Showing posts with label ப.சிங்காரம். Show all posts
Showing posts with label ப.சிங்காரம். Show all posts

Friday, October 15, 2010

எல்லாம் யோசிக்கும் வேளையில்...


புயலிலே ஒரு தோணி நாவலைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. எல்லாக் கதைகளையும் படமாக எடுத்து விட்டார்கள், ஒரு கதையும் கிடைப்பதில்லை எனப் பலர் சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம். 1984 வருடத்தில் ந.முருகேசபாண்டியன் என்பவர் ப.சிங்காரம் அவர்களை நேர்கொண்டு பேசியுள்ளார். புயலிலே ஒரு தோணி புத்தகத்தில் இவர்களின் பேச்சு இடம் பெற்றுள்ளது.

அந்தப் பேட்டியில் அவர் பேசியுள்ள சிலவற்றை இங்கே தருகிறேன்;

"புயலிலே ஒரு தோணி நாவலைப் போட்டால் இன்னிக்கி யாரு காசு கொடுத்து வாங்கி படிப்பாங்க.. இங்க சீரியசாப் படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு. சீரியசா எழுதத்தான் எவ்வளவோ விசயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில் எங்க இருக்கு? ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாப் பார்க்க மாட்டாங்க.. அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்... பாருங்க புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப்பத்தி ஒரு இடம் வருது. அது நாங்க யுத்த நேரத்ல இந்தோனேஷியாவாலிருந்து மலேயாவுக்கு சரக்குகளோட போனதுதான். நாவல் எழுதறப்போ தோணுன சில சந்தேகங்களைக் கூட வந்தவங்க கிட்ட கேட்டேன். ஆமா போனோம் வந்தோம். கூட யாரு வந்தா, என்ன நடந்ததுன்கிறதெல்லாம் ஞாபகம் இல்லேன்னுட்டாங்க. அது எதுக்கு... வெள்ளைக்காரன் மூணு வருஷம் நம்ம நாட்ல வந்து தங்கினாப் போதும். நம்ம வாழ்க்கையை வச்சு நாவல் எழுதிப் போடுவான். மதுரை டவுன்ஹால் ரோட்ல சாயங்காலம் நடக்கிறதப் பார்த்திங்களா? மூணு சீட்டு போடுறவன், திரி குத்துறவன், முடிச்சவிழ்க்கிறவன், கூவி ஏலம் போடுறவன், பிராத்தலுக, மாமாகாரனுக... நிறைய எழுதலாம். அதுமாதிரி கீழ மாசி வீதிப் பலசரக்கு கடைகள்.. அது ஒரு தனி உலகம். அங்க நடக்கிறத வச்சு எவ்வளவு எழுதலாம் தெரியுமா? உண்மையச் சொன்னா நம்ம வாழ்க்கையிலதான் எழுத எவ்வளவு விசயமிருக்கு? ஆனால் கூர்மையாகப் பார்த்து எழுதுற வழக்கம் நம்ம ஆளுகளுக்குக் கிடையாது. "

"அப்புறம் எந்த நாவலாக இருந்தாலும், எழுத்தாளன் சொல்லக் கூடிய உலகம் ரொம்பப் புதிதாக இருந்தாலும், அவன் சரியாக ஒழுங்குடன் சொல்லியிருந்தால் அந்த உலகம் வாசிக்கிற யாருக்கும் தெளிவாப் புரியும். அப்படித்தான் நான் சொல்லியுள்ளவை. போர், வெளிநாட்டுச் சூழல் சம்பந்தப்பட்ட விசயங்கள் - தமிழ் ஆளுகளுக்குப் புதிசு என்றாலும் - நிச்சயம் விளங்கும். ஆனா அந்த நாவல் கவனிக்கப்படவில்லை"
Justify Full
நாவலிலிருந்து;

"எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடிகிறது".

******

"நாம் எதை நம்புவது"
"இருள் விலகி ஒளி பிறக்கும் என்பதை"
"ஒளி பிறக்காவிடின், இருளையே ஒளியென நம்புவது"

******

"சந்திப்பதும் பிரிவதும் மனிதனின் தலைவிதி"
"சந்திப்பின் விளைவே பிரிவு..."

******

எஸ். சம்பத்தின் 'இடைவெளி', ப. சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி', ஜி. நாகராஜனின் 'நாளை மாற்றுமொரு நாளே' ஆகிய மூன்று நாவல்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுவது உலக இலக்கியத்திற்கு நம்முடைய பெறுமதியான கொடையாக இருக்கும்...

- இந்த மாத குமுதம் தீராநதியில் - சி. மோகன் அவர்கள்.

Monday, October 11, 2010

நான் மந்தையிலிருந்து விலகிப் பிரிந்தவன் !

கவிதை போல் அமைந்த வரிகள் . சிங்காரம் அவர்கள் எழுதியுள்ள 'புயலிலே ஒரு தோணி' நாவலில் விரவிக் கிடக்கின்றன. வரிகளை மடக்கி அதைக் கவிதை என வாசிக்கும் சூழலில், கவிதை போன்ற வரிகளை பத்தியாக எழுதியுள்ளார் .சிங்காரம்.

இதோ ஒரு சில வரிகள்; (இந்த வரிகள் நாவலில் பத்தியாகவே இருக்கிறது. புத்தகத்தின் முன் அட்டையில் இவ்வாறு அச்சிட்டுள்ளார்கள்.)


காரளகப் பெண் சிகாமணியே!
நான் மந்தையிலிருந்து விலகிப் பிரிந்த ஓடுகாலி.
பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும்,
பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி,
இந்தப் பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி,
ஒட்டிப்பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய்
அலைந்து திரிகிறேன்; அலைந்தலைந்தே திரிவேன்;
அலைந்தலைந்து திரிந்தே அழிவேன்.
கன்னற்சுவை மொழி மின்னிடையாய் !
உன் திரண்டுருண்ட மார்பிலே என்னைச் சயனித்து,
உன் சேலொத்த விழியிலே என்னைக் கண்ணுற்று,
உன் பாலொத்த மொழியிலே என்னைச் செவியுற்று,
உன்னை அறிவதால் என்னை மறக்கிறேன்.
ஆகவே, உன் உடலணைப்பில் இருக்குங்காறும்
சங்க நிதி பதும நிதி இரண்டும் வேண்டேன் !
கங்கை வார்சடை கரந்தான் அருளும் வேண்டேன்!
எனினும், பெண் மயிலே,
நான் தன்னந்தனியன்.
என் காதலீ !
மார்பிற் படுத்து மயலூட்டி மகிழ்வித்து மறப்பூட்டும் நாயகீ !
அன்னையற்ற எனக்குத் தாயாகி
மடியிற் கிடத்தி தாலாட்டவல்லையோ !
தமக்கையறியா என்னை இடுப்பில் வைத்துக்
கிள்ளி அழுகூட்டிப் பின் முத்தாடி ஆற்ற ஒவ்வாயோ !
தங்கையற்ற என்னைத்
தொடர்ந்தோடிப் பற்றி சிணுங்கி நச்சரியாயோ...

============================================


எனது முந்தைய பதிவொன்று நாவலைப் பற்றி :
தமிழரின் நிலை... - புயலிலே ஒரு தோணி

============================================

நாவல் : புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
பதிப்பு : தமிழினி
விலை : ரூ. 180

Thursday, April 8, 2010

தமிழரின் நிலை... - புயலிலே ஒரு தோணி

.சிங்காரம் அவர்கள் எழுதிய "புயலிலே ஒரு தோணி" நாவலை படித்து முடித்து விட்டு, இப்பொழுது திரும்பவும் வாசிக்க தொடங்கி உள்ளேன். நாவலில் வரும் வரிகள் அனைத்தும் ஒரு கவிதைக்கு உரிய அழகுடன் உள்ளன. இப்பொழுது நாவல் முழுவதும் நான் சொல்ல போவதில்லை. எனக்கு பிடித்த சில பத்திகளையும், சில வரிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஓர் உரையாடலில்;

" எனது நண்பர் ஒரு கதை சொன்னார். வீரத் தமிழினத்தின் மாட்சிமிகு நிலைமை பற்றி. நீ அதை தெரிந்து கொள்வது அவசியம். சுருக்கமாக சொல்கிறேன். எல்லாரும் அன்றன்று காலையில் வேலை தொடங்கும் முன், மணியகாரனிடம் போய் ஆளுக்கு மூன்று செருப்படி வாங்கி கொள்ள வேண்டுமென்று அரசு ஆணையிட்டது. மறுநாள் கருக்கலில் ஊருக்கு ஊர் மணியக்காரன் வீட்டுக்கு முன்னே வீரத் தமிழ்க் குடிமக்கள் கூடி நின்று, 'விரசாய் அடிச்சு விடுங்கையா, வேலைக்கு போகணும், நேரமாகுது' என்று முறையிட்டு, முதுகை திருப்பி காட்டி கொண்டிருந்தனர். சுணங்காமல் அலுவலை முடித்துச் செல்வதற்காக, அவரவர் சக்திக்கு ஏற்ப காலும் அரையுமாக இலஞ்சத் தொகையும் எடுத்துச் சென்றிருந்தார்கள். இதுதான் தமிழினத்தின் இன்றைய நிலை, நேற்றைய நிலை."

இந்நாவல் எழுதப்பட்ட வருடம் 1962. இன்றைய நிலைமையை நீங்களே நினைத்து கொள்ளுங்கள் தமிழ்க் குடி மக்களே.

இன்னும் ஒரு வரி:

கையில் துப்பாக்கி இருந்தால் காசு இல்லாமலே தோசை. இல்லாவிடின், காசு இருந்தாலும் சில சமயங்களில் தோசை மறைந்துவிடும்.

இன்னும் நிறைய இருக்கிறது. நேரம் இருக்கும் பொழுது இங்கே எழுதுகின்றேன்.