Tuesday, January 8, 2013

குறும்படம்: தணல்

ஒரு சிலிண்டர் வெடிக்க நிறைய காரணம் இருக்கலாம். இப்படிதான் வெடித்தது என்று வெடித்த பின்னர் நிரூபிக்கலாம். ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்பு என்பது முடிந்து போன ஒன்று.

சிலிண்டர் வெடிப்புக்கே நாம் காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கும்போது, அணு உலைகள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. என்னதான் அது பாதுகாப்பு வசதிகளுடன் இருந்தாலும், இந்தக் குறும்படத்தில் சொல்வது போல நிகழக் கூடும். மனிதர்களை இழந்த பின்னர் நாம் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்போம் ஒரு காலத்தில், அது யாருக்காக?.

இந்தக் குறும்படத்தில் எங்கள்  நண்பன் பாலா ஒரு பாத்திரமாக நடித்துள்ளான். வாழ்த்துக்கள் பாலா.

'தணல்' குழுவுக்கு வாழ்த்துக்கள். 



Monday, January 7, 2013

ஆக்காட்டி.. ஆக்காட்டி..

'தவமாய் தவமிருந்து' படத்தில் இடம்பெற்ற பாடலான 'ஆக்காட்டி..' பாடல்,  ஓர் அற்புதம். படம் வெளியாகும் முன்னரே, நண்பன் ஒருவன் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான். ஒரு ஒப்பாரி போல இருக்கும் இந்தப் பாட்டை அவன் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க, 'இந்தப் பாட்டை நல்லாக் கேளு.. அந்த வார்த்தைகளோட..' என்றான். பிறகு தான் நாங்கள் அந்தப் பாட்டை உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தோம். பாடல் முடிந்தவுடன், அதிலும் குறிப்பாக 'வலை என்ன பெருங் கனமா?' என்று முடியும்போது மனதை உலுக்க ஆரம்பித்து விட்டது.  

'வலியும் வேதனையும் வலையோடு போயிருச்சு..' என்று இந்தப் பாடல் முடியும்போதெல்லாம் ஒரு புதிய நம்பிக்கை உதிக்கும் மனதில். திரையில் இந்தப் பாடலும், காட்சிகளும் இடம் பெறவில்லை.

ஒரு குருவி, தன் குஞ்சுகளுக்கு இரை தேடிப்  போகும்போது, வலையில் மாட்டிக் கொண்டு விடுகிறது. அதிலிருந்து தப்பித்து வெளிவருவதை நடித்துக் காட்டுவார்கள் படத்தில். 

இது குருவிகளின் கதை மட்டும் அல்ல, நாள்தோறும் அல்லல் படும் மனிதர்கள் பற்றியும் தான்.  இங்கு போராடாமல் எதுவுமே கிடைப்பதில்லை, உயிர் வாழ்தல் கூட.