ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம் - தூக்கு செல்வம்

செல்வன் பெற்றோர் வைத்த பெயர், செல்வம் காவல்துறை கொடுத்த பெயர், தூக்கு செல்வம் சிறை அதிகாரிகள் வைத்த புதிய நாமகரணம். 'சிறை குறித்து சமூகம் கொண்டிருக்கும் பார்வைகள் புதிதல்ல. சமூகம் குறித்து சிறையிலிருக்கும் ஒரு கைதி எழுதியிருக்கும் முதல் விரிவான நூல் இதுவே' - என்று இப்புத்தகத்தின் பின்னட்டையில் இருக்கிறது.  தூக்கு செல்வம் அவர்களின் இந்த புத்தகம்,  தண்டனை கைதிகள் என நாம் நினைக்கும் சிறையாளிகள் பற்றியும், சிறைச்சாலைகள் மற்றும்  அங்கே உள்ள அதிகார மையங்கள் என நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

'சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் சிறை வாழ்க்கை அனுபவத்தைப் பதிவு செய்யும் செல்வம் தமிழ்நாடு சிறைகளில் நடைபெறும் பல சங்கதிகளையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.' - என்று தனது இப்புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் கே.சந்துரு. 

தான் எதற்காக சிறைக்கு வந்தேன் எனத்  தயக்கமில்லாமல்  பின்னோக்கி அனைத்தையும் சொல்லும் செல்வம் சிறைக்கு வந்த பின்னர் கண்ட உலகத்தையும் தெளிவாக நம் முன் வைக்கிறார். அவர் கடந்து வந்த பாதை வலி நிறைந்தது. தினசரிகளில் வரும் செய்திகளான பழி வாங்கும் கொலை, குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் கொலை என்பது சாதாரண மக்களாகிய நமக்கு ஒரு   தகவல் மட்டுமே. ஆனால் அந்த கைதிகள் பிறந்து வளர்ந்த இடம், உறவுகள், நட்பு, விசுவாசம், நம்பிக்கை வைத்தல் என இந்த சமூகம் அவர்களுக்கு நிறைய கற்பிக்கிறது. அதுவே ஒரு பிரச்சினையில் அவன் தண்டனை பெற்றால்  அவனை கொலைகாரன் என்று இதே சமூகம் கைகாட்டி தப்பி விடுகிறது.  அந்த நிமிடம் வரை உறவாடிய சமூகம் அவனிடம் தனக்கு இருந்த தொடர்புகள் அனைத்தையும் வெட்டிவிட்டு அவனை சிறைக்கு அனுப்ப தயாராக இருக்கிறது. செல்வம் ஒரு கேள்வி கேட்கிறார், 'நான்தான் அந்த தவற்றை செய்தேன். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதைச் செய்ய என்னை உந்திய சமூகத்துக்கு எந்த பொறுப்பும் இல்லையா?' என்று கேட்கிறார். 

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே நீதித்துறையின் நோக்கம். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் அனைவருக்கும் நீதி ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு நடக்கிறதா என்பது கேள்விக்குறி. அதிகார பலமும், நன்கு சட்டம் தெரிந்து வாதாடும் வழக்கறிஞர்களும் அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. எனவே சிலர் வாழ்நாள் முழுவதும் சிறையிலும், திறமையுள்ள சிலர் வழக்கில் இருந்து விடுவிப்பு அல்லது தண்டனை குறைப்பு பெற்று சிறையில் இருந்து வெளிவருகின்றனர். 


தூக்கு தண்டனை கைதிகளுக்கு சிறு சிறு தண்டனைகள் கொடுக்கும் சிறைத் துறைக்கு நமது நீதிமன்றம் கீழ்கண்ட அறிவுரை சொல்கிறது; 'நாங்கள் கொடுத்த தண்டனையை விட பெரிய தண்டனையை அவர்களுக்கு நீங்கள் கொடுத்து விட முடியாது. கைதியை கவனித்துக் கொள்வது உங்கள் கடமை. தனி மனிதனுக்கு உண்டான உரிமைகள் அனைத்தும் அவருக்கு உண்டு.'.

ஜாதிப் பெருமை பேசும் அதிகாரிகள், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றியும் அவர்கள் பெயரைச் சொல்வதிலும் செல்வத்துக்கு எந்த தயக்கமும் இல்லை. தயங்காமல் அவர்கள் பணியாற்றிய வருடம் முதற்கொண்டு அத்தனையும் தெளிவாக சொல்கிறார். அனைத்துவித பாதுகாப்பினையும் மீறி ஒரு செல்போன் சிறைக்குள் வரமுடியாது. அப்படி ஒரு செல்போன் ஒரு கைதியிடம் இருக்கிறது என்றால் அங்கே இருப்பவர்களுக்குத் தெரியாமல் உள்ளே வந்திருக்காது. பணம் வாங்கிக் கொண்டோ அல்லது வேறு உதவிகள் பெற்றோ அந்த செல்போன் அவரிடம் வந்திருக்கும். சரி நிறைய செலவு செய்து மாட்டிய செல்போன் சிக்னல்களைத் தடுக்கும் ஜாமர் கருவிகள் இருக்கிறது. ஆனால் அவைகள் வேலை செய்வதில்லை. 

தனக்கோ சக கைதிகளுக்கோ ஏதாவது பிரச்சினை என்றால், ஊழல் நடக்கிறது என்றால் சளைக்காமல் அதை எதிர்த்து உதவி செய்கிறார். இந்த உதவி செய்வதன் மூலமாகவே பிரச்சினைகள் ஏற்பட்டு தமிழ்நாட்டின் அனைத்து மத்திய சிறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளார். ஒரு முறை, இப்பொழுது இருக்கும் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் முயல, எந்த சிறைச்சாலையும் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்த நிகழ்வும் நடந்திருக்கிறது. தான் சிறையில் இருந்த காலத்தில் சந்தித்த பிரபலங்களையும், அரசியல்வாதிகளையும் பற்றி ஒளிவு மறைவில்லாமல் தனக்கு மனதில் தோன்றியதை சொல்கிறார். 

இரண்டு பிள்ளைகளுடன் கஷ்டப்பட்ட ஜெனீலாவை திருமணம் செய்துகொள்கிறார். அவ்வப்பொழுது விடுமுறையில் வீட்டிற்கு வந்து செல்கிறார் செல்வம். 'பெரியவர்கள் நீங்கள் செய்த பிரச்சினையில் சிறுவர்கள் நாங்கள் என்ன தவறு செய்தோம். பெற்ற தந்தையை இழந்து நாங்கள் வாடுகிறோம். நீங்கள் சிறையில் இருக்க உங்கள் பிள்ளைகள் இங்கே வாடுகிறார்கள்.' என்று தன்னால் பாதிக்கப்பட்ட நபர்களின் பிள்ளைகள் கேள்வி  கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும் என வருந்துகிறார் செல்வம்.

தூக்கு தண்டனை, சாகும்வரை ஆயுள் தண்டனையாக மாற்றம் பெற்றாலும் இந்த தண்டனை காலம் எப்போது முடியும் எனத் தவிக்கிறார் செல்வம். சாதாரண ஆயுள் தண்டனை என்றால் சில ஆண்டுகளில் முடியக்கூடும். ஆனால் சாகும்வரை என்பது எத்தனை ஆண்டுகள். இதற்கு தூக்கு தண்டனையே பரவாயில்லை என்கிறார் செல்வம். 

"கடுமையான தண்டனை தூக்கு தண்டனையா அல்லது ஆயுள் தண்டனையா என்று கேட்டால் தூக்கு தண்டனை என்பது இரண்டு நிமிட வலி மட்டுமே. ஆனால் ஆயுள் தண்டனை வாழ்நாள் வலியாகும். பணம் படைத்தவர்களும் உயர் சாதியினரும் தூக்கு மேடைக்கு வருவதில்லை. ஏழை எளிய குரலற்றவர்கள்தான்  வருகின்றனர். தூக்கு தண்டனை சிறையாளிகள் பெரும்பாலும் ஏழ்மையானவர்கள், அரசு அதிகாரத்துக்கு நிகரான வாதங்களை நீதிமன்றத்தில் திறன்பட முன்வைக்கும் வழக்கறிஞர்களை நியமித்து வாதாட வசதியற்றவர்கள். 

தான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நமது நாட்டு சிறையாளிகளுக்கு மேலை நாடுகளில் உள்ளது போல புலனாய்வு சார்ந்த மற்றும் திறமையான சட்ட உதவிகள் கிடைப்பதில்லை. அதிலும் தில்லியில் வாழும் ஏழை குடிமகனுக்கு கிடைக்கும் இலவச சட்ட உதவி  கன்னியாகுமரியில் வாழும் ஏழை குடிமகனுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை.

தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டியதுதான்; அதேநேரம் ஆயுள் தண்டனை என்பது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும். நீ அடுத்த மனிதனின் உயிரைப் பறித்ததால், நாங்கள் உன் சுதந்திரத்தைப் பறித்து அணு அணுவாய் உன் உயிரையும் பறிக்கிறோம் பார் என்று நீதித்துறையும், அரசாங்கமும் நடந்துகொள்ளக் கூடாது." என்கிறார் செல்வம். 

'சிறை குறித்து சமூகம் கொண்டிருக்கும் பார்வைகள் புதிதல்ல. சமூகம் குறித்து சிறையிலிருக்கும் ஒரு கைதி எழுதியிருக்கும் முதல் விரிவான நூல் இதுவே' - என்று இப்புத்தகத்தின் பின்னட்டையில் இருக்கிறது.  தூக்கு செல்வம் அவர்களின் இந்த புத்தகம்,  தண்டனை கைதிகள் என நாம் நினைக்கும் சிறையாளிகள் பற்றியும், சிறைச்சாலைகள் மற்றும்  அங்கே உள்ள அதிகார மையங்கள் என நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

Comments

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

பேரும் பெயரும்...