Monday, December 24, 2018

நிழலின் தனிமை - தேவிபாரதி

மனித மனத்தின் ததும்பல்களையும் சீற்றத்தையும் பகையையும் வேட்கையையும் தந்திரத்தையும் அவமானத்தையும் தோல்வியையும் தீவிரத்துடன் வெளிப்படுத்தும் படைப்பு இது.
- சுகுமாரன் 

--

ஏதோ ஒரு நேரத்தில் சில வஞ்சினங்களை உரைத்திருப்போம் நாம். அது பணப்பிரச்சினை, காதல் தோல்வி எனப் பல காரணங்களால் வந்திருக்கலாம். காலங்கள் போகப்போக அவற்றை நாம் மறந்திருப்போம். சில மனிதர்கள் எப்பொழுதும் அதை மறப்பதில்லை. இறக்கும் வரையிலும் அந்த வஞ்சினத்தை நிறைவேற்ற முடியாமல் உள்ளம் தகிக்கும் கையாலாகாத மனிதர்கள் அதிகம். நினைத்துப் பார்த்தால் எல்லாவற்றுக்கும் விடையாய் இருப்பது மரணம் மட்டுமே. 

மின்மயானத்தில் ஒலிக்கப்படும் பாடலில் இந்த வரிகள் உள்ளது. மரணத்தினால் சில கோபங்கள் தீரும். மரணத்தினால் சில சாபங்கள் தீரும். 

--

நாவலின் கதாநாயகன் அரசுப்பள்ளியில் பணியாளர். ஒரு ஊருக்கு மாற்றலாகப் போகும்போது கருணாகரன் எனும் மனிதரைச் சந்திக்க நேர்கிறது. பல வருடங்களாக கருணாகரனைப் பழி தீர்க்க காத்திருக்கிறான். 

கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வரும் கருணாகரன், பணப்பிரச்சினையில் நாயகனின் தமக்கை சாரதாவை பள்ளி செல்லும் வயதிலேயே கெடுத்து விடுகிறான். சாரதாவிடம், நீயும் நானும் சேர்ந்து ஒருநாள் அவனைக் கொல்லுவோம் என்று தேற்றுகிறான் சிறுவனான நாயகன். காலம் கனிந்து இன்று அவனை நேரில் பார்த்ததை, சாரதாவிடம் சொல்கிறான். இருவரும் முடிவு செய்து, அவனுக்கு ஒரு மொட்டைக்கடிதம் போட்டு அச்சுறுத்தலாம் என முடிவு செய்கிறார்கள். முன்னால் எந்த ஊரில் அவர்கள் இருந்தார்களோ, அந்த ஊரிலிருந்தே தபால் பெட்டியில் போடுகிறான். 



அலுவல் வேலையாக கருணாகரன் வீட்டுக்குச் செல்பவன், தான் எழுதிய கடிதம் கிடைத்ததா, இல்லையா என்பதை அறிய முடிவதில்லை. பின்னர் கருணாகரனுடன் அவனுக்கு நட்பு வளர்கிறது. கருணாகரனின் பெண் சுலோச்சனா அவனை  விரும்புகிறாள். இருவரும் பழகுவதை அறிந்த சாரதா அவனைக் கண்டிக்கிறாள். ஒரு கொலையில் கருணாகரனின் மகன் சிறை செல்ல நேர்கிறது. இப்பொழுது அந்த குடும்பத்துக்கு கதையின் நாயகன்தான் துணை. யாரைக் கொல்ல வேண்டும் என்று வந்தானோ, அவனது வீட்டுக் காரியங்களை நாயகன்தான் பார்த்துக்கொண்டிருக்கிறான். 

சுலோச்சனாவுக்கு வேறிடத்தில் மணம், நாயகன் ஊரை விட்டுப்போதல், அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு என கதை நகர்கிறது. இறுதியில், கருணாகரனைச் சந்திக்க நேர்கிறது. உடம்பு முடியாமல் எப்பொழுது வேண்டுமானாலும் இறந்து போகலாம் என இருக்கிறான். சாரதா அவனைச் சந்திக்க வருகிறாள். அவனைப் பார்த்து விட்டு வருபவள், மிகச் சாதாரணமாக 'இந்தக் கருணாகரன் வேறு யாரோ. இது அவனில்லை' என்று, நாயகனிடம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறாள். 

---

கருணாகரனைச் சாரதா பார்க்கப் போகும்பொழுது, அறைக்கு வெளியே பயத்துடனே நிற்கிறான் நாயகன். சாரதா அவனை ஏதாவது செய்துவிடுவாள் என நினைத்துக்கொண்டிருக்கும்போது, வெளியே வந்தவள் அவனில்லை என்று சொல்லும் காட்சியில் மானுடத்தின் பெருங்கருணை வெளிப்படுகிறது. உண்மையில் அந்தக் கருணை இன்னும் இருப்பதால்தான் இவ்வுலகும், நாமும் வாழ முடிகிறது. 

மேல்சாதி, கீழ்சாதி அடுக்குகள் நிரம்பிய கிராமத்தில் பிறந்ததால் இந்தக் கதையின் மாந்தர்கள் நெருக்கமாக அறிந்தவர்களாக இருந்தார்கள். சிறு வயதுப்பிள்ளைகள் கூட, வயது முதிர்ந்த ஒரு நாவிதரையோ, வண்ணாரையோ பெயர் சொல்லி அழைக்கலாம் கிராமங்களில். அதுபோலவே குன்னடையாக் கவுண்டன் கதையும். என்னுடைய சிறுவயதில் ஒரு பெரியவர் 10 நாட்களுக்கு மேலாக வந்து கதை சொல்லிவிட்டுப் போவார். கோயில் திடலில் உக்காருவதற்கு கோணிச்சாக்கும், போர்த்துவதற்கு போர்வையும் கொண்டுபோய் இரவில் தூங்கி விழுந்த நாட்கள் அவை. அந்நாட்களை நினைவுபடுத்தியது நாவல். 

வஞ்சத்தையும், இயலாமையையும், தனிமையையும் வென்று நிற்கிறது காலமெனும் வெளி. 


No comments:

Post a Comment