Tuesday, November 9, 2010

அதனடியில் இப்போ புத்தர் சிலையும் இருக்கலாம்..

இந்த மாதம் குமுதம் தீரா நதியில் ஈழத்து எழுத்தாளர் திரு. இரவி அவர்களின் பேட்டி இடம் பெற்றுள்ளது. இவர் எழுதியுள்ள புத்தகத்தின் தலைப்பு 'காலம் ஆகி வந்த கதை'.

அந்தப் பேட்டியிலிருந்து சில பத்திகள்;

நாங்கள் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டிருந்தாலும் அப்பா படிச்சு ஆசிரியராகி தென் இலங்கையில் சிங்களர்களும், முஸ்லீம்களும் அதிகமாக வாழ்ந்த மினுவாங்கொடை கல்லுழுவ கிராமத்தில் வாழ்ந்தார்கள். அந்தக் கதைகளை நான் எப்படிச் சொல்வேன்? நான் அப்போது பிறந்திலன். என் வாழ்வுக்கு முந்தைய வாழ்வு அது. 1958 எண்டு எனக்குச் சொன்னார்கள். இக்கதைகளை ஆயிரம், ஆயிரமாய் நான் பிறந்த பிறகு அம்மாவும், அப்பவும் சொன்னார்கள். மூன்று வயதிலிருந்து அந்தக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். கல்லுலுவவில் அவர் படிப்பிக்கிறார். அப்பா அம்மாவுக்கு அழகுக் குழந்தையா அக்கா இருக்கிறா. பெரிய வால். பக்கத்துக்கு வீட்டில் உள்ள ஹாஜியார் குடும்பத்துக்கும் செல்லப்பெட்டை. இந்த மோள் எனக்குத்தான் என்று கடிச்சுக் கொஞ்சுவார். ஹாஜியார் ஆரிபும், அவர் மனைவி பாத்திமாவும் எங்கள் மீது அன்பைப் பொழிந்தனராம்.

கல்லுலுவவில் அப்பாவிடம் படித்தவர்கள் மாஸ்ரர் என்று அப்பாவை அழைத்தார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களின் அன்னையர், அப்பாமார் ஊரில் அனைவருக்கும் அப்பா மாஸ்ரர்தான். கொத்த வந்த நாகத்தையும் சாது.. சாது.. என்று பற்றைக்குள் அனுப்பி வைத்த பன்சாலை புத்த பிக்குவிற்கும் அப்பா மாஸ்ரர். ஆருக்கும் அக்காவின் பேரைச் சொல்லி அவளது அம்மா என்றுதான் அழைத்துப் பழக்கம். அக்கா அனைவருக்குமே மோள்தான். அங்கு நான் பிறக்கயில்லை. அதுபற்றி அம்மாவிலும் ஹாஜியாரின் உம்மாவுக்குத்தான் கவலை அதிகம்.

நோன்புக் காலத்தில் உம்மா வேண்டிக் கொண்டதில் அம்மாவுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறக்க வேண்டும் என்பது முக்கியமானது.

ஹாஜியாரின் மகன் ஒரு வெடிபாக்ரறி (பட்டாசு ஆலை) வைத்திருந்தார். தைப்பொங்கல் வந்தால் அப்பாவுக்குப் படார் என வெடிக்கும் வேடிகள்தாம் பிடிக்கும். பொங்கலுக்கு வெடி கொளுத்தும்போது அம்மாவுக்குச் சினமா வரும் 'உந்தக் கோதாரி மனுஷன் இப்பவும் குழந்தைப் பிள்ளைகள் வெடி கொளுத்தி விளையாடுது' என்று சலிப்பாள். தமிழனின் தனித்துவம் பொங்கல் என்று அப்பா கல்லுலுவவின் ஒற்றைத் தமிழனாக ஊருக்கு அறிவித்தார். அது அப்போது முடிந்தது. அம்மாவும் அதைத்தான் செய்தா. அவ்வளவு வடையும், அவ்வளவு மோதகமும், அவ்வளவு சக்கரைப் புக்கையும் தின்ன வீட்டில் யார் இருக்கினம். ஆனால் ஊரில் ஆக்கல் இருந்தினம். பொங்கல் முடிய, பெட்டி, சருவச் சட்டி, வாழை இலை, தாமரை இலை, பேசின், கும்பா, சட்டி, கேப்பை, தட்டு எண்டு எல்லா ஏனங்களிலும் மோதகமும், வடையும், சக்கரைப் புக்கையும் கல்லுலுவவின் ஒழுங்கைகளில் திரிந்தன. எல்லா வீடுகளுக்கும் போயின. புத்த பிக்கு அதை அமிர்தமாய் உண்டார். ஹாஜியார் தேறல் உண்ட தித்திப்பில் ஆழ்ந்தார். நந்தா கூட்டி அள்ளிக் கொண்டை போட்டு நாக்கு கண்டுணர்ந்த ருசியில் மயங்கினார்.

அதே அக்கிராமத்தில் ரமலான் நோன்பும் எல்லோருக்குமானது என்றார்கள். கல்லுலுவ விழாகோலம் பூண்டது. எல்லார் வீடுகளிலும் 'வெசாக்' கூடு ஒளிர்ந்தது. கொண்டைப் பணியாரம், கொக்கீஸ், களுகொதல், அரிதாரம், பால் ரொட்டி, கிரிபத் எல்லாவற்றையும் எல்லாரும் இனிக்க இனிக்க உண்டார்கள். பகலை விட இரவுக்கு நல்ல ஊர். ஆரிலும் அதிகம் பேதம் தெரியவில்லை. சிங்களப் பெண்கள் அம்மாவை நங்கி என்று அழைத்தனர். பண்டார நாயகவா, ஜீ.ஜீ.பொன்னம்பலமா என்பதில் தான் சிறு அரசியல் பேதம், தனது செல்வரத்தினக் குருக்களிடம் என்ன பக்தி வைத்திருந்தாரோ அதே பக்தி பிக்குவிடமும் வைத்திருந்தார் அப்பா.

ஆயினும் எல்லாரும் எல்லாமும் உள்ளேயோ கனன்றதோ என்னமோ? பிக்கு சாது, சாது என்று பற்றைக்குள் அனுப்பிய நாகப் பாம்புகள் படம் எடுத்துத் திரண்டு வந்தன. "நங்கி எண்ட தங்கையை முல்லைத் தீவில் எரித்துப் போட்டார்கள்" எண்டு அழுதழுது சொன்னார் பெரைரா. ஆனால் அவர்தாம் எங்களைப் பாதுகாத்தார். "எண்ட உயிர் போனாலும் உங்களுக்கு ஒண்டும் நடக்க விடேன்" என்றார். ஆனாலும் காலம் மோசமாகியது. பெரைராவின் ஆதரவில் அவர் வீட்டில் ஒளிந்திருந்தனர். பிக்கு காலமையும், பின்னேரமுமாக வந்து பார்த்தார். "சிறீலங்காவுக்கு என்ன கேடு ? பற்றி எரிகிறது" என்றார்.

எங்கும் கலவரம். கொலைகள் விழுகின்றன. உருகுகிற தாரினால் தமிழர்கள் உடலில் சிங்கள சிறீ எழுத்து எழுதினார்கள். ஹாஜியார் வீட்டில் தங்கி இருப்பதுதான் பாதுகாப்பு என்று பிக்கு சொன்னார். ஆனால் அம்மாவின் கவலையோ அது அல்ல. 'ஒரு ஆம்பிளைப் பிள்ளை வேண்டும். ஊரார் மலடி எண்டு சொல்லுமுன் ஒரு ஆம்பிளைப் பிள்ளை கொடு தாயே' என்று அம்மனை உருண்டு புரண்டு வேண்டினா. ஹாஜியார் இருக்க, பிக்கு இருக்க எங்களுக்கு ஒண்டும் பயமில்லைதான். இருந்தாலும் எத்தனை நாள் எண்டு தெரியவில்லை. கல்லுலுவை இனிக் காண மாட்டோம் எண்டு அம்மாவுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. உம்மவைக் காண மாட்டம். நந்தாவைக் காண மாட்டம். வாய்க்கால் நீரில் நெளிகிற பூரணை (நிலா) இனி இல்லை. பஞ்சி பாராமல் நிறையத் தேங்காய்ப் பால் விட்டு காய்ச்சுகிற மீன் சொதி இனி இல்லை. மாசிக் கருவாட்டுச் சம்பல் இனி இல்லை. பஸ் ஒரு குளக்கட்டில் நின்றது. இரவில் முதலைகள் தண்ணீரில் வாலால் அடித்த சத்தம் குழந்தைகளைப் பயமுறுத்தின. சலசலக்கிற சனத்தைப் பொலிஸ் அதட்டியது. "சத்தம் போட்டு உங்களைக் காட்டிக் கொடுக்காதியுங்கோ. அனுராதபுரம் ரவுனுக்கை (டவுன்) பெரிய குழப்பம் (கலவரம்) நடக்குது. ஆர்மி வருமட்டும் நாங்கள் இங்கை நிக்கிறது எவைக்கும் தெரியக்கூடாது" என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.

அனுராதபுரம் தாண்டி மதவாச்சி ஏறி வவுனியா போக வேண்டும். வவுனியா எங்கள் தேசம். பிறகு எவன் எங்களை என்ன செய்துவிட முடியும்?. ஆனால் அதற்கிடையில் குரும்பை வெட்டுகிற கத்திகள் வைத்திருக்கிறார்கள் தமிழர் தலைகளை வெட்டுவதற்கு.

தமிழர் இராசதானியாக இருந்து பிறகு சிங்களவர் இராசதானியாக மாறிய அனுராதபுரம் தமிழர்களை கொல்வதில் முன்னுக்கு நிற்கிறது. தமிழர்கள் நிணம் குடிக்கவும், சதைகளைத் தின்னவும் சிங்கங்கள் அலைகின்றன. அவற்றின் வாயிலிருந்து எங்களை எப்படிக் காப்பாற்றி அங்கிட்டு அனுப்புவது என்ற கவலை இன்ஸ்பெக்டருக்கு. தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. 'ராணுவம் வந்துவிட்டது' என்றார் இன்ஸ்பெக்டர். அப்பாவும் நம்பினார். அம்மாதான் முதலில் சந்தேகப்பட்டா. அது பேய்கள் கடலில் இருந்து வருகின்றன என்று. இன்ஸ்பெக்டருக்கும் புரிந்தது. நாங்கள் இங்க நிற்கிறது குறித்து ஆர்மிக்கு ரகசியமாத்தான் இன்ஸ்பெக்டர் தகவல் அனுப்பியிருந்தார். ஆனால் இப்போது எல்லாம் புரிந்து விட்டது. வெளிச்சம் வெறி கொண்டு முன்னேறியது. இன்ஸ்பெக்டர் சுதாரித்தார். கை நடுங்கியது. அவரது ரிவால்வரால் முதல் வெடி வெடித்தார். பின்னும் சில வெடிகள். கூட்டம் பின்னுக்கு ஓடியது. நாங்கள் காலை வவுனியா சேர்ந்து விட்டோம். 'எங்கடை நாட்டுக்கு வந்தினம்' என்று சனங்க விம்மினர். அம்மா இன்ஸ்பெக்டருக்குக் கையெடுத்துக் கும்பிட்டா. பின்னர் சேதி தெரிந்த சிங்களக் காடைகள் குலத்தை அழிக்க வந்த கோடரிக் காம்பு எண்ட விசனத்தில் அன்று இரவே இன்ச்பெக்டரைச் சுட்டுக் கொன்றன. யாரும் பேதமற்ற அந்தக் காலம் அத்துடன் முடிந்தது. வவுனியா வந்துதான் நான் பிறந்தேன்.

******************************************

இரவில் யாழ்பாணத்தில் நின்றோம். வாழைகள், தோரணங்கள், சிகரங்கள், சப்பரங்கள், மூங்கில் மரங்கள், சவுக்கு மரங்களில் கலர் பல்புகள் தொங்கின. எங்கட ஊர்த் திருவிழாக்களை விட பெரிய திருவிழா. பெரிய சப்பரங்கள். பெரிய அலங்காரங்கள். பெரிய கொண்டாட்டங்கள். எல்லாம் எனக்குப் பிடித்திருந்தது. எல்லாருமே அப்போது மகிழ்ச்சியாக இருந்தனர். வீரசிங்கம் மண்டபத்தின் முன் நிற்கிறோம். முன் கூட்டத்தால் என்னால் பார்க்க முடியவில்லை. என் உயரம் ஒருவரையும் காட்ட முடியாதிருந்தது. கால் நுனியில் நின்று கால் வலித்தது. அப்பாவாலும் என்னைத் தூக்கிக் காட்ட ஏலாது. ஒலிப்பெருக்கி வழியாக வந்த சவுன்ற்தான் ஒரே உதவி. திடீரென ஒலிப்பெருக்கி நின்றது. பண்ணைக் கடல் பக்கம் பொலிஸ் நிலையம் இருந்தது. அதன் பிறகு வேறொண்டும் எனக்கு நினைவில்லை. லைற்றுகள் திடீரெண்டு நின்றன. நெருப்புத் தணல்கள் பறந்தன. அப்பா 'ராசா..ராசா' எண்டு என் கையை இறுகப் பிடித்தார். இழுத்துக் கொண்டு ஓடினார். துவக்கு வெடிச் சத்தங்கள் கேட்டன. வெடிச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. கண் எரிந்தது. கண் எரிய, எரிய அப்பா இழுத்துக் கொண்டு ஓடுகிறார். கால் தடுக்கப்பட்டு விழுகிறேன். விழுந்து எழுந்து ஓடிக் கொண்டே இருக்கிறேன். திடீரென அப்பா ஒரு குழிக்குள் விழுகிறார். நானும் தலைகுப்புற விழுகிறேன். சேறு அப்பியது. மேலும் பொத்து பொத்தென்று ஆக்கள் விழுகிறார்கள். அப்பா முதுகைத் தடவுகிறார். 'ராசா.. ராசா' எண்டு முணுமுணுக்கிறார். 'அப்பா நான் அழேல்லை' என்று முணுமுணுக்கிறேன். தமிழைப் பேசுவதன்றி வேறு தவறென்ன செய்தோம் என்று கேட்கிற அளவுக்குச் சம்பவங்கள் நடந்தன.

இக்கதைகளைத்தான் 'காலம் ஆகி வந்த கதை' எண்டு எழுதினன். கதை முடிவிலும் 'ஊரும் நாடும் ஐயோ என்று குமுறுகின்ற நாட்கள் அன்றிலிருந்து தொடங்கின' எண்டும், 'இப்போது அப்பாவும் இல்லை. அம்மாளும் இல்லை. அரசமரம் இருக்குமா? இருக்கலாம். சில வேளை அதனடியில் இப்போ புத்தர் சிலையும் இருக்கலாம்.' எண்டும், 'அன்றிலிருந்து அண்ணாக்கள் சில பேரைப் போர்க்களத்தில் கண்டேன்' எண்டும், 'எங்கள் சிரிப்புகளைப் பறித்தவர் யார்' எண்டும், 'அப்போது தஞ்சம் கோர யாழ்ப்பாணமாவது இருந்தது' எண்டும், 'நாடு காண் காலம் வரைக்கும் காடுகள் சுடுகின்ற காலம் ஆகி விட்டது' எண்டும், 'தமிழுக்காக அழுதால் அதிலை என்ன பிழையிருக்கு?' எண்டும் வார்த்தைகளைப் போட்டனம்.

*************

நன்றி: குமுதம் தீராநதி, நவம்பர் 2010 .





9 comments:

  1. //'அப்பா நான் அழேல்லை' என்று முணுமுணுக்கிறேன். தமிழைப் பேசுவதன்றி வேறு தவறென்ன செய்தோம் என்று கேட்கிற அளவுக்குச் சம்பவங்கள் நடந்தன.//

    நெஞ்சம் விம்முகிறது.. ஏதும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம்... எல்லாமே அரசியல் ஆகிவிட்டது..
    மிக நல்ல பகிர்வு இளங்கோ.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  4. ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்புகள் தானே எமை இப்படியாக்கியது சகோதரா.... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  5. //RVS said...

    நெஞ்சம் விம்முகிறது.. ஏதும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம்... எல்லாமே அரசியல் ஆகிவிட்டது..
    மிக நல்ல பகிர்வு இளங்கோ.
    //

    அரசியல் போர்க்களத்தில் நம்மைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை. நன்றி அண்ணா.

    ReplyDelete
  6. @Chitra
    @பதிவுலகில் பாபு

    நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  7. //ம.தி.சுதா said...

    ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்புகள் தானே எமை இப்படியாக்கியது சகோதரா.... பகிர்வுக்கு நன்றி...
    //

    ஒரு சிலரின் விருப்பு வெறுப்பில் இங்கே ஒரு இனமே அழிக்கப்படுகிறது. நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. @சங்கவி
    நன்றி நண்பரே.

    ReplyDelete