அச்சு பதிப்பு புத்தகங்கள் பதிப்பதற்கு முன்பு, நம்முடைய தமிழ் இலக்கியங்கள், இலக்கண நூல்கள், செய்யுள், உரைகள் போன்றவை ஓலையில் எழுதி பாதுகாக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளை படியெடுத்தே ஒவ்வொருவரும் படித்திருக்கிறார்கள். தமிழ் அறிஞர்களிடம் இருந்து வாய்மொழிப் பாடமாகவும் ஒவ்வொரு தலைமுறையாக நூல்கள் கற்பிக்கப்பட்டன. ஓலைச் சுவடியில் மெய்யெழுத்து, கால், வல்லினம் போன்றவை இருக்காது. அதனால் இன்னொருவர் படியெடுக்கும் பொழுது இயல்பாகவே பிழைகள் ஏற்பட்டு விடும். அதனால் பல ஆண்டுகள் கழித்து ஒரு செய்யுளானது பல பிழைகளுடன் இருக்கும், அதனை ஒப்பு நோக்க நல்ல மூலம் உள்ள சுவடி வேண்டும்.

தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா கும்பகோணம் அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் தந்தை வேங்கட சுப்பையர் கர்நாடக பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகளைச் சொல்வபராகவும் இருந்துள்ளார். கதை பிரசங்கம் செய்வதே குடும்ப வருமானம். சிறுவயதில் இருந்தே உ.வே.சா, குடும்ப பாரம்பரியம் காரணமாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்கிறார். ஆனால், அவருக்கு தமிழ் மீதே ஆர்வம் ஏற்படுகிறது. கணிதமோ, ஆங்கிலமோ அவருக்கு நாட்டத்தை ஏற்படுத்தவில்லை. பக்கத்தில் இருக்கும் சில தமிழ் அறிஞர்களிடம் பழம் பாடல்களை பாடம் கேட்கிறார். இவர் கற்றுக்கொள்ளும் வேகத்தை பார்த்து அவர்கள் பெரிய தமிழ் பண்டிதரிடம் சென்று உ.வே.சா கற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார்கள்.
அந்த காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் மகாவித்துவானாக இருந்த
மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் மிகச்சிறந்த தமிழ் அறிஞராகவும், பாடல்கள் புனைவதிலும், புராணங்களை இயற்றுவதிலும், இலக்கணம் அறிந்தவராகவும் இருந்திருக்கிறார். முதலில் அவர் மறுத்தாலும் சிறு வயது உ.வே.சாவின் ஆர்வத்தைப் பார்த்து தன்னுடன் இருந்து படித்துக்கொள்ள சம்மதிக்கிறார். மிகச்சிறந்தவரான பிள்ளை அவர்களே உ.வே.சா-விற்கு குருவாக அமைகிறார். ஆதீன மடத்துக்கு சென்றால் அங்கே சாப்பாட்டுக்கு பிரச்சினை இருக்காது, ஆனால் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இந்த ஊரில் நீங்களே ஏற்பாட்டை செய்து கொள்ள வேண்டும் எனச் சொல்ல, அதற்கு சம்மதித்து பாடம் கற்றுக்கொள்கிறார்.
திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு தனது ஆசிரியருடன் செல்லும்பொழுது, அப்பொழுது அங்கே மடாதிபதியாக இருந்த சுப்பிரமணிய தேசிகர் உ.வே.சா அவர்களின் தமிழ் அறிவையும், அவர் பாடல்களை இசையோடு பாடுவதிலும் உள்ள தேர்ச்சியை அறிந்து அவரைப் பாராட்டுகிறார். மடத்தில் உள்ளவர்களும் உ.வே.சா அவர்களுடன் நட்புடன் இருக்கிறார்கள். ஆதீனம் உ.வே.சா வின் பெற்றோரை திருவாவடுதுறைக்கே அழைத்து வந்து ஒரு வீடு பார்த்து கொடுத்து என அனைத்து உதவிகளையும் செய்கிறார். குருவுடன் எங்கே சென்றாலும் கூடவே செல்லும் உ.வே.சா வை அனைவரும் விரும்பினாலும், ஒரு சிலர் சிறு வயதில் அவருக்குள்ள தேர்ச்சியையும், குரு அவரிடம் வைத்துள்ள அன்பையும், ஆதீனம் அவர் மேல் வைத்துள்ள மதிப்பையும் அறிந்து சிலரால் சில நேரங்களில் பிரச்சினை ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கிறார்.

ஆதரவாக இருந்த குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்த உ.வே.சா கலங்கிப் போகிறார். ஆதீன தலைவர் சுப்பிரமணிய தேசிகர் அவருக்கு ஆறுதல் அளித்து, மடத்திலேயே இருக்க வேண்டும் எனவும், நானே உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பேன் எனவும் சொல்கிறார். அவர் கற்றுக்கொள்ளவும், கற்றதை மடத்தில் உள்ள சிலருக்கு பாடம் சொல்லவும் என அந்த நாட்களை பயன்படுத்துகிறார் உ.வே.சா. ஆதீனத்துக்கு அடிக்கடி வந்து போகும் தியாகராச செட்டியார் என்பவர் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் ஓய்வு பெறுவதையொட்டி அவருடைய இடத்தை உ.வே.சா பெற்று கல்லூரியில் பணிபுரிய வேண்டும் என ஆதீன சந்நிதானத்திடம் சொல்ல, அவரோ நல்ல அறிஞராக உள்ள உ.வே.சா வை மடத்தில் இருந்து அனுப்ப முடியாது எனச் சொல்கிறார். நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள், உ.வே.சா-வுக்கு இந்த பணி கிடைத்தால் அவருக்கு நல்லது, கல்லூரி விடுமுறை நாட்களில் மடத்துக்கு வந்துவிடலாம் எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார்.
தியாகராச செட்டியார் சென்ற பின்னர் ஆதீனம், உ.வே.சா-வை கல்லூரியில் பணிக்கு அனுப்ப சம்மதிக்கிறார். நமக்கு பின்னர் இந்த ஆதீன மடத்துக்கு பொறுப்புக்கு வருகிறவர்கள் நம்மை போலவே இந்த பிள்ளையிடம் ஆதரவாக இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது, உ.வே.சா கல்லூரி பணியை ஏற்றுக் கொண்டால் அவருக்கு நன்மையே கிடைக்கும் எனச் சொல்லி அனுப்பிவைக்கிறார். கல்லூரிப் பணியில் சேர்வதற்கு முன்னர் அங்குள்ளவர்கள் அவருடைய தகுதியையும், தமிழ் புத்தகங்களில் உள்ள தேர்ச்சியையும், அவர் பாடம் நடத்தும் விதத்தையும் வியந்து பாராட்டுகிறார்கள். கல்லூரிப் பணி அவர் விரும்பும் வண்ணமே இருக்க, விடுமுறை நாட்களில் மடத்துக்கு சென்று ஆதீனத்திடம் பாடம் கேட்டும் வருகிறார். ஒருநாள் ஆதீனம் கும்பகோணத்தில் இருக்கும் அதிகாரி ஒருவரை சென்று சந்திக்கச் சொல்கிறார்.
கும்பகோணம் முன்சீப் அதிகாரியாக இருக்கும் சேலம் இராமசுவாமி முதலியார் என்பவரே அவர். அவரைச் சந்திக்க உ.வே.சா செல்கிறார். தமிழில் ஆர்வமுள்ள இராமசுவாமி முதலியார், உ.வே.சா விடம் என்ன படித்துள்ளீர்கள் என வினவுகிறார். அவரிடம் தான் கற்ற அந்தாதி, கலம்பகம், புராணம், செய்யுள்கள் என அனைத்தையும் சொல்கிறார். அவரோ இன்னும் என்ன, என்ன எனக் கேட்கிறார். அவரும் தனக்குத் தெரிந்த அனைத்து நூல்களையும் சொல்கிறார். இராமசுவாமி முதலியாருக்கோ அவர் சொல்வதில் ஒரு ஆர்வமும் ஏற்படவில்லை. பின்னர் தனது குருவிடமும், ஆதீனத்திடமும் கற்ற அனைத்து நூல்களையும் பட்டியல் போடுகிறார். அப்பொழுதும் அவர் மசியவில்லை. இவ்வளவு நூல்களைச் சொல்லியும், நீங்கள் ஏன் ஒரு வியப்பும் அடையவில்லை என அவரிடமே கேட்க, ராமசுவாமி அவர்கள் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களை நீங்கள் படித்து இருக்கிறீர்களா என்று கேட்க, உவேசா-வோ 'எனது குருவே இந்த நூல்களை எல்லாம் படித்ததில்லை, நான் எப்படி' என மனதுக்குள் நினைத்துக்கொண்டு, அந்த நூல்கள் என்னிடம் இல்லை, கிடைத்தால் படித்துக்கொள்வேன் எனச் சொல்கிறார்.
இராமசுவாமி அவர்கள் கொடுத்த சுவடியில் இருந்து சிந்தாமணியின் சிறப்பையும் நூல் நயத்தையும் அறிந்து கொள்கிறார். ஆனால் பிழைகள் மலிந்து இருக்கின்றன. நல்ல படியை எடுத்து சீவக சிந்தாமணியை பதிப்பிக்க வேண்டும் என நினைத்து அந்தச் செயலில் இறங்குகிறார். ஒரு சிலர் இது ஆகக்கூடிய வேலை இல்லை, பலரும் அதை பதிப்பிக்க நினைத்து முடிக்க முடியாமல் பாதியில் விட்டுவிட்டனர் எனச் சொல்கிறார்கள். தான் நிச்சயம் சிந்தாமணியை பதிப்பிப்பேன் அதுவும் பிழைகள் இல்லாத நல்ல பதிப்பாக இருக்க வேண்டும் என நினைத்து, பல ஊர்களில் தேடுகிறார். சமண மதத்தை சேர்ந்தவர்களிடம் பழகி அவர்களிடம் இருக்கும் சுவடிகளை வாங்கி ஒப்பீடு செய்கிறார். பத்துக்கும் மேற்பட்ட சிந்தாமணி நூல்களை வைத்து ஒப்பீடு செய்து மிகச் சிறந்த முறையில் சிந்தாமணியை நூல் வடிவில் கொண்டு வருகிறார்.
அவரின் முயற்சியை அனைவரும் பாராட்ட, ஒரு சிலரோ சைவ சமய ஆதீனத்துடன் தொடர்புடைய உவேசா சிந்தாமணியை பதிப்பாக்கம் செய்ததை விரும்பவில்லை. பொய்களை கலந்து செய்த மணி சீவக சிந்தாமணி எனப் பேசிக்கொண்டு, அதை ஆதீனத்துடனும் சொல்லி விடுகிறார்கள். ஆதீனமோ உவேசா-விடம் அவர்களை நினைத்து பயப்பட வேண்டாம், உங்கள் தமிழ்ப்பணி தொடர வேண்டும் எனச் சொல்கிறார். 'பொய்யே கட்டிய மணியாக' இருந்தாலும் சிந்தாமணியில் நமக்குத் தேவை அதில் உள்ள தமிழ்ச்சுவையும், செய்யுள் அமைப்பும் தான் என இந்த நூலில் எழுதுகிறார் உவேசா.
பின்னர் சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற பழைய இலக்கியங்களைத் தேடி அலைகிறார். யாராவது எங்கோ ஓலைச் சுவடிகள் இருக்கின்றன எனச் சொன்னால் அங்கே செல்கிறார். சில பயணங்களில் நல்ல பதிப்புகள் கிடைக்கின்றன. பல நேரங்களில் அவருக்கு தோல்வியே ஏற்படுகிறது. ஆனால் அவர் அதைப் பற்றி கவலைப்படாமல் தனது தேடுதலைத் தொடர்கிறார்.
என் சரித்திரம் - என்ற இந்த நூலை, ஆனந்த விகடனில் தொடராக எழுதி இருக்கிறார். 1940-ல் ஆரம்பித்த இந்த தொடரை முடிக்கும் முன்பே 1942-ல் இயற்கை எய்திவிட்டார் நம் தமிழ்த் தாத்தா உவேசா. அவர் தொடர்ந்து இத்தொடரை எழுதி நிறைவு பெற்று இருந்தால் இன்னும் நமக்கு நிறையத் தகவல்கள் கிடைத்திருக்கும். தன்னுடைய வயதான காலத்தில் இந்த நூலை எழுதி இருந்தாலும், அபாரமான நினைவாற்றல் கொண்டவரான அவர் ஒவ்வொரு நிகழ்வையும் இப்பொழுது நடந்தது போலவே சொல்லிச் செல்கிறார். சிறு வயது முதல் தனக்கு கல்வி போதிக்க தான் சந்தித்த ஒவ்வொரு மனிதரின் பெயரையும், தனக்கு வாய்ப்பளித்து ஆதரவளித்த அனைவரையும் நினைவு கூர்கிறார்.
எந்த போக்குவரத்து வசதிகளும் இல்லாத அந்த காலத்தில் அவர் காலால் நடந்தே ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று பழம் இலக்கியங்களைத் தேடி இருக்கிறார். தமிழின் மேல் தணியாத ஆர்வம் கொண்டு தேடியதால் அவர் என்றென்றும் நமக்கு தமிழ்த் தாத்தா.
No comments:
Post a Comment