Tuesday, April 14, 2026

தேவதாஸ் - ஒரு மனிதனின் வாழ்க்கை

ஆண்கள் தங்கள் முகத்தில் கொஞ்சம் தாடியோடு இருந்தால் 'என்ன தேவதாஸ் மாதிரி தாடியோடு இருக்க?'  என்றே நம் மக்கள் விசாரிப்பார்கள். அதனோடு கொஞ்சம் புகைப்பழக்கமும், குடியும் சேர்ந்துவிட்டால் அதுதான் தேவதாஸ். கூடவே காதல் தோல்வியும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு நம் மக்களிடம் பேசப்பட்ட காதல் ஜோடிகள் தேவதாஸ் - பார்வதி. அவர்கள் இருவரின் கைகூடாத காதலைச் சொல்லும் இந்த நாவல் வங்காளத்தில் 1917ல் வெளியாகி, பல மொழிகளில் சினிமாவாக தயாரிக்கப்பட்டது. இந்நாவல் பெற்ற செல்வாக்கையும், புகழையும் கண்டு  அதனை எழுதிய சரத் சந்திரரே திகைக்கிறார். 


தமிழில் வெளியான இந்நாவலுக்கு அசோகமித்திரன் முன்னுரை எழுதியுள்ளார். 'தேவதாஸ் - ஒரு சிறிய நாவல். ஆனால் அதில் வாழ்க்கையின் எந்த அம்சம் இல்லை?. நான்கைந்து பாத்திரங்களை மட்டும் உலவவிட்டுப் படைப்பாளி படைத்தது ஒரு விசாலமான, ஒரு நுணுக்கமான புனைகதை. அதே நேரத்தில் அது ஒரு சமூக வரலாறுமாகும். இவ்வளவு எளிதாகவும், அதே நேரத்தில் கூர்மையாகவும் சமூகத்தையும் அதன் அங்கங்களாகச் செயல்படும் மனிதர்களையும் கண்முன் நிறுத்த முடியுமா?. எவ்வளவு விசாலமும் அன்பும் பரிவும் அறிவும் கொண்ட மனது? ' என்கிறார் அசோகமித்திரன். 

தேவதாசும் பார்வதியும் சிறுவயதில் இருந்தே பழகி வருகின்றனர். இருவரின் வீடும் அருகருகே இருப்பதால் விளையாட்டு, மீன் பிடித்தல் என இருவரின் பொழுதுபோக்கும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாத வண்ணம் இருக்கிறது. தேவதாஸ் அடித்தாலும் பின்னர் இருவரும் சமரசமாகி விளையாட்டைத் தொடர்கின்றனர். பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பார்வதி படிப்பைத் தொடராமல் நின்று விடுகிறாள். தேவதாஸை சுற்றியே அவளின் உலகம் சுழல்கிறது. ஒருமுறை தேவதாஸ் பார்வதியிடம் காசை வைத்துக்கொள், பின்னர் வாங்கி கொள்கிறேன் என்று சொல்ல அவளோ தெருவில் பாடிவரும் பாடகர்களுக்கு அந்தப் பணத்தை அளித்து விடுகிறாள். பின்னர் விசயம் தெரிந்து அவன் கேட்கும் கேள்வியும், அதற்கு அவள் அளிக்கும் விளக்கமும்  நமக்கு சிரிப்பை வரவழைக்கும்.

மேற்படிப்பு படிப்பதற்காக கல்கத்தா சென்று தங்கி படிக்கிறான் தேவதாஸ். அவனுடைய கிராமத்தில் இருக்கும்போதே அவ்வப்பொழுது அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. அங்கே அவனுடன் தங்கியிருக்கும் நண்பனுடன் விலைமகளான சந்திரமுகியைச் சந்திக்கிறான். அவளின் உடலைத் தொடாமல் பணத்தைக் கொடுத்துவிட்டு  வந்துவிடும் தேவதாஸைக் கண்டு அவளுக்கு தேவதாஸ் மேல் ஒரு நட்பு தோன்றுகிறது. 



இங்கே கிராமத்தில் பார்வதியின் அம்மா தேவதாஸின் அம்மாவிடம் தன் மகளும், தேவதாசும் சிறுவயதில் இருந்தே பழகுவதால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என பேசுகிறாள். அதற்கு தேவதாசின் தாய் 'நீங்கள் பொருளை வாங்கி கொண்டு பெண்ணை கல்யாணம் செய்து வைக்கும் கூட்டம். இது தேவதாஸின் அப்பாவுக்கு பிடிக்காது' எனச் சொல்லிவிட்டு வந்துவிடுகிறாள். தேவதாஸ் குடும்பம் ஊரில் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பம். வசதி குறைவான பார்வதியை எப்படி அவனுக்கு கட்டி வைப்பது என்பது தேவதாசுடைய தாயின் எண்ணம். எனவே பார்வதியின் பெற்றோர் அவளுக்கு மாப்பிள்ளை தேடுகின்றனர். அழகியான பார்வதியை மணக்க 40 வயது கடந்த பணக்கார மாப்பிள்ளை வருகிறார். அவருக்கு ஏற்கனவே மணமாகி இரண்டு பிள்ளைகளும் உண்டு. முதல் மனைவி இறந்துவிட பார்வதியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்கிறார். 

அவருடனான திருமணத்துக்கு முன்பு பார்வதி தைரியமாக தேவதாஸை அவனுடைய வீட்டில் சென்று சந்திக்கிறாள். அவளே தேவதாஸின் மீதுள்ள காதலைச் சொல்கிறாள். ஆனால் அவனோ தன் பெற்றோரை மீறி தன்னால் எதுவும் செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறி விடுகிறான், மேலும் உன்மேல் எனக்கு எந்த பிரியமும் இல்லை என்று சொல்லிவிடுகிறான். அடுத்த நாளே அவன் கல்கத்தா சென்று விடுகிறான். ஆனால் கொஞ்ச நாளிலேயே திரும்ப வந்து அவளிடம் உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன், கொஞ்ச நாள் பொறு என்கிறான். அதற்கு அவளோ 'எனது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள், உன்னை போன்ற பலவீனமான சஞ்சல புத்தியுள்ள மனிதனுக்கு தன் பெண்ணை யார்தான் கட்டி வைப்பார்கள்' என்று சொல்லிவிடுகிறாள். பார்வதியின் திருமணம் நடந்து அவளின் கணவர் வீட்டுக்குச் சென்று விடுகிறாள் பார்வதி. 

பின்னர் தேவதாஸ் குடிக்கு அடிமையாகி அவன் உடல்நலம் கெட்டுப்போகிறது. அவனின் தந்தையும் இறந்துபோகிறார். அவரின் இறப்புக்கு பின்பு கிடைக்கும் பணத்தில் சந்திரமுகிக்கு கொஞ்சம் பணம் கொடுக்கிறான். அவள் அதனைக் கொண்டு ஒரு கிராமத்துக்குச் சென்று தன்னால் ஆன உதவிகளை அந்த மக்களுக்கு செய்கிறாள்.  வயதான அவனின் தாயும் காசி சென்று வசிக்கிறாள். கூடப் பிறந்த அண்ணனுடன் அவனுக்கு பெரிய ஒட்டுதலும் இல்லை. எனவே மனம் போன போக்கில் இருக்கிறான். மீதி இருக்கும்  பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தே அழிக்கிறான் தேவதாஸ். தேவதாஸின் உடல்நிலை மிகவும் கெட்டுபோனதை அறிந்த சந்திரமுகி கல்கத்தா வந்து அவனை தெருவோரம் இருந்து மீட்டு வருகிறாள். கொஞ்ச நாட்கள் அவளிடம் தங்கியிருக்கும் அவன், நான் சொந்த ஊருக்குப் போகிறேன், நீயும் சென்றுவிடு என அவளை அனுப்பிவிட்டு ஊருக்கு கிளம்புகிறான். நீண்ட நாள் வாழமாட்டோம் என்று அவனுக்கு தனது உடல்நிலை பற்றி நன்றாகத் தெரிகிறது. 

தேவதாஸின் தந்தை இறப்புக்கு வந்த பார்வதி அவனுடைய உடல்நிலை அறிந்து வேதனைப்படுகிறாள். அவளுக்கு கணவர் வீட்டில் ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரு மகாராணி போல இருக்கிறாள். தேவதாஸோ இங்கே துன்பப்படுவதில் அவளுக்கு மிகுந்த துயரம் ஏற்படுகிறது. 'நீ என் வீட்டுக்கு வந்துவிடு, நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன்' என்கிறாள். அவளின் சிறுபிள்ளைத் தனமான பேச்சை கேட்டு சிரிக்கும் அவன் 'உன் வீட்டில் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்களா' எனக் கேட்க, அவளோ 'ஒருவரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் நீ என்னுடன் வந்து விடு. உனக்கு நான் சேவை செய்கிறேன்' என்கிறாள். 'சரி, எனக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் கண்டிப்பாக உன்னிடம் வருவேன்' என்கிறான் தேவதாஸ். 

ஊருக்குச் செல்லும் வழியில் பார்வதிக்கு கொடுத்த வாக்கு நினைவுக்கு வருகிறது. கூட வந்த வேலைக்காரனை ஏமாற்றி விட்டு பாதி வழியில் இறங்கி ஒரு மழைக்கால இரவில் பார்வதியின் வீட்டை நோக்கி மாட்டு வண்டியில் செல்கிறான் தேவதாஸ். செல்லும் வழியிலேயே அவனுக்கு நினைவுகள் மாறி மாறி வருகின்றன, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தன்னுடைய பார்வதியை பார்க்க வேண்டும் என நினைக்கிறான். மயக்கம் போட்டு விட்ட அவனை, பெரிய மாளிகை போன்ற பார்வதியின் வீட்டு முன்னால்  இருக்கும் 
மரத்தடி திண்ணையில் இறக்கி படுக்க வைக்கிறான் வண்டியோட்டி. தேவதாஸ் மலங்க மலங்க விழிக்கிறான். வீதியில் உள்ளோர், பார்வதியின் வீட்டில் உள்ள வேலைக்காரர்கள் என அனைவருமே, யாரோ ஒரு வழிப்போக்கர் என நினைத்து அவனைப் பார்க்கிறார்கள். ஒரு இரவு முழுவதுமே அவன் உயிர் ஊசலாடுகிறது. பின்னர் பார்வதியைப் பார்க்காமலேயே இறந்து போகிறான் தேவதாஸ். 

காவலர்கள் வந்த பின்னர் அவன் சட்டைப் பையில் இருந்த கடிதங்கள் மூலம் தேவதாஸ் எனத் தெரிய வருகிறது. பார்வதியின் ஊர் என்ற தெரிந்து 'சின்னம்மா வந்து பார்த்தால் யார் என்று சொல்லி விடலாம்' என மகன் சொல்ல கணவனோ அவள் இங்கே எல்லாம் வரமாட்டாள் எனச் சொல்கிறார். தேவதாசின் உடலை சண்டாளன் வந்து கட்டி எடுத்துக் கொண்டுபோய் எரித்துவிடுகிறான். பெரிய பணக்காரன் இங்கே வந்து ஏன் இறந்து போக வேண்டும், மேலும் உங்கள் ஊரைச் சேர்ந்தவர் என வேலைக்காரர்கள் பார்வதியினிடம் சொல்கின்றனர். யார் என்று அறிந்ததும் அவனைப் பார்க்க வீதிக்கு ஓடி வருகிறாள் ஒரு பைத்தியம் போல. ஆனால் மனம் பேதலித்து மயக்கம் போட்டு விழுந்த அவளை உள்ளே தூக்கிச் செல்கின்றனர். 

இறுதியில் 'தேவதாஸைப் போன்ற துரதிருஷ்டம் பிடித்த பாவிகளைச் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். அவனுக்கு ஏற்பட்ட மரணத்தைப் போல உலகில் இருக்கும் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்று தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யுங்கள். மரணம் என்பது ஒரு கேடு இல்லை. ஆனால் மரண காலத்தில் ஒரு அன்பு ஸ்பரிசமும், நட்பு பாசம் நிறைந்த முகமும் கண்ணுக்கு முன்னால் தெரிய வேண்டும். அந்த ஸ்பரிசத்தை உணர்ந்தபடி அதில் நிறைந்து கிடக்கும் அன்பை உணர்ந்தபடி நட்பையும், பாசத்தையும் உணர்ந்துகொண்ட நேரத்தில் ஒரு மனிதனின் வாழ்க்கை முடிய வேண்டும். தனக்காக யாராவது ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால், அந்தக் கண்ணீர்த் துளியைப் பார்த்தவாறே அவன் செத்துப்போக வேண்டும் ' என்று சொல்கிறார் சரத் சந்திரர். 

தேவதாஸ்
சரத் சந்திர சட்டோபாத்யாயா 
தமிழில்: புவனா நடராஜன்

Monday, April 6, 2026

நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிச்சாமி

தங்கள் குடும்ப வரலாறு போல எழுதிய இந்த புத்தகம் சென்ற காலத்தை நமக்கு திரும்பவும் நினைவூட்டுகிறது. சென்ற நூற்றாண்டின் இறுதி வருடங்கள் வரைக்கும் கூட வறுமை தாண்டவமாடியது. விறகு வெட்டுதல், தண்ணீர் எடுக்க நீண்ட தூரம் செல்லுதல், சினிமா தவிர எந்த பொழுதுபோக்கும் இல்லாதிருத்தல் என்றே இருந்தது. அப்படி என்றால் 1940-1950 காலகட்டங்களில் எப்படி இருந்திருக்கும். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியில் இருந்து மலேயா சென்று உழைத்து வாழ்ந்த தமது குடும்பத்தின் வரலாற்றை இந்த தன்வரலாற்றுப் புத்தகத்தில் சொல்லியுள்ளார் முத்தம்மாள் அவர்கள். 


முத்தம்மாள் அவர்களிடம் 'பால்ய வயதில் நடந்த எதுவுமே எங்களுக்கு நினைவில் இல்லை. நீங்கள் எப்படி சின்ன வயதில் நடந்தது எல்லாம் நினைவில் இருந்து எழுதுகிறீர்கள், இல்லை அது அனைத்தும் கதையா? ' என்று கேட்க, 'எங்கள் காலத்தில் இப்பொழுது உள்ளது போல பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. டிவி, போன் என உங்களை உள்ளே இழுத்துக்கொள்ள நிறைய விசயங்கள் இப்பொழுது உண்டு. எங்களுடைய சின்ன வயதில் நடந்ததை நாங்கள் எங்களுக்குள் திரும்பி திரும்பி பேசிக் கொள்வோம். பாட்டி தாத்தா போன்றோர் கதை சொல்கிறேன் என்று எங்கள் சின்ன வயதில் நடந்ததை திரும்ப திரும்பச் சொல்வார்கள். ஒருவேளை அதனால்தான் என்னுடைய நினைவில் அந்த பழைய காலம் அப்படியே இருக்கிறது' எனச் சொல்கிறார். 

கொங்குப் பகுதியான வெள்ளகோவிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து பிழைப்புத் தேடி சென்ற குடும்பம் முத்தம்மாள் அவர்களின் குடும்பம். முத்தம்மாள் அவர்களின் தாய் கொஞ்சம் படித்தவர். பழனியம்மாள் மணமாகி, கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தாலியைக் கழற்றி வீசிவிட்டு வந்தவர். என்ன பிரச்சினை என்றாலும் தாலியை கழற்றி வீசலாமா , எல்லாம் படித்தவள் என்கிற திமிர் என்று ஊர் பேசுகிறது. அவருடைய தந்தையும் ஒரு சிறு பிரச்சினையில் கொஞ்ச காலம் சிறை செல்ல நேர்கிறது. இதை எல்லாம் பார்த்த பழனியம்மாளின் தந்தை, இனிமேல் இந்த ஊரில் இருக்க கூடாது என எண்ணி காட்டை விற்றுவிட்டு மலேயாவுக்கு தனது மகள், மனைவியுடன் செல்கிறார். ஏற்கனவே பழனிச்சாமி அவர்களுக்கு பழனியம்மாள் குடும்பத்துடன் பழக்கம் இருந்திருக்கிறது. அங்கே அவர்களை சந்திப்பவர்,  இரண்டாம் தாரமாக பழனியம்மாளை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறார்  பழனிச்சாமி. அவர்களுக்கு சம்மதம் என்றாலும் பழனியம்மாளின் அம்மா தாலி கட்டக் கூடாது என பழைய  சம்பிரதாயம் பேசுகிறார். இரண்டு மனைவியருடனும் எந்த பிரச்சினையும் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார். குழந்தைகள் பிறந்ததும், அவர்களை எப்பாடு பட்டாவது நல்ல கல்வி கொடுத்து விட வேண்டும் என பழனியாம்மாள் நினைக்கிறார். 

முத்தம்மாள் அவர்கள் தான் சார்ந்த சாதியின் உழைப்பு, அவர்களின் சிக்கனம் என நிறையச் சொன்னாலும், அவர்களின் பங்காளிச் சண்டைகள், பழைய பழக்க வழக்கங்கள் என அவர்களின் தவறுகளையும் சொல்லத் தவறுவதில்லை. எல்லாவற்றையும் ஒரு சிறு நகைச்சுவையுடன் சொல்ல முடிவது அவரின் பலமும் கூட. வயதாகிய பின்னரும், பேரன் பேத்திகள் எடுத்த பிறகு ஒரு சண்டையில் கணவர் படுக்கை அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பேரன்கள் கவலைப்பட இவரோ தன் பாட்டுக்கு தனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன பாட்டி இப்படி பயமில்லாமல் இருக்கே, தாத்தா ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்று அவர்கள் கேட்க 'உள்ளே தூக்கு போட்டுக்கொள்ள எந்த வசதியும் இல்லை அதனால்தான்' என்று நகைச்சுவையாக சொல்கிறார். 


இரண்டாம் உலகப் போர் கட்டத்தில் மலேயாவில் இருந்து இங்கே வந்து, எந்த வேலையும் சரியாக அமையாமல் குன்னூர் சென்று பெட்டிக்கடை வைத்தது, அங்கே இருந்து வெள்ளகோவிலுக்கு தனியாக பேருந்தில் பயணம் செய்தது என அவரின் நினைவுகள் பின்னால் உள்ள காலத்தை நமக்கு சொல்கிறார். தனது தந்தை வழி தாத்தாவுடன் இருந்த சில நினைவுகள் பகிர்கிறார்.  பின்னர் அங்கே இருந்து மலேயாவுக்கு கஷ்டப்பட்டு கப்பலில் வந்து சேர்ந்தால், அவர்கள் விட்டுச் சென்ற தோட்டம் ஜப்பான் படையால் சின்னாபின்னமாகி கிடக்கிறது. அதனைச் சரிசெய்து, படிப்பையும் தொடர்கிறார்கள். முத்தம்மாள் அவர்களின் மாமாவும் போர் காலகட்டத்தில் இறந்துவிட, தனியாக இருக்கும் பாட்டியை இவர்கள் அழைத்துக் கொண்டு வந்துவிடுகிறார்கள். சயாம் ரயில்வே வேலைக்கு சென்ற சில தமிழர்கள் பற்றியும், அங்கே இருந்து திரும்பி ஓடிவந்த ஒரு சிலர் பற்றியும் சொல்கிறார். 

எதற்கும் பயப்படாமல் பெண்களை சுதந்திரமாக வளர்த்த தனது தந்தையின் மேல் அவருக்கு இருந்த பிரியம் சொற்களில் தெரிகிறது. கடலில் நீந்துவது, படகு ஓட்டுவது, மீன் பிடிப்பது என ஒவ்வொன்றையும் தன் பெண்களுக்கு சொல்லித் தருகிறார். தாய் பழனியம்மா அவற்றை எதிர்த்து பேசினாலும் அதனை அவர் கண்டுகொள்வதில்லை. தந்தை இறப்பின் போது நடந்த சடங்குகளில் பிரச்சினை ஏற்படும்போது அமைதியாகவே இருக்கிறார்கள். பின்னர் தமது பிள்ளைகள் காதல் திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்கிறார் பழனியம்மாள். தனது கணவர் இறந்த பின்னர் பிள்ளைகளை தனியாகவே போராடி கரைசேர்க்கிறார். ஆனால் எப்பொழுதும் கல்வியே பிள்ளைகளுக்குத் துணை என்பதை அவர் மறப்பதில்லை. 

அங்கேயே பிறந்து வளர்ந்த, ஸ்காட்டிஷ் தந்தைக்கு பிறந்தவரான ஸ்பென்ஸ் கிராண்டை திருமணம் செய்து கொள்கிறார் முத்தம்மாள். அவர் அம்மா தமிழ் என்பதால் தமிழ் நன்றாக பேசுகிறார். திருமணத்துக்கு பின்னர் முத்தம்மாள் ஆசிரியராக வேலைக்குச் செல்கிறார். அவருக்கு குழந்தைகள் பிறந்து வளர்ந்து சிலர் வெளிநாட்டில் வேலை கிடைத்து தங்குகிறார்கள். அங்கேயே மணம் முடித்து, மணவிலக்கு என பிள்ளைகளின் வாழ்க்கைகள் பற்றியும் முத்தம்மாள் எதையும் மறைக்காமல் எழுதுகிறார். 

'நான் இங்கு என் குடும்ப ரகசியங்களையம் நடந்த உண்மைகளையும் எழுதுவது சில நேரத்தில் மனக்கஷ்டமாகக் கூட இருக்கும். இங்கு நான் யாரையும் புண்படுத்தவோ ஏளனம் செய்யவோ மனதாலும் நினைக்கவில்லை. அப்பாரய்யன் ஒரு கொலையாளி. அம்மாவின் தகப்பனார் சிறைவாசம் அனுபவித்த கைதி. அம்மா, அய்யன் தாலி கட்டாத சட்டபூர்வமற்ற மனைவி. பெரியம்மா தன் கணவனை இன்னொருத்திக்கு விட்டுக்கொடுத்த ஏமாளி. அய்யன் முன்கோபக்காரர், பழிவாங்கும் உணர்ச்சியுடையவர். இப்படி அவர்களின் குறைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எப்படியிருப்பினும் நான் அவர்களின் ரத்தத்தில் ஊறிய வாரிசு. அவர்கள் வகுத்த வழிதான் எங்கள் வழி.' - என்று புத்தகத்தின் இறுதியில் சொல்கிறார். 

இந்த தன்வரலாற்றுப் புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுது இது ஒரு குடும்பத்தின் வரலாறும், கதையும் மட்டும் அல்ல என்பது புரியும். சென்ற காலகட்டத்தின் நினைவுகளால் நெய்யப்பட்ட அழகானதொரு பொக்கிஷம். 

நாடு விட்டு நாடு
முத்தம்மாள் பழனிச்சாமி
பதிப்பு: தமிழினி 

Wednesday, March 25, 2026

கடல் - ஜெயமோகன்

அன்பான இயேசுவின் பாதையில் சாத்தான்களின் வருகைகளை நாவல் வடிவில் சொல்லப்பட்டது கடல். இரண்டு விதமான வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன. தப்பான செயல்கள் பாவம் என்றாலும் அவற்றை நம் சுயநலத்துக்காக செய்து கொண்டு, அதில் கிடைக்கும் புகழ், மகிழ்ச்சி மற்றும்  செல்வச் செழிப்புடன் வாழ்வது. இன்னொரு பாதை முட்களும் துயரங்களும் நிரம்பியது. செல்வத்தையும் புகழையும் ஒதுக்கிவிட்டு அன்புடனும் , எந்நிலையிலும் உண்மையுடன் இருப்பது. இது கடினமான பாதை என்றாலும் நீண்ட காலத்தில் மகிழ்ச்சியும், நாம் பாவங்கள் செய்யவில்லை என்ற நிம்மதியும் கிடைக்கும். இந்நாவல் மூன்று பாத்திரங்களை மையமாகக் கொண்டது. 


சாம்

செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் சாம். தங்கத் தொட்டில் கூட உண்டு. அவர்களின் வீட்டில் வேலை செய்த வேலைக்காரி ஒருநாள் தன்னுடைய குழந்தையை அந்தத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். அதனைக் கண்ட சாமின் தந்தை அந்த வேலைக்காரியை அடித்தும், அந்தக் குழந்தையை வெய்யிலில் படுக்க வைத்தும் தண்டனை கொடுக்கிறார். பாதிரியார் உட்பட யார் சொல்லியும் அவரின் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுநாள் அந்தக் குழந்தை இறந்து விடுகிறது. சாமுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வடுபோல தங்கி விட, வளர்ந்த பின்னர் துறவறம் செல்ல முடிவு செய்து வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார். தனது தந்தை இறக்கும் தருணத்திலேயே வீட்டுக்கு வந்து போகிறார். "சாம், என்னுடைய மிக உயர்ந்த பொக்கிஷம் நீ. இந்த உலகத்தில் உள்ள எல்லாம் உனக்கு கிடைக்க வேண்டும் என நினைத்தேன். நீ படுத்த அந்த தொட்டிலில் இன்னொரு குழந்தையை படுக்க வைத்ததால்தான் எனக்கு கோபம் வந்தது." என்று சொல்லி விட்டு இறந்து போகிறார் அவரது தந்தை. 

பெர்க்மான்ஸ்

சாமுக்கு நேர் எதிராக இருப்பவர் பெர்க்ஸ். வறுமையின் காரணமாக பாதிரியார் பணிக்கு வந்தவர். பைபிளை திரும்ப திரும்ப படித்து நினைவில் வைத்திருக்கும் பெர்க்ஸ், கடவுளுக்கு பயப்படாதவராக இருக்கிறார். ஒருவகையில் சாமுக்கு மூத்த சகோதரனும் கூட. சாமின் தந்தையால் அவரது  திருமணத்துக்கு முன்னர்  ஓர் ஏழைப் பெண்ணுக்கு பிறந்து, பின்னர் பணம் கொடுத்து அப்பெண்ணை ஊரை விட்டு குழந்தையுடன் அனுப்பி விடுகின்றனர். அந்தக் குழந்தைதான் பெர்க்ஸ். அந்தப் பெண் இன்னொருவரை மணந்து பின்னர் பிறந்த குழந்தைகள் என குடும்பம் வறுமையில் வாட, பாதிரியார் பணிக்கு வேலைக்கு வருகிறார். அந்த சர்ச்சுக்கு தங்க வரும் சாம், பெர்க்ஸ் ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதை தெரியப்படுத்த அவர் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார். 

தாமஸ்

இவர்கள் இருவருக்கும் இடையில் அலைபாயும் ஆன்மாவாக இருப்பவன் தாமஸ். சிறு வயதிலேயே தன்னுடைய அம்மாவை இழந்தவன் ஒரு ரௌடி போல வளர்கிறான். கால் நடக்க இயலாத ஒரு பெண்ணுக்கு தகாத உறவின் மூலம் பிறந்தவன் அவன். தனது உடலை விற்றே அவனை வளர்க்க திண்டாடும் அவள் ஒருகட்டத்தில் அவனைக் கைவிட்டு இறந்து போகிறாள். அவனுக்கு தன்னுடைய தந்தை யார் எனத் தெரிந்தாலும்  அந்த மனிதன் இவனை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே ஊரில் சுற்றித் திரிந்து வளர்கிறான். அவனை அந்த ஊருக்கு வரும் சாம் கண்டு அவனை அன்பின், நன்மையின் வழிக்கு இழுத்து வருகிறார். 

---

தனது குடும்பத்துக்கு ஒரே வருமானமாக இருந்த சர்ச் வேலையில் இருந்து தான் துரத்தப்பட காரணமாக இருந்த சாமின் மேல் கோபத்தில் இருக்கும் பெர்க்ஸ், தனது காதலி மூலம் பொய் சாட்சி சொல்ல வைத்து சாமை சிறைக்கு அனுப்பி விடுகிறார். பெர்க்ஸ் இப்பொழுது ஊரில் பெரிய பணக்காரன். கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்கள் மூலம் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறான் பெர்க்ஸ்.  சாம் சிறை சென்ற பின்னர் தாமசுக்கு பெர்க்சின் அறிமுகம் கிடைக்கிறது. கடலோடுவதில் பலசாலியான தாமஸ் பெர்க்ஸ் செய்யும் குற்றங்களுக்கு துணையாக நிற்கிறான். இப்போது அவன் தீமையின் பாதையில். 

தாமசுக்கு பியாட்ரிஸ் என்னும் பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அவளை விரும்பவும் செய்கிறான். அவளோ வளர்ந்தவள், அறிவு நிறைந்தவள் ஆனால் சிறு குழந்தை போல இருக்கிறாள். ஒரு தேவதையைப் போல தீமை என்றால் என்னவென்றே அறியாதவளாக இருக்கிறாள். ஒரு காப்பகத்தில் வளரும் அவளுக்கு தந்தை பெர்க்ஸ் எனத் தெரிய வருகிறது. அவன் தனது காதலைச் சொன்னதும் முதலில் மறுக்கும் அவள், அவனை நேசிக்கிறாள். அவளின் தூய அன்பைக் கண்டு மலைத்து நிற்கிறான் தாமஸ். 

நல்லதா, தீயதா என்ற இரு வழிகளில் தாமஸ் மாறி மாறிப் போனாலும் இறுதியில் நல்வழிக்கே திரும்புகிறான். இடையில் சாமும், பெர்க்ஸ்சும் தம்மால் இயன்றவரை அவனை திசை திருப்பி தங்கள் வழியே சிறந்தது என அவனுக்கு போதிக்கிறார்கள். சாத்தானும் இயேசுவும் போல. 

----

கடல் நாவலில் கடவுள், சாத்தான், பைபிள் என நிறைய உரையாடல்கள் உண்டு. சில இடங்களில் ஆத்ம தரிசனம் போல சில வரிகள் உள்ளன. நாளைக்கு என சேர்த்து வைக்கத் தோணாமல் கடலோடி வாழும் மீனவர்களின் குணம், அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் முதலாளிகள், கடத்தல் பிரச்சினைகள் என இந்நாவல் நிறைய தளங்களில் நம்மைக் கொண்டு செல்கிறது.



Monday, March 16, 2026

சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்

கடற்கரையோர கிராமம் தென்பத்தன். அங்கே உள்ள 'சவ்தா மன்சில்' என்னும் மாளிகையில் முஸ்தபாகண்ணு தன்னுடைய பரம்பரை கவுரவம் கொண்ட சாய்வு நாற்காலியில், அந்த வீட்டு வேலைக்காரியும் சிறு பெண்ணுமான ரைஹானத்தை ரசித்து, அவளை கல்யாணம் செய்து கொள்ள கனவு கண்டு அந்த சுகத்தில் சாய்ந்து  கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரின் மனைவி மரியம் பீவி 'மதரஸா பள்ளி மீது காற்றுக்கு மரம் விழுந்து குழந்தைகள் இறந்து விட்டார்கள்' எனச் சொல்ல, முஸ்தபாவோ  அதனைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் 'எனக்கு சாப்பிட என்ன இருக்கிறது, டீ குடிக்கும் நேரம் வேற ஆச்சு'  என்கிறார். 


சவ்தா மன்சில் இல்லத்தின் காரணவர் முஸ்தபாகண்ணு. அவரின் பாட்டனாரான பவுரீன்பிள்ளை என்பவர் அப்போது மன்னராக மருமக்கள் வழி உரிமையில் இருந்த மார்த்தாண்ட வர்மாவுக்கு அணுக்கமாக இருந்தவர். மார்த்தாண்ட வர்மாவின் சிறு வயதில் மக்கள் வழி மரபு உரிமைக்காக போராடும் எட்டு வீட்டு பிள்ளைகள் என்பவர்களால் அவர் துரத்தப்பட, தென்பத்தன் ஊரில் அடைக்கலமாகும் அவரைப் பாதுகாத்து அனுப்பி வைக்கிறார் பவுரீன்பிள்ளை. பின்னர் மார்த்தாண்ட வர்மா முடிசூடிய பின்னர் அவருக்கு வேண்டிய நிலங்களை கொடுக்கிறார். அவரை அம்மாவன்(மாமா) என்றே அழைக்கிறார்.  பின்னர் ஒருநாள் ராமன் தம்பி மற்றும் பப்பு தம்பி ஆகியோர் மன்னரைக் கொல்லப் பார்க்க அவர்களைக் கொன்று மேலும் அணுக்கமானவராகிறார் பவுரீன்பிள்ளை. அதன் நினைவாக அவருக்கு மன்னர் வெள்ளி கைப்பிடியுள்ள வாளையும், தங்கச் சரிகை உள்ள பட்டுத் துணியும் அன்பளிப்பாக கொடுக்கிறார். 

அந்த ஊரில் யார் வீட்டிலும் இல்லாத பொருட்கள் சவ்தா மன்சிலில் உண்டு. சந்தன மரத்தால் செய்யப்பட்ட அலமாரி, அழகான சாய்வு நாற்காலி, மர வேலைப்பாடுகள், செம்பால் செய்யப்பட்ட முகப்புகள் என ஓர் அரச மாளிகைக்கு உண்டான அத்தனை வசதியும் உண்டு. சொன்னதை செய்து முடிக்க வேலையாட்களும் உண்டு. தலைமுறை தலைமுறையாக வந்த அந்த சொத்தை இப்பொழுது நிர்வகிப்பவர் முஸ்தபாகண்ணு. கடந்து வந்த தலைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக சொத்துக்களை விற்று வந்ததில் இப்பொழுது இருப்பது இந்த வீடும் சில பொருட்களும். பழைய மாளிகையாக இருந்த இந்த வீட்டை இடித்து முஸ்தபாகண்ணின் வாப்பா நூர்முகம்மது புதிதாக கட்டி  தனது அம்மாவின் பெயரை இந்த இல்லத்துக்கு வைக்கிறார். அப்பொழுதே சில நிலங்கள் கிரையம் கொடுத்தே இந்த வீடு எழுகிறது. 

பெரிய குடும்பத்தின் வாரிசு என்ற திமிர் முஸ்தபாகண்ணுக்கு எப்போதும் உண்டு. அது தானாக ஏற்பட்டதில்லை. தனது இளமையில் பக்கத்து வீட்டுப் பெண்ணை முஸ்தபாகண்ணு  கெடுத்துவிட, அவரின் தந்தையிடம் வந்து அப்பெண்ணின் தகப்பன் வந்து முறையிட 'வசதி உள்ள மாப்பிள்ளை கிடைத்தான் என்று உன் பெண்தான் என் பையனைக் கெடுத்துவிட்டாள்' என்று சொல்லி, ஊரில் பெரிய நாட்டாமையுமான இவரே அந்த குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க தீர்ப்பு சொல்கிறார். அப்போதிருந்தே அவருக்கு பயம் விட்டுப் போகிறது. பார்க்கின்ற பெண்களை எல்லாம் அடைய வேண்டும் என நினைக்கிறார். அவர்களின் வறுமையை பயன்படுத்திக் கொண்டு அடையவும் செய்கிறார். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அவர்களை கொல்லவும் அல்லது அவர்களே தற்கொலை செய்து கொள்ளவும் காரணமாக இருக்கிறார். அவர்களின் இறப்பை மூடி மறைக்க சிலர் முஸ்தபாகண்ணுக்கு  உதவ, அவர்களுக்கு வேண்டுமளவு காசை வாரி இறைக்கிறார். 


சுருக்கமாகச் சொன்னால் இருக்கும் சொத்திலிருந்து வருமானம் பெருக்குவதைக் கவனிக்காமல், அதையே விற்று செலவு செய்கிறார் முஸ்தபாகண்ணு. யாரும் அவரைக் கேள்வி கேட்க முடிவதில்லை. அந்த வீட்டில் அவருடைய தங்கை ஆயிஷாவும் உண்டு. ஆய்ஷாவுக்கு கல்யாணம் செய்து வைத்து, பிள்ளைப்பேற்றுக்கு வந்தவள், எனக்கு தங்கத்தில் ஒட்டியாணம் செய்து போட்டால் மட்டுமே புகுந்த வீட்டுக்கு போவேன், பவரீன்பிள்ளையின் பேத்தியான நான் ஒட்டியாணம் போடாவிட்டால் ஊர் என்ன சொல்லும் என்று கூறி அங்கேயே தங்கி விடுகிறாள். முஸ்தபாகண்ணுவும், இப்போது கையில் காசு இல்லை, ஒட்டியாணம் செய்து போடுவது வரை நீ இங்கேயே இருந்துகொள் எனச் சொல்லிவிட வருடங்கள் ஓடிவிடுகின்றன. ஆயிஷாவின் மகள் நசீமாவை கல்யாணம் செய்து அவள் தனியாக வசிக்கிறாள். 

முஸ்தபாகண்ணுவின் மனைவியான மரியம் கணவனை எதிர்க்க துணியாமல் இருக்கிறாள். அப்படியே இரண்டொரு வார்த்தை கேட்டு விட்டாலும் மேலே சொருகி இருக்கும் அதபு பிரம்பு என அழைக்கப்படும் குச்சியை எடுத்து அவளை அடித்து தள்ளுகிறார். அதற்கு பயந்தே அவள் அடங்கிப் போகிறாள். அந்த பிரம்பும் பவுரீன்பிள்ளை காலத்தில் இருந்தே இருக்கிறது. தன்னுடைய சொல் பேச்சு கேட்காதவர்களை அவரின் வாரிசுகள் இந்த பிரம்பைக் கொண்டே அடித்து துவம்சம் செய்துள்ளனர். அதிலும் அதிகம் அடிவாங்கியது பெண்களே. இந்த பிரம்பின் கடைசிக் காலத்தில் வந்து மாட்டிக்கொண்டவள் மரியம். நல்ல உணவு இல்லாமையாலும் வறுமையும் வீசும் இந்த வயதான காலத்தில் அவளுக்கு காச நோயும், ஓயாத இருமலும் வந்து விடுகிறது. தனது மனைவியால் இனி எதற்கும் உபயோகம் இல்லை,  உன்னுடைய பிறந்த வீட்டுக்கு செல் என்று ஓயாமல் கத்திக் கொண்டிருக்கும் தனது கணவன் முஸ்தபாகண்ணுவிடம் அவள் 'அந்த பிரம்பால் என்னை ரெண்டு அடி அடித்து கொன்றுவிடுங்கள்' என்று கதறுகிறாள். மரியம் இறந்துவிட்டால் அடுத்த கல்யாணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறார் முஸ்தபாகண்ணு. 

இவர்களின் ஒரே மகன் ஷாகுல். தந்தையின் செலவுகளையும், அவரின் பெண்கள் சகவாசத்தையும் அறிந்த அவன் 'சவ்தா மன்சில்' மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் என்று உணர்கிறான். அம்மா மரியம் மேல் பாசம் இருந்தாலும் திருந்தாத தந்தையை நினைத்து மும்பைக்கு வேலை தேடிச் செல்கிறான். அங்கே இருந்து ஒருமுறை பணமும் அனுப்பி விடுகிறான். அதன் பின்னர் எந்த தொடர்பும் இருப்பதில்லை. கடைசியில் மரியம் இயலாமல் இருக்கும்போதே வந்து போகிறான் ஷாகுல். எந்த வேலையும் செய்யாமல் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டேயிருந்தால் வருமானத்துக்கு என்ன வழி என்று ஒருமுறை தனது தந்தையிடம் அவன் கேட்க, அதற்கு முஸ்தபா கண்ணு 'நான் இந்த வீட்டின் காரணவர், பவரீன்பிள்ளையின் பரம்பரை நான் என்ன வேலை செய்யவேணும் என்று நீ சொல்லக்கூடாது' எனச் சொல்ல வெறுத்துப்போகிறான் ஷாகுல். தன்னுடைய அம்மாவையும், தன்னுடைய முன்னோர் அவர்களுடைய வீட்டுப் பெண்களையும்  அடிக்க பயன்படுத்திய அதபு பிரம்பை உடைக்க முயல்கிறான் ஷாகுல், ஆனால் அது இரும்புத் தடி போல அப்படியே இருக்கிறது. 

கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் இருந்த பொருட்கள், பாத்திரங்கள் விற்கப்படுகின்றன. அதனை வெளியே விற்பதற்கு இஸ்ராயீல் என்னும் வேலைக்காரன் அவருக்கு உதவுகிறான்.  வெள்ளி கைப்பிடியுள்ள வாள், பட்டு துணி போன்ற குடும்பத்தின் விலை மதிக்க முடியாத பொருட்கள் எல்லாம் மூன்றாம் பேர் அறியாமல் இரவில் கை மாற்றப்படுகிறது. பகலில் செய்தால் குடும்பக் காரணவனுக்கு இழுக்கு என நினைக்கிறார்  முஸ்தபாகண்ணு. பெருமை வாய்ந்த சந்தன மர அலமாரி ஒன்றை விற்கும்போது, ஆயிஷா அதனை தன் மகள் நசீமாவுக்கு கொடுக்க கேட்கிறாள். முஸ்தபாகண்ணு அதை நான்தான் முடிவு செய்வேன் என்று விற்றுவிடுகிறார். விட்டால் இந்த இடமும் போய்விடும் என்று நினைத்த நஸீமா கோர்ட்டில் வழக்காடி பாதி சொத்தை பெற்றுவிடுகிறாள். கடைசியில் சாய்வு நாற்காலியும் விற்கப்படுகிறது.

அங்கங்கே உதிர்ந்து கொண்டிருக்கும் தனது இல்லத்தில் இருந்து முஸ்தபாகண்ணு அடுத்த திருமணம் செய்ய தனது பழைய வேட்டி, கோட்டு, தலையில் சுற்றிய துண்டுடன், இப்பொழுது வீட்டில் மீதமிருக்கும் அதபு பிரம்பை துணையாக ஊன்றி ரைஹானத் வீட்டுக்கு செல்கிறார். போகும்பொழுது துணைக்கு இஸ்ராயீல் வந்து சேர்ந்து கொள்கிறான். வழியில் ஒரு வீட்டில் தன்னுடைய சாய்வு நாற்காலியைப் பார்க்கிறார்.  அதனை வாங்கியவர்,  முஸ்தபாகண்ணுவின் வீட்டு தொழுவத்தில் ஒரு காலத்தில் வேலை செய்தவன். அவனுக்கா அதை விற்றாய் என இஸ்ராயீலிடம் முஸ்தபாகண்ணு  கோபமாக கேட்க அவனோ 'யார்கிட்ட காய்(காசு) இருக்கோ அவங்களுக்குத் தானே கொடுக்க முடியும். இப்போ உங்க சட்டைல இருக்கற காசு அவனுடையது' என்கிறான்.   

ரைஹானத்தின் அம்மாவான ராவியத்தும் ஒரு காலத்தில் முஸ்தபாகண்ணுவுக்கு பழக்கமாக இருந்தவள் தான். அவரைப் பார்த்ததும் முதலாளி சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே என்கிறாள். உன் மகளுக்கு மாப்பிளை பார்க்கிறேன் என்று சொன்னாய் அல்லவா அதனால்தான் வந்தேன் என்கிறார். மாப்பிள்ளை யாரு என ராவியத் கேட்க, நான்தான் மாப்பிள்ளை என்கிறார் முஸ்தபாகண்ணு. 'நீங்க போயிடுங்க முதலாளி. கிழவனான உங்களுக்கா என் பொண்ணை கொடுப்பேன்' எனச் சொல்ல,'நான் பவுரீன்பிள்ளையின் பேரன். சவ்தா மன்சிலின் காரணவர் ' என்கிறார் முஸ்தபாகண்ணு.  'ஆ.. வலிய காரணவன் ' என்று எச்சிலைக் கூட்டி முற்றத்தில் காரித்துப்புகிறாள் ராவியத். அதில் ஒரு துளி அவரின் காலில் படுகிறது. 

தன்னுடைய வீட்டில் வேலை செய்தவளும் தனக்கு அடிமை போல இருந்தவளுமான ராவியத் அவரை இப்படிச் சொல்லியதில் அவருக்கு ஒரு நடுக்கம் ஏற்பட்டு கீழே விழப்போகிறார். இஸ்ராயீல் அவரைத் தாங்கிப்பிடித்துக்கொண்டு கடற்கரை மணலில் படுக்க வைக்கிறான். ஒரு காலத்தில் அதிகாரமும், காமமும் கொண்டு அரசரைப் போல ஆட்சி செய்த முஸ்தபாகண்ணுவுக்கு  இன்று யாரும் துணையில்லை. சொல்லப்போனால் மனிதரையும், உழைப்பையும், செல்வத்தையும்  மதிக்காத அவருக்கு யாரும் துணை வரப்போவதில்லை. இப்பொழுது அந்த அதபு பிரம்பு கடற்கரை ஓரம் மணலில் கிடக்கிறது. 

====

சாய்வு நாற்காலி

தோப்பில் முஹம்மது மீரான் 

காலச்சுவடு பதிப்பகம் 

சாகித்ய அகாதெமி விருது - 1997