Monday, August 26, 2024

நிர்மால்யம் - எம்.டி.வாசுதேவன் நாயர்

மலையாளத்தில் வெளிவந்த படம் நிர்மால்யம் (1973).  இந்த படத்தை எழுதி, இயக்கியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். அவர் முதன்முதலாக இயக்கிய படமும் கூட. அப்படத்தின் திரைக்கதையை தமிழில் மீரா கதிரவன் மொழி பெயர்த்துள்ளார். 

அந்தக் காலத்தில் ஒரு வெளிச்சப்பாட்டின் வறுமையை, இயலாமையை நம்மை உணர வைக்கும் கதை நிர்மால்யம். ஒரு கையில் சிலம்பும், மறுகையில் பள்ளிவாளும், இடுப்பில் சலங்கைகளும் கட்டி ஆடும் வெளிச்சப்பாட்டை    தமிழில் அருள் வாக்கு சொல்பவர் என்று கூறலாம். நெற்றியில் பள்ளி வாளால் வெட்டிக் கொண்டு ஆவேசம் கொண்டு ஆடுவார்கள். 



தனது தந்தையான பெரிய வெளிச்சப்பாடு ஆடிய காலங்களில் குடும்பத்துக்கு வருமானம் குறைவில்லாமல் இருந்திருக்கிறது. கோவிலில் தொடர்ந்து பூஜைகளும் நடக்கும். எனவே கொஞ்சம் வசதியாகவே இருந்திருக்கிறார்கள். கோவில் நிர்வாகிகளுக்கு கோவிலைப் பராமரிக்க மனதில்லாமல், பூஜை குறைய வருமானம் குறைந்து வறுமை வாட்டுகிறது. வெளிச்சப்பாடுக்கு அப்பு என்ற மகனும், அம்மிணி என்ற மகளும், இரண்டு சிறிய பெண் குழந்தைகள் என நான்கு பிள்ளைகள். மனைவி பெயர் நாராயணி.  பெரிய வெளிச்சப்பாடு இப்போது முதுமையில், வாய் பேச முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

கோவிலில் ஒருநாள் பக்தரின் வேண்டுதல் பூஜை நடக்கிறது. பூஜை நடந்தால் செண்டை மேளம், வெளிச்சப்பாடு, வாரியர் என எல்லாரும் வரவேண்டும். பூஜை முடிந்து பூஜைக்கு உண்டான பணம் மட்டுமே கொடுக்கிறார் வேண்டிய பக்தர். அதைப் பிரித்துக் கொடுக்கும்பொழுது மேளம் அடித்தவர் இந்த பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக் கோபப்பட்டு போகிறார். கோவில் நம்பூதிரி எனக்கு இந்த வேலையே வேண்டாம், வேறு ஆளை பூசைக்கு வைத்துக்கொள்ளட்டும் என அவரும் ஊரை விட்டுப் போகிறார். வெளிச்சப்பாடுக்கும் குறைந்த தொகையே வருகிறது. இவ்வளவு குறைந்த தொகைக்கு, எதுக்காக ஆவேசப்பட்டு வேகமாக ஆடி, மண்டையில் ரத்தம் வருமாறு அடித்துக்கொள்ள வேண்டும், இந்த அளவுக்கு எல்லாம் போக வேண்டாம் என அவரிடம் சொல்கிறார்கள். அதற்கு வெளிச்சப்பாடு "இந்த நடைக்கு வந்து, பள்ளி வாளை எடுத்து அந்த முகத்தை (தெய்வத்தை) பார்த்தால் .. எல்லாமே மறந்து போய்விடும்" என்கிறார். 

வெளிச்சப்பாடின் மகன் அப்பு வேலைக்கு முயன்று கொண்டிருக்கிறான். இரண்டு ரூபாய் கேட்டால் கூட தர இயலாத தந்தை மேல் அவனுக்கு கோபம் வருகிறது. ஒருநாள் பள்ளிவாள், சலங்கை, சிலம்பம் என எல்லாவற்றையும் பழைய பாத்திரக்காரனுக்கு போடுகிறான். தெய்வத்தின் பொருளை நான் வாங்க மாட்டேன் என பாத்திரக்காரன் சென்று விடுகிறான். அந்நேரத்தில் அங்கே வந்த வெளிச்சப்பாடு, அவனை வீட்டை விட்டுப் போகச் சொல்கிறார். அவனும் போய்விடுகிறான். பிறகு அவனை எங்கே தேடியும் கண்டுபிடிக்க முடிவதில்லை. 


புதிதாக வந்த கோவில் நம்பூதிரி இள வயதுள்ள உண்ணி நம்பூதிரி. வெளிச்சப்பாடின் மகள் அம்மிணிக்கும், உண்ணிக்கும் காதல் பூக்கிறது. அரசாங்க வேலைக்கு முயன்று கொண்டிருக்கும் உண்ணி நம்பூதிரியை நம்புகிறாள் அம்மிணி. ஆனால் அவனின் தந்தை வேறு ஒரு வரனை நம்பூதிரிக்கு நிச்சயம் செய்துவிட, அந்த காதல் கைகூடாமல் போகிறது. 

அந்தக் காலத்தில் அம்மை, தொற்று வியாதிகள் என பல நோய்கள் வந்ததால் அம்மனுக்கு வேண்டுதல் நிறைய இருக்கும். வெளிச்சப்பாடுக்கு வேலையும், வருமானமும் குறைவில்லாமல் இருக்கும். "ஏதாவது நோய் வந்தால், உங்களுக்கு வருமானம் வரும்" என்று ஒருவர் கூற, அப்படியெல்லாம் எதுவும் நடக்க கூடாது என்றே சொல்கிறார் வெளிச்சப்பாடு. ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ஊரில் ஒரு சிலருக்கு அம்மை வார்க்கிறது. அம்மனுக்கு நீண்ட காலமாக குருதி பூசை நடக்காததால் தான் அம்மை வந்திருக்கிறது, பூசையை நடத்த வேண்டும் என முடிவு செய்கிறார்கள் ஊர் மக்கள். 

நீண்ட காலம் கழித்து வெளிச்சப்பாடு சுறுசுறுப்பாகிறார். பூசை நடத்த எல்லோருடனும் சேர்ந்து பணம் வசூல் செய்கிறார். அதிலிருந்து ஒரு பைசா கூட அவர் செலவு செய்வதில்லை. தெய்வம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை ஊர் மக்கள் உணர்ந்தால் போதும் என்ற சந்தோசம் அவருக்கு. 

பூசை நடக்க இருக்கும் அன்று அவருக்கு ஒரு துயரமான விஷயம் தெரியவருகிறது. மைமுண்ணி என்பவன் வெளிச்சப்பாடுக்கு கடன் கொடுத்து இருக்கிறான். அவரை எங்கே பார்த்தாலும் கடனைத் திருப்பிக் கொடு என்கிறான். அவ்வப்பொழுது வெளிச்சப்பாட்டின் வீட்டுக்கு வந்து செல்கிறான். வெளிச்சப்பாடின் மனைவி நாராயணியுடன் மைமுண்ணி தொடர்பில் இருப்பதை அறிந்து கையில் பள்ளிவாளுடன் "எனக்கு நாலு பிள்ளைகளை பெற்ற நாராயணி நீயா இப்படி" எனக் கேட்கிறார். அதற்கு நாராயணி, உலகத்தையே வெல்லக்கூடிய பள்ளி வாளின் முன் பயமில்லாமல் "ஆம் நான்தான். நீங்கள் தெய்வம் தெய்வம் என்று சுற்றிக் கொண்டிருந்த பொழுது என் பிள்ளைகள் எப்படி சாப்பிட்டார்கள். உங்கள் தெய்வம் வந்து கொடுக்கவில்லை. வேறு ஒரு ஆணின் முகம் தெரியாமல் வளர்ந்த என்னை, நாற்பது வயதில் இந்த நிலைக்கு தள்ளியது நீங்கள்" என வெடித்து அழுகிறாள். வெளிச்சப்பாடு பிரமித்து நிற்கிறார். 




வறுமை தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்ததை எண்ணி கலங்கும் வெளிச்சப்பாடு, கோவிலில் எந்நாளும் இல்லாத ஆவேசம் கொண்டு ஆடுகிறார். வாளால் அவர் நெற்றியில் வெட்டுவதை தடுக்க வரும் வாரியரை உதறி விட்டு கோபம் கொண்டு ஆடுகிறார். ரத்தம் முகத்தில் வழிந்தாலும் அதை உதறிவிட்டு ஓங்கி நெற்றியில் வெட்டி உயிரற்று சாய்கிறார் வெளிச்சப்பாடு. 

வறுமையின் முன்னால் தெய்வம் கூட பதிலற்று நிற்கிறது. 

==

எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய இப்படம் நிறைய விருதுகள் பெற்ற படம். தமிழில் மீரா கதிரவன் அழகாக மொழி பெயர்த்துள்ளார். சில மலையாளச் சொற்களுக்கு அந்தந்த பக்கங்களிலேயே தமிழில் குறிப்புகள் கொடுத்துள்ளார். 

நிர்மால்யம்
எம்.டி.வாசுதேவன் நாயர் 
தமிழில் மீரா கதிரவன் 


Tuesday, August 20, 2024

பாரீஸூக்குப் போ - ஜெயகாந்தன்

ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதற்கான தனி மனித சுதந்திரம், தன் சுயத்தை வெளிக்கொணர்தல் என ஐரோப்பிய சித்தாந்தத்தில் நம்பிக்கையும் கொண்டு அங்கேயே வளர்ந்த மகன் , இந்தியா வந்து தனது தந்தையிடம் சில காலம் தங்கி இருக்கும் நாட்களை அடி நாதமாக கொண்டது ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய பாரீசுக்குப் போ நாவல். 


சாரங்கன் தனது தந்தை சேஷையாவின் தொழில் நண்பருடன் சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கேயே வளரும் அவனுக்கு வயலின் இசையில் நாட்டம் ஏற்பட அதைக் கற்றுக்கொள்கிறான். இங்கிலாந்துக்கு அவனை அழைத்துச் சென்றவர் அவனுக்கு கொஞ்சம் பணத்தை வங்கியில் போட்டுவிட்டு இயற்கை எய்துகிறார். பின்னர் பாரிஸுக்கு வரும் சாரங்கன் தனது பாதை இசையே எனக் கண்டு கொண்டு அதிலேயே முழு மூச்சாக இருக்கிறான். அவனுக்கு குடியும், புகை பிடித்தல் பழக்கமும் ஏற்படுகிறது. ஒரு வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து விவாகரத்தாகி தனியே வசிக்கிறான். இருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட, அன்றாடச் செலவுக்கு அவனது வயலின் துணை செய்கிறது. நாற்பது வயதான சாரங்கன் தனது குடும்பத்தைச் சந்திக்க இந்தியா வருகிறான். 


சாரங்கனின் தந்தை சேஷையாவுக்கு மகனைப் பார்க்க வேண்டும் என ஆசை இருந்தாலும் 'இத்தனை நாள் கழிச்சு, இப்போ இவன் எதுக்கு வர்றான்' என்கிறார். ஏனென்றால் முன்பு அவர் சொன்ன எதையும் அவன் கேட்கவில்லை, அந்த கோபம் அவருக்கு. அவரைப் பொறுத்தவரை பெரியவர்கள் சொல்வதை சின்னவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். 

சேஷையாவுக்கு நான்கு பிள்ளைகள். பாலம்மாள் என்ற ஒரு மகளும், நரசிம்மன், ரங்கையா, சாரங்கன் என மூன்று மகன்களும் அவரின் பிள்ளைகள். மனைவி காலமாகி விட்டார். இந்தப் பிள்ளைகளில் பாலம்மாள் தனது மகன் முரளி மற்றும் மருமகள் லீலாவுடன் அதே வீட்டில் வசிக்கிறார்கள். நரசிம்மனும் அவரின் மனைவியும் அங்கே வசித்தாலும் எதிலும் தலையிடுவதில்லை. நரசிம்மனுக்குப் பிள்ளைகள் இல்லை. ரங்கையா மட்டுமே தனது தந்தைக்கு அணுக்கமாக இருந்திருக்கிறான். அவனும் சில வருடங்கள் முன்பு இறந்து விட, அவனின் மனைவி லட்சுமியும் குழந்தை கண்ணனும் இருக்கிறார்கள். வீட்டுப் பொறுப்புகள் அனைத்தையும் மகள் வயிற்று பேரனான முரளியே பார்த்துக் கொள்கிறான்.சாரங்கன் வெளிநாட்டில் இருந்து வந்து, இந்த குடும்ப உறுப்பினர்களோடு அவனும் ஒருவனாய் இருக்கிறான். 

குடிப் பழக்கம் உள்ள சாரங்கனுக்கு அந்த வீடு வசதிப்படாததால் ஒரு தோட்டத்து வீட்டை சரி செய்து அங்கே செல்கிறான். சென்னையின் வெயில் தாங்காமல் குளிரூட்டி ஏற்பாடு செய்து கொடுக்கிறார் தந்தை. பெர்மிட் மூலம் வாங்கிய சாராயம் அவனுக்கு போதுமானதாக இருப்பதில்லை. "குடிப்பது என்பது வேறு, குடிகாரன் என்பது வேறு. நான் குடிகாரனாக மாறி விட்டேன்." எனச் சொல்லும் சாரங்கன் வீட்டு வேலைக்காரன் கன்னியப்பன் மூலம் நாட்டுச் சாராயம் வாங்கி குடிக்கிறான். வெளிநாட்டில் வளர்ந்த தன் முதலாளி மகன், கண்ட  கண்ட சாராயத்தை குடிப்பதைப் பார்த்த கன்னியப்பன் , "இந்த வெயிலிலும், இதையும் குடித்து ஏன் கஷ்டப் படணும். நீ பாரீஸூக்குப் போ" என்கிறான். 



நாற்பது வயதுக்கு மேல் வந்து நிற்கும் தன் மகன், இன்னும் கல்யாணம் செய்யவில்லை, தொழில் இல்லை, அவன் கையில் காசு இல்லை, எனவே அவனுக்கு ஒரு தொழிலை ஏற்பாடு செய்து தர முயல்கிறார் சேஷையா. அதற்கு பேரன் முரளி, நானும் சாரங்கன் மாமாவுடன் இணைந்து கொள்கிறேன் எனச் சொல்கிறான். இத்தனை நாள் தனது தாத்தாவுக்கு வேலைக்காரனாக இருந்தது போதும், ஏதாவது தொழில் செய்து முன்னேற வேண்டும் என நினைக்கிறான் முரளி. சாரங்கன் தான் ஒரு இசைக் கலைஞன், எனக்கு தொழில் எல்லாம் ஒத்து வராது எனச் சொல்லி மறுத்து விடுகிறான். வேண்டும் என்றால் முரளிக்கு அந்த தொழிலை ஏற்பாடு செய்து கொடுங்கள் எனக் கேட்கிறான் சாரங்கன். சேஷையா "நீ தானே என் மகன். என்ன இருந்தாலும் அவன் மகள் வயிற்றுப் பேரன் தானே" எனச் சொல்லி விடுகிறார். இத்தனை நாட்கள் தாத்தாவுக்கு வேலை செய்தும் அவர் என்னை நம்பவில்லை என முரளி வீட்டை விட்டு வெளியேறுகிறான். 

தான் சொல்வதை சாரங்கன் கேட்கவில்லை, அவனை வழிக்கு கொண்டுவர செலவுக்கு கொடுக்கும் பணம், அவன் தங்கி இருக்கும் வீட்டுக்கு மின்சாரம் என அனைத்தையும் நிறுத்தி விடுகிறார் சேஷய்யா. சாரங்கன் கோபமுற்று, எனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்கிறான். அதெல்லாம் முடியாது, வேண்டும் என்றால் நீதிமன்றம் போய் பெற்றுக்கொள் என்கிறார் சேஷையா. பெரிய மகன் நரசிம்மன் "அப்பா எப்பவுமே இப்படித்தான். அவருக்கு அடங்கி நடக்க வேண்டும் என நினைக்கிறார். நாம் கோர்ட்டுக்குப் போய் நம் பங்கை வாங்கி கொள்ளலாம்" என்கிறான். சாரங்கன் சோர்ந்து போகிறான். எதை நம்பி இங்கே காலம் தள்ள முடியும் என நினைக்கிறான். 

சாரங்கனுக்கு, மகாலிங்கம், லலிதா என்ற தம்பதிகளிடம் நட்பு உருவாகிறது. லலிதா எழுத்தாளர் என்பதால், ஒரு பத்திரிகையில் சாரங்கனின் இசை பற்றிய கட்டுரைகளை வெளியிடுகிறாள். அந்தக் கட்டுரைகளுக்கு வரவேற்பும், சிலருக்கு கருத்து வேறுபாடும் உருவாகிறது. "மேல்நாட்டு இசை உணர்ச்சி மயமானவை, ஆனால் நமது இசை கணக்கை அடிப்படையாக கொண்டது" என்கிறான் சாரங்கன். சங்கீதத்தில் புலமை பெற்ற தந்தை சேஷையாவுக்கு அவன் கருத்துக்கள் பிடிப்பதில்லை. லலிதா அவனிடம் நெருங்கிப் பழக ஆரம்பிக்க அது காதலாக மாறுகிறது. மகாலிங்கத்தை விவாகரத்து செய்து விட்டு தன்னுடன் வந்துவிடு என்கிறான் சாரங்கன். சில நாட்கள் செல்ல, தனது கணவரை விட்டுவிட்டு என்னால் வரமுடியாது என்கிறாள் லலிதா. லலிதாவின் மேல் மிகுந்த பாசமும், நம்பிக்கையும் கொண்டிருப்பவர் மகாலிங்கம். நம் காதல் அப்படியே இனிய நினைவுகளாக இருக்கட்டும், நீங்கள் பாரிசுக்குப் போய் விடுங்கள் என லலிதா சொல்ல, சாரங்கனும் ஒத்துக் கொள்கிறான். 

இசை வேலைக்காக, ஒரு பெரிய சினிமா இயக்குநருடன் அவனுக்கு அறிமுகம் ஏற்படுகிறது. தான் ஒரு பெரிய படம் இயக்கப் போவதாகவும், அப்படத்துக்கு நீங்கள் தான் இசை அமைக்க வேண்டும் எனச் சொல்கிறார் இயக்குனர். சில மேற்கத்திய இசையைக் கேட்கச் செய்து இது மாதிரி வேண்டும் எனச் சொல்ல, சாரங்கனுக்கு கோபம் வருகிறது. இயக்குனரோ, 'நான் போட்ட பணத்தை எடுக்க முயல்கிறேன். உங்களுக்கு இந்த வேலை எல்லாம் செய்ய வராது. நீங்கள் பாரிசுக்குப் பொய் விடுங்கள்' எனச் சொல்கிறார்.

ஆக எல்லோருமே சாராங்கனை பாரிசுக்குப் போகச் சொல்கிறார்கள்.  விமான நிலையத்தில் பாரீஸ் செல்ல காத்திருக்கும் பொழுது, தனது கட்டுரைகளின் வாசகர் மூலம் சாரங்கன் இந்தியாவிலேயே இருக்க முடிவு செய்கிறான். அவனுக்கு பிடித்த இசைத் துறை என்பதாலேயே சாரங்கன் அந்த வாசகரோடு செல்கிறான். 

===

முரளியின் அம்மா பாலம்மாள், தனது கணவர் நரசய்யா ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு துறவியாகி விட்டார் எனச் சொல்கிறாள். ஆனால் அவர் கலையின் மேல் நாட்டம் கொண்டு கங்கா என்ற நாட்டிய மங்கையிடம் போனதாலேயே, அவரை விட்டு அம்மா விலகி விட்டாள் என முரளி அறிந்து தாத்தாவிடம் 'என் அப்பாவிடம் உங்களின் பணத்தை காட்டி அவருடனான உறவை முறித்து, என் அம்மா தனியே வாழ நீங்கள் தான் காரணம்' எனச் சொல்கிறான். அதற்கு சேஷையா, 'ஒரு தகப்பனாக அவளின் உணர்வுகளை நான் மதித்தேன். போக்கிடம் இல்லாதவளாக என் மகள் எண்ணி விடக் கூடாது என்றே நான் நினைத்தேன். உன் அப்பா ஒருமுறை கூட வந்து பார்க்கவில்லை' எனச் சொல்கிறார். அவரவருக்கு அவரவர் நியாயங்கள். 

ஒரே வீட்டில் இருப்பவர்களுக்கே மனம், குணம் என ஒன்றுமே ஒத்துப் போவதில்லை. அதிலும் வெளிநாட்டில் வளர்ந்த சாரங்கனுக்கு தம் குடும்பத்தினர் செய்வது எல்லாமே ஒரு நடிப்பு போல தோன்றுகிறது. தன் தந்தை பழைய காலத்தில் இருந்து வெளியே வர மறுக்கிறார். ஒரு காலத்தில் அவர் அவனை இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க வைக்கும் நவீன மனிதராக இருந்தாலும் இப்போது அப்படி இல்லை. சாரங்கனுக்கோ அவரோடு இணக்கமாக போக தெரிவதில்லை. 

சேஷையா போன்ற தந்தைகளுக்கு தனது கைகளுக்குள் அடங்கும் ரங்கையா போன்ற பிள்ளைகளே தேவைப்படுகிறார்கள்.  சாரங்கன் போன்ற பிள்ளைகள் கலையை வளர்க்க, அது பற்றிய கருத்துக்களைப் பகிர ஒத்த மனங்களைத் தேடுகிறார்கள்.