Tuesday, July 30, 2013

சிறுநுரை போல...

காமந் தாங்குமதி யென்பேர் தாமஃ
தறியுநர் கொல்லோ வனைமது கையர்கொல்
யாமெங் காதலர்க் காணே மாயிற்
செறிதுளி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லா குதுமே.

(குறுந்தொகை, கல்பொரு சிறுநுரையார்)

***************

பிரிவை தாங்கிக்கொள்
என்பவர்கள்
தாங்கள் அதை
அறிந்தவர்கள்தானா ?
அத்தனை வல்லமை
உடையவர்களா ?
நான் என் தலைவனை காணேன்
என்றால்
துயர் நிரம்பிய நெஞ்சத்துடன்
நீர்விரிவிலிருந்து வந்து
கல்லில் மோதி மறையும்
சிறுநுரை போல்
மெல்ல மெல்ல இல்லாமலாவேன்.

- ஜெயமோகன், சங்க சித்திரங்கள்



Wednesday, July 17, 2013

குழந்தைகளுக்கு நேரமில்லை

குழந்தைகள், இப்பொழுது குழந்தைகள் இல்லை
பள்ளியில் இடம்  வேண்டி
ஆறு மாத குழந்தைக்கு
விடிய விடிய வரிசையில் நிற்கிறோம்

ஆறு மணிக்கு எழுந்து
காலைக் கடன்களை முடி
ஏழு மணிக்கு குளி 
எட்டு மணிக்கு வீதியில்
பள்ளி வண்டி நிற்கும்
அதற்குள் சாப்பிட்டு முடி

படிப்பது பாலர் வகுப்பு என்றாலும்
அரை மணி நேரம் பயணம் செய்து
பள்ளிக்கூடம் செல்
கேட்ட கேள்விக்கு பதில் சொல்
தமிழில் பேசாதிருப்பது முக்கியம்

அவனைவிட அதிக மதிப்பெண் எடு
காலையில் அடைத்து வைத்ததை
மதியம் சாப்பிடு
அவ்வபொழுது இயற்கை உபாதைகளை அடக்கி
நேரத்துக்கு செல்
வாரத்தில் ஒருநாள் மட்டும்
அரை மணி நேரம் பி.டி. நேரத்தில் விளையாடு

மாலை ஓய்ந்து வா
ஏதாவது தின்று தண்ணீர் குடி
மீண்டும் வீட்டுப் பாடங்களை எழுதிப் படி
டியூசன் போ.. அங்கும் படி
சனி, ஞாயிறும் டியூசன் இருக்கும்.
கொஞ்சம் நேரம் கிடைத்தால்
டி.வி பார்
கராத்தே, இசை, நடன வகுப்புகளில் சேர்..

அக்கம் பக்கத்தில் பேச நேரமில்லை
விளையாட்டு.. மூச்.
நேரத்துக்கு சாப்பிடு
நேரத்தில் தூங்கு
காலையில் நேரத்தில் எழ வேண்டும்.

பெரியவர்கள் போலவே
உங்களுக்கும் நேரமில்லை
குழந்தைகளே..


Friday, July 12, 2013

புல் வெளியில் ஒரு கல் - கவிஞர் தேவதேவன்

காட்டுச் செடி



காக்கை திருடி வைத்திருக்கும் வடையோ
அதைப் பறிக்க நினைத்த நரியோ
அல்ல

மர்மமான துக்க இருள் நடுவே
ஒரு காட்டுச் செடி
தூய்மையின் வண்ணத்துடன்
பூக்கிறது ஒரு சின்னஞ்சிறு தேன்மலர்
ஆக மெல்லிய அதன் மணக் கைகள்
தட்டுகின்றன எல்லோர் கதவையும்

*************************
நீர்ப்பயம்


















நாய் கடிக்காது பார்த்துக்கொள்
அதிலும் வெறிநாய் கடித்தால்
பேராபத்து
அந்த வெறிநாய் போலே
ஊளையிட்டுத் திரிவாய்
தண்ணீர் அருந்த இயலாது
தொண்டை நரம்புகள் தெறிக்கும்
அப்புறம் தண்ணீரைக் கண்டாலே
அலறித் துடிப்பாய்
மரணத்தில்தான் உனக்கு விடுதலை
ஆகவே
நாய்க்கு வரும் நோய்பற்றிக்
கவலை கொள்
நாய் பற்றிக் கவலை கொள்

*************************
புல்வெளியில் ஒரு கல்



















புல்வெளி மீது சிறு குருவி வந்திறங்கித்
தத்திய காட்சி, அழிந்து
புல்வெளிமீது  ஒரு கல் இப்போது.
மனிதச் சிறுவன் ஒருவனால்
அந்தப் பறவை நோக்கி எறியப்பட்ட
கல்லாயிருக்கலாம் அது.

இப்போது புல்வெளி இதயம்
வெகுவாய்த் துடிக்கிறது
கூடுதல் மென்மையால்
கூடுதல் அழகால்.

*************************

கவிஞர் தேவதேவன் அவர்களின் 'புல் வெளியில் ஒரு கல்' கவிதைத் தொகுப்பிலிருந்து.

Wednesday, July 10, 2013

சினிமா: தி சைக்ளிஸ்ட் (The Cyclist)

ஏழையாய் இருப்பது கொடுமை. அதிலும், இன்னொரு நாட்டில் அகதியாய், ஏதும் செய்ய  இயலாமல் இருப்பது அதை விட கொடுமை.  ஈரான் நாட்டில், ஆப்கன் அகதியாய்த் தங்கி இருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை இது. இந்தப் படத்தின் இயக்குநர்  மோசென் மக்மல்பப்.



கணவன், மனைவி மற்றும் ஒரு பையன் என சிறு குடும்பம் தான். மனைவி, மிகுந்த உடல் பிரச்சினை காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார். தினமும் இவ்வளவு செலவாகும் என்று மருத்துவமனையில் சொல்கிறார்கள். கையில் கொஞ்சம் கூட பணம் இல்லை. இருக்கும் கொஞ்சம் பணமும் ஆப்கன் நோட்டுகளாக இருக்கிறது. வேலை தேடிப்  போனாலும் அவ்வளவு பணம் கிடைப்பது கஷ்டம்.  ஆப்கன் அகதிகளுக்கு மிக குறைந்த சம்பளமே குடுப்பார்கள்.

அப்பாவும், பையனும் சேர்ந்து கிணறு வெட்டுவார்கள். ஆனால் அந்த வேலைக்கும் அடிதடி. தங்கள் நண்பரான, சர்கஸில் மோட்டார் பைக் ஓட்டும் நண்பரைத் தேடிச் செல்கிறார்கள். முதல் நாள் மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்யும் அவர், வேலை வாங்கித் தர முயற்சிக்கிறார்.

அந்த நண்பர், ஒரு சர்கஸ் ஏஜென்டிடம் அழைத்து செல்கிறார். "இவர் ஆப்கன் நாட்டில் சைக்கிள் சாம்பியன். விடாமல் மூன்று நாள் சைக்கிள் ஓட்டிச் சாதனை புரிந்தவர், இப்பொழுது பணத்துக்கு மிகவும் கஷ்டப் படுகிறார். நீங்கள் உதவ வேண்டும்" என அவரிடம் சொல்ல, அந்த ஏஜென்ட் "ஏழு நாட்கள் இரவு , பகல் தொடர்ந்து சைக்கிள் ஓட்ட முடியுமா?" எனக் கேட்கிறார்; அதற்கு அவர் ஒப்புக் கொள்கிறார்.

ஏஜென்ட், சூதாட்ட நபர்களிடம் சென்று சைக்கிள் சாம்பியன் பற்றிச் சொல்லவும், அவர்களும் சரி என்கிறார்கள். ஏஜென்ட், தனது சர்கஸ் கூடாரத்தில் இருந்து பழைய சைக்கிள் ஒன்றை எடுத்துத் தருகிறார்.  சூதாட்ட நபர்கள்  பெட்டிங் பணம் கட்டுகிறார்கள்.


முதல் நாள் சைக்கிள் விடுகிறார் சாம்பியன். ஏஜென்ட், சர்கஸ் பார்க்க வருபவர்களிடம் டிக்கெட் கொடுத்து பணம் வசூல் செய்கிறான். அந்த மைதானத்தைச் சுற்றி கடைகள் முளைக்கின்றன. இரண்டு அணியினரின், ஆம்புலன்ஸ் வண்டிகளும் நிறுத்தப் படுகின்றன. நடுவர் ஒருவர் அமர்த்தப் படுகிறார். அப்பொழுதுதான், அவரின் பெயர் நசீம் என்று சொல்கிறான் ஏஜென்ட்.

மூன்றாவது நாள் இரவு, சைக்கிள் ஓட்ட முடியாமல் தடுமாறுகிறார் நசீம். எல்லோரும் தூங்கச் சென்று விடுகிறார்கள். நடுவரும், அமர்ந்தவாறே, தூங்கிக் கொண்டிருக்கிறார்.  எவ்வளவோ முயற்சி செய்தும், கண் இமைகள் கண்களை மூடிக் கொண்டு விடுகின்றன. சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விடுகிறார் நசீம். அப்பொழுது அங்கே ஒரு வாத்தியம் இசைத்துக் கொண்டிருக்கும் ஒரு பார்வையற்ற கலைஞன் அதைப் பார்த்து விடுகிறான்.

கீழே விழுந்ததும், நசீமின் மோட்டார் சைக்கிள் விடும் நண்பன் அங்கேயே படுத்து இருந்ததால், ஓடி வருகிறார். அங்கே வரும் ஏஜென்ட், நண்பனை சைக்கிள் விடச் சொல்கிறார். முகம் தெரியாமல் இருக்க, சால்வையை முகத்தில் போடச் சொல்கிறான் ஏஜென்ட். நண்பனும் அவ்வாறே சைக்கிள் விடுகிறார். தூக்க கலக்கத்தில் முழித்து பார்க்கும் நடுவர், அப்படியே மீண்டும் தூங்கி விடுகிறார்.



ஏஜென்ட், அந்தப் பார்வையற்ற கலைஞனிடம் சென்று, "இதை வெளியே சொன்னால், நான் உன் கழுத்தை அறுத்து விடுவேன். அதோடு இல்லாமல், உனக்கு கண் தெரியும்  என்பதையும் சொல்லி விடுவேன்" என மிரட்ட,  அதற்கு, அவன் "நானும் அவன் மேல், அவன் ஜெயிப்பான் என்று பெட் கட்டி இருக்கிறேன்." எனக் கூறுகிறான்.

அந்த மைதானத்தில் கைரேகை பார்க்கும் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. ஏஜென்ட், அவளிடம் நெருங்கிப் பழகுகிறான். இந்த சர்கஸில் பணம் கிடைத்தால், நான் உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் என்கிறான். அவளும் சரி என்கிறாள்.

மோட்டார் சைக்கிள் ஓட்டும் நசீமின் நண்பன், தான் மோட்டார்  சைக்கிள் விடும் மரத்தாலான அந்த வட்டக் கிணற்றுக்குள் படுத்து இருக்கிறான். இரவில், நசீமுக்காக சைக்கிள் விடுவதால், தூங்கிக் கொண்டிருக்கிறான். அப்பொழுது, அங்கே வரும் அவன் முதலாளி, "நான் டிக்கெட் விற்று இருக்கிறேன். நீயோ தூங்கிக் கொண்டிருக்கிறாய். எழுந்து பைக் ஓட்டு " எனச் சொல்கிறான். முதலில் நன்றாகவே பைக் ஓடிக் கொண்டிருக்க , ஒரு கட்டத்தில் விபத்து ஏற்பட்டு அடி படுகிறார். இப்பொழுது நசீமை வந்து பர்ர்க்க, அந்த நண்பனும் இல்லை.



ஒரு பக்கம், இந்த சைக்கிள் ஓட்டத்தை நிறுத்த ஒரு கும்பல் போராடுகிறது. இன்னொரு பக்கம், நசீமை சைக்கிளில் இருந்து இறங்க விடாமல் ஒரு கூட்டம். இரண்டும் எதிர், எதிர் அணியில் சூதுப் பணம் கட்டியவர்கள்.

ஐந்தாம் நாள் இரவு, நசீமுக்கு ரொம்ப முடியாமல் ஆகிறது. தீக்குச்சி போன்ற சிறிய குச்சிகளை, இமைகளுக்கு முட்டு கொடுத்து கொஞ்ச நேரம் சமாளிக்கிறார். ஆனாலும் முடியவில்லை. வாளித் தண்ணீரை வீசி அடிக்கிறார்கள். சிறுவன் ஜோமியோ, நசீமை அறைந்து கொண்டே இருக்கிறான் தூங்காமல் இருக்க. எப்படியோ அந்த இரவும் கழிகிறது.

ஆறாவது நாளும் கழிகிறது. குளுகோஸ் பாட்டிலை சைக்கிளில் மாட்டி விடுகிறார்கள்.  ஏஜென்ட், சுற்றிலும் கடை போட்டு இருப்பவர்களிடம் வாடகை வசூல் செய்கிறான். ஒரு முதியவள், நசீமுக்காக கொண்டு வந்து  கொடுக்கும் நகையை வாங்கி வைத்துக் கொள்கிறான் ஏஜென்ட்.

ஏழாவது நாள் காலையில் ஏஜென்ட், ரேகை பார்க்கும் பெண் மற்றும் அவள் குழந்தையுடன், "எதையாவது மறந்து விட்டாயா?" என்று கேட்டவாறு , சாமான்கள் ஏற்றிய ஒரு வண்டியில் ஏறி அமர்கிறான். ஆம், அவன் இங்கே சம்பாதித்த பணத்தைக் கொண்டு புது வாழ்க்கை வாழ கிளம்பி விட்டான். சிறுவன் ஜோமியோ, தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆப்பிளை, அந்தச் சிறு பெண் குழந்தைக்கு ஓடிச் சென்று குடுக்கிறான். குழந்தைகள் இருவரும், கையசைத்து விடை பெறுகிறார்கள்.


சைக்கிள் பந்தயம் முடியும் நேரம் நெருங்குகிறது. எல்லோரும், "பந்தயம் முடிந்தது நசீம்" என்று கத்துகிறார்கள். ஆனால், நசீமோ அது காதில் விழாதவாறு தொடர்ந்து சைக்கிள் விட்டுக் கொண்டிருக்கிறார். சிறுவன், "அத்தா.. பந்தயம் முடிஞ்சுருச்சு.." என்று சைக்கிள் முன்னால் கத்திக் கொண்டு ஓடுகிறான். யாருடைய  குரலும் அவருக்கு எட்டவில்லை.

மருத்துவமனையில் இருக்கும் தன் மனைவியின் நினைவு வருகிறது. தொடர்ந்து பெடலை அழுத்திக் கொண்டே இருக்கிறார். மைதானம் முழுவதும் நிரம்பி இருக்கும் மக்கள் "பந்தயம் முடிந்தது" என்று கத்துகிறார்கள். நசீமின் சைக்கிள் இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.


************************
* ஒரு பெரியவர் பேருந்துக்கு அடியில் படுத்துக்கொள்கிறார். பேருந்து கிளம்பும்போது, பெரியவரைக் கவனிக்கும் அவர்கள், அவரை வெளியே இழுத்து, அடிக்கிறார்கள். கூட்டத்தில் ஒருவன், அந்த பெரியவருக்கு கொஞ்சம் பணம் கொடுக்கிறான். அதைக் கவனிக்கும் நசீமும், பையனும் அது போலவே முயற்சி செய்ய, வெறும் அடி மட்டும் கொடுத்து துரத்தி விடுகிறார்கள்.

* சைக்கிள் சாம்பியனை வாழ்த்த, பள்ளிச் சிறுவர்களைக் கூட்டி வருகிறார் ஒருவர். சிறுவர்கள், சாம்பியனை வாழ்த்த ரோஜாப் பூக்களை வீசுகிறார்கள். கீழே கிடக்கும், அந்தப் பூக்களின் மேல் படாமல், சைக்கிள் விடுவார் நசீம்.

* இரவு நேரத்தில் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கும்பொழுது, பையன் அந்த மைதானத்தில் உள்ள பெஞ்சில் தூங்கிக் கொண்டிருப்பான். பாசமுள்ள தந்தையாக, தனது மேல் கோட்டைக் கழட்டி, பையன் மேல் போட்டுவிட்டு சைக்கிள் ஓட்டுவார் நசீம்.

* கொஞ்சம் பணம் கிடைத்ததும் மருத்துவமனையில் இருக்கும் தனது அம்மாவுக்கு பணம் கட்டச் செல்வான் சிறுவன். அங்கே, இன்னும் பணம் கட்டாததால், செயற்கை சுவாசத்தை நீக்கி இருப்பார்கள். பையன் பணம் கட்டியதும், உடனே பொருத்துவார்கள். உடனே உணவும் கொடுப்பார்கள். எந்த நாடானால் என்ன, மருத்துவமனை எல்லாம் ஒன்று போலதான் இருக்கிறது.

* இன்னொரு நாள், சிறுவனும், கைரேகை பார்க்கும் பெண்ணின் பெண் பிள்ளையும் மருத்துவமனைக்கு செல்வார்கள். அந்த பெண் குழந்தையைப் பார்க்கும் நசீமின் நோயாளி மனைவி, தன் தலையிலிருக்கும் முடி கிளிப்பை, அந்தச் சிறுமியின் தலையில் குத்தி விடுவாள்.

* நம்மில் பெரும்பான்மையோருக்கு, வறுமையும், இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாமையும், வாழ்க்கையில் பெரும் பாரமாக இருக்கிறது. மனைவியை காப்பாற்ற சைக்கிள் பந்தயத்துக்கு ஒத்துக் கொள்ளும் நசீம், ஏழு நாள் முடிந்தும் அந்த சைக்கிளை விட்டு வெளியே வர முடியவில்லை. அவரை வைத்து சம்பாதித்தவர்கள் எல்லாம், விட்டு விலகிப் போய் விடுகிறார்கள். நசீமைப் போல, நம்மில் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கை போராட்டம் நிரம்பியதாகவே இருக்கிறது.




Monday, July 8, 2013

பள்ளம்

காற்றே இல்லை எனச்
சொல்லும் இதே மனிதன் தான்
வேம்பு போன்ற மரங்களை வெட்டிவிட்டு
வீட்டைச் சுற்றிலும்
குரோட்டன்ஸ் வைத்தவன்..

ஆற்றில் நீர் இல்லாததை
'பச்..  தண்ணியே இல்லை'
எனக்கடந்து போகும்
இதே மனிதர்கள்தான்
மக்கவியலாத பொருளையும்,
கழிவு நீரையும் கொட்டுகிறார்கள்..

நீர் இல்லாதபோது,
நிறைய மணல் அள்ளலாம் எனச்
சிலர் சந்தோசப் படுகிறார்கள்..

ஆற்று நீரை
அப்படியே குடிக்காதீர்கள்
அதில் கழிவுகள் இருக்கிறது
என்று சொல்கிறார்கள்..

உழைத்து மூப்பேறிய
மூத்த தலைமுறை விவசாயியின்
ஒடுங்கிய வயிறு
போலான பள்ளங்களோடு
ஆறு அத்தனையையும்
கவனித்துக் கொண்டிருக்கிறது..

Thursday, July 4, 2013

மனம் எனும் தோணி

வாழ்க்கை - நாம் வாழ்வது. வாழ்வைப் பற்றிப் பேசும்பொழுது பெரும்பான்மையான கவிஞர்கள், படகோடு ஒப்பிடுவார்கள். கணியன் பூங்குன்றனார், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடலில், 'நீர்வழிப் படூம் புனை போல்' எனச் சொல்கிறார். 'வாழ்க்கை என்னும் ஓடம்.. வழங்குகின்ற பாடம்..' என்று கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் பாடிய பாடலையும் கேட்டு இருக்கிறோம்.

திருநாவுக்கரசர் பாடிய கீழ்க்கண்ட பாடல், பள்ளியில் படிக்கும்பொழுது மனப்பாடச் செய்யுளாக இருந்தது. இது ஒரு பக்திப் பாடலாக இருந்தாலும், சொல்லப்பட்ட உவமைகளும், பொருளும் என்னைக் கவர்ந்தவை.

மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
உனையுனு முணர்வை நல்கா யொற்றியூர் உடைய கோவே.


பாடல் பொருள் எளிதில் விளங்கக் கூடியதே.

"மனம் என்ற தோணியில், மதி எனும் துடுப்பைக் கொண்டு, சினம் என்ற சரக்கை ஏற்றி இந்த வாழ்க்கை எனும் கடலில் ஓடும்போது, ஆசைகள்(பற்றுகள்) எனும் பாறையில் மோதி, நினைவிழக்கும் பொழுது உன்னை நினைக்கும் உணர்வைத் தருவாய்... ஒற்றியூர் பெருமானே"


மனம் எனும் தோணி - மனம் என்பது நிலை இல்லாதது. கணம் தோறும் அது ஆயிரம் ஆயிரம் நினைவுகளை நினைத்துக் கொண்டு இருப்பது. நீரில் செல்லும் தோணியும் அவ்வாறுதான், நிலை இல்லாமல் இருக்க கூடியது.


மதி எனும் கோல் - நாம் தடுக்கி விழும்பொழுது நம்மைக் காப்பாற்றுவது ஊன்று கோல். நமது அறிவும் அவ்வாறுதான், நமக்கு இடர் வரும்போதெல்லாம் நம்மைக் காப்பாற்றுகிறது.


சினம் எனும் சரக்கு - நாம் இறக்கி வைக்க முடியாமல், நமக்கு நாமே ஏற்றிக் கொண்ட சரக்கு இந்த சினம் மட்டுமே.


மதம் எனும் பாறை - எப்பொழுதும் நம்மைக் கீழ் நிலையிலேயே வைத்திருப்பவை, நமது ஆசைகள். அந்த ஆசைகள் பாறை போன்றவை. அதனுடன் மோதினால் நாம்தான் இழக்க நேரிடும். எனவேதான் அதனை பாறை என்கிறார்.


"இப்படியாகிய வாழ்க்கைக் கடலில் நான் தட்டுத் தடுமாறி, பாறையில் மோதி விழும்பொழுது உன்னை நினைக்கும் உணர்வை நல்காய்" என்று சொல்லும்பொழுது, அப்பரின் சொல் வன்மை நமக்கு விளங்குகிறது.

பொருள் நிறைந்த, வாழ்க்கைத் தத்துவம் நிரம்பிய அழகான பாடல்.

***********

இந்தப் பாடல் திருவொற்றியூரில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானைப்(தியாகராஜ சுவாமி) பற்றியது. சென்னையில் இருந்தபொழுது, ஒரு முறை இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். பழமையான, அழகான கோவில்.

கோவிலில்  இருந்து சற்று தூரத்தில் தான் பட்டினத்தார் சமாதி அமைந்து உள்ள ஆலயம் உள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்து இருந்தது. நாங்கள் சென்ற பொழுது கோவிலைப் பூட்டி இருந்தார்கள். உள்ளே செல்ல முடியவில்லை.

***********

Wednesday, July 3, 2013

இறங்கள் !!

போன வாரம் திருப்பூர் சென்றிருந்தோம். சிக்னலுக்கு காத்திருந்த பொழுது, டிவைடர் கற்களில் டி.எம்.எஸ். அவர்களுக்கு ஒரு கட்சியின் சார்பாக இரங்கல் சுவரொட்டி ஒட்டி இருந்தார்கள். அதில் கடைசியில் இப்படி ஒரு வாக்கியம் இருந்தது;

டி.எம்.எஸ். அவர்களுக்கு​ ---------
-------------------------------------------
------  (கட்சியின்) சார்பாக
இறங்கள்


இதில் உள்ள எழுத்து பிழை ஒரு பக்கம் என்றாலும், நம்மையும் இறக்கச் சொன்ன இந்தச் சுவரொட்டியைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. அழுத்தம் திருத்தமாகத் தமிழை உச்சரித்துப் , பாடிய டி.எம்.எஸ். அவர்களின் ஆவி நிச்சயம் மன்னிக்காது.

இரங்கல் - இறங்கள் !! (இரண்டு வார்த்தைகளும் ஒன்று என நம்பி சுவரொட்டி தயாரித்தவர் வாழ்க)

நாங்கள் பள்ளியில் படிக்கும் பொழுது, எங்கள் தமிழ் அய்யா அடிக்கடி ஒரு வாக்கியம் சொல்வார்;

"மாவட்ட கல்வி அதிகாரி சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றார்" - மேற்கண்ட வாக்கியத்தில், தெரியாமல் ஒரு கால் சேர்த்தால்;

"மாவாட்ட கல்வி அதிகாரி சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றார்" !!

தெரியாமல் எங்காவது இது மாதிரி சேர்த்தால், அர்த்தமே மாறிவிடும், எனவே விழிப்போடு எழுதுங்கள் என்பார்.


அதிலும் இந்த, 'ல, ள, ழ' ,  'ந, ண, ன' மற்றும் 'ர , ற' என எழுதும்  பொழுது நிச்சயம் குழப்பம் ஏற்படும். செந்தமிழும் நாப் பழக்கம் என்பது போல, படிக்க படிக்கவே இவைகள் எங்கு வரும் என்பது புலப்படும்.

பலம் - பழம் - பள்ளம் 
அவன் - தண்ணீர் - செந்நீர்
சுறா - சுரை

தமிழில் பிழை இல்லாமல் எழுத என்ன வழி (வலி!) என்றால், அதை நாம்தான் நம் பழக்கத்தின் மூலம் கொண்டு வர வேண்டும்.