காந்தியம் என்பது தன் நலனை விட ஏழைகளின் நலனே முக்கியம் என நினைக்க வைப்பது. அதற்காக எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் பின்வாங்காமல் அறவழியில் போராடும் குணம் கொண்டது. ஒரு செயலில் வெற்றி கிடைத்த பின்னர், ஓய்ந்து விடாமல் அடுத்து என்ன செய்யலாம் என சிந்திக்க வைப்பது.
கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் இருவருமே சுதந்திர போராட்ட வீரர்கள். காந்திய வழியில் நடப்பவர்கள். கிருஷ்ணம்மாளைத் திருமணம் செய்யும் முன்னர் ஜெகநாதன் அவரிடம் 'எனக்கென எந்த சொத்தும் சேர்க்க மாட்டேன், ஒரு ஊரில் நிலையாக இருக்க முடியாது. சமைக்கத் தேவையான பாத்திரங்கள் கூட மண் பாத்திரங்கள்தான், ஏனெனில் வேறு ஊருக்குச் செல்லும்போது அப்படியே போட்டுவிட்டு போய்விடலாம். சுமைகள் குறையும்.' எனச் சொல்கிறார்.
சுதந்திரம் பெற பாடுபட்டவர்கள், அதை பெற்ற பின்னர் மகிழ்ச்சி அடைய முடிவதில்லை. ஏனெனில், புதிய அரசானது ஏழைகளுக்கு ஏதாவது செய்யும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் காரியங்கள் எரிச்சலை வரவைக்கிறது. அப்பொழுது காந்தியர் வினோபா அவர்கள், நிலங்களைத் தானமாக வாங்கி ஏழை மக்களுக்கு வழங்க பூதான இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கிறார். கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் இருவரும் அவருடன் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். வினோபாவின் வழியில் தமிழ்நாட்டிலும் நிலங்களைத் தானம் பெற்று ஏழை மக்களுக்கு அளிக்கிறார்கள்.
ஆனால் தானம் அளித்தவர்கள் நல்ல நிலங்களை வைத்துக்கொண்டு பாசன வசதியில்லாத நிலங்களைக் கொடுக்கிறார்கள். நிலம் கிடைத்தும் ஏழைகள் முன்னேற வழியில்லாமல் இருக்கிறது. கிருஷ்ணம்மாள் யோசித்துப் பார்க்கிறார். வினோபாவிடம் கேட்டால், ஒரு ஞானிக்கே உரிய பதிலாக 'இன்று இந்த நிலங்களைத் தருகிறார்கள். பின்னால் நல்ல நிலங்களைத் தானம் கொடுப்பார்கள்' என்கிறார். ஆனால், நல்ல நீர்ப்பாசன வசதியுள்ள நிலத்தால் மட்டுமே ஏழைகளுக்கு வருவாய் வரும் என்று உணர்கிறார் கிருஷ்ணம்மாள்.
எனவே நல்ல நிலங்களுக்கு உரிய பணம் தந்து வாங்கி அதை அவர்களுக்கு கொடுத்தால், அவர்கள் உழைத்து பொருள் ஈட்ட முடியும் என்பதை உணர்கிறார். ஆனால், அதற்கான பெரும் தொகை கடனாக யார் தருவார்கள் என முயன்று, அரசிடம் தனது கோரிக்கையை வைக்கிறார். அப்போதிருந்த காமராஜர் அரசு அதை ஏற்றுக்கொண்டு கடன் தருகிறது. சொன்னது போலவே அனைத்து நிலங்களின் கடன்களும் முன்னரே அடைக்கப்பட்டு நிலம் இப்பொழுது ஏழைகளுக்கு சொந்தமாகிறது. ஆனால், இதில் ஒரு முரணாக பூதான இயக்கத்தினர், நிலத்தை பணம் கொடுத்து வாங்குவது தங்களின் கொள்கைக்கு மாறானது என்று சொல்ல, தனது செயலில் புதுபாதையை கண்ட கிருஷ்ணம்மாள் அங்கிருந்து விலகுகிறார்.
சில நேரங்களில் நல்ல நோக்கங்களுக்கு போராடியும் கூட, எந்த அரசாங்கம் அமைய உயிரைக் கொடுத்து சுதந்திரம் வாங்கினார்களோ, அதே புதிய அரசாங்கம் அவர்களின் நோக்கங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதை வேதனையுடன் சொல்கிறார்கள் கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன்.
எத்தனையோ நிலங்களைப் பெற்று ஏழைகளுக்கு வாழ்வளித்த கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் ஆகிய இருவரும் தாண்டிய தடைகள், அப்போதைய தலைவர்களுடன் இருந்த தொடர்புகள், சிறை வாழ்க்கை, உண்ணாநோன்பு போராட்டங்கள் என வரலாற்றைத் திரும்பி பார்க்கும் வண்ணம் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் காந்திய வழியில் ஆர்வம் கொண்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த லாரா கோப்பா. கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் ஆகிய இருவரையும் அம்மா அப்பா என்றே அழைக்கிறார் லாரா. இருவருடனும் ஆங்கிலத்தில் பேட்டியாக அவர்களின் கடந்த கால நிகழ்வுகளை சொல்லச் செய்து பின்னர் இத்தாலியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்நூலை அழகாக தமிழில் மொழி பெயர்த்தவர் B.R. மகாதேவன். அம்மா கிருஷ்ணம்மாள் கையெழுத்துடன் அனுப்பி வைத்த தன்னறம்-குக்கூ பதிப்பகத்துக்கு அன்பு நன்றிகள்.
No comments:
Post a Comment