Wednesday, June 9, 2021

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - பஷீர்

செல்வத்துடன் இருந்த ஒரு குடும்பம், பின் அதை இழந்து ஒரு சிறிய வீட்டில் வசிக்க நேர்கிறது. அந்தக் குடும்பத்தின் தலைவியான குஞ்ஞுதாச்சும்மா பெரிய குடும்பத்தில் இருந்து இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டவர். அவரின் அப்பாவுக்கு ஒரு யானை இருந்தது. அதனால் குஞ்ஞுதாச்சும்மா யானைக்காரரின் மகள். எப்பொழுதும் 'நான் ஆனைக்காரரோட பொன்னு மவளாக்கும்' என்கிறார். 

குஞ்ஞுதாச்சும்மாவின் கணவர் வட்டனடிமை ஊரில் பெரிய மனிதர். பள்ளிவாசலின் காரியக்காரர். ஊரில் பெரிய பணக்காரர். பள்ளிவாசலைச் சேர்ந்த மற்றவர்களுக்கு, வட்டனடிமை தலைவராக இருப்பது பிடிக்காமல் வழக்கு தொடுக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அவரின் சகோதரிகளும் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடுக்கிறார்கள். ஆக இரண்டு வழக்குகள். இரண்டையும் நடத்த செலவு செய்கிறார். கையில் இருந்த பணம் மற்றும் நகைகளை இழக்கிறார். இரண்டு வழக்குகளிலும் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வருகிறது. பின்னர் இப்பொழுது இருக்கும் வீட்டையும் இழந்து, சிறு தோட்டத்துடன் கூடிய சின்ன வீட்டுக்கு குடிவருகிறார்கள். 



வட்டனடிமை சிறு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்துகிறார். முன்னர் எப்பொழுதும் அவர்கள் வீட்டுக்கு யாராவது வந்து போய்க்கொண்டு இருப்பார்கள். ஊரில் பாதிப்பேர் சொந்தம் எனச்சொல்லி வருவார்கள். இப்பொழுது யாரும் வருவதில்லை. பணமில்லாதவர்களை யாருக்கும் தேவையில்லை அல்லவா. 

ஒரே பிள்ளை இவர்களுக்கு. குஞ்ஞுபாத்துமா. உம்மா அடிக்கடி அவளிடம் 'பெண்ணே நீ, ஆனைக்காரரோட பொன்னு மவளோட பொன்னு மவளாக்கும். அது பெரீய கொம்பானே' என்று சொல்கிறாள். வசதியாக இருந்தபோது இந்த வார்த்தைகள் நன்றாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் இழந்தும் குஞ்ஞுதாச்சும்மாவுக்கு பழைய பெருமை போவதில்லை. பாத்துமாவுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். இவர்களின் இப்போதைய நிலை பார்த்து யாராவது திருமணம் செய்ய முன் வரவேண்டும் என்கிறாள் உம்மா. 

அம்மாவுக்கும் மகளுக்கும் சமையல் தெரியாது. வியாபாரம் செய்து கொண்டு வருவதை வாப்பா தான் சமைக்க வேண்டும். அவர் சிலசமயம் தன் மனைவியிடம் 'பொண்ணா பொறந்தவளுக்கு அடுப்பு பத்த வைக்கவாவது தெரிஞ்சு இருக்கணும்' எனச் சொல்ல, உம்மாவோ 'நான் ஆனை மக்காரோட மவளாக்கும்' என்று சண்டைக்கு நிற்கிறாள். வறுமை இருக்கும் குடும்பங்களில் இருக்கும் பிரச்சினைகளுடன் கணவன் மனைவி சண்டை வேறு. குஞ்ஞுபாத்துமா அவர்களை பார்த்து கலங்கி நிற்கிறாள். உம்மாவுக்கு அவளின் குடும்பம், யானை பெருமை என சொல்லிக்காட்ட, வாப்பா விட்டுக்கொடுத்துப் போகிறார்.

குஞ்ஞுதாச்சும்மாவுக்கு இஸ்லாம் முறைகள் மீதான பற்று அதிகம். பெண்கள் பூ வைத்தல், அலங்காரம் செய்தல் தவறு என்கிறாள். தன் மகளையும் அவ்வாறே சொல்லி வளர்த்திருக்கிறார். ஆனால், தன் வறுமையான சூழலில் ஒவ்வொரு நாள் தொழுகையை கைவிடுகிறார். 'அதெல்லாம் ஒரு பாடு தொழுதாச்சு' என்று சலித்து கொள்கிறாள். 

அவர்கள் வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கும் வீட்டுக்கு, நகரத்தில் இருந்து ஒரு குடும்பம் குடிவருகிறது. முஸ்லீமாக இருந்தாலும் முற்போக்காக இருக்கிறார்கள். நிஸார் அகமது, ஆயிஷா என இரு பிள்ளைகள். ஆயிஷாவும், குஞ்ஞுபாத்துமாவும் தோழிகளாக பழகுகிறார்கள். பூ வைத்தல், புடவை கட்டுதல், தலை முடி அலங்காரம் செய்தல் போன்ற செயல்களை பார்த்த குஞ்ஞுதாச்சும்மா, அவர்கள் முஸ்லிம்களே இல்லை காபிர்கள் என்கிறார். 

நிஸார் அகமதுக்கு பாத்துமாவை பிடித்துப்போக காதலிக்கிறான். பாத்துமாவுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது. அகமது கழிப்பறை கட்டுதல், வீட்டைச் சுற்றி மரங்கள் வைத்தல், பூச்செடிகள் நடுதல் என ஏதாவது வேலை செய்துகொண்டே இருக்கிறான். சுத்தத்தை விரும்புவனாக இருக்கிறான். இரண்டு வீட்டினரும் பேசி திருமணம் முடிவு செய்கிறார்கள். அதிக நபர்களை அழைக்காமல் குறைவாகவே திருமணத்துக்கு அழைக்க வேண்டும் எனச் சொல்கிறான் அகமது. மீறிப்போனால் ஒரு பத்திருபது பேர். அவர்களுக்குத் தேவையான உணவை வீட்டிலேயே சமைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்கிறார்கள். 

திருமணம் அன்றிரவு நடக்கப் போகிறது. பிள்ளைகள் வெளியே சத்தம் போட்டு விளையாடிக்  கொண்டிருக்கிறார்கள். குஞ்ஞுதாச்சும்மா அவர்களிடம் 'எங்க அப்பாவுக்கொரு ஆனை இருந்தது' என்று சத்தம் போட, அதில் ஒரு பையன் 'அது குழியான'  என்கிறான். குழியானை என்பது மண்ணில் வட்டமாக சிறு குழி தோண்டி வாழும் சிறு பூச்சி. தன் பெருமை மிக்க குடும்பத்து யானையை, நான்கு பேரை கொன்ற யானையை, பெரிய கொம்புள்ள யானையை குழியானை என்றதும் உம்மாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. ஆற்றாமை வருகிறது. அவர்களைத் திட்டுகிறாள். சத்தம் கேட்டு அங்க வந்த பாத்துமா என்ன என விசாரிக்க 'உங்க உப்பப்பா ஆன.. குழியானையாம் புள்ளே.. குழியானையாம்' எனச் சொல்கிறாள்.  

****


காலம் பழைய பெருமைகளை எப்போதும் நினைத்துப் பார்ப்பதில்லை. நமக்கு வேண்டுமானால் நம் வீட்டுப்  பெருமை பெரிதாக இருக்கலாம். ஒருகாலத்தில் பெரிய பெருமைகளாக இருந்த எல்லாம் ஒருநாள் மறைந்து விடும். புதிய காலத்துக்கு ஏற்றவாறு நாம் தான் மாற வேண்டும். குஞ்ஞுதாச்சும்மாவுக்கு ஆனைப் பெருமை, வட்டனடிமைக்கு ஊரில் பெரிய தலைவர் எனப் பெருமை. அதெல்லாம் இன்று இல்லை. 

நாவலில் ஓரிடத்தில் 'பணமில்லாதவர்களை யாருக்கும் தேவையில்லை' என்று வரும். இருக்கும் பணத்தை பெருமைக்காக தொலைத்து விட்டுப் பின்னர் வருந்துவதில் நியாயமில்லை. அதனால்தான் அகமது திருமணத்தைக்கூட எளிதாக நடத்தலாம் என்கிறான். திருமணத்துக்கு ஏக செலவு செய்து கடன் பட்டவர்கள் ஏராளம். 

நாவல் தமிழில் மொழிபெயர்ப்பு: குளச்சல் மு.யூசுப் 

No comments:

Post a Comment