Tuesday, October 15, 2024

நளபாகம் - தி. ஜானகிராமன்

காமேச்வரன் தன்னுடைய சிறு வயதிலேயே அன்னையை இழந்து, பின்னர் தந்தை கல்யாணம் செய்துகொண்ட சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ரயிலில் அவனை சந்திக்கும் வத்சன் என்பவர் அவனைக் கூட்டிச்செல்கிறார. அவருக்கு சமையல் கலை தெரியும் என்பதால் ஒரு கோவிலில் சமைக்கும் வேலை அவருக்கு. அவருடனேயே தங்கி கொள்ளும்  காமேச்வரன், சமையலைக் கற்றுகொண்டு அவரையே குருவாக எண்ணிக் கொள்கிறான். அவரின் இறப்புக்கு பின்னர் அவனுடைய நினைவுகளில் அவர் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார். 



காமேச்வரன் இப்பொழுது காசி, பத்ரிநாத் எனச் செல்லும் யாத்ரிகர்களுக்கு சமைப்பவனாக தனி ரயிலில் வேலைக்கு இருக்கிறான். அவன் சமையலை அனைவரும் புகழ்கிறார்கள். அப்படி ஒரு பயணத்தில்தான் ரங்கமணி அம்மாள், ஜோதிடர் முத்துசாமி என அவனுக்கு அறிமுகமாகிறார்கள். 


ரங்கமணி அம்மாவுக்கு கணவர் இல்லை. கல்யாணம் ஆன சில வருடங்களிலேயே கணவனை இழக்கிறார். குழந்தை இல்லாததால் தன்னுடைய மாமியார் சுவீகாரம் எடுத்துக் கொள்ள வற்புறுத்துவதால் சொந்தத்தில் துரை என்பவனை மகனாக ஏற்றுக் கொள்கிறார். ரங்கமணி கணவரின் குடும்பத்தில் சில தலைமுறைகளாகவே குழந்தை பாக்கியம் இல்லை. அதற்கு ஒரு கதையும் சொல்கிறார்கள். இப்பொழுது துரைக்கு திருமணம் ஆகி ஏழாண்டுகள் கழிந்தும் குழந்தை இல்லை. 

யாத்திரை ரயிலில் போகும்பொழுது எங்களின் குடும்பத்துக்கு பிடித்த பாவம் போகுமா, குழந்தை பாக்கியம் கிடைக்குமா என ஜோதிடர் முத்துசாமியிடம் ரங்கமணி அம்மாள் ஜோசியம் கேட்கிறார். ஜோசியம் பார்க்கும் முத்துசாமி, துரைக்கு புத்திர பாக்கியம் இல்லை, ஆனால் அவனின் மனைவி பங்கஜத்துக்கு பாக்கியம் உண்டு என்கிறார். ரங்கமணி அம்மாள் ஜோதிடரை வியந்து பார்க்கிறாள். 

பக்தியும், நல்ல அழகும் உள்ள இளைஞன் காமேச்வரனை தனது வீட்டுக்கு அழைக்கிறாள் ரங்கமணி. ரங்கமணிக்கு அவன் மேல் ஏற்பட்ட பிரியம் என்ன வகையானது என்பதை நாவல் விளக்கவில்லை. தான் அடையாத ஒன்றை தன் மருமகள் அடையட்டும் என்ற எதிர்பார்ப்பா என்பதும் அப்படியே. தனது தத்து பிள்ளையாக என் வீட்டில் வந்து இருந்து, உன்னுடைய பூஜைகளை நடத்து என அழைக்கிறாள். முன்பே ஒரு பிள்ளை உங்களுக்கு இருக்க, நான் அங்கே வந்து இருந்தால் பிரச்சினை வரும், என்னால் உங்கள் சொல்லையும் தட்ட முடியாது.. வேண்டுமானால் ஒரு சமையல்காரனாக நான் வந்து இருக்கிறேன் என்கிறான் காமேச்வரன். எப்படியோ நீ வந்து இருந்து, உன்னால் சில நல்ல விஷயங்கள் நடந்தால் நல்லதே என்கிறாள் ரங்கமணி. 

துரையின் மனைவி பங்கஜத்துக்கு காமேச்வரன் மேல் மோகம் தோன்றியது  போல் இருந்தாலும், அவள் தனது கணவனை நேசிக்கிறாள். சக்தி உபாசகனாக இருக்கும் காமேச்வரனை அவள் மிகவும் மதிக்கிறாள். மாமியார் ரங்கமணியின் நோக்கம் புரிந்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல் துரையுடன் நெருங்குகிறாள். இதற்கு முன்னரே இருவரும் கணவன் மனைவி என்றாலும், இப்பொழுதுதான் காதல் செய்வது போல பழகுகிறார்கள். அதன் விளைவாக பங்கஜம் தாய்மை அடைகிறாள். 




அதற்கு முன்பாகவே காமேச்வரன் பிடி அரிசி என்ற திட்டத்தின் மூலம் ஊரில் உள்ள பள்ளியில் பயில வரும் குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுக்கிறான். அதற்காக எல்லோரிடமும் உதவி கேட்கிறான். அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் அவனுக்கு உதவுகிறார்கள். தொடர்ந்து ரங்கமணி அம்மாவின் வீட்டில் பூஜை செய்கிறான், ஊரில் உள்ள சிலர் அவனிடம் வந்து குங்குமம் வாங்கிச் செல்கிறார்கள். 

ஆனால் ஊரில் உள்ளோர் வதந்தியை கிளப்புகின்றனர். பங்கஜம் தாய்மை அடைய காரணம் காமேச்வரன் தான் என பேசுகின்றனர். இதை அறிந்த காமேச்வரன், ஜோசியர் முத்துசாமியிடம் சென்று கேட்கிறான். அவரோ, உண்மையாய் நடந்தால் என்ன, நடந்தது போல பேச்சு கிளம்பினால் என்ன இரண்டும் ஒன்றுதான். ஜோசியர்களைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் ஒரு விளக்கம் சொல்வார்கள். அப்படிச் சொன்னீர்களே, இப்படியாகி விட்டது என்றால் அதற்கும் ஒரு காரணம் சொல்லி தான் சொன்னதே சரி என்று நிற்பார்கள். 

காமேச்வரன் பின்னர் தான் ரங்கமணி வீட்டை விட்டு போக முடிவு செய்கிறான். முன்பு செய்த வேலையான ரயிலில் சமைக்கும் வேலைக்கு திரும்ப போகிறான். அத்தனை வருடங்களாக திருமணத்தை தள்ளிப் போட்ட காமேச்வரன், தனக்குப் பெண் பார்க்குமாறு ரயில் யாத்திரையை நடத்தும் நாயுடுவிடம் சொல்கிறான். 

ஒரு நல்ல விஷயம் நடக்கிறதென்றால் அதற்கு காரணம் நம்மைச் சுற்றியும் நடக்கும் நல்ல நிகழ்வுகள் மற்றும் நல்ல மனிதர்களே என்பதை நளபாகம் நாவல் சுட்டிக் காட்டுகிறது. ஆன்மிகம், பக்தி என்று ஒருபக்கம் இருந்தாலும் நாம்  மனிதர்கள் மேல் வைக்கும் அன்பே நம்மை கடைத்தேற்றுகிறது. யார் செய்த பாவமோ என்று நாம் நினைக்கும் அனைத்தும் அந்த அன்பின் முன்னால் அழிந்து போகின்றன.

 


Monday, September 23, 2024

கார்மலின் - தாமோதர் மௌசோ - தமிழில்: கவிஞர் புவியரசு

கொங்கணி நாவலான கார்மலின் கவிஞர் புவியரசு அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டது. பெற்றோரை சிறுவயதிலேயே இழந்த கார்மலின் என்ற பெண் தன்னையும், தான் பெற்ற மகளையும் இந்த நிலத்தில் காலூன்ற செய்ய சந்திக்கும் இடர்கள் பற்றிய கதை. 

கோவா கடற்கரை பகுதியில் பிறந்த கார்மலின், தனது சிறு வயதிலேயே பெற்றோர் மற்றும் உடன்பிறந்த சகோதரனை இழக்கிறாள். பின்னர் தனது அத்தை வீட்டில் வளர்கிறாள். அவளின் அத்தைக்கு கார்மலினை வளர்ப்பது பிடிக்கவில்லை என்றாலும் அவளுடைய கணவர் இது நம்முடைய கடமை எனச் சொல்லி அவள் மேல் பாசம் காட்டுகிறார். மாமா அவள் மேல் பாசத்துடனும், அவளை பள்ளிக்கும் அனுப்புகிறார். அத்தை மாமாவின் மகன் அழகியான  கார்மலின் மேல் காதல் வயப்படுகிறான். கார்மலினுக்கும் அவன் மேல் ஆசையாக இருக்கிறாள். மாமாவுக்கு கார்மலினை தனது மருமகளாக பார்க்க வேண்டும் என ஆசை இருந்தாலும், அத்தை பணக்கார மருமகள் வேண்டும் என்கிறாள். சொன்னதுபோலவே அவனுக்கு ஒரு பணக்கார பெண்ணைப் பார்த்து கட்டி வைத்து விடுகிறார்கள். அவளின் முதல் காதல் உடைந்து போகிறது. 


கால்பந்து அணியில் விளையாடும் ஜோஸ் என்பவனை கார்மலினுக்கு கட்டி வைக்கிறார் அவளின் மாமா. சரியான கோபம் கொண்ட அவன் அந்த அணியில் தொடர்ந்து விளையாட முடிவதில்லை. குடிப் பழக்கம் கொண்ட அவன் சம்பாதிக்கும் காசை எல்லாம் குடித்தே அழிக்கிறான். இருந்த வேலையும் போய்விடுகிறது. குடிகாரர்களுக்கே உண்டான கோபம், நிதானம் இன்மை எல்லாம் அவனை ஆட்கொள்ள தன்னிலை மறந்து திரிகிறான் ஜோஸ். ஒரு பெண் குழந்தையும் பிறக்க, அதற்கு பெலின்டா என பெயர் வைக்கிறாள் கார்மலின். 

தனது மகளை நன்றாக வளர்க்க வேண்டும் என விரும்பும் கார்மலினுக்கு, குழந்தைக்கு உணவூட்ட முடியாமல் வறுமை தள்ளுகிறது. ஜோஸின் அண்ணண் மனைவி இசபெல் அவளுக்கு உதவுகிறாள். அரிசி, பணம், குழந்தைக்கு உடைகள் என தன்னால் முடிந்த உதவிகளை இசபெல் செய்கிறாள். 

ஒருமுறை ஜோஸ் வேலை பார்க்கும் இடத்துக்கு செல்லும் கார்மலின்   தனது கணவனின் நண்பனிடம் தன்னை இழக்கிறாள். அவளின் கணவன் ஜோஸ் குடிபோதையில் கிடக்கிறான். ஜோஸிடம் எந்த இன்பத்தையும் காணாத அவளுக்கு இது தற்காலிக இன்பமாக அமைகிறது. இரண்டாவது முறையும் தவறிய பின்னர், அவள் இந்த உறவு வேண்டாம் என ஊர் திரும்புகிறாள். ஆனால் அந்த உறவின் விளைவாக பிறந்த ஆண் குழந்தையை அவள் வெறுக்கிறாள். பின்னர் அந்த குழந்தை கட்டிலில் இருந்து கீழே தவறி விழுந்து இறக்கிறது. அதன் பின்னரே அவள் நிம்மதியடைகிறாள். தான் செய்த பாவம் கழுவப்பட்டு விட்டது என நினைக்கிறாள். 


பக்கத்தில் இருக்கும் நிலத்தை குத்தகைக்கு பிடித்து விவசாயம் செய்கிறார்கள் கார்மலினும், இசபெல்லும். ஜோஸ் எதற்கும் உதவாமல் தனது குடியே முக்கியம் என்று இருக்கிறான். அறுவடைக்கு பின்னர் கொஞ்சம் உணவு பற்றிய கவலை தீர்கிறது. ஆனால் அதற்கடுத்த வருடங்களில், யார் நிலத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டம் வர விவசாயமும் செய்ய முடியாமல் போகிறது. 

வறுமை தொடர்ந்து வர, கடன் தொகையும் அதிகமாகி கொண்டே போகிறது. ஜோஸினால் எந்த பயனும் இல்லை. குவைத்தில் வேலை பார்க்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்பட அங்கே செல்ல முயல்கிறாள் கார்மலின். இசபெல்,   பெலிண்டாவை   நான் பார்த்துக் கொள்கிறேன் நீ போய்வா என்கிறாள். அவள் கொடுத்த நம்பிக்கையால் கார்மலின் குவைத் நாட்டுக்கு வீட்டு வேலைக்குப் போகிறாள். 

அவள் குவைத் நாட்டுக்கு செல்லும் முன்பே அந்த நாட்டைப் பற்றியும் அவள் பார்க்கப் போகும் வேலை பற்றியும் சொல்கிறார்கள். நல்ல முதலாளி அமைந்தால் உனக்கு அது ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார்கள். சில பெண்கள் பாலியல் ரீதியில் கஷ்டப்படவும் செய்கிறார்கள், சிலர் அதையே ஒரு வாய்ப்பாக்கி பணம் சம்பாதிக்கிறார்கள் எனச் சொல்ல கார்மலின் திட மனதுடன் செல்கிறாள். அங்கே போன பின்னர் நல்ல முதலாளியும் குடும்பமும் அமைகிறது. 

அவளின் முதலாளி பெயர் நுஸார். அவர்கள் என்ன செய்தாலும் எதிர்த்துக் கேள்விகள் கேட்க முடியாத சூழலில் கார்மலின் பணியாற்றுகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து தருகிறாள். எல்லோரும் வெளியே சென்றிருக்கும் ஒரு நாள் அவளின் முதலாளி அவளை அடைகிறார். உறவு முடிந்த பின்னர் அவளுக்கு கொஞ்சம் பணம் தருகிறார். நுஸார் நல்லவர் என்றாலும், பணமே கொடுக்கவில்லை என்றாலும் நாம் தப்பிக்க முடியாது எனத் தெரிந்துகொள்கிறாள் கார்மலின். அத்தை மகன், ஜோஸ், அவனின் நண்பன் என அவளுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களிடம் காணாத ஒன்றை நுஸாரிடம் கண்டுகொள்கிறாள். அந்த உறவில் அவள் மகிழ்ச்சியும் அடைகிறாள். 

ஒருநாள் செய்த சிறு தவறால் முதலாளியின் மனைவி அவளை சிறைக்கு அனுப்பி விடுகிறாள். பின்னர் அவளை திரும்ப அழைத்து 
வந்து விடுகிறார்கள். ஜோஸ் அதிக குடியினால் கோவாவில் இறக்கிறான். அவன் இறப்புக்கு கூட அவள் வரமுடியாமல் போகிறது. போய்  வந்தால் செலவு அதிகமாகும் என நினைத்து போகாமல் இருக்கிறாள். உடனே கிளம்பினாலும் அவன் அடக்கத்துக்கு போக முடியாது. 

சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு கார்மலின் எல்லாக் கடனையும் அடைக்கிறாள். நகரத்தில் புதிய வீடு கூட அவள் வாங்குகிறாள். அவளைப் பொறுத்த வரை,  தான் பட்ட துயரங்கள் தன்னோடு போகட்டும்,  தன் மகள் பெலிண்டா எந்த கஷ்டமும் படக் கூடாது என நினைக்கிறாள். அவள் படித்து முடித்தால் நல்ல இடத்தில அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்கிறாள். 

பள்ளி இறுதித் தேர்வில் தோற்றுப் போகும் பெலிண்டா, அடுத்த முறையும் முயன்று கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் தன் அம்மாவுடன் அவள் பேசும் பேச்சு கார்மலினை கோபம் கொள்ளச் செய்கிறது. எந்த வாழ்க்கை தன் மகள் வாழக் கூடாது என எண்ணுகிறாளோ அதனை அவள் சொன்னதும் தாயாக அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. 

"கார்மலின்" - நாவல் ஒரு காலகட்டத்தின் கதை, ஒரு பெண் எவ்வளவு அடக்கு முறைகளுக்கு உள்ளாகிறாள், கொஞ்சம் அழகாக இருந்தால் அவளை வளைக்க எத்தனை பேர் முயல்கிறார்கள், பெண்ணின் ஆசைகளை, அவளின் தாபங்களை அறியாத ஆண்கள், அயலகப் பணியில் அவர்கள் படும் துயர் என சொல்லும் கதை. சில உறவுகள் விலகிப் போக, இசபெல், நுஸார் போன்ற சில உறவுகள் அணைக்க வருகிறார்கள். 

 
கார்மலின் - தாமோதர் மௌசோ 
தமிழில்: கவிஞர் புவியரசு
சாகித்திய அகாதெமி