குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் லட்சுமி, ஐராவதம், உச்சஸ்வரன் எல்லாம் உண்டாயின. ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது. உடனே அதற்கு மாற்றான அமிருதமும் அதிலேயேதான்.
--
ஜகதா கல்யாணமாகிய புது மணப்பெண். கணவன் வீட்டில் இருக்கிறாள். கல்யாணம் முடிந்ததும், கணவன் உடனே வெளியூரில் வேலைக்குச் சேர்கிறான். வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும், தன் புதுக்கணவனுக்குச் சொல்ல கடிதம் எழுதுகிறாள். அந்தக் கடிதமே பாற்கடல்.
நான்கு தலைமுறைகள் ஒரே வீட்டில் வாழும் குடும்பம். கூட்டு வாழ்வுக்கே உரித்தான மன வருத்தங்கள், சிறு சிறு சலசலப்புகள் இந்தக் குடும்பத்திலும் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் ஜகதாவின் மாமியார் தாங்கிப்பிடிக்கிறார். எல்லாக் குடும்பத்திலும் அப்படி ஒருவர் உண்டுதானே.
எதையாவது தெரிந்துகொண்டால் அதை எங்காவது எழுதிவைத்து விடும் பழக்கம் கொண்டவள் ஜகதா. "படித்த பெண் வேறு. அதனால் புருசனுக்கு கடிதம் எழுதுகிறாள்" என்று அவளைச் சொல்லுகிறார்கள். தன் அம்மா வந்ததை, தீபாவளிக்கு அழைத்ததை, புது அம்மாவான மாமியார் பேசுவதை, குடும்ப அங்கத்தினர்களை, அவளின் ஏக்கத்தை, கண்ணீரை, ஒருநாள் மாமியார் அம்மா தன் கால்களைப் பிடித்து மருதாணி பூசியதை, கணவனின் பிரிவை 'கிணத்து தண்ணி எங்கேயும் போய்டாது' என்று மாமியார் சொன்னதை என ஒவ்வொன்றைப் பற்றியும் எழுதுகிறாள்.
அது தீபாவளி சமயம். மேல்மாடியில் படுத்த படுக்கையாயிருக்கும் பாட்டியைக் கீழே அழைத்து வந்து குளிக்க வைக்கிறார்கள். அதற்குப் பின்னர், ஒரு குழந்தையின் திடீரென்ற அழுகுரல் கேட்கிறது. எல்லோரும் அடித்துப்பிடித்து ஓடுகிறார்கள். அந்தக் குழந்தை, அந்த வீட்டின் இன்னொரு மருமகளான காந்தியைக் காட்டி 'அம்மா என்னை அடித்துவிட்டாள்' என்று அழுகிறது. மாமியார் மருமகளைத் திட்டுகிறாள். எதற்கு அடித்தாய் என்று கேட்டதற்கு, ஒரு மத்தாப்பு குச்சியைக் கொழுத்திக் கொண்டு என் முன்னால் வந்தான் பையன் என்கிறாள் மருமகள்.
தன் கணவன் பட்டாசுக் கடை விபத்தில் இறந்து போனதால், காந்திக்கு பட்டாசுகள் என்றாலே பிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தையை அடித்திருக்கிறாள். மாமியார் அவளிடம், 'நல்ல நாளும் அதுவுமா எதுக்கு குழந்தைய அடிக்கிறே. என் பையன் போனதுக்கு குழந்தை என்ன பண்ணுவான். எனக்கு மட்டும் துக்கம் இல்லையா?. எல்லாத்தையும் மறந்துட்டு நான் இருக்கலையா' என்று கேட்கிறாள். உடனே காந்தி, 'உங்களுக்கு பிள்ளை போனதும் எனக்கு புருசன் போனதும் ஒண்ணாகிடுமா?' என்று கேட்கிறாள். அவள் கேட்ட கேள்வியால் எல்லோரும் வாயடைத்துப் போகிறார்கள். மாமியார் ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொண்டு அழுகிறாள். மருமகளைத் தேற்றுகிறாள்.
ஜகதா கடைசிப் பத்தியில் இப்படி எழுதுகிறாள்;
குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் லட்சுமி, ஐராவதம், உச்சஸ்வரன் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் நீங்கள் எனக்கு கிட்டினீர்கள். ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது. உடனே அதற்கு மாற்றான அமிருதமும் அதிலேயேதான்..
--
ஜகதா இன்னும் கடிதத்தை முடிக்கவில்லை. குடும்பம் ஒரு பாற்கடல் போல. அதனை ஒரு சிறு கடிதத்தில் அடைக்க முடியுமா. ஜகதா இன்னும் எழுதிக்கொண்டிருப்பாள்.
ஓரிடத்தில், 'இப்பொழுது நால்வராய் இருக்கிறீர்கள். முன்பு ஐவராய் இருந்தவர்கள்தானே?' என்று எழுதுகிறாள். தலையும் புரியாமல், வாலும் புரியாமல் படித்துக்கொண்டே வந்தால், இறந்து போன காந்தியின் கணவனோடு சேர்த்து அந்த வீட்டில் ஐந்து பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள்.
இணையத்தில் கதையைப் படிக்க;
No comments:
Post a Comment