Thursday, April 7, 2022

நீர்வழிப் படூஉம் - தேவிபாரதி

சின்ன ஒரு கிராமமாக இருந்தாலும் அங்கே கண்டிப்பாக, நல்லது கெட்டதுகளுக்கு உதவ, அந்நிகழ்வுகளை நடத்தி வைக்க நாவிதரும், வண்ணாரும் இருப்பார்கள். அப்படிப்பட்ட குடிநாவிதராக இருப்பவர் இந்நாவலில் வரும் காரு மாமா. ஆறுமுகம் என்ற இயற்பெயர் ஆரானாகி, பின்னர் காரானாக மாறிவிட்டது. 

தன் மூத்த சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார் காரு மாமா. அவரின் மனைவி ராசம்மா, இரண்டு குழந்தைகளை கூட்டிக் கொண்டு இன்னொருவருடன் போய்விடுகிறார். ராசம்மாவையும்  குழந்தைகளையும் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதன் பின்னர் அவருக்கு வலிப்பு நோய் வந்து சுகமில்லாமல் போய்விடுகிறார். கொஞ்ச வருடங்கள் கழித்து அவர் இறந்தும் போகிறார். அவரின் இளைய சகோதரி முத்துவின் மகனான ராசனின் நினைவுகளில் காரு மாமாவைப் பற்றிய நினைவுகளாக நாவலில் விரிகிறது. 
பாசமலர் படம் வந்த காலத்தில் ஒவ்வொரு வீட்டில் இருந்த அண்ணனும் தங்கையும் தங்களை அந்த பாத்திரங்களாகவே நினைத்துக் கொண்டு ஏங்கிய காலம் அது. பட்ட கதைகளும், படாத கதைகளும் நிரம்பிய காலம். பட்ட கதை என்பது தங்கள் வாழ்வில் துன்பப்பட்டு, துயரப்பட்டு, சில சமயங்களில் சந்தோசத்துடனும் வாழ்ந்த கதை. படாத கதை என்பது, தேவதைகளின், தெய்வங்களின் கதை. எப்போதும் கொண்டாட்டமாகவே இருக்கும் படாத கதைகள். இந்நாவல் பட்ட கதை.  சாயப் பட்டறை, லேத்து பட்டறை என இளைஞர்கள் பட்ட துயரங்களை இந்நாவல் சொல்கிறது.

நல்ல தங்காளும் அவளின் குழந்தைகளும் எந்தக் காலத்திலும் இருந்து கொண்டே இருப்பார்கள் போல இருக்கிறது. தங்கை அவளின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு காரு மாமாவின் ஊரான உடையாம்பாளையத்தில் உள்ள கிணற்றுக்கு அருகில் மாய்த்துக் கொள்ள நிற்கிறாள். அந்த நேரத்தில் ஒரு மாயம் போல அந்த பக்கம் வந்த காரு மாமா, அவர்களை கண்டு அணைத்துக் கொள்கிறார். தெய்வமே என்று அழுகிறார்.

தன் தங்கைக்கு வந்த மாப்பிள்ளை ஆசிரியர் என்பதால், கொஞ்சமாவது நகைகள் போட வேண்டுமென அவரின் அம்மா சொல்ல, வளையல், கம்மல் என எப்படியோ சம்பாரித்து தங்கைக்கு போட்டு அனுப்பி வைக்கிறார். ஊரில் காரு மாமாவுக்கு நல்ல பெயர். அவரின் இறுதி பயணத்தில் மழை வருகிறது. நல்ல மனுஷனுக்கு 'பூவுண்டு, நீருண்டு' எனச் சொல்கிறார்கள் மக்கள்.  

பாசமலர் சிவாஜி போலவே, உன் மகனுக்கு என் பிள்ளையை கட்டிக்கோ என்று தங்கையிடம் சொல்கிறார். ஆனால் அவரின் மனைவியோ குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய்விடுகிறார். அவர் இறக்கும் வரையிலும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிவதில்லை. உடையாம்பாளையத்தின் அந்த மண் வீட்டில் ஒரு நாள் இறந்து போகிறார் காரு மாமா. நல்லதுக்கு போகாட்டாலும், கெட்டதுக்கு போகணும் என்று சொல்வது போல ஒவ்வொருவராக வருகிறார்கள். காரியங்கள் செய்ய அவரின் மகனும் வந்து விடுகிறான். 

ஒரு வாரம் கழித்து ராசம்மா அத்தை, வறுமையில் மெலிந்து போன தன் மகளுடன் காரு மாமா வீட்டுக்கு வருகிறாள். தாலிச் சடங்கு நடக்கிறது. பின்னர் கிளம்புகிறேன் என்பவளிடம் இரண்டு நாட்கள் இருந்து விட்டு போகட்டும் எனச் சொல்ல சரி என்கிறாள். அன்றிரவு தான் பட்ட கதைகளை சொல்கிறாள். மகனும் தன்னை மதிப்பதில்லை, இந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து விடலாம் என்றாலும், அதற்கும் வசதி இல்லையே என புலம்புகிறாள். தான் செய்த தவறை எண்ணி எண்ணி அழுகிறாள் அத்தை. 

இந்நாவலில் கதை சொல்லியான ராசனின் அம்மா முத்து தன் அண்ணனின் மனைவியான ராசம்மாவுடன் இணைந்து தாயம் ஆடுகிறாள். தாயத்தில் வெல்ல இரண்டு தேவைப்படும்போது, அதை உருட்டினால் உன் பொண்ணை என் மகனுக்கு கட்டிக்கிறேன் என்கிறாள். தாயம் உருட்டுவதில் வல்லவளான ராசம்மா தாயக்கட்டையை உருட்டத் தொடங்குகிறாள். 

***

வறுமையும் உறவுகளும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு மனிதனை துயரில் ஆழ்த்துகிறது. இந்த வாழ்க்கை, ஆற்றில் செல்லும் புணை போல தள்ளாடிக் கொண்டே செல்கிறது. அவ்வளவு பிரச்சினைகளிலும், ஒரு சிரிப்பு, நல்ல உணவு போன்றவை, ஒரு பூ மலர்தல் போல நாளையை பற்றிய நம்பிக்கையை உண்டாக்குகிறது. காணாமல் போன தன் மகள் என்றேனும் வருவாள் என வளையலும், கொலுசும் எடுத்த வைத்த தகப்பன் காரு மாமா வைத்திருந்த நம்பிக்கை. ஆம் இவ்வாழ்க்கை நீர்வழிப் படூஉம். 


1 comment:

  1. நல்ல விமர்சனம் இளங்கோ

    ReplyDelete