Wednesday, April 17, 2013

இரை விழுங்கும் பல்லிகள்

அதிகாலையில் அடுத்த அறைக்குச் செல்ல மின் விளக்கு பொத்தானை அழுத்தினேன். அறையில் ஏதோ ஒரு பக்கம் பதுங்கி இருந்த கரப்பான் பூச்சி ஒன்று காலுக்கடியில் ஓடியது. பெரியதும் இல்லை, ரொம்ப சின்ன பூச்சியும் இல்லை. என் காலைக் கடந்து அது மூலைக்கு ஓடியது. அங்கே ஒரு பல்லி இருப்பது அதுக்கு தெரியவில்லை போலும். அந்தப் பல்லியும் சின்னதுதான். பதுங்கி இருந்த பல்லி, அந்த கரப்பான் பூச்சியின் தலையைப் பிடித்துக் கொண்டது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கத் தொடங்கியது. இரண்டொரு நிமிடத்தில், மொத்தமும் பல்லியின் வயிற்றுக்குள் சென்று விட்டது. பல்லி வீங்கிய வயிற்றுடன் சுவர் மேலே ஏறி விட்டது. 

இந்தப் பல்லி என்று இல்லை. சில வருடங்களுக்கு முன், ஒரு பெரிய மலைப்பாம்பு, ஒரு மானை விழுங்குவதைப் பார்க்க நேர்ந்தது. அப்படியே இறுக்கி பிடித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போனது மான். பாம்பு இறுக்கிப் பிடிக்கும் வேகத்தில், மானின் எலும்புகள் உடைந்து எளிதாக உள்ளே போய் விடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

நம்மைப் போல தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, ஒரு நாளைக்கு மூன்று வேளை என்றோ அவைகளுக்கு வாய்க்கவில்லை. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு உணவு கிடைக்காமல் போக கூடும் என்ற பயம் அவைகளுக்கு இருக்கக் கூடும். மென்று ருசித்து சாப்பிட எல்லாம் நேரம் இருப்பதில்லை. இரை தப்பி விடக் கூடாது என்ற ஒரே பயம்தான் அவைகளுக்கு.

பாம்பு, பல்லி. முதலை போன்ற உயிர்கள் கூட தன் பசிக்கு மட்டும் உணவை எடுத்துக் கொள்கிறது. மனிதன் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவன். பேராசை கொண்டவன். சக மனிதனையே விழுங்கும் சக்தி உடையவன் மனிதன். பைன் பியூச்சர், ஈமுக் கோழி என்று மக்களை ஏமாற்றி விழுங்கக் கூடியவர்கள் மனிதர்கள். 

மனிதனைப் பார்க்க, இந்தப் பல்லிகளும், பாம்புகளும் எவ்வளவோ உயர்ந்தவை. ஒரு போதும் அது தன் சக இனத்தை விழுங்குவதும் இல்லை, காட்டிக் கொடுப்பதும் இல்லை.


7 comments:

  1. மனிதனைப் பார்க்க, இந்தப் பல்லிகளும், பாம்புகளும் எவ்வளவோ உயர்ந்தவை. ஒரு போதும் அது தன் சக இனத்தை விழுங்குவதும் இல்லை, காட்டிக் கொடுப்பதும் இல்லை.//

    மிகச் சரியான வாசகம்
    இதைத்தான் பட்டுக்கோட்டையார் கூட
    மிக மிக எளிமையாக அருமையாக
    "மனுசனை மனுசன் சாப்பிடறாண்டா " என்பார்
    மனம் கவர்ந்த சிந்தனை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //பேராசை கொண்டவன். சக மனிதனையே விழுங்கும் சக்தி உடையவன் மனிதன்.//
    வாஸ்தவம் தான்...

    ReplyDelete
  3. அதுவும் இந்தக் காலத்தில் சொல்லவே வேண்டாம்... பக்கத்தில் உள்ளவர்கள் தான் விழுங்க காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் போதும்...

    மற்றபடி பைன் பியூச்சர், ஈமுக் கோழி எல்லாம் மெத்த படித்தவர்கள் உட்பட நீங்கள் குறிப்பிட்டது போல் பேராசையை விழுங்கிய குற்றவாளிகள் - அறியாமையால்...

    ReplyDelete
  4. மனிதனைப் பார்க்க, இந்தப் பல்லிகளும், பாம்புகளும் எவ்வளவோ உயர்ந்தவை. ஒரு போதும் அது தன் சக இனத்தை விழுங்குவதும் இல்லை, காட்டிக் கொடுப்பதும் இல்லை.

    மனிதனே பூமியை அழிக்க அச்சாரம் போடுகிறான்..

    ReplyDelete
  5. பொருத்தமான கதை

    ReplyDelete
  6. பொருத்தமான கதை

    ReplyDelete