Monday, September 4, 2023

தலைமுறைகள் - நீல.பத்மநாபன்

சிறு குடும்பம் சந்திக்கும் சிக்கல்களில் பெரும்பாலும் ஊர் என்ன சொல்லும், பங்காளிகள் என்ன சொல்லுவார்கள் என்று செய்யும் செலவுகள்தான். பழக்க வழக்கம், பாரம்பரியம் என்கிற பெயரில் ஒவ்வொரு விழாவுக்கும் செய்யும் செலவுக்கு பெரிய தொகையை எடுத்து வைக்க வேண்டும். இன்று இலைமறை, காய்மறையாக இருக்கும் வரதட்சணை அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய செலவை இழுத்து வைத்துள்ளது. 

தலைமுறைகள் நாவலில் திரவியத்துக்கு, இரண்டு அக்கா மற்றும் ஒரு தங்கை. ஆக மூன்று பெண்கள். பெண்கள் சமைந்த கொஞ்ச நாளிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் உள்ள குடும்பம். பெரிய அக்கா உண்ணாமலையை கட்டி கொடுத்ததிலேயே செலவு அதிகமாகி விட, அடுத்த பெண் நாகம்மைக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறார் அப்பா நாகருப்பிள்ளை. குடும்பத்துக்கு அவரின் ஒரு வருமானம் மட்டுமே, அதுவும் விவசாயத்தில் வருவது. 

சொந்த ஊரிலேயே நாகம்மைக்கு ஒரு வரன் வருகிறது, மாப்பிள்ளையின் பெயர் செவந்த பெருமாள். கொஞ்சம் குறைவாக கொடுத்தாலும் போதும் என்று முதலில் சொல்லும் மாப்பிள்ளையின் அம்மா, பின்னர் ஒவ்வொன்றாக வரதட்சிணை கேட்கிறாள். கடனை வாங்கி அவர்கள் கேட்டவாறே கல்யாணம் செய்து வைக்கிறார்கள். செவந்த பெருமாள் வசதியான குடும்பம் என்பதால், நாளைக்குப் பின்னர் நாகம்மைக்கு எந்த குறையும் வராது என திரவியத்தின் குடும்பம் நினைக்கிறது. 





ஆனால், நாலைந்து மாதத்திலேயே நாகம்மையை கொண்டு வந்து மாப்பிள்ளை விட்டுவிடுகிறார். ஊரில் உள்ள பெரிய மனிதர்களின்  பஞ்சாயத்து அவனிடம் பேசிப்பார்க்கிறது. 'அவள் ஒரு ரெண்டும் கெட்ட, பெண்ணே இல்லை ' என்று பழி சுமத்தி விடுகிறான் செவந்த பெருமாள். எவ்வவளவோ பேசிப் பார்த்தும் அவன் அதையே சொல்லுகிறான். நாகம்மை அம்மா வீட்டிலேயே இருக்கிறாள். இந்த கவலையிலேயே குடும்பம் வேதனை அடைகிறது. திரவியமும், தங்கை சாலமும் பள்ளிக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். 

நாகம்மையை விலக்கி வைத்தவன், ஊரில் யாருக்கும் தெரியாமல் அதே ஊரில் உள்ள வடிவுவைத் திருமணம் செய்து கொள்கிறான். ஊர் பஞ்சாயத்து அதை ஒன்றும் கேட்பதில்லை. நாகருப்பிள்ளை கோபத்தில்  தன் பெண்ணை கூட்டிக்கொண்டு போய் செவந்த பெருமாள் வீட்டில் விட்டுவிட்டு வருகிறார். ஆனால் அங்கே எதுவும் உண்ணாமல், அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கும் நாகம்மையை திரும்பவும் கொண்டுவந்து திரவியத்தின் வீட்டில் விட்டு விடுகிறார்கள். 

பெரிய அக்கா உண்ணாமலைக்கு குழந்தை பிறக்கிறது. உண்ணாமலையின் கணவர் சிறிய வருமானம் என்றாலும் மனைவியையும், குழந்தையையும் பாசமாக வைத்திருப்பதைப் பார்த்து, செவந்த பெருமாளின் மீது திரவியத்துக்கு கோபம் வருகிறது. குழந்தை பிறப்பு செலவுகள், அப்புறம் தங்கை விசாலமும் பெரிய பெண் ஆகிறாள். அதற்கு செலவு என ஏகப்பட்ட செலவுகள். 

திரவியம் படித்து முடித்து இப்போது அரசுப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்திருக்கிறான். நாகம்மை அக்காவுக்கு இரண்டாம் கல்யாணம் செய்து விடலாம் என்று நினைக்கிறான். அக்காவுக்கு இரண்டாம் கல்யாணம் செய்தால், தங்கை சாலத்துக்கு வரன் அமையாமல் போய் விடுமோ என பயந்தவன் முதலில் தங்கைக்கு கல்யாணம் செய்து விட்டால் பின்னால் பிரச்சினை வராது என முடிவுக்கு வந்து, சாலத்துக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவளுக்கு வரதட்சிணை கொடுக்க பணம் இல்லாததால், குடியிருக்கும் வீட்டை அவள் பெயருக்கு எழுதி வைக்கிறார்கள். 

நாகம்மை கல்யாணம் வரைக்கும் அந்த வீட்டில் இருந்து விட்டு பின்னர் தான் வேலைக்கு செல்லும் பள்ளிக்கு அருகில் வீடு பார்த்து தங்கிக்கொள்ளலாம் என்று அப்பாவிடம் சொல்ல, அவரும் சம்மதிக்கிறார். திரவியத்துக்கு குற்றாலம் என்னும் நண்பன் அந்த ஊரில் உண்டு. தாய் இல்லாமல், நோயாளியான தகப்பனை குற்றாலம் தான் கவனித்துக்கொள்கிறான். யாருக்கும் பயப்படாமல், உண்மையாகவும், நேர்மையாகவும் அவன் இருப்பதால் ஊரில் அவனைக் கண்டாலே யாருக்கும் ஆகாது. நாகம்மை விசயத்தில் இரண்டாம் திருமணம் செய்த செவந்த பெருமாளை கேட்காத பஞ்சாயத்து இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன என்று பேசுகிறான். கொஞ்சம் திடகாத்திரம் உள்ளவனாக இருப்பதால் அவனை யாரும் எதிர்ப்பதில்லை. நாகம்மையைத் திருமணம் செய்துகொள்ள குற்றாலம் சம்மதிக்கிறான். அவனுக்கு முன்பிருந்தே அவள் மேல் ஒரு விருப்பம் உண்டு.

திரவியம் செவந்த பெருமாளிடம் சென்று, தன் அக்காவுக்கு குற்றாலத்தை திருமணம் செய்து வைக்கப் போகிறோம் என்கிறான். இனிமேல் உங்களுக்கு தான் தலைகுனிவு, கட்டிய மனைவியை வைத்து வாழத் தெரியவில்லை என்று ஊருக்குள் பேசுவார்கள் என்று சீண்டுகிறான். நீங்கள் ஆண் பிள்ளையே இல்லை என்று கோபத்துடன் பேசிவிட்டு வந்து விடுகிறான் திரவியம். அடுத்த நாளிலிருந்து செவந்த பெருமாள் ஒருமாதிரி மனம் கலங்கி, சித்தம் திரிந்தவனாக நடந்து கொள்கிறான். 

திரவியத்தின் ஆச்சி மறைந்துவிட திருமணம் தள்ளிப்போகிறது. ஒருநாள் செவந்த பெருமாள் கிணற்றில் குதித்து விடுகிறான். சித்தம் கலங்கிய அவனை எப்படி காப்பாற்றுவது எனத் தெரியாமல் அவன் மனைவி வடிவு எல்லோரிடமும் கேட்டுப்பார்க்கிறாள். யாரும் உள்ளே இறங்க மறுக்கிறார்கள். அவள் ஓடிப்போய் குற்றாலத்திடம் உதவி கேட்கிறாள். அவனும் சரியென்று கிணற்றில் குதிக்கிறான். ஆனால், குற்றாலம் உள்ளே இறந்த நிலையில் இருக்க செவந்த பெருமாள் உயிருடன் மீட்கப்படுகிறான். செவந்த பெருமாளும், வடிவும் திட்டமிட்டே இதைச் செய்துள்ளார்கள். மனநிலை சரியில்லாதவனை சட்டமும் ஒன்றும் செய்ய முடியாது. கலங்கிய மனதுடன் அந்த ஊரை விட்டு திரவியம் குடும்பம் புறப்படுகிறது. 

===

நாவலில் உண்ணாமலை ஆச்சி கதைகள் சொல்லியே குழந்தைகளை  வளர்க்கிறாள். ஆச்சியின் அண்ணன் குடும்பம் பக்கத்து வீட்டில் வசிக்கிறது. இரண்டு மூன்று மனைவிகள், அவர்களின் பிள்ளைகள் என பெரிய குடும்பம். மனைவி மக்கள் என எல்லோரும் சொத்தை பிரித்துக்கொண்டு  ஊரை விட்டுப் போன பின்னாலும் தனியே வசிக்கிறார் பெரியவர். அவர்கள் வாழ்ந்த கதைகள், பரம்பரை கதைகள் என ஆச்சி சொல்லிக்கொண்டே இருக்கிறாள். 

ஒரு குடும்பத்தின் பழக்க வழக்கங்கள், குடிப் பெருமைகள், சடங்குகள் என விவரிக்கும் தலைமுறைகள் முக்கியமான நாவல். 


No comments:

Post a Comment