Wednesday, September 11, 2013

பேருந்து நிலையமும் ஒரு சிறுமியும்

நூறு நிமிடத்தில் கோவையை வந்தடையும் ஈரோ-100 பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தேன்.

கொஞ்ச நேரத்தில் ஒரு சிறுமி, கையில் சிறிய ஜெராக்ஸ் தாள்களுடன் ஏறினாள். எண்ணெய் காணாத தலையும், அழுக்கு உடையுமாக இருந்தவள், எல்லோரிடமும் அந்தத் தாள்களை நீட்டிக் கொண்டிருந்தாள். ஒரு சிலர் வாங்கிக் கொண்டார்கள். சிலர் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். எனக்குப் பக்கத்து இருக்கையில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள்.  அவர்களிடம் தாளைக் கொடுத்தவள், அப்படியே பின்னால் சென்றாள்.

திரும்பி வரும்பொழுது, இந்த இரண்டு இளைஞர்களும் ஒரு பத்து ரூபாய்த் தாளை அவளுக்கு கொடுத்தார்கள். இந்தப் பக்கம் திரும்பியவள், என்னிடமும் அந்த தாளைக் காட்டினாள். நான் இல்லை என்று மறுக்க, உடனே அவள் எழுதி இருந்ததைக் காட்டினாள். வழக்கம் போல, வாய் பேச முடியாத சிறுமி இவள், இவளுக்கு உதவி செய்யுங்கள் என்ற வாசகத்தோடு, நன்கொடை ரூ.10, ரூ.20, ரூ.50 என்று இருந்தது.

என்னிடம் இல்லை என்றேன். திரும்பவும் வயிற்றைத் தொட்டுக் காட்டி கேட்டாள். நான் தலையாட்டிக் கொண்டே இருக்க, அவள் என் தாடையைப் பிடித்து கொஞ்சினாள். நானும் அவளின் கன்னத்தில் ஒரு தட்டு தட்டிவிட்டு திரும்ப இல்லை என்றேன். கை ஜாடையிலேயே தனக்குப் பேசத் தெரியாது என்றாள். 

எனக்குத் தெரியும், எவனோ ஒருத்தன்(அ)ஒருத்திக்கு இவள் சம்பாதித்துக் கொடுக்கிறாள். அவன் எங்கேயோ ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, இவள் பிச்சை எடுத்து வரும் காசை செலவழிக்கக் கூடும். இவளுக்கு  சோறாவது வாங்கிக் கொடுப்பார்களா என்பது சந்தேகம் தான். இந்தச் சிறுமிக்கு நாம் காசு கொடுக்கும் பொழுது, மீண்டும் மீண்டும் இவளை நாம் இந்த நரகத்துக்கே தள்ளிக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றவும் செய்தது.

தொடர்ந்து மீண்டும் காலைத் தொட்டாள். நிமிர்ந்து என்னைப் பார்க்கும்பொழுது, இப்பவாவது இவன் குடுப்பானா என்று நினைத்திருப்பாள் போலும். அந்த இரண்டு இளைஞர்களும், 'நீங்க குடுக்காதீங்க' என்றார்கள். நான் தலையை ஆட்டிக்கொண்டே, 'ஸ்கூல்ல கொண்டு போய் விடுறேன், என் கூட வந்துறியா' என்றேன். அந்த சிறிய முகத்தில் ஒரு மூர்க்கம் வந்தது. என்ன நினைத்தாளோ, என் கன்னத்தில் ஓங்கித் தட்டிவிட்டு அடுத்த சீட்டுக்கு ஓடிப் போனாள். 

இந்தச் சிறுமிக்கு நான் ஒரு பத்து ரூபாய் கொடுத்து இருக்கலாம். ஆனால் அது அவளுக்குப் போய்ச் சேரப் போவதில்லை. முன்னரே சொன்னது போல, இவளுக்குப் பிச்சை போடுவதன் மூலம் மீண்டும் மீண்டும் அவளை இந்த நரகத்துக்கே நாம் அனுப்பி வைக்கிறோம். இந்தச் சமூகத்தில் ஒருவனாய், ஆட்சி செய்யும் அரசுகளுக்கு ஓட்டுப் போட்ட ஒருவனாய் நான் தலை குனிந்து தூங்கத் தொடங்கினேன்.



4 comments:

  1. உண்மைதான் இது போன்ற சமயங்களில் நாம் தான் ஊமையாகிப் போகின்றோம்

    ReplyDelete
  2. பிச்சை எடுப்பது ஒரு தொழிலாக நடக்குது...அவங்களும் பிஸீனஸ் மேன் தான்..கூப்பிட்டா வருவாங்களா...?

    ReplyDelete
  3. நன்றி நண்பர்களே..

    ReplyDelete
  4. ஓ ।இது இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறதா?

    ReplyDelete