Tuesday, January 24, 2012

வீடிலிகள்

அன்றும் அப்படிதான் அந்த ஆள் படிக்கட்டு அருகில் நின்று கொண்டு, வீதியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். அவன் என்று சொல்வது தப்பு, ஏனெனில் அந்த ஆளுக்கு ஐம்பது வயசுக்கு மேலிருக்கும். இந்த மேன்சனுக்கு வந்த இந்த ஒரு வருட காலத்தில், இது போன்ற வயதானவர்கள் தங்கி நான் பார்த்ததில்லை.

கல்லூரி செல்பவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் என வெளியூரிலிருந்து வந்து தங்கி இருப்பவர்களின் வயதைப் பார்த்தால் முப்பதுக்குள்தான் இருக்கும். இருவர் தங்கிக் கொள்ளும் அறையில் நாங்கள் தங்கி இருந்தோம். முப்பது ரூம்கள் இருக்கும் இந்த மேன்சனில், நாங்கள் இருந்தது இரண்டாவது தளத்தில் வலப்புறம். காலையில் போய்விட்டு இரவு வரும்பொழுது யாரையும் கவனிக்க முடியாது என்றாலும், இந்த புது ஆள் தினமும் காலையில் குறைந்தது இரண்டு மணி நேரம் பால்கனியில் நின்றும், நடந்தும் வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

முதலில் மேன்சனில் தங்கி இருப்போரின், சொந்தமாகவோ, அப்பா அல்லது மாமாவாகவோ இருந்து, ஏதோ வேலையாக கொஞ்ச நாள் தங்கியிருந்துவிட்டுப் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், ரொம்ப நாள் கண்ணில் தட்டுப் பட்டுக்கொண்டே இருந்தார். ஒருநாள், எதேச்சையாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது "நாமதான், வேற வழியில்லாம இங்க வந்து தங்கி இருக்கோம், பக்கத்துல ஒரு பெருசு வந்து தங்கியிருக்குது" என்றான் ரவி.

"யாருடா அது, அதான் எப்பவும் காலையில பராக்குப் பார்த்திட்டு இருப்பாரே அவரா?" என்று கேட்க, "ஆமா அந்த ஆளுதான்" என்றான் அவன். 

"ஏண்டா அந்த ஆளு இங்க வந்து தங்கி இருக்காரு, வேலைக்கு போற மாதிரியும் தெரில" என்று அவனிடம் கேட்க, "எனக்கு மட்டும் என்ன தெரியும், அந்த ஆள்கிட்டேயே கேட்டுப் பாரு" என்று முடித்துக் கொண்டான் ரவி.

ஒரு விடுமுறை தினத்தன்று, கீழே டீ குடித்துவிட்டு மேலே ஏறிவந்த என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தார். நானும் சிரிக்க, "எங்க வேலை பார்க்குறீங்க, தம்பி" என்று கேட்டு பரஸ்பரம் பேர் மற்றும் ஊர் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு, இவரிடம் இதுக்கு மேல் பேசக் கூடாது என்று நழுவி விட்டேன்.


அடுத்து வந்த நாட்களில், "குட் மார்னிங்", "குட் நைட்" சொல்லிக் கொண்டோம். சில வேளைகளில் நாங்கள் சாப்பிடும் கடைகளிலும் தென்படுவார். "பழக் கடைக்குப் போனீங்கனா ரெண்டு பழம் வாங்கிட்டு வாங்க, கொஞ்ச தூரமா, அதனாலதான்" என்றார். "பரவாயில்லீங்க, நாங்க எப்படியும் போகப் போறோம், உங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டு வர்றோம்" என்றோம். பழத்தைக் குடுத்தவுடன் "ரொம்ப நன்றி தம்பி" என்றார்.

இவர் எதுக்காக இங்க வந்து தங்கி இருக்கார் என்பது எங்களுக்கு ஒரு புரியாத புதிராக இருந்தது. ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும். நான் ரூமுக்கு வெளியே நின்றுகொண்டு செல்லில் பேசிக் கொண்டிருந்தேன். அவரும் அந்தப் பக்கம் நின்றுகொண்டிருந்தார். நான் பேசி முடித்தவுடன், "வீட்டுக்கா தம்பி போன் பேசுனீங்க" எனக் கேட்டார். "ஆமாங்க, அம்மாகிட்ட பேசுனேன்" என்றேன். "அப்படியா தம்பி, நான் கூட வீட்ல பேசி ரொம்ப நாளாச்சு" என்றார்.

நான், "அப்போ இங்க ஏதும் வேலையா வந்து இருக்கீங்களா?" என்று கேட்டேன்.

"இல்ல தம்பி. சொல்ல சங்கடமா இருக்கு. ஆனா உண்மையா மறைக்க முடியுமா, சொல்லுங்க தம்பி" என்று என்னைப்  பார்த்துக்கொண்டே, "ஏதோ, உங்ககிட்ட சொல்லலாம்னு எனக்கு தோணுது. எனக்கு ரெண்டு பொண்ணுக இருக்காங்க. ரெண்டும் பள்ளிக்கொடம் போகுதுங்க. செஞ்ச தொழிலு நஷ்டமாகிப் போயிருச்சு. பெரிய கடன் வேற. இருந்த வீடு கூட கடன்ல போயிருச்சு. கடைய அப்படியே ஒருத்தன் பேருக்கு மாத்தி கொடுத்துதான் மீதி கடன அடைச்சேன். மாமனார் ஊர் பக்கத்துல இருக்கு, பொண்டாட்டி புள்ளைக எல்லாம் அங்க இருக்காங்க. என்னையும் அங்க கூப்பிட்டாங்க. இத்தன வயசாகியும் மாமனார் வீட்டுக்கு போறது நல்லா இல்லீன்னுதான் இங்க இருக்கேன் தம்பி" என்றார். கண் கலங்கவில்லை என்றாலும், கண்ணில் கொஞ்சம் சிவப்பு எட்டிப் பார்த்து வார்த்தைகள் பிசிறடித்தது. 

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, "பரவாய் இல்லீங்க, சீக்கிரம் சரியாப் போயிரும்" என்று சொல்ல, "அத விடுங்க தம்பி, உங்க கிட்ட போய் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன். நேரமாச்சு, போய்ப் படுங்க. குட் நைட்" என்று சொல்லியவாறே தளர்வாக அறையை நோக்கி நடந்தார்.

தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. தொடர்ந்து காலை வேளைகளில் தெருவில் போவோர் வருவோரை பார்த்துக் கொண்டே பால்கனியில் நின்று கொண்டிருந்தார். தீபாவளி விடுமுறை முடிந்து, அறைக்கு வந்து சேர்ந்த இந்த ஒரு வார காலத்தில் அவர் கண்ணிலேயே தட்டுப்படவில்லை. மேன்சன் மானேஜரிடம் கேட்க, அறையை காலி பண்ணிவிட்டு சென்றுவிட்டார் என்பது பதிலாக வந்தது. அவர் குடும்பத்தோடுதான் வசிக்க, அறையை காலி செய்து சென்றிருப்பார் என நினைத்துக் கொண்டேன்.

சில காலை நேரங்களில், அந்தப் படிக்கட்டை கடக்கும்பொழுது,  இன்னும் அவர் அங்கே நின்று தெருவைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

படங்கள்: இணையத்திலிருந்து - நன்றி.

Wednesday, January 18, 2012

சினிமா : 12 ஆங்ரி மென் (12 Angry men )

வழக்கமான படங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது இந்தப் படம். மற்ற படங்களைப் போல் அல்லாமல், ஒரே அறையில் கதை ஆரம்பித்து அதே அறையில் முடிகிறது. கதை என்றும் சொல்வதற்கு இல்லை, 12 மனிதர்கள் படம் நெடுகிலும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள்?.

ஒரு சிறுவன், தனது தந்தையைக் கொலை செய்து விட்டதாக,  நீதிமன்றத்தில் இருக்கிறான். இந்த வழக்கில் நீதிபதியைத் தவிர, பொது மக்களிலிருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களும் அந்த வழக்கில் நீதிபதியாக இருப்பார்கள். அப்படி இந்த வழக்கில் 12 பேர் நீதி மன்றத்தில் இருக்கிறார்கள். தலைமை நீதிபதி அவர்களிடம் வழக்கைப் பற்றிக் கூறி, இந்த வழக்கின் தீர்ப்பை அவர்கள் அனைவரும் கூடிப் பேசி சொல்லுமாறு கூறுகிறார். இது ஒரு கொலை சம்பந்தப்பட்டது என்றும், அதேபோல ஒருவனின் வாழக்கை பற்றியது என்றும் கூறும் அவர், சரியான காரணங்களை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என ஒரு அறைக்கு அனுப்பி விடுகிறார்.

உள்ளே சென்றதும், அனைவரும் இருக்கையில் அமர்ந்து, வழக்கைப் பற்றிப் பேசுகிறார்கள். அந்தச் சிறுவன், "குற்றம் செய்தவனா, இல்லையா" என்பதைத் தீர்மானிக்க, அங்கே தலைமை வகிக்கும் ஒருவர் கை தூக்கச் சொல்கிறார். எல்லோரும் கை தூக்க, ஒருவர் மட்டும் கை தூக்கவில்லை. கூட்டத்தில் இருந்து இன்னொருவர், "ஏன் நீங்கள் மட்டும் அவனை நிரபராதியாகப் பார்க்கிறீர்கள்?" என்று கேட்க, அவர் "ஒரு காரணம் பற்றியும் நாம் பேசாமல், ஆராயாமல் ஒருவனை எப்படி குற்றம் செய்தவன் என்று ஒப்புக் கொள்வது. நாம் கண்டிப்பாக இதைப் பற்றி விவாதித்து பின்னர் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதை விட்டு, இப்படி எடுத்த உடனே அவனை குற்றவாளி என்பது தவறு" என்று சொல்ல, தலைமை வகிப்பவர் "சரி, நாம் விவாதிப்போம்" என்று சொல்கிறார்.

ஏற்கனவே நீதிமன்றத்தில் பேசப்பட்ட விஷயங்கள், கிடைத்த தடயங்கள், காவல் துறையின் அறிக்கை, அச்சிறுவன் கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி என எல்லாவற்றை பற்றியும் விவாதிக்கிறார்கள்.

ஒரு இடத்தில் ஒருவர், "அந்த கத்தியை அவன்தான் வாங்கி இருக்கிறான். அந்தக் கடையில் அதுபோல ஒரே ஒரு கத்திதான் இருந்திருக்கிறது. எனவே அவன்தான் கொலை செய்தவன்" என்று கூற, இன்னொருவர் "இதோ அதே போல இன்னொரு கத்தி" என்று மேசை மீது வீசி எறிகிறார்.

இதுபோல, படம் நெடுகிலும் பேச்சிலேயே நகரும் கதை, ஒவ்வொரு வாக்கு மூலத்தையும் ஆராய்கிறார்கள். பொத்தாம் பொதுவாக, ஒருவனை குற்றம் செய்தவன் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது, சரியான ஆதாரங்கள் கிடைக்காமல் ஒரு தீர்ப்பை எழுதுவது தவறு என்று படத்தில் கோடிட்டு காட்டியிருப்பார்கள்.

அதிலும், பன்னிரெண்டு மனிதர்களும், அவர்கள் அனைவருக்கும் சில கருத்துக்கள் உண்டு, அனைவரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். சிலர் கோபப் படுகிறார்கள். சிலர் சிரிக்கிறார்கள். அதிலும் ஒருவன், வெகு சீக்கிரம் இதை முடித்துக் கொண்டு விளையாடப் போக வேண்டும் என்கிறான். ஒருவன் பங்குச் சந்தை பற்றி இன்னொருவனிடம் அறிமுகம் செய்து கொள்கிறான்.

ஆக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு, தனிப் பார்வை உண்டு. எடுத்த உடனே, ஒருவனை குற்றம் செய்தவன் என்று, எதைப் பற்றியும் ஆராயாமல், தீர்ப்பு வழங்கிய அவர்கள், ஒருவரின் கேள்விக்காக, திரும்பவும் வழக்கைப் பற்றி பேசுகிறார்கள். இறுதியில் என்ன தீர்ப்பை வழங்கி இருப்பார்கள் என, படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொள்ளுங்களேன்.

ஒரே அறை என்பதால், புழுக்கம், மின் விசிறி வேலை செய்யாமல் வேர்த்துக் கொட்டும் இடங்கள், கொஞ்ச நேரம் கழித்துப் பெய்யும் மழை என, ஒரே அறையில் இருந்து கொண்டு முழுப் படத்தையும் நகர்த்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு வாக்கியங்களும் கவனிக்க வேண்டியவை. அனைவரும் அறையை விட்டு வெளியேறியவுடன், இருவர் மட்டும் எதேச்சையாக வெளியே சந்தித்துக் கொள்கிறார்கள். பெயரை அறிமுகப்படுத்திக்கொண்டு, இப்படி சொல்கிறார்கள்;

"Well, So Long"
"So Long"

ஆம், நாம் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.







Monday, January 9, 2012

வயிற்றுப் பசி

பசி பொறுக்காமல் நீங்கள் திருடியது உண்டா? பசி தாங்காமல் குப்பையில் இருந்து கிடைத்ததை உண்டு வாழ்ந்தது உண்டா? ஒருவேளை சோற்றுக்காக காத்துக் கிடந்தது உண்டா?

அ.முத்துலிங்கம் அவர்களின் இந்தக் கதையைப் படித்துப் பாருங்களேன்.

புளிக்கவைத்த அப்பம்

கதையில் இருந்து சில வரிகள்:

"இரவு பகலாக எங்களை விரட்டியது பசிதான். இந்த நாட்களில் ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது. நாங்கள் ஒளித்து வாழ்ந்த காட்டில் ஒரு தேன்சிட்டும் வசித்தது. சாம்பல் வண்ணத்தில், மென்சிவப்பு தொண்டை கொண்டது. அதன் அலகு அதன் உடம்பிலும் நீளமாக இருக்கும். எந்நேரமும் வேகமாக சிறகசைத்து பறந்து தேன் குடிக்கும். ஒரு நாளைக்கு அதன் எடையளவு தேனை உண்டே ஆகவேண்டும். அல்லது உயிர் தரிக்காது. ஒரு நிமிடம்கூட ஓய்வெடுக்காமல் அது பறந்து தேடுவதைப் பார்க்க எனக்கு திகிலாக இருக்கும். அதன் நிலையும் என் நிலைபோலத்தான் இருந்தது. உயிர் வாழ்வதற்காக ஒவ்வொரு கணமும் பாடுபட்டது. எங்களில் யார் முதல் இறக்கக்கூடும் என நினைப்பேன். ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்தவுடன் அது உயிருடன் இருக்கிறதா என்று பார்ப்பேன். நான் முதலில் இறந்து அது என் உடலை பார்ப்பதாக சில நாள் கற்பனை செய்வேன். "


உணவு என்பது, ஒப்பற்ற ஒன்று அல்லவா?.

Thursday, January 5, 2012

நிலம்















எவ்வளவோ மல்லுக்கட்டிப் பார்த்தாச்சு
இந்த முக்கால் ஏக்கர் நெலத்தோட
ஒரு வருசம் வெள்ளாமை வருது
அடுத்த வருசம் நட்டம்
இப்படித்தான் ரொம்ப வருசம்
பொழப்பு ஓடுது.

ரொம்ப வருசமா ஊட்ல
சோறு, துணிமணி எல்லாம் அளவோடுதான்.

பாட்டன் வெச்சுட்டுப் போன சொத்து
ரோட்டுக்குப் பக்கமா இருந்தது
நல்லதாப் போச்சு..
பிளாட் போட வித்தாச்சு
போன மாசம்..

நெலத்த வித்து வந்த
காசு தர்ற வட்டில
இப்போ மூணு வேளையும்
சுடு சோறுதான் ஊட்ல.!