Showing posts with label எஸ்.எல். பைரப்பா. Show all posts
Showing posts with label எஸ்.எல். பைரப்பா. Show all posts

Wednesday, August 13, 2025

சார்த்தா - எஸ். எல். பைரப்பா

அந்தக் காலத்தில் வணிகம் செய்வதற்காக நாடு விட்டு நாடு குழுவாக பயணம் செய்துள்ளனர். நீண்ட நாள் பயணம் என்பதால், ஒரு குழுவாகவே அனைவரும் இணைந்து சென்றுள்ளனர். இணைந்து செல்வதால் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். அதிலும் புத்த மதத்தைச் சேர்ந்த வணிகர்களே அதிகம் இருந்துள்ளனர். அப்படி ஒரு குழுவாகச் செல்வதை சார்த்தா என அழைத்துள்ளனர்.  கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இக்கதை நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த சார்த்தா என்ற சொல், தமிழில் நமது இலக்கியத்தில் (சிலப்பதிகாரம்) உள்ளது என்கிறார் இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த ஜெயா வெங்கட்ராமன்.

தனது முன்னுரையில் "வணிகர் கூட்டத்தின் தலைவன் சாத்தன், சாத்துவான் என அழைக்கப்பட்டான். வணிகச் சாத்துக்களின் காவல் தெய்வமாகிய அய்யனாருக்கும் சாத்தன் என்ற பெயருண்டு. ஒருவரை ஒருவர் சார்ந்து கூட்டமாகச் செல்வதால் 'சார்தல்' எனும் சொல்லிலிருந்து சாத்து எனும் சொல் வழக்கூன்றியது." என்கிறார் ஜெயா வெங்கட்ராமன்.



நாகபட்டன் என்கிற பிராமண இளைஞன் தனது தாய் மற்றும் மனைவி சாலினியுடன் வசித்து வருகிறான். அரசன் அமருக மகாராஜாவுக்கு இவன் நண்பன். அரசனான அவன் தனது நண்பன் நாகபட்டனை வணிகக் குழுவோடு சேர்ந்து பயணித்து அவர்கள் எவ்வாறு வணிகம் செய்கிறார்கள், சுங்க வரிகள் மற்றும் மற்ற நாடுகளின் வணிக நிலைமை என அறிந்து வருமாறு சொல்கிறான். வணிகம் பற்றி அறிந்து கொள்கிறேன் என்று சார்த்தாவிடம் சொன்னால், அவர்கள் அவனைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அந்தக் குழுவுடன் கல்வி கற்க செல்பவர்கள், கலை ஆர்வம் கொண்டவர்கள், வேறு ஊர்களுக்கு குடி பெயர்பவர்கள் என பயணிகளாகச் செல்ல முடியும்.  'காசி சென்று வைதீக மேல் படிப்பு படிக்கப் போகிறார், எனவே உங்கள் குழுவுடன் இவரை அழைத்துச் செல்லுங்கள்' என அரசனே ஒரு குழுவிடம் சொல்லிவிடுவதால், மறுக்காமல் அவனை அழைத்துச் செல்கிறார்கள்.  

போகும் வழியில் அவன் எவ்வளவு முயன்றாலும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடிவதில்லை. குழுவில் பொன்னும் பொருட்களும் பாதுகாப்பாக செல்கின்றன. திருடர் பயம் காரணமாக அதற்கு காவலர்களும் உண்டு. இந்த சார்த்தா வேறு மார்க்கமாக பயணிப்பதால், காசி செல்லும் இன்னொரு சார்த்தாவுடன் பயணிக்குமாறு கூறி மதுராவில் இருக்கும் ஒரு புத்த விகாரையில் நாகபட்டனை இருக்கச் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்புகின்றனர்.  வணிகம் பற்றிய சில தகவல்களை அந்த புத்த விகாரையில் இவன் பெறுகிறான். 

புத்த விகாரையில் தங்கி இருக்கும்பொழுது அந்த ஊரில் இருக்கும் ஒரு நாடகக் குழுவுடன் நாகபட்டனுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அதன் மூலம் அவன் நாடக நடிகனாக நடிக்கிறான். ஒரு நாடகம் மட்டுமே என்று இருந்த அவனிடம், நன்றாக நடிப்பதால் சுற்றி இருக்கும் ஊர்களிலும் அதே நாடகம் போடப்பட்டு நாகபட்டன் புகழ் அடைகிறான். தனது நாட்டில் இருந்து வந்து பல வருடங்கள் ஆனபோதிலும், அவன் திரும்பி போகாமல் நாடகம் நடிப்பிலேயே குறியாக இருக்கிறான். நாடகத்தில் கிருஷ்ணர் வேடம் என்பதால் அவனை எல்லோரும் கிருஷ்ணானந்தர் என்றே அழைக்கிறார்கள். அவனுக்கு ஜோடியாக நடிக்கும் சந்திரிகையின் மேல் காதல் வந்தாலும் அவள் அதனை கண்டுகொள்வதில்லை. அவனின் நட்பு, பேச்சு என அவள் விரும்பினாலும் அவளை அடைய அவள் விடுவதில்லை. ஒரு கட்டத்தில் அவனை விட்டு அவள் விலகிச் சென்றுவிடுகிறாள். 



சந்திரிகை விலகிச் சென்றாலும் நாகபட்டனுக்கு அவள் மேல் இருக்கும் காதல் மறக்க முடிவதில்லை. அவன் ஊரைச் சேர்ந்த ஒருவரை சந்திக்க நேர்கிறது. மேல் படிப்புக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு பல வருடங்கள் திரும்பாமலே இருந்ததால் அவனின் இளவயது மனைவி சாலினி, அரசனுடன் தொடர்பில் இருப்பதாகவும், ஒரு குழந்தையும் பிறந்திருப்பதாகச் சொல்கிறான். தனது மருமகளின் நடவடிக்கைகள் கண்டு கவலைப்பட்டு  அவனது அம்மா இறந்துவிட்டதாகவும் கேள்விப்படுகிறான்.  பின்னர் யோகம், தாந்திரீகம் என ஆன்மிகத்தில் நாட்டம் கொள்கிறான். தனது மனைவியையும், அரசனையும் தனது யோக சக்திகள், தாந்திரீக மந்திரங்கள் மூலம் வெல்ல வேண்டும் என நினைக்கிறான். 

நாவலில் சந்திரிகைக்கு ஒரு பழைய கதை சொல்லப்படுகிறது. தனக்கு பாட்டு குருவாக இருந்த இளைஞன் ஒருவனையே அவள் மணந்து இருக்கிறாள். அவளின் கணவனுக்கு கண் பார்வை இல்லை. மிகவும் அழகியான இவளை அவன் புகழ முடிவதில்லை. பிரச்சினை அவள் கணவனின் மருமகன் வடிவில் வருகிறது. பாட்டு கற்றுக்கொள்ள வந்த அவன் சந்திரிகையின் அழகை வர்ணிக்கிறான். இருவரும் எல்லை மீறிப் போக, அதனை அறிந்த கணவன் அவளிடம் விசாரிக்கிறான். பின்னர் மருமகன் சொல்லாமல் கொள்ளாமல் அந்த ஊரை விட்டுச் செல்ல, கண் பார்வை இல்லாத அவளின் கணவன் தற்கொலை செய்து கொள்கிறான். இதனால் மனமுடைந்த சந்திரிகை ஒரு யோக குருவின் மூலம் தியானம் கற்றுக்கொண்டு இல்லற வாழ்க்கையில் இருந்து தள்ளியே இருக்கிறாள். அதனால்தான் அவள் நாகபட்டனை விட்டுச் சென்று விட்டாள்.  

நாகபட்டன் தாந்திரீக நாட்டம் கொண்டு அதில் சில முயற்சிகளைச் செய்கிறான். அவனுக்கு சொல்லிக் கொடுத்த குரு, எல்லாம் உனக்கு சொல்லிக் கொடுத்தாகி விட்டது, நீ தனியே செல் எனச் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். எனவே அவன் மீண்டும் சந்திரிகையை சந்திக்கச் செல்கிறான். அவளைக் கருவியாகக் கொண்டு தன் சாதனையை நிகழ்த்த வேண்டும் எனச் சொல்ல, முதலில் தயங்கும் அவள் பின்னர் சம்மதிக்கிறாள்.  நாட்கள் செல்லச் செல்ல அவள் காட்டும் அன்பில் திளைக்கும் அவன் தவறான வழியில் சென்றதாகக் கருதி, சந்திரிகை சொல்வதைக் கேட்கிறேன் என்கிறான். அவளோ இல்லறம் மட்டும் வேண்டாம் என உறுதியாக இருக்கிறாள். 

அதன் பின்னர் புத்த குருவின் மூலம் நாளந்தாவிற்கு படிக்கச் செல்கிறான். புத்த மதக் கருத்துக்களை அறிந்து கொள்ளவே அவன் அங்கே செல்கிறான். அங்கே தனது குரு மண்டன மிஸ்ரருக்கு குருவாக இருந்த குமரிலபட்டரைச் சந்திக்கிறான். கொஞ்ச நாட்களில், வேத குருவாக இருந்துகொண்டு புத்த மதத்தின் கருத்துக்களை அறிந்துகொள்ள புத்த சீடன் போர்வையில் அங்கே வந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வெளியே அனுப்பப்படுகிறார் குமரிலபட்டர். குமரிலபட்டரோ தனது நோக்கம் எதுவாக இருந்தாலும், அதனைத் தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த புத்த குருவிடம் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும், நான் பொய் சொன்னதால் பிராயச்சித்தமாக தான் வேள்வி மூட்டி இறக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு அவ்வாறே இறந்தும் போகிறார். நாளந்தா பள்ளியில் இருந்து கிளம்பும் நாகபட்டன் அரச முறைப் பயணமாக தனது குரு மண்டன மிஸ்ரரைச் சந்திக்க தனது சொந்த ஊருக்குச் செல்கிறான். 

அங்கே மண்டன மிஸ்ரரைச் சந்திக்க சங்கரர் வருகிறார்.  கல்வியில் சிறந்தவரான மண்டனருடன் விவாதம் செய்து வெற்றி பெற வேண்டும் என்பது யதியின் விருப்பம். அதற்கு நடுவராக மண்டனரின் மனைவியும், குமரிலபட்டரின் சகோதரியுமான பாரத தேவி இருக்கிறார். இருவருக்கும் விவாதம் நடக்கிறது. இறுதியில் மண்டனர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சங்கரருடன் சேர்ந்து துறவறம் மேற்கொள்வதாகச் சொல்கிறார். ஆனால் பாரத தேவி, காமம் பற்றி ஒரு கேள்வி கேட்க அது பற்றி அறியாத சங்கரர் சிறிது நாட்கள் சென்று இதற்கு பதில் அளிக்கிறேன் எனச் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். அதன் பின்னர் கூடு விட்டு கூடு பாய்தல் மூலமாக அதற்குரிய பதிலை அறிந்து வந்து அதனை கூறிவிட்டு மண்டன மிஸ்ரரை அழைத்துச் செல்கிறார். பாரத தேவி, நாகபட்டனிடம் 'இல்லற வாழ்க்கையில் உன்னால் அடைய முடியாத ஞானம் வெளியே கிடைக்குமா?' எனக் கேட்கிறார். இவை எல்லாமே நாகபட்டனின் பார்வையில் சொல்லப்படுகிறது. 

பின்னர் அங்கிருந்து கிளம்பும் நாகபட்டன், சந்திரிகையுடன் சேர்ந்து பகைவர்களான மிலேச்சர்கள் படையெடுப்பில் நாடு படும் துயரம் கண்டு நாடகம் மூலமாக எச்சரிக்கை செய்ய நினைக்கிறார்கள். அவ்வாறே நாடகங்களை நடிக்கிறார்கள். பின்னர் அவர்கள் இருவரும் பிணையாக கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகின்றனர். பல பிரச்சினைகளைச் சந்தித்தாலும் இறுதியில் அவர்கள் இல்லற வாழ்க்கை நடத்துவதென முடிவு செய்கிறார்கள். முன்பு பாரத தேவி நாகபட்டனிடம் சொன்னது அவனுக்கு நினைவுக்கு வருகிறது. 

நாகபட்டனின் பயணம் பற்றி சார்த்தா நாவலில் சொல்லப்பட்டாலும் அவனுடைய உள் நோக்கிய பயணத்தைச் சொல்வதாகவும் இருக்கிறது. வேதம், சாக்தம், புத்தம், யோகம், தியானம் எனப் பல வழிகளில் அவன் முன்னேற முயன்று கொண்டே இருக்கிறான். அவனுடைய உள் நோக்கிய பயணத்தில் இடையூறு ஏற்படும் போதெல்லாம் சிறிது இளைப்பாறவோ, ஆறுதல் பெறவோ, அவனை தக்க வழியில் திரும்பச் செய்யும் ஒரு தோழியாக சந்திரிகை இருக்கிறாள். 

சார்த்தா - எஸ். எல். பைரப்பா
தமிழில்: ஜெயா வெங்கட்ராமன்
விஜயபாரதம் பதிப்பகம் 
 

Monday, October 28, 2024

ஒரு குடும்பம் சிதைகிறது - எஸ்.எல். பைரப்பா

தொடர்ந்து வரும் இழப்புகளும், உறவுகளின் பிரச்சினைகளும், சகிக்க முடியா வறுமையுமே வாழ்க்கை என்று ஒரு சிலருக்கு அமையுமென்றால் அப்படிப்பட்ட வாழ்க்கையின் பொருள்தான் என்ன, அவர்களுக்கு மகிழ்ச்சி என்பதே இந்த பூமியில் கிடைக்காத ஒன்றா என்ற கேள்வியில் இந்த நாவல் அமைகிறது. அதன் விடை இந்த நாவலிலும் இல்லை, நாமும் தேடினால் கண்டறிய முடியாத ஒன்று அது. 


தாய் கங்கம்மாவுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். பிராமண குடும்பம். அவளின் கணவர் ராமண்ணா ஊரில் கணக்குப்பிள்ளையாக இருந்து இறந்துவிட்டார். கொஞ்ச நிலமும் உண்டு. இரண்டு பிள்ளைகளும் சிறியவர்கள் என்பதால் தற்காலிகமாக அந்த வேலையை இன்னொருவர் பார்த்து வருகிறார். இரண்டு பிள்ளைகளில் மூத்தவர் சென்னிகராயன், இளைய மகன் அப்பண்ணய்யா. இருவருமே வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள். அதற்கு காரணம் கூட தாய் கங்கம்மா தான். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும், யாரையும் மதிக்காத குணம் என அவள் ஒரு தனிப்பிறவி. எப்பொழுதும் கெட்ட வார்த்தைகள் மூலமாகவே பேசுகிறாள். புரோகிதர்கள் மற்றும் ஒருசில பெரிய மனிதர்களுக்கு அவள் பயப்படுகிறாள். ஆனால், அறிவு என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய அவள், பிள்ளைகளையும் அப்படியே வளர்த்து விட்டாள். 

சின்ன வயதில்  ஒருநாள் இரண்டு பிள்ளைகளும்  தாய் திட்டினாள் என்பதற்காக  கரும்புக் காட்டுக்கு தீ வைத்து விட பக்கத்து காடுகளில் உள்ள பயிர்களும் அழிகின்றன. அதற்கு நஷ்ட ஈடாக சிவேகவுடன் என்பவன் பணத்தைக் கொடுத்து நிலத்தை அடமானம் எடுத்துக் கொள்கிறான். அந்த பணம் கட்ட முடியாமல் வட்டி ஏறிக்கொண்டே வருகிறது. இருந்த நிலமும் போனதால் இருக்கும் பொருளை வைத்து நாட்களை கடத்துகிறார்கள் அம்மாவும் மகன்களும். 

கண்டி ஜோசியர் என்பவர் தனது மகளான நஞ்சம்மாவை சென்னிகராயனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். இன்னொரு மகன் கல்லேசன் போலீசாக இருக்கிறான். கண்டி ஜோசியர் அந்த பகுதியில் கொஞ்சம் பிரபலமானவர். யாருக்கும் பயப்படாத அவரைக் கண்டு கங்கம்மா முதலில் பயப்படுகிறாள். ஆனால் வழக்கம் போல மருமகளை கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிக்கிறார். கணவனும் அம்மா போலவே இருக்கிறான், திட்டுவதும் மீதி நேரம் எப்பொழுதும் சோறு பற்றிய நினைப்பு தான். கணக்குப் பிள்ளை வேலையை திரும்பவும் கண்டி ஜோசியர், தன் மகன் கல்லேசனுடன் அவனுக்கு வாங்கித் தருகிறார். கணக்கு பற்றி ஒன்றும் தெரியாத சென்னிகராயன், பக்கத்து ஊரில் இருக்கும் இன்னொருவரிடம் சென்று எழுதி வாங்கி வருகிறான். சம்பளத்தில் பாதிப் பணம் அவருக்கே போகிறது. 

மிகுந்த பொறுமைசாலியான நஞ்சம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பதால் கணக்குகளை அவளே எழுத ஆரம்பிக்கிறாள். முதலில் மறுக்கும் சென்னிகராயன், வேறு வழியில்லாமல் அதற்கு ஒத்துக்கொள்கிறான். கொஞ்சம் முயற்சி செய்து சம்பளப் பணத்தையும் தன் குடும்பத்துக்கே வருமாறு செய்கிறாள். சென்னிகராயனிடம் கிடைத்தால் பக்கத்து நகரத்துக்கு சென்று பணம் தீரும்வரை எல்லா உணவகங்களிலும் சென்று தீர்த்து விட்டே வருகிறான். நிலம், வீடு அடமானத்தில் போகும்போது கூட எவ்வளவோ முயன்றும், அவளால் மீட்க முடியவில்லை. தன் மாமியார் கங்கம்மாவை மீறி அவளால் எதுவும் செய்ய முடியாமல் போகிறது. தனது கொழுந்தனார் அப்பண்ணய்யா கூட ஒருநாள் அவளை அடித்து விடுகிறான். சட்டி நிறைய உணவு இருந்தால் நீ உண்டாயா, பிள்ளைகள் உண்டார்களா என்று ஒருநாளும் கேட்காமல் அனைத்தையும் உண்டு விடும் கணவன், அடக்க முடியாத மாமியார் என அவள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு போகிறாள். 

இதற்கு நேர் எதிராக அப்பண்ணய்யாவின் மனைவி சாதம்மா இருக்கிறாள். நஞ்சம்மா கணக்கு எழுதுதல், புரச இலைகளை தைத்து வருமானம் பார்த்தல் என பல வேலைகளை செய்கிறாள். வெறும் ராகியை கொண்டே அவளால் குடும்பத்தை நடத்த முடியும். ஆனால் சாதம்மா அந்த கஷ்ட வாழ்க்கைக்கு பழக்கப்படாதவள். அரிசிச் சோறும், காப்பியும் சாப்பிட்டு பழகியவள். அப்பண்ணய்யா நல்லவன் என்றாலும் கோபம் வந்தால் அடிக்கிறான், வருமானம் இன்மை, மாமியாரின் கெட்ட பேச்சு என சாதம்மா அப்பண்ணய்யாவை பிரிந்து போகிறாள். 

நஞ்சம்மாவும், சாதம்மாவும் ஒரே வீட்டுக்கு மருமகளாக வந்தவர்கள். நஞ்சம்மா எதையும் தாங்கி கொண்டு குடும்பத்துடன் இருக்கிறாள். சாதம்மாவோ தனது பிள்ளைகளை கூட்டிக்கொண்டு கிளம்பி விடுகிறாள். அண்ணனை திருத்தவே முடியாது, தம்பியை கொஞ்சம் திருத்த முடியும். ஆனால் தம்பி அப்பண்ணய்யாவின் குடும்பம் பிரிந்து போகிறது. 

நாம் கடந்த வருடங்களில் கொரோனா என்ற நோயிடம் அகப்பட்டு வீட்டுக்குள் அடைந்து கிடந்தோம். இந்த நாவல் நடக்கும் இடமான கர்நாடகத்தில் அந்த காலத்தில் பிளேக் நோய் பரவி இருக்கிறது. மக்கள் கொத்து கொத்தாக மடிந்து இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் நாமாவது வீட்டுக்குள் இருந்தோம். பிளேக் நோய் ஊரில் பரவினால் எல்லோரும் அவரவர் வீட்டை காலி செய்து ஊருக்கு வெளியே தங்குகிறார்கள். நோய் முற்றிலும் ஒழிந்த பிறகே ஊருக்குள் வரமுடியும்.  நாவலில் பலமுறை ஊரை  காலி செய்து செல்லும் காட்சி வருகிறது. யார் வீட்டிலாவது எலி செத்து விழுந்தால் அவர்கள் அடையும் பதட்டம் அளவில்லாதது. கொஞ்ச வருடங்கள் கழித்து தடுப்பூசி போடுவதும் நாவலில் வருகிறது. 

இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் என மூன்று பேர் நஞ்சம்மாவுக்கு.  சில நாட்கள் இடைவெளியில் தனது மகளையும், பெரிய மகனையும் பிளேக் நோயால் இழக்கிறாள். பெண் பிள்ளைக்கு இரண்டு மாதம் முன்புதான் திருமணம் செய்து வைத்தாள்.  தனது இளைய மகன் விசுவனை காப்பாற்ற எண்ணி அவ்வூரில் இருக்கும் நரசி என்பவளிடம் 'இவன் என் மகன் இல்லை, இனிமேல் உன் மகன்' என்று சொல்கிறாள். தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கடவுள் பிடுங்கிக்கொள்ள நினைக்கிறார், அதனால் நீயே அவனைப் பார்த்துக்கொள், அவனாவது பிழைக்கட்டும் என்கிறாள். விசுவன் தப்பித்துக்கொள்கிறான். பின்னர் அந்த வருடம் அவனை தன் அப்பாவின் வீட்டுக்கு அனுப்பி விடுகிறாள். அங்கே சில பிரச்சினைகள் இருந்தாலும் தன் பாட்டி அக்கம்மா இருப்பதால் அவனைப் பார்த்துக்கொள்வாள் என நினைக்கிறாள். 



அடுத்த வருடத்தில் கொஞ்சம் கணக்கு போட்டு பணம் சேர்த்து வீடு கட்டுகிறாள் நஞ்சம்மா. வீட்டு வேலை முடியும் நிலையில் திரும்பவும் ஊருக்குள் பிளேக் வந்து நஞ்சம்மா இறந்து போகிறாள். இறப்பதற்கு முன்னர் அந்த ஊரில் அவளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த சாமியார் மாதவைய்யாவிடம் 'அண்ணன் வீட்டில் என் மகன் விசுவன் இருந்தால் சோறு கிடைக்கும். அறிவு வளராது. நீங்கள்தான் அவனைப் பார்த்துக்கொள்ள வேண்டும் ' என்கிறாள். நஞ்சம்மாவின் இறப்புக்கு வந்த, அவளின் பாட்டி அக்கம்மா ஊரில் இருக்கும் பிளாக் மாரியம்மனின் கோவில் கதவை செருப்பால் அடித்து அம்மனை திட்டுகிறாள். தன் பேத்தி பட்ட கஷ்டங்கள் பத்தாது என்று அவளையும் கொன்று விட்டாயா என்று கேள்வி கேட்கிறாள். ஆனால் பாட்டியும் இரண்டே நாளில் இறந்து போகிறாள். 

அப்பண்ணய்யாவுக்கு அண்ணியும் பிள்ளைகளும் இறந்தது கவலை அளிக்கிறது. அவன் இப்பொழுது அம்மா கங்கம்மாவை விட்டு தனியே வசிக்கிறான். கங்கம்மா இன்னும் அப்படியே தான் இருக்கிறாள். நஞ்சம்மா கட்டிய புது வீட்டுக்கு சென்னிகராயனும், கங்கம்மாவும் குடி போகிறார்கள். நஞ்சம்மாவின் கணவன் சென்னிகராயனோ அடுத்த திருமணம் செய்ய பெண் பார்க்கிறான். தரகருடன் சென்று பெண் பார்த்து திருமணத்துக்கு நாளும் குறித்துவிட்டு வருகிறான். சென்னிகராயனை பற்றி கேள்விப்பட்டு பெண் தரமாட்டோம் என்று சொல்லிவிடுகிறார்கள். 

நஞ்சம்மாவுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்த மாதேவய்யா, விசுவனை எப்படியாவது மேலே கொண்டு வந்து விடவேண்டும் என நினைக்கிறார். அவனை நானே வளர்க்கிறேன் என்று, அவன் தந்தையான கண்டி ஜோசியரிடமும், மாமன் கல்லேசனிடமும் கேட்கிறார். முதலில் யோசிக்கும் அவர்கள் பின்னர் ஒத்துக்கொள்கிறார்கள். விசுவனை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார் அய்யா. 

வரும்வழியில் அவர்களின் ஊருக்கு போகிறார்கள். விசுவனுக்கு தன் அம்மாவின் நினைவு வருகிறது. அய்யா தங்கி இருந்த இடத்தில் இருப்பதை எடுத்துக்கொண்டு போகும் வழியில் விசுவனின் அப்பா சென்னிகராயனை சந்திக்கிறார்கள். அய்யாவுக்கோ பயம், என் மகனை கூட்டிக்கொண்டு எங்கே போகிறாய் என தடுப்பானோ என்று. ஆனால் கணக்கு தெரியாமல் வேலையை இழந்த சென்னிகராயன் இப்போது தாய் கங்கம்மாவிடம் இருக்கிறான். வருமானம் கொஞ்சம் கூட இல்லை. யாரோ கொடுத்த புகையிலையை வாயில் போட்டு மென்று கொண்டிருக்கிறான். வாயைத் திறந்து அய்யாவிடம் பேசினால் புகையிலையின் ருசி போய்விடும் என்று வாய் மூடியே இருக்கிறான். 

உணவைப் பொறுத்தவரை சென்னிகராயனுக்கு  தன் மகனே என்றாலும் தள்ளியே நிற்கவேண்டும். முன்பு ஒருமுறை கோவிலுக்கு போன இடத்தில் பாகற்காய் பச்சடி செய்து சாப்பிட்டே ஆக வேண்டும் என்கிறான். கோவிலில் போடும் சாப்பாடு உறைப்பு இல்லாமல் இருக்கிறது. அதற்கு வைத்து கொள்கிறேன் என்கிறான். கோவிலுக்கு வரும் அத்தனை பேரும் சாப்பிடும் உணவை குறை சொல்கிறானே என்று நஞ்சம்மா கவலைப்படுகிறாள். அப்படிப்பட்டவன் இப்பொழுது மகன் போவதையே பார்த்துக்கொண்டிருக்கிறான். 


ஒரு குடும்பம் சிதைகிறது 
எஸ்.எல். பைரப்பா 
தமிழில்: எச்.வி. சுப்ரமணியம்
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா  


Friday, May 17, 2024

பருவம் - எஸ்.எல். பைரப்பா

எஸ்.எல். பைரப்பா கன்னடத்தில் எழுதிய நாவலை பாவண்ணன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நாவலின் ஆசிரியர் பைரப்பா அவர்கள், குரு தேசம், விராடம், இமயம் மற்றும் பாரதப் போர் நடந்ததாகச் சொல்லப்படும் இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தே இந்நாவலை எழுதியுள்ளார் அவர். வியாசரின் மகாபாரதம், பல அறிஞர்களின் நூல்கள் என ஆய்வு செய்து பல்லாண்டுகள் உழைத்தே பருவம் நாவலாக வெளிவந்துள்ளது என முன்னுரையில் குறிப்பிடுகிறார் பைரப்பா.



ஒவ்வொருவரின் நினைவுகள் வழியாகவே நாவலைக் கொண்டு செல்கிறார் பைரப்பா. போர் தொடங்கும்போது ஆரம்பிக்கும் இந்நாவல், அந்த நினைவுகள் மூலம் பழைய கதைகள் கூறப்படுகிறது. தெரிந்த பாரதம், கதை மாந்தர்கள் என ஏற்கனவே நாம் அறிந்த கதைதான். ஆனால் அதை இந்நாவலில் சொன்ன முறை மிகவும் வித்தியாசமானது. 


மகாபாரதத்தில் பீஷ்மர், பீமன், அர்ஜுனன், கர்ணன் போன்ற பெரிய வீரர்கள் எதையும் செய்து முடிப்பவர்களாக, கிருஷ்ணன் தெய்வத்துக்கு நிகராக வைத்து போற்றப்படுவார்கள். ஆனால் பருவத்தில் அவர்களும் மனிதர்களாகவே காட்டப்படுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு என்னென்ன பிரச்சினைகள் உண்டோ அத்தனையும் அவர்களுக்கும் உண்டு. பலராமன் தீராத பல் வலியாலும், சல்லியன் வயோதிகத்தாலும் கஷ்டப்படுகிறார்கள். 


சிற்சில மாற்றங்கள் அங்கங்கே தெரிந்தாலும் மூலக்கதையை விட்டு நாவல் பிரிவதில்லை. நியோகம் மூலம் குந்தியுடன் சேர்பவர்கள் சூரியன், இந்திரன், தருமன் போன்ற தெய்வங்கள் என்று மூலத்தில் வரும். ஆனால் பருவத்தில் அவர்கள் இமயமலையில் வாழும் குலத்தைச் சேர்ந்தவர்களாக காட்டப்படுகிறார்கள். தெய்வங்களுக்கு என்னென்ன குறியீடுகள் உண்டோ அவைகள் அந்த மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 


போர்க்களத்தில் அத்தனை படைகளும் இருக்கும்போது உணவு, தண்ணீர், உறக்கம் என நிறைய பிரச்சினைகள் ஏற்படுகிறது. கழிவுகளின் வாசம், அகற்றப்படாத உடல்கள் என விவரிக்கிறது நாவல். 
தன் ஐந்து புதல்வர்களை இழந்த திரௌபதி தன் கணவர்களை பார்க்கிறாள். அபிமன்யு இறந்தபோது அர்ஜுனன் அழுத அழுகையையும், கடோத்கஜன் இறக்கும்போது பீமன் அழுத  அழுகையையும்  பார்த்த அவளுக்கு இன்று அந்தளவுக்கு கண்ணீர் வராததைக் கண்டு அவளுக்கு ஏதோ புரிந்ததுபோல இருக்கிறது. 

பாரதக்கதையில் நாம் வியந்து பார்த்த மனிதர்கள் தான் இந்நாவலில் வருகிறார்கள். ஆனால் தெய்வங்களாக அல்ல. பொறாமை, ஆசை, வீரம், நோய் என நமக்கு உள்ள அத்தனை குணங்களுடன் அவர்கள் இந்நாவலில் உலா வருகிறார்கள். அதுவே இந்நாவலுடன் நம்மை நெருக்கமாக பிணைக்கிறது. 
 
கன்னட மூலம்: எஸ்.எல். பைரப்பா
தமிழில்: பாவண்ணன் 
வெளியீடு: சாகித்திய அகாதெமி