ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் - அஜிதன்

இந்தச் சிறுகதை தொகுப்பைப் பற்றி அஜிதன் இப்படிச் சொல்கிறார்: "இருண்மையின் ஆன்மிகம் என இவற்றை வகுக்கலாம். எல்லா தீவிர நிலைகளிலும் குடிகொள்ளும் நம்மை மீறிய ஓர் இருப்பு உண்டு. இக்கதைகள் அதன் மெல்லிய தரிசனத்தை வெவ்வேறு தளங்களில் காட்டிச்செல்பவை." 

இந்த எல்லாக் கதைகளிலும் அஜிதன் சொன்னது போல ஒரு தரிசனம் என்பது போல முடிகிறது. அது இழப்பு என ஒரு சிலருக்கு தோன்றினாலும், இன்னொருவருக்கு அதுவே வெற்றியாகவும் சென்றடையக் கூடிய ஒரு இடத்தைக் கண்டறிந்ததின் மகிழ்ச்சியையும் நாம் இந்த கதைகளில் காண முடியும். 



மாரிட்ஜான் உடல் 

ஜோக்ஜகார்த்தா நகரத்தின் அருகில் இருக்கும் மெராப்பி எரிமலை இருக்கிறது. இந்த எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்து கிளம்பி சாம்பலை அள்ளி வீசக்கூடியது. இந்த சாம்பல் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்பட்டு நல்ல விளைச்சல் கொடுக்கக்கூடியது. இந்த எரிமலைக்கு அருகில் மாரிட்ஜான் என்னும் மக்களின் தலைவர் வசித்து வருகிறார். வயதான அவர், முன்பும் ஒருமுறை எரிமலை வெடித்தபோது சிறிய காயங்களுடன் தப்பிவிட்டவர். இந்த முறை எரிமலை வெடிக்க துவங்குவதை அறிந்து அரசாங்கம் எல்லோரையும் பத்திரமாக மலையை விட்டு அப்புறப்படுத்தி காப்பாற்ற முயற்சிக்கிறது. ஆனால் மாரிட்ஜான் கீழே வர மறுக்கிறார். அவருடன் சிலரும் அந்த மலையில் இருந்து கீழிறங்க மறுக்கிறார்கள். 

அவர் விரும்பி உண்ணும் உணவான ரெண்டாம் கறி எனப்படும் உணவை சமைக்க சிலர் செல்கிறார்கள். அதில் அவரின் நண்பர் சுரக்ஸோ என்பவர் இருக்கிறார். கடினனமான தொடைக் கறியை வெட்டி மிருதுவாக பல நேரம் தேங்காய்ப் பாலில் வேக வைத்து செய்யப்படுவது ரெண்டாம் கறி. உணவைச் சமைத்து முடித்த பின்னர் தன் நண்பரை பார்க்க அழைக்கிறார் மாரிட்ஜான். உணவு உண்ணும் போது "அன்பு சுரக்ஸோ, இந்த இறைச்சியை சுவைத்தாய் அல்லவா. எத்தனை மென்மை, எவ்வளவு சுவை? சமைத்த உனக்கு தெரியும், அவற்றை அதற்களித்தது எது என்று? அந்த நெருப்புதானே.. " என்கிறார் மாரிட்ஜான். அந்த நெருப்பை நேசிக்கும், எரிமலையை போற்றும் மனிதரான மாரிட்ஜான் மேலதி என அழைக்கப்படும் நெருப்பால் இறக்கிறார். எரிமலை ஓய்ந்த பின்னர் மக்கள் சாம்பலை வீசி விளையாடி பின்னர் அள்ளிச் செல்கிறார்கள் தங்களுடைய விளைநிலங்களுக்கு. 

ஓர் இந்திய ஆன்மீக அனுபவம் 

நாம் பயணங்கள் செல்லும்போது எங்காவது கழிப்பறைக்கு போகும்போது அங்கே சிறுநீர் வழிந்தோடிய தடங்கள், அதன்  வீச்ச நெடி, மஞ்சள் கறை, வெவ்வேறு நிறங்களில் காய்ந்து கிடக்கும் மலங்கள் என ஒரு நொடி கண் கொண்டு பார்த்து மறுநொடி வேறு எங்கே பார்த்திருப்போம். அடக்கி வைத்தாலும் வேறு இடம் கிடைக்க போவதில்லை. வேறு வழியில்லாமல் அந்த இடத்தில் நாம் கொஞ்ச நேரம் கழிக்க நேரிடும். ஆனால் அதே இடத்தில் இடம், காலம் அறியாமல் ஒரு மனிதன் குறும் புன்னகையுடன் அங்கே படுத்து தூங்கிகொண்டு இருக்கிறான் என்றால் அதை பார்க்கும் நமக்கு ஏற்படும் ஆன்மீகமான உணர்வுதான் என்ன என்ற கேள்வியை கேட்கும் கதை. 

நல்லது, தீயது என்ற வேறுபாடு கடவுளுக்கு இல்லை என்றால்  தூண், துரும்பு என எங்கும் அவன் இருப்பான் என்றால் இங்கே இருப்பவனும் அவன்தானே. 



ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் 

ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் கதை இளையராஜாவுக்கும் ஒரு  கிராமத்தில்  மாடு மேய்க்கும் சிறுவனுக்கும் இடையில் நடக்கும் கதை. எல்லாவற்றையும் மாற்றக் கூடியதாக, மறக்கக் கூடியதாக இசை இருக்கிறது. அந்த இசையில் ஒரு சிறுவன் மூழ்கி தன்னுடைய மந்தையை மறந்து, கீதாரிகளை மறந்து  சென்னைக்கு வந்து அந்த இசையமைப்பாளருடன் அதே ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்கிறான் அவன். இசைக்கும் ரசிகனுக்கும் இடையில் வேறு ஒன்றும் இல்லை. அந்த இசையே ஹார்மோனியம் காணவில்லை எனத் தேடும்போது கூட 'அவருக்கும் எனக்கும் இடையில் இன்னொன்னு தொலைஞ்சு போச்சு' எனச் சொல்ல வைக்கிறது. 

அவள்

ஓர் இளம் பெண்ணின் கொலையில் ஆரம்பிக்கிறது அவள் கதை. கொலையை விசாரிப்பவர், அவளின் தோழி, தாய், அவளை அழைத்து சென்றவன், கடல் என ஒவ்வொருவரும் கதை சொல்லும்போது ஒரு சரடு போல எல்லாம் இணைந்து அவளின் கதை சொல்லப்படுகிறது. அவளின் முன்னாள் காதலன் அவளை காதலித்து ஏமாற்றிய பின்னர் அவள் ஒருவிதமான முடிவுக்கு வருகிறாள். எல்லோரையும் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறாள், தனது முன்னாள் காதலன் மூலம் அவளுக்கு போனில் கூப்பிடும்  ஆண்களிடம் பாலியல் வார்த்தைகளை பேசுகிறாள். நேரில் வந்தால் அவர்கள் என்னை கொன்றே போடுவார்கள் என்றே தனது தோழியிடம் சொல்கிறாள். இந்த பேச்சுக்கள் அனைத்தையும் அவள் நதியின் ஓரத்தில் அமர்ந்தே பேசுகிறாள். அவள் ஒவ்வொருவரை விட்டும் விலகிக் கொண்டே போய் இறுதியில் தனக்கான இறப்பைத் தேடிக்கொண்டாள். ஒரு போதையைப் போல அதற்குள் மூழ்கிப் போய், வெளி வர முடியாதவள் அவள்.

ஜார்ஜ் புஷும் வட்டப்பேரும்

பள்ளியில் பட்டப் பெயர் வைக்கும் சிறுவர்களின் கதை. ஒவ்வொருவருக்கும் பெயர் வைத்தல் என்பது எளிதான விஷயம் அல்ல. அதற்கான காரணங்கள் நிறைய இருக்க வேண்டும். நீண்ட வருடங்கள் கழித்து நினைத்து பார்த்தாலும் அது நினைவில் இருக்க வேண்டும். தங்கள் வகுப்பில் புதிதாக வந்து சேர்ந்த நோஞ்சான் மாணவனை என்ன பெயர் வைப்பது என்பதில் ஆரம்பித்து அவனுடன் நட்பாக பழகுகிறார்கள் மாணவர்கள். ஒருநாள் ஒரு சண்டையில் அவனுக்கு காயம் ஏற்பட அவனை வீட்டுக்கு அழைத்து போன பின்னர் அவன் பள்ளிக்கே வருவதில்லை. இந்தக் கதையில் ஓர் உவமை நன்றாக இருந்தது. "பெருக்கல் அக்காக்கள் வேப்பம் சருகைப் பெருக்கி அள்ளியதில் எழுந்த பொடி காலை காற்றில் தங்க துகள்கள் போல நின்று சுழன்றது". 

மரணம்: மூன்று குறுங்கதைகள் 

இதில் இருக்கும் மூன்று கதைகளும் வெவ்வேறு விதமானவை. முகத்தில் இருக்கும் முடியை நீக்கும் பெண், தன்னுடைய நோயை மறக்க டேப் ரெக்கார்டர் கேட்கும் தகப்பன் மற்றும் தன் நிலத்தில் புதைந்து கிடக்கும் புதையலை தேட தனி ஒருவராக தோண்டி எலும்பும், மண்டை ஓடுகளும் என எடுக்கும் நபர் என மூவர். மூவரின் கதை களமும் வேறு வேறு இடங்கள், வேறு வேறு காரணங்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஆசுவாசமாக இருக்கின்றது மரணம். 

Comments

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை