Wednesday, October 23, 2019

புத்தம் வீடு : ஹெப்சிபா ஜேசுதாசன்

எங்கள் சொந்த ஊரான நல்லகாளிபாளையத்தில் பனை மரங்கள் உண்டு. தெளுவு என்று எங்கள் ஊரில் சொல்கிற பதநீரும், நுங்கும், அதன் பின்னர் பனம்பழம், கிழங்கு என்றும் பனையோடு வாழ்ந்தவர்கள். பனங்கிழங்கைத் தோண்டி எடுத்த பின்னர் விதையை வெட்டினால் உள்ளே கெட்டியாய் தேங்காய் போல பருப்பு இருக்கும். அதையும் தின்று செரித்த நாள் அன்று. பனையேறிகள் நுங்கு வெட்டும் காலத்தில் அவர்களோடு சென்றால் இளநுங்கை எல்லாம் சீவித் தருவார்கள். 

பனையேறிகள் என்றால் அவ்வளவு ஒன்றும் வசதியானவர்கள் அல்ல அப்பொழுது. கருப்பட்டியும், நுங்கும், பனங்கிழங்கும் என வருடம் முழுவதும் பனை கொடுத்தாலும், அதை விற்று வரும் பணம் ஒரு பனையேறியின் குடும்பத்துக்கு பற்றாது. எப்படியும் நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருப்பார்கள். முதியவர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். இதில் புகைப்பழக்கமும் குடியும் உண்டென்றால் நித்தமும் குடும்பத்தில் சண்டையே. 

ஹெப்சிபா அவர்கள் எழுதிய புத்தம் வீடு நாவலில் பனையேறும் மக்களும், சொந்த நிலமிருந்தும் வசதியில்லாத மக்களும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். கண்ணப்பச்சிக்கு இரண்டு மகன்கள். சொந்த நிலம் உண்டு. இருக்கும் நிலத்தில் பனை மரங்கள் உண்டு. பனையேற பனையேறிகள் வருவதுண்டு. பனையேறிகளும் நிலத்தின் உரிமையாளர்களும் செல்வது ஒரே சர்ச் என்றாலும் சாதி கூடவே இருக்கிறது. 

கண்ணப்பச்சியின் இரண்டு மகன்களில் மூத்தவர் குடிப் பழக்கம் உள்ளவர். அவருக்கு லிஸி என்ற மகள் உண்டு. இரண்டாம் மகன் வியாபாரம் எனச் சொல்லிக்கொண்டு பணத்தை இழக்கிறார். இரண்டாம் மகனுக்கு லில்லி என்ற மகள். ஆக இரண்டு மகன்களும் சரியில்லை. ஆடு குழை தின்கிறது போல் வெற்றிலை போட்ட கண்ணப்பச்சியின் மனைவி கண்ணம்மை இப்போது உயிருடன் இல்லை. 

சொந்தமாக நிலமிருந்தாலும் வசதிகள் அற்ற வாழ்க்கை. கொஞ்சம் சேர்த்து வைத்து வாழலாம் என்றால் கண்ணப்பச்சியின் இரண்டு மகன்களும் சரியில்லை. ஊரில் மரம் ஏறிப் பிழைப்பவர்கள் கூட படிப்பு, சொந்தமாக கொஞ்சம் நிலம் என்று முன்னேறும்போது தம் மகன்கள் இப்படி இருப்பது அவரை வாட்டுகிறது. இரண்டு பேத்திகளையும் எப்படி இவன்கள் கல்யாணம் முடித்து வைக்கப் போகிறார்களோ என்ற கவலை வேறு. 

மூத்த பேத்தி லிஸி இப்பொழுது வீட்டில் இருக்கிறாள். இரண்டாம் பேத்தி லில்லி பள்ளிக்குப் போகிறாள். அவர்கள் நிலத்தில் மரம் ஏறுபவரின் மகன் தங்கராஜும், லிஸியும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். அவனுக்கு லிஸியின் மேல் காதல். நேரடியாக பெண் கேட்க தயங்கி சர்ச் பாதிரியிடம் சொல்கிறான். அவரோ இதெல்லாம் தனக்கு தேவையில்லாத வேலை என ஒதுங்கிக்கொள்கிறார். ஆனால் விசயம் வெளியே கசிந்து லிஸி வீட்டாருக்கு தெரியவருகிறது. வேறு சாதி என்பதால் தங்கராசுவின் அப்பாவை அழைத்து எச்சரிக்கை செய்கிறார்கள். அவரும் இனி அவன் இந்த மாதிரி செய்யமாட்டான் எனச் சொல்கிறார். 

பின்னர் அந்தக் கிராமத்தில் வைத்தியம் பார்க்கும் மருத்துவர் லிசியைப் பெண் கேட்கிறார். ஆனால் வீட்டாரால் குழப்பமாகி லில்லியை மணக்க நேர்கிறது. மூத்தவள் இருக்க இளையவளுக்கு மணம் செய்வது கண்ணாப்பச்சி, லிஸியின் பெற்றோர் போன்றோருக்கு பிடிப்பதில்லை. கல்யாணம் நடந்து முடிந்து லில்லி புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்டாள். 

கல்யாணம் முடிந்த அடுத்த நாள் லில்லியின் அப்பா ஒரு மரத்தடியில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். கொலை செய்த அரிவாள் தங்கராசுவினுடையது. எனவே அவனை காவல்துறை பிடித்துச் செல்கிறது. லிசி காதல் விவகாரத்தால் லில்லியின் அப்பாவை கொலை செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் அதை தங்கையன் மறுக்கிறான். 

முடிவில் இன்பம் போல கதையின் முடிவிலும் சுபமே. ஆனால் கதை மாந்தர்களின் மனதை நேரில் பார்ப்பதுபோல் கதையை கொண்டு செல்கிறார் ஆசிரியர். சிறு வயது வாழ்க்கை, அழகான காதல் கதை, கிராமத்து வாழ்வு, சொத்து பிரச்சினை, சாதி, பனையேறுபவர்கள் பற்றி என ஒரு அழகான சித்திரம் வரைந்திருக்கிறார் நாவலில்.