அம்புலி மிகச் சிறந்த ஜல்லிக்கட்டு வீரர். எத்தனையோ மாடுகளைப் பிடித்த அவர் காரி என்ற காளையால் காயம்பட்டு இறக்க நேர்கிறது. அந்தக் காளையை அவரின் மகனான பிச்சி அடக்குவது தான் வாடிவாசல் என்னும் குறுங்கதை. மிகவும் மெதுவாக கதையைச் சொல்லாமல், பேச்சின் மூலமாகவே பழைய கதை வேகமாகச் சொல்லப்படுகிறது. காளைகள், ஜல்லிக்கட்டு, வாடிவாசல் பற்றியே கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிச்சி சல்லிக்கட்டுக்கு அந்த ஊருக்கு போகும்பொழுது ஆரம்பிக்கும் கதை அங்கேயே முடிவது போல வாடிவாசல் கதையை சி.சு. செல்லப்பா அவர்கள் எழுதியுள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன் தன் அப்பாவை கொம்பில் தூக்கிய காரி காளையை பக்கத்து ஊர் ஜமீன்தார் நிறைய பணம் கொடுத்து வாங்கிவிட்டார். பக்கத்து ஊர் ஜல்லிக்கட்டுக்கு அந்தக் காளை வருவதை அறிந்த பிச்சி அங்கே செல்கிறான். அவனுடன் பிச்சியின் மச்சினன் மருதனும் உடன் செல்கிறான்.
அங்கே சென்ற பிச்சிக்கு ஒரு கிழவருடன் நட்பு உருவாகிறது. அந்தக் கிழவருக்கு பிச்சியின் தந்தை பற்றியும், அவரைக் காயப்படுத்திய காரி காளை பற்றியும் தெரிந்திருக்கிறது. ஜமீன்தார் அந்த காளையை இங்கே கொண்டுவந்த பின்னர், யாருமே அந்தக் காளையை அடக்க முடியவில்லை என்று அவர் சொல்கிறார். ஜமீன் காளையை அடக்கி விட்டு பின்னர் ஊரில் இருக்க முடியுமா என்றுதான் யாரும் அந்த மாட்டை தொடுவதில்லை எனச் சொல்கிறான் பிச்சி. அந்தக் காளை வாடிவாசலுக்கு வரும்போது நீயே பார், ஆமாம் நீ அதை பிடிக்கப் போகிறாயா என கிழவர் கேட்கிறார்.
நான் காரியை பிடிக்கப் போகிறேன் என்று அவன் சொன்னதும், கிழவர் உயிரை பணயம் வைக்காதே, அது வீரமுள்ள காளை, உன்னை ஒரே குத்தில் குத்தி தூக்கி போட்டு விடும் தம்பி.. விலகி ஊருக்குப் போய்விடு என்கிறார். அந்தக் காளையை பிடிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை, எனவே நான் அதைப் பார்க்கிறேன் என்கிறான். சல்லிக்கட்டுக்கு வந்துவிட்டால் ஜமீன் மாடாய் இருந்தால் என்ன, இங்கே போட்டி தான் இருக்கும் என்கிறான் பிச்சி. கிழவரும் ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை பற்றி தனக்குத் தெரிந்தவற்றை பிச்சி, மருதன் ஆகிய இருவருக்கும் சொல்கிறார்.
ஜல்லிக்கட்டில் ஜமீன் காளையான காரி உள்ளே வருவதற்கு முன்னரே பிச்சி அந்த மாட்டை பிடிக்க வந்திருக்கிறான் என்ற செய்தி பரவ எல்லோரும் ஆர்வமாய் அவனையே பார்க்கின்றனர். ஜமீன்தார், முடிந்தால் அந்த மாட்டை அவன் பிடித்துக்கொள்ளட்டும் என அவனை உற்றுப் பார்க்கிறார். கதையில் பிச்சியும், ஜமீனும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்வதை அழகாக கொண்டு போயிருப்பார் செல்லப்பா.
இந்தக் கதையின் இறுதியில் காரிக்கு நடப்பது போல இப்போது செய்ய முடியாது. தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றிய பிச்சிக்கு தொடையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்கிறான்.
மனிதனுக்கு ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு எனத் தெரியும். ஆனால் மாட்டுக்கு அது தெரியாது. தன்னைச் சீண்ட வரும் எதிரி என்றே அதற்கு புரியும். இந்தக் கதையில் வருவது போல, வாலை பிடிப்பது, மாட்டை கீழே தள்ளுவது போன்ற செயல்கள் இப்போது தடை செய்யப்பட்டு விட்டன. திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும், அதுவும் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அணைய வேண்டும் எனப் பல விதிகள் இப்போது உள்ளன.
வாடிவாசல் குறுங்கதை, எழுத்தின் மூலம் உண்மையாக நடக்கும் ஜல்லிக்கட்டை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும். வேறு எங்கேயும் நம்மை அகல விடாத கதையும் கூட. பாத்திரங்கள் அறிமுகம் என்று பின்னோக்கி செல்லாத நாவல் வாடிவாசல்.
No comments:
Post a Comment