எங்கள் பிள்ளை ஹரி இப்பொழுது ஐந்தாம் வகுப்பு. கீழே உள்ள புகைப்படம் எட்டு வருடங்கள் முன்பு குழந்தையாக இருந்தபோது எடுத்தது. அவன் கையில் இருக்கும் புத்தகம் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் 'கால் முளைத்த கதைகள்'. அப்பொழுது அந்தப் புத்தகம் அவனுக்கு கதை சொல்வதற்காக நான் வாங்கியது. பலமுறை அதில் உள்ள கதைகளை அவனுக்குப் படிததுச் சொல்லியிருக்கிறோம்.
பின்னர் தெனாலி ராமன், பீர்பால், மற்றும் பஞ்ச தந்திரக் கதைகள் என நகைச்சுவை புத்தகங்களில் அவனுக்கு கதைகள் சொல்லி இருக்கிறோம். பள்ளி செல்லத் தொடங்கிய பின்னர் அமர் சித்திர கதைகள் வாங்கித் தர, சித்திரப் படம் அவனுக்குப் பிடித்து வாசிக்க முயற்சி செய்தான். புத்தக விழாக்களுக்கு அழைத்துச் சென்று அவனையே எடுக்கச் சொல்லி வாங்கி வந்துள்ளோம். சிறார் எழுத்தாளர்கள் யூமா வாசுகி, விழியன் போன்றோரின் புத்தகங்கள் தும்பி, றெக்கை போன்ற மாத இதழ்கள் என படிக்க ஆரம்பித்தான். இப்பொழுது ஜெயமோகனின் 'பனி மனிதன்' நாவலை நான்கே நாளில் முடித்துவிடுகிறான்.
இதை இங்கே சொல்லக் காரணம், படிப்படியாக அவர்களை வாசிப்புக்கு பழக்கப் படுத்த வேண்டும் என்றுதான். ஒரே நாளில் அவர்களை வாசிக்க வைக்க முடியாது. ஒரு புத்தகம் படிக்கவில்லை என்றால், அதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து புத்தகம் வாங்க வேண்டும். படிக்காமல் விட்ட புத்தகத்தை பின்னர் நிச்சயம் படிப்பார்கள்.
தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் பேச்சு மற்றும் பயிற்று மொழி ஆங்கிலத்தில் இருக்கும். தமிழ் மொழியைத் தள்ளியே வைத்திருப்பார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. போன முறை பெற்றோர் சந்திப்பில் ஒரு தந்தை, ஆங்கிலத்தில் தன் குழந்தை சிறப்பாக பேச மறுக்கிறாள், நீங்கள் இன்னும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் சொன்னார். அந்தக் குழந்தை படிப்பது மூன்றாம் வகுப்பு :(. இப்படி பெற்றோர் இருப்பதால் , பள்ளி நிர்வாகத்தால் ஆங்கிலத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சரி தமிழ் படிக்க வைக்க என்ன செய்யலாம்?
* சின்ன வயதில் குழந்தைகள் புத்தகத்தை கிழித்து விடுவார்கள் என்று நாம் புத்தகம் வாங்கித் தராமல் இருக்கிறோம். கிழித்தாலும் பரவாயில்லை, அவர்களைப் படிக்க வைக்க முயல வேண்டும். கெட்டியான பக்கங்கள் உள்ள வண்ண பட கதைகள் கொண்ட சிறு புத்தகங்கள் உண்டு. அவற்றை வாங்கித் தரலாம்.
* அவர்களைப் படி படி என்று சொல்லிவிட்டு நாம் தொலைக்காட்சி மற்றும் போனில் மூழ்க கூடாது. அவர்களுடன் சேர்ந்து நாமும் படிக்க வேண்டும். குறைந்தபட்சம் நாளிதழ் படிக்கலாம்.
* அவர்கள் படிக்கவில்லை என புத்தகங்கள் வாங்குவதை நிறுத்த கூடாது. இந்த புத்தகம் இல்லை என்றால் அடுத்த புத்தகங்களை விரும்பக் கூடும்.
* ஒரே மாதிரியான புத்தகங்களை வாங்காமல், நகைச்சுவை(தெனாலி போல்), வரலாறு, அமர் சித்திரக் கதைகள் என முயற்சி செய்யலாம்.
* புத்தக விழாக்களுக்கு சென்று அவர்களைத் தேர்வு செய்ய சொல்லலாம். கண்டிப்பாக படிப்பார்கள்.
* சில புதிய வார்த்தைகள் கதைகளில் வரும். அவர்கள் அதற்கு அர்த்தம் கேட்கும்போது சொல்லிக்கொடுக்க வேண்டும். இது கூட தெரியாதா என அவர்களைத் திட்ட கூடாது.
இப்படியெல்லாம் அவர்கள் படிப்பதால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம்.
* தமிழ் என்னும் மிகச் சிறப்பான மொழியில் அவர்கள் படிக்கிறார்கள். தமிழ் வாழ்க என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் எந்தப் பொருளும் இல்லை. நம் வீட்டுப் பிள்ளைகள் தாய் மொழியில் படிக்க வேண்டும்.
* அவர்களின் மொழி வளம் பெருகும். நிலா/சந்திரன்/மதி/திங்கள் - ஆகிய வார்த்தைகள் குறிப்பது ஒன்றையே என்பது நிறைய படிக்க தெளிந்து வரும்.
* பாடப் புத்தகம் தாண்டிய அறிவைப் பெறுவார்கள்.
* இலக்கியம் தீர்வுகளை தராது, ஆனால் இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும். சிக்கலான சமயங்களில் முடிவுகள் எடுக்க பிற்காலத்தில் உதவும்.
* கதைப் புத்தகங்கள் படித்தால், பாடப் புத்தகத்தில் ஆர்வம் இருக்காது எனச் சிலர் நினைக்கலாம். உண்மையில் பாடப் புத்தகம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது வாசிப்பு பழக்கம்.
இந்த தனிமை நாட்களில் வெளியே சென்று புத்தகம் வாங்கவோ, ஆன்லைனில் வாங்கவோ முடியாது. குறைந்தபட்சம் அவர்களிடம் பள்ளி தமிழ் பாடப் புத்தகம் இருந்தால் அதிலிருந்து ஆரம்பிக்கலாம். அதை வாசிக்க சொல்லி பிழைகளைத் திருத்துங்கள். தமிழில் படிப்பது எளிது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
No comments:
Post a Comment