சிற்பம் தொன்மம் என்ற இந்த நூல் 28 கட்டுரைகளால் ஆனது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிற்பத்தைப் பற்றி பேசுகிறது. தமிழினி வசந்தகுமார் எடுத்த புகைப்படங்களில் உள்ள சிற்பங்களின் சிறப்பையும் வரலாற்றையும் விளக்குவதாக உள்ளது இந்தக் கட்டுரைகள்.
கட்டுரை என்றவுடன், வெறுமனே இது இந்தச் சிற்பம், இந்தக் கோவிலில் உள்ளது என்று சொல்லிச் செல்வதில்லை. அந்தச் சிலைக்குரிய புராணக் கதைகள், மற்ற இடங்களில் உள்ள அது போன்ற சிலைகள், அச்சிலை பற்றி சிற்ப புத்தகங்களில் சொல்லியுள்ள அம்சங்கள் என விளக்குகிறார் செந்தீ நடராசன் அவர்கள்.
அந்தக் காலத்தில் கட்டப்பட்ட கோவிலுக்குச் சென்றால் நேராக மூலவரை பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியே வந்துவிடுவோம். ஆனால் பிரகாரகங்களிலும், மண்டபங்களிலும் உள்ள சிற்பங்களை நாம் உற்று நோக்குவதில்லை. உண்மையான கலை அங்கே இருப்பதை நாம் அறிவதில்லை. இதில் இன்னொரு பிரச்சினை இருக்கிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில், சண்டேசருக்கு அருள்புரியும் சிற்பத்தைச் சிலர், அந்தச் சிவனே ராஜராஜனுக்கு முடிசூட்டினார் என மாற்றிப் புரிந்து கொள்ளக்கூடும்.
கோவில்களில் உள்ள சிற்பங்கள் விநாயகர், கிருஷ்ணன், அனுமன் என்றால் நாம் எளிதாக கண்டுபிடுத்துவிடுவோம். மற்ற சிற்பங்களை நாம் அடையாளம் காண்பது சிரமமே. அப்படிச் சிலைகளை நோக்கி, இனம் கண்டறிய என்ன செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்நூல்.
கை அமைதிகள்(வரத ஹஸ்தம், அபய ஹஸ்தம்.. போன்றவை), சிற்பம் வைத்திருக்கும் ஆயுதங்கள், அமர்ந்திருக்கும் வாகனம் அல்லது ஆசன வகை, கிரீட வகைகள் போன்றவை மூலம் இச்சிற்பம் இந்த மூர்த்தி என்பதை அறியலாம். இந்நூலில் உள்ள கட்டுரைகளில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிற்பங்களைக் கொண்டு செந்தீ அவர்கள் விளக்குகிறார். சிற்ப நூல்களில் அந்த மூர்த்திகளுக்கு உண்டான அளவுகளையும் சொல்கிறார்.
சில சிற்பங்களை விளக்கும்போது, வேறு பகுதிகளில் அந்தச் சிலை எவ்வாறு இருக்கிறது என்பதையும் சொல்கிறார். அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தை பற்றி விளக்கும்பொழுது, உமையொரு பாகனின் தலையலங்காரம் ஜடா மகுடமாகவோ அல்லது பாதி ஜடா மகுடம் மீதி கிரீடம் போல இருக்கும், ஆனால் திருச்செங்கோட்டில் உள்ள சிலை முடியை அள்ளி முடித்து குந்தளமாக கட்டி இருப்பதைச் சொல்கிறார்.
வேதங்களில் குறிப்பிடப்படாமல் பின்னர் தோன்றிய நரசிம்ம அவதாரம், அதன் சிலையமதி பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதுபோல பெருமாளுக்கு தென்னகத்தில் பூதேவி, ஸ்ரீதேவி என இரு தேவிகள், ஆனால் வடக்கில் செல்லும்போது அங்கே ஒரே துணை என்பதையும் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆந்திராவில் ராமப்பா கோவிலில் உள்ள நடன மங்கையின் சிலை பற்றிய கட்டுரையில், ராமப்பா என்னும் சிற்பியின் பெயர்கொண்டே அந்தக் கோவில் குறிப்பிடப்படுவதை சொல்கிறார்.
வீரபத்திரன், கஜசம்காரமூர்த்தி, கங்காள நாதர், பிச்சாடனார் போன்ற சிற்பங்களையும், வரலாற்றையும், புராணக் கதைகளையும் விளக்குகிறது இந்நூல். பவுத்த, சமண சிற்பங்கள் பற்றியும் சில கட்டுரைகள் உள்ளன. புராணம், கோவில்கள், சிற்பங்கள் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்கள் படிக்க வேண்டிய முக்கிய நூல். நூலைப் படித்த பின்னர், எந்த கோவிலுக்குச் சென்று ஒரு சிற்பத்தைக் கண்டால் நின்று பார்த்து விட்டே செல்வோம். அதுவே இந்நூலின் வெற்றி.
செந்தீ நடராசன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
No comments:
Post a Comment