நட்ராஜ் மகராஜ் - அதிகாரத்தின் முன் வரலாற்றின் நிலை

பழைய இடிந்து போன ஒரு மாளிகையின் ஓரத்தில் பாம்புகளுடனும், பூச்சிகளுடனும் வசித்து வரும் ஒரு குடும்பத் தலைவனான 'ந' வின் கதை இந்நாவல். நாவலில் எல்லோருடைய பெயரும் ஒரு குறியீடு போல முதல் எழுத்து மட்டுமே. தா என்னும் ஊர், வ என்னும் பெயரையுடைய மனைவி என்று முதல் எழுத்து மட்டும்தான். படிக்கும் பொழுது இந்தக் குறியீட்டு எழுத்துக்கள் முதலில் புரிபடத் தடுமாறினாலும், நாவல் பின்னர் நம்மை அதற்குள் இழுத்துக் கொள்கிறது. 


ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வரும் ந வுக்கு, அரசு வேலையாக பள்ளி சத்துணவுத் திட்ட அலுவலராக வேலை கிடைக்கிறது. இந்த வேலையைப் பெறவும் ஒரு சிலருக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறான். சம்பளம் குறைவு என்றாலும் அரசு வேலை என்ற மரியாதை இருக்கும் என்றே அவன் நினைக்கிறான். அரசுப் பள்ளியின் கணக்குகள், மாணவர்களுடைய உணவின் தரம் என்று அவனுக்கு புரியும்பொழுது சுற்றியுள்ளோர் அவனுக்கு, இந்த வேலையில் இருந்து எப்படி மேலும் சம்பாதிப்பது என பாடம் எடுக்கிறார்கள். 

அவன் அந்தப் பள்ளியில் சேர்வதற்கு முன்னர் இருந்த அலுவலர்கள் அரிசி பருப்பு போன்றவற்றை வெளியில் கடத்தி மற்றவர்களுக்கு கொடுத்து இருக்கின்றனர். அவன் வந்த பின்னர், முதலில் நல்ல தரமான உணவையே அவன் மாணவர்களுக்கு வழங்குகிறான். அவனே சென்று நல்ல காய்கறிகளை வாங்கி வந்து ஆயாக்களிடம் தந்து சமைக்கச் சொல்கிறான். பருப்பு அரிசி போன்றவற்றை அவனே அளந்து தருகிறான்.  ஆனால் போகப் போக அவனும் மற்றவர்களின் போக்குகளை அறிந்து கொண்டு அதையே கடைபிடிக்கிறான். கணக்குகளை எப்படி மாற்றி எழுத வேண்டும் என கற்றுக்கொள்கிறான். பள்ளியில் இருக்கும் மற்ற ஆசிரியர்களுக்கு தாராளமாக இருக்கிறான். இப்பொழுது ந, எல்லாம் தெரிந்த ஒரு அரசு சத்துணவுத் திட்ட அலுவலர். 

ந-வுக்கும், அவன் மனைவிக்கும் இந்த இடிந்து போன இடத்தை விட்டு நல்லதாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. மழை வந்தால் ஒழுகாததாக, பாம்பு போன்றவைகள் உள்ளே வராத வீடாக கட்ட வேண்டும் என்கிறான் ந. ஒரு செய்தித் தாளில் அரசு வீடு கட்ட உதவுவதாக   வந்த தகவலைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறான்.  பஞ்சாயத்து தலைவர் உதவி செய்தால் தான் ஒரு வீடு கட்ட முடியும் என்று அவரை அணுகுகிறான். அவர் முதல் முறையிலேயே அவனுக்கு இரங்குவதில்லை. தொடர்ந்து அவரை அடிக்கடி சென்று பார்க்கிறான், அது அதிகாலை 5 மணி என்றாலும் போகிறான். சில மாதங்கள் கழித்து அவர் வீடு கட்ட அனுமதி தருகிறார். 




வீடு கட்ட ஆரம்பிக்கும்பொழுது அவனுக்கு ஒரு பெரிய இடையூறு எங்கிருந்தோ வந்து சேர்கிறது. டெல்லியில் இருந்து ஒரு வயதான ஆய்வாளரும் அவருக்கு துணை செய்ய அவருடன் மாணவி ஒருத்தியும் ந வின் ஊருக்கு வருகிறார்கள். அவன் தங்கி இருக்கும் இடம் முன்னொரு காலத்தில் மாவீரன் காளிங்க நடராஜ் மகாராஜா என்ற மன்னன் வசித்த இடம் என்றும், ந என்னும் இவன் தான் அவரின் இப்போதைய வாரிசு என்றும் அவர்கள் தங்களின் ஆய்வில் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். சிதிலமடைந்து கிடக்கும் அந்த மாளிகையின் பின்புறம் உள்ள அந்தப்புரம் போன்ற பகுதிகளில் கரையான்கள் அரித்து கிடக்கும் பொருட்களைப் பார்க்கிறார்கள். அவர்கள் கால் வைத்தால் அது வெறும் மண் கூடுகளாக பொரிந்து போகிறது. அழகான அந்த மாணவி மேல் கரையான்கள் ஏறிக்கொண்டு கடிக்க ஆரம்பிக்க அடித்து பிடித்து அந்த ஆய்வாளரும், அந்தப் பெண்ணும் காரில் கிளம்பிவிடுகிறார்கள். 

ந என்பவன் இப்பொழுது வெறும் சத்துணவு அமைப்பாளர் அல்ல. அவன் ந என்னும் பெயரையுடைய இளவரசன். அந்த மாளிகையின் பிரின்ஸ். அவன் மனைவி இப்பொழுது பிரின்சின் மனைவி. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. இதை யாரிடமும் பகிர முடியவில்லை, ஏனென்றால் அவன் தான் இப்போதைய வாரிசு என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஆய்வுக்கு வந்தவர்கள் எதையும் கொடுக்காமல் கிளம்பிப் போய்விட்டார்கள். ந வுக்கு இப்பொழுது வேலையிலும் ஈடுபாடு இல்லை, வீடு கட்ட ஆரம்பித்ததும் அப்படியே கிடக்கிறது. 

பின்னர் ஆறு மாதங்கள் கழித்து செய்தித்தாளில் அந்த ஆய்வுக்கட்டுரை வெளியாக அவன் இப்பொழுது வெளியே தெரிகிறான். சில பெரிய அதிகாரிகளும் வந்து போகிறார்கள். ஒரு அரசாங்கம் சாதாரண மனிதனுக்கு என்ன செய்யுமோ அதனையே, ந வுக்கும் செய்கிறது. இவன் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு வெளியே வந்திருந்தால் கூட அவன் தப்பியிருக்க கூடும். அவர்கள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் அடங்கியே போகும் அவனுக்கு அதிகாரிகள் மேல் கோபம் வருகிறது. கோபம் வந்தால் என்ன செய்ய முடியும்,  கடைசியில் அவனுக்கே அது கேடாக முடிந்து போகிறது. 

'ஒரே சமயத்தில் இந்தக் கதையாடல் எதார்த்தமானதாகவும் வரலாறாகவும் வரலாற்றின் மீதான எள்ளலாகவும் நகர்ந்து இறுதியில் சமகால அவலமாக முற்றுப்பெறுகிறது. தேவிபாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு  நட்ராஜ் மகராஜ் என்று எண்ணுகிறேன். கதையாடலில் நிகழ்த்தியிருக்கும் புதுமையிலும் கதைமாந்தர்களை உருவாக்கியிருக்கும் நேர்த்தியிலும் மொழியைப்  பயன்படுத்தியிருக்கும் துல்லியத்திலும் செழுமையிலும் இந்த நாவல் அவரது படைப்பாற்றலின் உச்சத்தைக் காட்டுகிறது. இழை விலகாமல் நெய்ததுபோல நாவலின் எதார்த்தமும் கற்பனையின் மாயமும் பின்னியிருக்கின்றன'  - என்று சுகுமாரன் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். 

வரலாற்றில் நாம் ஒவ்வொருவரையும் எங்கே வைத்திருக்கிறோம், அதிகாரத்தில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு சுய நலத்துடன் இருக்கிறார்கள் என்பதை இந்த நாவலில் நாம் கண்டடையலாம். தனக்கு கீழே இருப்பவர்களை இந்த உலகம் வஞ்சிப்பது தொடர்வதும் நடக்கிறது. வரலாறு ஒருநாள் சரிசெய்யப்படுமா என்றெல்லாம் சாமான்யன் சிந்திப்பதில் ஒரு பொருளும் இல்லை. 

நட்ராஜ் மகராஜ்
தேவிபாரதி
காலச்சுவடு பதிப்பகம் 



Comments

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்