வாழ்க்கை
- நாம் வாழ்வது. வாழ்வைப் பற்றிப் பேசும்பொழுது பெரும்பான்மையான
கவிஞர்கள், படகோடு ஒப்பிடுவார்கள். கணியன் பூங்குன்றனார், 'யாதும் ஊரே
யாவரும் கேளிர்' பாடலில், 'நீர்வழிப் படூம் புனை போல்' எனச் சொல்கிறார்.
'வாழ்க்கை என்னும் ஓடம்.. வழங்குகின்ற பாடம்..' என்று கே.பி. சுந்தராம்பாள்
அவர்கள் பாடிய பாடலையும் கேட்டு இருக்கிறோம்.
திருநாவுக்கரசர் பாடிய கீழ்க்கண்ட பாடல், பள்ளியில் படிக்கும்பொழுது மனப்பாடச் செய்யுளாக இருந்தது. இது ஒரு பக்திப் பாடலாக இருந்தாலும், சொல்லப்பட்ட உவமைகளும், பொருளும் என்னைக் கவர்ந்தவை.
மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
உனையுனு முணர்வை நல்கா யொற்றியூர் உடைய கோவே.
பாடல் பொருள் எளிதில் விளங்கக் கூடியதே.
"மனம்
என்ற தோணியில், மதி எனும் துடுப்பைக் கொண்டு, சினம் என்ற சரக்கை ஏற்றி
இந்த வாழ்க்கை எனும் கடலில் ஓடும்போது, ஆசைகள்(பற்றுகள்) எனும் பாறையில்
மோதி, நினைவிழக்கும் பொழுது உன்னை நினைக்கும் உணர்வைத் தருவாய்... ஒற்றியூர் பெருமானே"
மனம்
எனும் தோணி - மனம் என்பது நிலை இல்லாதது. கணம் தோறும் அது ஆயிரம் ஆயிரம்
நினைவுகளை நினைத்துக் கொண்டு இருப்பது. நீரில் செல்லும் தோணியும்
அவ்வாறுதான், நிலை இல்லாமல் இருக்க கூடியது.
மதி
எனும் கோல் - நாம் தடுக்கி விழும்பொழுது நம்மைக் காப்பாற்றுவது ஊன்று
கோல். நமது அறிவும் அவ்வாறுதான், நமக்கு இடர் வரும்போதெல்லாம் நம்மைக்
காப்பாற்றுகிறது.
சினம் எனும் சரக்கு - நாம் இறக்கி வைக்க முடியாமல், நமக்கு நாமே ஏற்றிக் கொண்ட சரக்கு இந்த சினம் மட்டுமே.
மதம் எனும் பாறை - எப்பொழுதும் நம்மைக் கீழ் நிலையிலேயே வைத்திருப்பவை, நமது ஆசைகள். அந்த ஆசைகள் பாறை போன்றவை. அதனுடன் மோதினால் நாம்தான் இழக்க நேரிடும். எனவேதான் அதனை பாறை என்கிறார்.
"இப்படியாகிய வாழ்க்கைக் கடலில் நான் தட்டுத் தடுமாறி, பாறையில் மோதி விழும்பொழுது உன்னை நினைக்கும் உணர்வை நல்காய்" என்று சொல்லும்பொழுது, அப்பரின் சொல் வன்மை நமக்கு விளங்குகிறது.
பொருள் நிறைந்த, வாழ்க்கைத் தத்துவம் நிரம்பிய அழகான பாடல்.
பொருள் நிறைந்த, வாழ்க்கைத் தத்துவம் நிரம்பிய அழகான பாடல்.
***********
இந்தப் பாடல் திருவொற்றியூரில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானைப்(தியாகராஜ சுவாமி) பற்றியது. சென்னையில் இருந்தபொழுது, ஒரு முறை இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். பழமையான, அழகான கோவில்.
கோவிலில் இருந்து சற்று தூரத்தில் தான் பட்டினத்தார் சமாதி அமைந்து உள்ள ஆலயம் உள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்து இருந்தது. நாங்கள் சென்ற பொழுது கோவிலைப் பூட்டி இருந்தார்கள். உள்ளே செல்ல முடியவில்லை.
***********
திருவொற்றியூர் தகவல் புதுசு. பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteகணியன் பூங்குன்றனார் அவர்களின்
ReplyDeleteஅந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது
அவர் பாடலில் உள்ள முதல் இரண்டு
வரிகளை நினைத்து நினைத்தே நான்
அதிகம் வியந்திருக்கிறேன்
அதனால்தான் முதல் வரியில் ஏற்கெனவே
ஒரு பதிவர் இருப்பதால் இரண்டாம் வரியை
என வலைப்பூவின் தலைப்பாகக் கொண்டேன்
விரிவான பொருள்விட்டு விலகாத அருமையான
அலசலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ராஜி
ReplyDelete@Ramani S
நன்றிங்க...