கடல் - ஜெயமோகன்
அன்பான இயேசுவின் பாதையில் சாத்தான்களின் வருகைகளை நாவல் வடிவில் சொல்லப்பட்டது கடல். இரண்டு விதமான வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன. தப்பான செயல்கள் பாவம் என்றாலும் அவற்றை நம் சுயநலத்துக்காக செய்து கொண்டு, அதில் கிடைக்கும் புகழ், மகிழ்ச்சி மற்றும் செல்வச் செழிப்புடன் வாழ்வது. இன்னொரு பாதை முட்களும் துயரங்களும் நிரம்பியது. செல்வத்தையும் புகழையும் ஒதுக்கிவிட்டு அன்புடனும் , எந்நிலையிலும் உண்மையுடன் இருப்பது. இது கடினமான பாதை என்றாலும் நீண்ட காலத்தில் மகிழ்ச்சியும், நாம் பாவங்கள் செய்யவில்லை என்ற நிம்மதியும் கிடைக்கும். இந்நாவல் மூன்று பாத்திரங்களை மையமாகக் கொண்டது.
சாம்
செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் சாம். தங்கத் தொட்டில் கூட உண்டு. அவர்களின் வீட்டில் வேலை செய்த வேலைக்காரி ஒருநாள் தன்னுடைய குழந்தையை அந்தத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். அதனைக் கண்ட சாமின் தந்தை அந்த வேலைக்காரியை அடித்தும், அந்தக் குழந்தையை வெய்யிலில் படுக்க வைத்தும் தண்டனை கொடுக்கிறார். பாதிரியார் உட்பட யார் சொல்லியும் அவரின் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுநாள் அந்தக் குழந்தை இறந்து விடுகிறது. சாமுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வடுபோல தங்கி விட, வளர்ந்த பின்னர் துறவறம் செல்ல முடிவு செய்து வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார். தனது தந்தை இறக்கும் தருணத்திலேயே வீட்டுக்கு வந்து போகிறார். "சாம், என்னுடைய மிக உயர்ந்த பொக்கிஷம் நீ. இந்த உலகத்தில் உள்ள எல்லாம் உனக்கு கிடைக்க வேண்டும் என நினைத்தேன். நீ படுத்த அந்த தொட்டிலில் இன்னொரு குழந்தையை படுக்க வைத்ததால்தான் எனக்கு கோபம் வந்தது." என்று சொல்லி விட்டு இறந்து போகிறார் அவரது தந்தை.
பெர்க்மான்ஸ்
சாமுக்கு நேர் எதிராக இருப்பவர் பெர்க்ஸ். வறுமையின் காரணமாக பாதிரியார் பணிக்கு வந்தவர். பைபிளை திரும்ப திரும்ப படித்து நினைவில் வைத்திருக்கும் பெர்க்ஸ், கடவுளுக்கு பயப்படாதவராக இருக்கிறார். ஒருவகையில் சாமுக்கு மூத்த சகோதரனும் கூட. சாமின் தந்தையால் அவரது திருமணத்துக்கு முன்னர் ஓர் ஏழைப் பெண்ணுக்கு பிறந்து, பின்னர் பணம் கொடுத்து அப்பெண்ணை ஊரை விட்டு குழந்தையுடன் அனுப்பி விடுகின்றனர். அந்தக் குழந்தைதான் பெர்க்ஸ். அந்தப் பெண் இன்னொருவரை மணந்து பின்னர் பிறந்த குழந்தைகள் என குடும்பம் வறுமையில் வாட, பாதிரியார் பணிக்கு வேலைக்கு வருகிறார். அந்த சர்ச்சுக்கு தங்க வரும் சாம், பெர்க்ஸ் ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதை தெரியப்படுத்த அவர் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்.
தாமஸ்
இவர்கள் இருவருக்கும் இடையில் அலைபாயும் ஆன்மாவாக இருப்பவன் தாமஸ். சிறு வயதிலேயே தன்னுடைய அம்மாவை இழந்தவன் ஒரு ரௌடி போல வளர்கிறான். கால் நடக்க இயலாத ஒரு பெண்ணுக்கு தகாத உறவின் மூலம் பிறந்தவன் அவன். தனது உடலை விற்றே அவனை வளர்க்க திண்டாடும் அவள் ஒருகட்டத்தில் அவனைக் கைவிட்டு இறந்து போகிறாள். அவனுக்கு தன்னுடைய தந்தை யார் எனத் தெரிந்தாலும் அந்த மனிதன் இவனை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே ஊரில் சுற்றித் திரிந்து வளர்கிறான். அவனை அந்த ஊருக்கு வரும் சாம் கண்டு அவனை அன்பின், நன்மையின் வழிக்கு இழுத்து வருகிறார்.
---
தனது குடும்பத்துக்கு ஒரே வருமானமாக இருந்த சர்ச் வேலையில் இருந்து தான் துரத்தப்பட காரணமாக இருந்த சாமின் மேல் கோபத்தில் இருக்கும் பெர்க்ஸ், தனது காதலி மூலம் பொய் சாட்சி சொல்ல வைத்து சாமை சிறைக்கு அனுப்பி விடுகிறார். பெர்க்ஸ் இப்பொழுது ஊரில் பெரிய பணக்காரன். கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்கள் மூலம் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறான் பெர்க்ஸ். சாம் சிறை சென்ற பின்னர் தாமசுக்கு பெர்க்சின் அறிமுகம் கிடைக்கிறது. கடலோடுவதில் பலசாலியான தாமஸ் பெர்க்ஸ் செய்யும் குற்றங்களுக்கு துணையாக நிற்கிறான். இப்போது அவன் தீமையின் பாதையில்.
தாமசுக்கு பியாட்ரிஸ் என்னும் பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அவளை விரும்பவும் செய்கிறான். அவளோ வளர்ந்தவள், அறிவு நிறைந்தவள் ஆனால் சிறு குழந்தை போல இருக்கிறாள். ஒரு தேவதையைப் போல தீமை என்றால் என்னவென்றே அறியாதவளாக இருக்கிறாள். ஒரு காப்பகத்தில் வளரும் அவளுக்கு தந்தை பெர்க்ஸ் எனத் தெரிய வருகிறது. அவன் தனது காதலைச் சொன்னதும் முதலில் மறுக்கும் அவள், அவனை நேசிக்கிறாள். அவளின் தூய அன்பைக் கண்டு மலைத்து நிற்கிறான் தாமஸ்.
நல்லதா, தீயதா என்ற இரு வழிகளில் தாமஸ் மாறி மாறிப் போனாலும் இறுதியில் நல்வழிக்கே திரும்புகிறான். இடையில் சாமும், பெர்க்ஸ்சும் தம்மால் இயன்றவரை அவனை திசை திருப்பி தங்கள் வழியே சிறந்தது என அவனுக்கு போதிக்கிறார்கள். சாத்தானும் இயேசுவும் போல.
----
கடல் நாவலில் கடவுள், சாத்தான், பைபிள் என நிறைய உரையாடல்கள் உண்டு. சில இடங்களில் ஆத்ம தரிசனம் போல சில வரிகள் உள்ளன. நாளைக்கு என சேர்த்து வைக்கத் தோணாமல் கடலோடி வாழும் மீனவர்களின் குணம், அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் முதலாளிகள், கடத்தல் பிரச்சினைகள் என இந்நாவல் நிறைய தளங்களில் நம்மைக் கொண்டு செல்கிறது.

Comments
Post a Comment