும் அந்த தாளைக் காட்டினாள். நான் இல்லை என்று மறுக்க, உடனே அவள் எழுதி இருந்ததைக் காட்டினாள். வழக்கம் போல, வாய் பேச முடியாத சிறுமி இவள், இவளுக்கு உதவி செய்யுங்கள் என்ற வாசகத்தோடு, நன்கொடை ரூ.10, ரூ.20, ரூ.50 என்று இருந்தது.

என்னிடம் இல்லை என்றேன். திரும்பவும் வயிற்றைத் தொட்டுக் காட்டி கேட்டாள். நான் தலையாட்டிக் கொண்டே இருக்க, அவள் என் தாடையைப் பிடித்து கொஞ்சினாள். நானும் அவளின் கன்னத்தில் ஒரு தட்டு தட்டிவிட்டு திரும்ப இல்லை என்றேன். கை ஜாடையிலேயே தனக்குப் பேசத் தெரியாது என்றாள். 

எனக்குத் தெரியும், எவனோ ஒருத்தன்(அ)ஒருத்திக்கு இவள் சம்பாதித்துக் கொடுக்கிறாள். அவன் எங்கேயோ ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, இவள் பிச்சை எடுத்து வரும் காசை செலவழிக்கக் கூடும். இவளுக்கு  சோறாவது வாங்கிக் கொடுப்பார்களா என்பது சந்தேகம் தான். இந்தச் சிறுமிக்கு நாம் காசு கொடுக்கும் பொழுது, மீண்டும் மீண்டும் இவளை நாம் இந்த நரகத்துக்கே தள்ளிக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றவும் செய்தது.

தொடர்ந்து மீண்டும் காலைத் தொட்டாள். நிமிர்ந்து என்னைப் பார்க்கும்பொழுது, இப்பவாவது இவன் குடுப்பானா என்று நினைத்திருப்பாள் போலும். அந்த இரண்டு இளைஞர்களும், 'நீங்க குடுக்காதீங்க' என்றார்கள். நான் தலையை ஆட்டிக்கொண்டே, 'ஸ்கூல்ல கொண்டு போய் விடுறேன், என் கூட வந்துறியா' என்றேன். அந்த சிறிய முகத்தில் ஒரு மூர்க்கம் வந்தது. என்ன நினைத்தாளோ, என் கன்னத்தில் ஓங்கித் தட்டிவிட்டு அடுத்த சீட்டுக்கு ஓடிப் போனாள். 

இந்தச் சிறுமிக்கு நான் ஒரு பத்து ரூபாய் கொடுத்து இருக்கலாம். ஆனால் அது அவளுக்குப் போய்ச் சேரப் போவதில்லை. முன்னரே சொன்னது போல, இவளுக்குப் பிச்சை போடுவதன் மூலம் மீண்டும் மீண்டும் அவளை இந்த நரகத்துக்கே நாம் அனுப்பி வைக்கிறோம். இந்தச் சமூகத்தில் ஒருவனாய், ஆட்சி செய்யும் அரசுகளுக்கு ஓட்டுப் போட்ட ஒருவனாய் நான் தலை குனிந்து தூங்கத் தொடங்கினேன்.



Friday, September 6, 2013

ஈராறுகால்கொண்டெழும் புரவி

எழுத்தாளர் ஜெயமோகனின் ஐந்து கதைகளும், ஒரு குறுநாவலும் கொண்ட தொகுப்பு 'ஈராறு கால் கொண்டெழும் புரவி'.


ஈராறு கால் கொண்டெழும் புரவி(குறுநாவல்):

சாஸ்தான்குட்டிப்பிள்ளை தமிழ் ஆசிரியர். பேறுகாலத்தில் மனைவி இறந்து விட, தனி மரமாகிறார். சித்தர் ஞானம், சித்தர்கள் பாடல் என்று தணியாத ஆர்வம். இரண்டு வேம்பு குசிச்களை மட்டும் வைத்துக்கொண்டு, நிலத்துக்கடியில் ஊற்றை எப்படி கண்டறிகிறார்கள் என்று யோசிக்கிறார். தள்ளாத வயதில், ஒரு மலை மேல் சென்று குடில் அமைத்து 'சாமியார்' என அறியப்படுகிறார். அங்கே அவர் நட்டு வைத்த மாமரம், வளர்ந்து ஒரு காய் கூட பிடிக்காமல் இருக்கிறது. கொஞ்ச வருடங்கள் கழித்து, ஊருக்கு வருகிறார். அங்கே தான் அறிந்த, ஞானமுத்தனின் மருகளிடம் நீர் அருந்தி உயிர் துறக்கிறார். அவரின் சாம்பலை அந்த மாமரத்தின் அடியில் போட்டவுடன், அந்த வருடம் முதல் மாமரம் காய்த்து தொங்குகிறது.


இந்நாவலைப் பற்றி ஜெயமோகன்:
"என் படைப்புகளிலேயே மிக முக்கியமான சிலவற்றில் ஒன்று என நான் நினைப்பது ஈராறு கால் கொண்டெழும் புரவி. சித்தர் ஞானம் என்பதன் மீதான ஒரு விளையாடல் அது. அர்த்தமற்ற விளையாட்டல்ல. பல்வேறு மூல நூல்களின் வரிகள் அதில் பகடியாக திருப்பப்பட்டுள்ளன. திரிக்கப்பட்டுள்ளன.  அந்த விளையாட்டு வெறும் கேலி அல்ல. என்னைப் பொறுத்தவரை அது ஒருவகை பொருள் கொள்ளலே. எல்லா வாசகர்களுக்கும் நூல்களும் மொழியும் மாறி மாறி கவ்வி ஆடும் அந்த விளையாட்டு பிடி கிடைக்காது போகலாம்."
சில வரிகள் நாவலில் இருந்து;
"ஓடுவது மண்ணிலன்னா என்ன, மண்ணுக்கு அடியிலண்ணா என்ன"

"மொத்தம் ரெண்டு பூலோகம் இருக்குதுன்னு ஒரு மண்புழு நெனச்சுட்டு. ஒண்ணு அது திங்கப்போற மண்ணு. இன்னொண்ணு அது தின்னு வெளிக்கெரங்கின மண்ணு"

"ருசிச்சது உம்ம பசி அய்யா. பசிக்கப்பால் உள்ள ருசியென்ன?"



அலை அறிந்தது:

வீடு வீடாகச் சென்று அத்தர் விற்கும் 'அத்தர் பாய்' பற்றிய கதை. அலை என்பது மேலேயும் போகும், கீழேயும் போகும். மேலே போன அலை கீழே இறங்க  வேண்டும் என்பது விதி. ஒரு காலத்தில், அத்தர் பாயின் தாத்தா மிகுந்த செல்வத்துடன் இருந்திருக்கிறார். ரம்ஜான் அன்று, சக்காத்து பணத்தை ஏழை மக்களுக்கு வாரி வீசிய குடும்பமாக இருந்திருக்கிறார்கள். அவ்வளவு செல்வாக்குடன் இருந்து, இப்பொழுது வீடு வீடாகச் சென்று அத்தர் விற்கும் பாய் சொல்கிறார்; 'அலை மேலேறினா கீழிறங்கணும்னு அல்லாவோட ஆணை.. கீழ எறங்குத நேரத்துல நாம வந்து பொறந்தாச்சு ... சக்காத்த வாரி எறிஞ்சு குடுத்த பாவத்துக்கு இன்னும் எத்தன தல மொற கஷ்டப்படணுமோ'.

களம்:

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் அன்று அரங்கேற்ற நாள். தாங்கள் கற்ற கலைகளை அவர்கள் மன்றத்தின் முன்னால்  அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். நகுலன், பீமன் என முடிய.. துரோணர் அர்ச்சுனனை அழைக்கிறார். வில் விஜயனான அவன், பறந்து செல்லும் ஒரு குருவியின் தலையை வெட்டி வீழ்த்துகிறான் தனதம்பால். மகிழ்ந்த துரோணர் 'இவனைப் போல வில்லாளி யாருமே இந்தப் புவியில் இல்லை' எனக் கூற, அரங்கத்தினுள் கர்ணன் வருகிறான். பறந்து செல்லும் ஒரு குருவியின் ஒற்றைச் சிறகை அது அறியாமல் தன்  அம்பால் அறுத்து, கைக்கு கொண்டு வந்து தலைக்கு சூடிக் கொள்கிறான். அர்ச்சுனன் துடிக்கிறான். இருவரும் போர் புரிய முடிவு செய்கிறார்கள். கர்ணனின், குலம் என்ன என்று கேட்க, கோபம் கொண்ட துரியோதனன் 'இவன் என் நண்பன். எனக்குச் சொந்தமான அங்கத நாட்டுக்கு இவனை மன்னன் ஆக்குகிறேன்' என்கிறான்.


 அங்கே வரும் தேரோட்டி, தன் மகன் களத்தில் இருப்பதைப் பார்க்கிறான். கர்ணனிடம் மன்றாடி, போர் வேண்டாம் எனச் சொல்ல அவனும் சம்மதிக்கிறான். சூரியன் மறைந்ததால், சபை மரபுப் படி அரங்கம் கலைகிறது. அர்ச்சுனன், தர்மனிடம் "இவனைக் கண்டு நீங்கள் பயப் பட வேண்டாம். இவனை நாம் வெல்வோம்." எனக் கூற, தர்மனோ " தன் அறத்தால் இந்த சூதன் மகன் நம்மை நிரந்தரமாக வென்று செல்வான் தம்பி. இன்று அந்த சூதன் சம்மட்டியுடன் களத்துக்கு வந்த போது என் மனம் உவகை கொண்டது. நீயும் பீமனும் எல்லாம் உவகை கொண்டோம். ஆனால் அவன் ஒருகணம் கூட அவரை நிராகரிக்கவில்லை. அக்கணத்தில் விண்ணில் தேவர்கள் அவன் மேல் மலர் சொரிந்து விட்டார்கள்” என்கிறான்.

பழைய முகம்:

சினிமா உலகம் எப்பொழுதுமே மிகை அலங்காரத்தால் ஆனது. அந்த அலங்காரத்தை நீக்கி விட்டால், அவர்களுக்கும் காதல் உண்டு, பிள்ளைகள் உண்டு, பிரச்சினைகளும் உண்டு. தான் சிறு வயதில் பார்த்து வியந்த ஒரு நடிகையை சந்திக்க நேர்கிறது அதுவும் பாலியல் தொழில் புரிபவளாக. முதலில் அது தான் இல்லை என்று மறுக்கும் அவள்,  பின்னர் ஒத்துக் கொள்கிறாள். கூடப் பிறந்த சகோதரர்கள் தன்னை ஏமாற்றியது, கூட்டி வந்தவன் தன்னை ஏமாற்றிய கதை என எல்லாவற்றையும் சொல்கிறாள். கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி வாங்கிய அடிகள், பத்துக்கு மேற்பட்ட முறை கருக்கலைப்பு, கடைசியில் பிறந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு என போய்க் கொண்டிருக்கிறது அவள் வாழ்க்கை. இரவு முழுவதும் அவள் நடித்த பாடல்களைச் சளைக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கிறாள் அந்த நடிகை.

மன்மதன்:

சிற்பங்களைப் பார்க்க ஒரு கோவிலுக்குச் செல்கிறான் கிருஷ்ணன். அங்கே ஒரே ஒரு பெண் மட்டும் பூக் கட்டிக் கொண்டிருக்க, அவளின் பேரழகை வியந்து நோக்குகிறான். அவளிடம், 'சிற்பங்களைப் பர்ர்க்க வேண்டும்' எனச் சொல்ல ஓடிப் போகும் அவள் ஒரு ஆளைக் கூட்டி வருகிறாள். அந்தப் பெண்ணின் கணவன்தான் அவன். கண் பார்வை அற்ற ராஜூ. ராஜூ சிற்பங்களைப் பற்றி விளக்குகிறான். ஒவ்வொரு சிலையையும் கைகளால் தொட்டே, அதன் அற்புதங்களைப் பற்றிச் சொல்கிறான். கொஞ்ச நேரத்தில், அந்தப் பெண் தான் சந்தைக்குப் போவதாகச் சொல்லிக் கொண்டு போகிறாள். அவளிடம் சரி என்று சொல்லி விட்டு, மீண்டும் தொடர ஆரம்பிக்கிறான் மன்மதன் சிலையைக் காட்டி, "மன்மதன் கிட்ட எந்த ஆயுதமும் கெடையாது சார்..அந்தக் கரும்பு வில்லும்.. மலரம்பும் மட்டும்தான்".



அதர்வம்:

தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க வழி தெரியாமல் தவிக்கிறான் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன். அதர்வ வேதம் அறிந்த யாஜரை அணுகுகிறார்கள். தனக்கு ஏற்பட்ட அவமானத்தை அழிக்கும் வல்லமையோடு ஒரு மகள் வேண்டும் என்கிறான் மன்னன். முதலில் மறுக்கும் அவர்கள், அவனிடம் "குரோதம் உப்புபோல மன்னரே, அது தானிருக்கும் பாண்டத்தையே முதலில் அழிக்கும்" என்று சொல்லிப் பார்க்கிறார்கள். மன்னன் மனம் மாறுவதில்லை. இதுதான் நடக்கும் என்பதை அறிந்த அவர்கள், யாகத்துக்குச் சம்மதிக்கிறார்கள். யாகம் முடியும் தருவாயில், தேவதையின் அனுக்கிரகம்  இருப்பதாகவும், அவளே குழந்தையாக பிறப்பாள் எனச் சொல்கிறார் யாசர். நீரில் அவள் முகத்தை காட்டுகிறார். பேரழகும், கருணையும், விவேகமும் உடையவளாக அந்த பெண் குழந்தை தோன்றுகிறது. துருபதன் 'இவள் பெயர் திரௌபதி, இனி இவள்தான் பாஞ்சாலி…' என்று நடுங்கிக் கொண்டே நீரைத் தொட, பிம்பம் கலைகிறது. யாக குண்டத்தில் இருந்து அக்னி மேலெழுந்து கொண்டிருக்கிறது.


படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி.