Friday, January 4, 2019

தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தாத்ரிக்குட்டி என்னும் பெண்ணால் கேரள மாநிலத்தில் புயல் வீசியது. சடங்குகளும், நம்பிக்கைகளும் பெண்களுக்கு எதிராக இருந்த காலகட்டம். பெண்கள் மார்பின் மேல் போடும் சீலைத்துணிக்கும் வரி விதித்த கொடுமை நடந்த காலம். 

அந்தக் காலத்தின் சாட்சியாய் வரலாற்றில் வாழ்ந்து வருகிறாள் தாத்ரி. தாத்ரிக்குட்டியை சிலர் கலகக்காரியாகவும், சிலர் கீழ்ப்பிறவியாகவும் எண்ணினர். அவ்வாறு அவர்கள் நினைக்க என்ன காரணம்?. 

கேரளாவின் நம்பூதிரி குடும்பங்களில், குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே சொத்துக்கு அதிபதி. போலவே மூசாம்பூரி என்றழைக்கப்படும் மூத்த மகன் மட்டுமே, மற்ற நம்பூதிரிக் குடும்பங்களில் உள்ள பெண்ணை மணக்க முடியும். மற்ற ஆண்பிள்ளைகள் வேறு சாதிப் பெண்களைத்தான் மணக்க வேண்டும். இதனால், நம்பூதிரி குடும்பங்களில் கல்யாணமாகாத பெண்கள் நிறையப் பேர் இருந்திருக்கின்றனர். ஒரு மூத்த நம்பூதிரிக்கு பல பெண்களைக் கட்டிக் கொடுத்திருக்கின்றனர். போலவே, சிறு வயது பெண்ணானாலும், வயதான நம்பூதிரிக்கு வேறு வழியில்லாமல் கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். 

கல்யாணம் செய்து கொண்டு நம்பூதிரி கணவன் வீட்டுக்கு வரும் பெண் வேறு ஆண் மக்களுடன் பழக கூடாது. அப்படித் தொடர்பு வைத்திருப்பதாக அறிந்தால், ஸ்மார்த்தர்கள் எனப்படும் சபை அவளை விசாரிக்கும். தனியறையில் அடைத்து வைத்து விசாரணை செய்வார்கள். விசாரணை செய்வதை 'ஸ்மார்த்த விசாரம்' என அழைத்தார்கள். இதற்கு அப்பொழுது ஆண்ட மகாராஜாக்களின் அனுமதியும் உண்டு. விசாரணை முடிவில், பெண் மேல் தவறிருப்பதாக நிரூபித்தால் பெண்ணை வீட்டை விட்டு ஒதுக்கி, பிண்டம்(இறந்தவளாக நினைத்து செய்வது) வைத்து விடுவார்கள். அந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவனை(வைத்திருந்தவர்களை), குலத்தை விட்டு நீக்கி(பிரஷ்டு) ஊரை விட்டு அனுப்பிவிடுவார்கள். 

இந்த 'ஸ்மார்த்த விசாரம்' அமைப்பைத்தான் தாத்ரிக்குட்டி ஆயுதமாக பயன்படுத்தினாள். பெண்களைத் தண்டிக்க ஏற்படுத்திய இந்த அமைப்பின் விதிகளைத் திருப்பி, அவ்விதிகளை உருவாக்கிய ஆண்களின் மீதே ஏவினாள். அவர்களைப் பழிவாங்கவும் செய்தாள். விதிகளை மீறமுடியாமல் அவர்கள் பலிகடா ஆனார்கள். தாத்ரிக்கு முன்பும், பல நம்பூதிரிப் பெண்கள் விசாரத்துக்கு உட்பட்டிருந்த போதிலும், அவற்றில் ஆண்கள் தண்டனைக்கு ஆட்பட்டது குறைவு. தாத்ரி விசாரத்திலே, 64 ஆண்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். 

*****

பெண்கள் கல்விபெறாத அந்தக் காலத்தில் தாத்ரிக்குட்டி கற்றவளாக இருந்தாள். அவளைக் கல்யாணம் செய்தது குரியேடத்து நம்பூதிரி. மூத்த நம்பூதிரி திருமணம் செய்ய முடியாமல் நோயாளியாக இருந்தால், சில விதிகளின் படி இரண்டாம் நம்பூதிரி திருமணம் செய்துகொள்ள முடியும். அவ்வாறு இரண்டாம் நம்பூதிரியை மணந்து குரியேடத்து இல்லத்துக்கு வந்தவள் தாத்ரி. முதலிரவில் தன் கணவனுக்காக காத்திருந்தவளிடம், அவளை அடைய வருகிறார் அவளின் அப்பா வயதுள்ள மூத்த நம்பூதிரி. அப்பொழுதே அவள் நொறுங்கிப்போகிறாள். ஆண்களைப் பழிவாங்க வேண்டும் என அவள் அப்பொழுதே நினைத்திருக்கலாம். 




நம்பூதிரிப் பெண்களுக்கு பணிவிடை செய்ய பெண்கள் உண்டு. அவர்கள் தாசிகள் என அழைக்கப்பட்டனர். வெளியே போனால், தாசிகள் சூழக் குடை பிடித்துக்கொண்டு, முகத்தை முக்காடிட்டுத்தான் செல்ல முடியும். நம்பூதிரிப் பெண்களை விசாரிக்க வேண்டுமானால், யாராவது ஒருத்தர் புகார் சொல்ல வேண்டும். அப்படிப் புகார் சொல்கிறார், குரியேடத்து மனைக்கு அடுத்த வீடான கண்டஞ்சாத நம்பூதிரி. தாத்ரியே அவரிடம், புகார் சொல்லச் சொன்னதாக சொல்கிறார்கள். புகார் கொடுத்த பின்னர் பணிப்பெண்களான தாசிகளிடம் விசாரணை (தாசி விசாரம்) நடைபெறுகிறது. அதில் உண்மை இருந்ததால், தாத்ரியை அறைக்குள் அடைக்கிறார்கள். அவள் இனிமேல் 'சாதனம்' என்று அழைக்கப்படுவாள். அவளிடம் விசாரித்து தப்பு செய்த ஆண்கள் மற்றும் அவர்களின் அடையாளங்களை சபை கேட்கும். அனைத்தும் சரியாக இருந்தால் அந்த ஆண்மகன் பிரஷ்டு செய்யப்படுவார். 

தாத்ரியின் விசாரம் நாற்பது நாட்களுக்கு நீள்கிறது. தாத்ரி கொலை செய்யப்படக்கூடும் என்றெண்ணி ஒரே இடத்தில் நடக்காமல் மூன்று இடங்களில் விசாரம் நடக்கிறது. மிகச் சரியாக தன்னுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை அடையாளம் காட்டுகிறாள். அவ்வாறு அறுபத்திநான்கு ஆண்களைச் சொன்னதும், அறுபத்தியைந்து ஆளைச் சொல்லாமல் ஒரு மோதிரம் மட்டும் காட்டுகிறாள். அந்த மோதிரத்தைப் பார்த்ததும் கொச்சி ராஜா உட்பட ஸ்மார்த்தர்கள் அனைவரும் ஆடிப்போகிறார்கள். தாத்ரி அதோடு முடித்துக்கொள்கிறாள். 

64 ஆண்களில், தாத்ரியின் தந்தை சகோதரர் கணவன்மார் உட்பட, சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்கள் பலரும் இருக்கிறார்கள். நல்லவர்கள், பெரிய மதிப்பு மிக்கவர்கள், பணக்காரர், ஏழை என தாத்ரி யாரிடமும் பாகுபாடு காட்டவில்லை. அதனால்தான் அவளைச் இச்சமூகம் இழிந்தவளாக தன் வரலாற்றில் இழிவுபடுத்துகிறது. 64 பேரில் இருவர் முன்னமே இறந்து போயிருந்ததால், மீதி உள்ளவர்கள் பிரஷ்டு விதிக்கப்படுகிறார்கள். தாத்ரிக்கு ஒரு ஆற்றின் கரையில் கொஞ்சம் இடம் கொடுத்து ஒதுக்கப்படுகிறாள். 

****

அதற்குப்பின்னர் தாத்ரிக்குட்டி ஒருவரை மணந்ததாகவும், அவளுக்குப் பிள்ளைகள் பிறந்ததாகவும் செவிவழி செய்திகள் உலவுகின்றன. 

தாத்ரி, அவளது விசாரத்துக்குப் பின்னர் சில சமூக மாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறாள். நம்பூதிரிப் பெண்களுக்கான சங்கம் ஒன்று நிறுவப்பட்டு, அதில் அவர்களின் நலனை முன்னிறுத்துகிறார்கள். நம்பூதிரி குடும்பச் சொத்துக்களின் மீதும் சில கட்டுப்பாடுகளை நீக்குகிறார்கள். 

****

பிரஷ்டு செய்யப்பட்டவர்களில், ஒரே ஒருவரே தன் மேலிருந்த பழியை நீக்க முனைகிறார். அவர் கதகளி கலைஞரான சங்கரப்பணிக்கர். பிரஷ்டு செய்யப்பட்டதால், அப்போதைய ரசிகர்களான நம்பூதிரிகள், மகாராஜாக்கள் சூழ்ந்த அவையில் அவர் ஆட முடியாது. எனவே, ஏழை மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் சில மாற்றங்களை தன் ஆட்டத்தில் செய்கிறார். தாத்ரி கலகத்தால் விளைந்த நன்மை என இதைச் சொல்கிறார்கள்.  பல வருடங்களுக்குப் பின்னர் பெரும்பெயர் பெற்ற அவர், ராஜாவின் முன்பும், பிரஷ்டை நீக்கி அரசவையில் ஆடுகிறார். 

****

தாத்ரிக்குட்டியின் குரல், சென்ற நூற்றாண்டில் தன்னை அடக்கி வைத்து ஆண்ட ஆண்களுக்கு எதிரான ஒரு தனித்த கலகக்காரியின் குரல். 

ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதியதை யூமா வாசுகி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 


Monday, December 31, 2018

பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்

குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் லட்சுமி, ஐராவதம், உச்சஸ்வரன் எல்லாம் உண்டாயின. ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது. உடனே அதற்கு மாற்றான அமிருதமும் அதிலேயேதான்.

--

ஜகதா கல்யாணமாகிய புது மணப்பெண். கணவன் வீட்டில் இருக்கிறாள். கல்யாணம் முடிந்ததும், கணவன் உடனே வெளியூரில் வேலைக்குச் சேர்கிறான். வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும், தன் புதுக்கணவனுக்குச் சொல்ல கடிதம் எழுதுகிறாள். அந்தக் கடிதமே பாற்கடல். 

நான்கு தலைமுறைகள் ஒரே வீட்டில் வாழும் குடும்பம். கூட்டு வாழ்வுக்கே உரித்தான மன வருத்தங்கள், சிறு சிறு சலசலப்புகள் இந்தக் குடும்பத்திலும் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் ஜகதாவின் மாமியார் தாங்கிப்பிடிக்கிறார். எல்லாக் குடும்பத்திலும் அப்படி ஒருவர் உண்டுதானே. 

எதையாவது தெரிந்துகொண்டால் அதை எங்காவது எழுதிவைத்து விடும் பழக்கம் கொண்டவள் ஜகதா. "படித்த பெண் வேறு. அதனால் புருசனுக்கு கடிதம் எழுதுகிறாள்" என்று அவளைச் சொல்லுகிறார்கள். தன் அம்மா வந்ததை, தீபாவளிக்கு அழைத்ததை, புது அம்மாவான மாமியார் பேசுவதை, குடும்ப அங்கத்தினர்களை,  அவளின் ஏக்கத்தை, கண்ணீரை, ஒருநாள் மாமியார் அம்மா தன் கால்களைப் பிடித்து மருதாணி பூசியதை, கணவனின் பிரிவை 'கிணத்து தண்ணி எங்கேயும் போய்டாது' என்று மாமியார் சொன்னதை என ஒவ்வொன்றைப் பற்றியும் எழுதுகிறாள். 

அது தீபாவளி சமயம். மேல்மாடியில் படுத்த படுக்கையாயிருக்கும் பாட்டியைக் கீழே அழைத்து வந்து குளிக்க வைக்கிறார்கள். அதற்குப் பின்னர், ஒரு குழந்தையின் திடீரென்ற அழுகுரல் கேட்கிறது. எல்லோரும் அடித்துப்பிடித்து ஓடுகிறார்கள். அந்தக் குழந்தை, அந்த வீட்டின் இன்னொரு மருமகளான காந்தியைக் காட்டி 'அம்மா என்னை அடித்துவிட்டாள்' என்று அழுகிறது. மாமியார் மருமகளைத் திட்டுகிறாள். எதற்கு அடித்தாய் என்று கேட்டதற்கு, ஒரு மத்தாப்பு குச்சியைக் கொழுத்திக் கொண்டு என் முன்னால் வந்தான் பையன் என்கிறாள் மருமகள். 

தன் கணவன் பட்டாசுக் கடை விபத்தில் இறந்து போனதால், காந்திக்கு பட்டாசுகள் என்றாலே பிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தையை அடித்திருக்கிறாள். மாமியார் அவளிடம்,  'நல்ல நாளும் அதுவுமா எதுக்கு குழந்தைய அடிக்கிறே. என் பையன் போனதுக்கு குழந்தை என்ன பண்ணுவான். எனக்கு மட்டும் துக்கம் இல்லையா?. எல்லாத்தையும் மறந்துட்டு நான் இருக்கலையா' என்று கேட்கிறாள். உடனே காந்தி, 'உங்களுக்கு பிள்ளை போனதும் எனக்கு புருசன் போனதும் ஒண்ணாகிடுமா?' என்று கேட்கிறாள். அவள் கேட்ட கேள்வியால் எல்லோரும் வாயடைத்துப் போகிறார்கள். மாமியார் ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொண்டு அழுகிறாள். மருமகளைத் தேற்றுகிறாள். 

ஜகதா கடைசிப் பத்தியில் இப்படி எழுதுகிறாள்;
குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் லட்சுமி, ஐராவதம், உச்சஸ்வரன் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் நீங்கள் எனக்கு கிட்டினீர்கள். ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது. உடனே அதற்கு மாற்றான அமிருதமும் அதிலேயேதான்..

--

ஜகதா இன்னும் கடிதத்தை முடிக்கவில்லை. குடும்பம் ஒரு  பாற்கடல் போல. அதனை ஒரு சிறு கடிதத்தில் அடைக்க முடியுமா. ஜகதா இன்னும் எழுதிக்கொண்டிருப்பாள். 

ஓரிடத்தில், 'இப்பொழுது நால்வராய் இருக்கிறீர்கள். முன்பு ஐவராய் இருந்தவர்கள்தானே?' என்று எழுதுகிறாள். தலையும் புரியாமல், வாலும் புரியாமல் படித்துக்கொண்டே வந்தால், இறந்து போன காந்தியின் கணவனோடு சேர்த்து அந்த வீட்டில் ஐந்து பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள். 

இணையத்தில் கதையைப் படிக்க;