Monday, July 15, 2024

நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்த்யோபாத்யாய - தமிழாக்கம்: சு. கிருஷ்ணமூர்த்தி

நீலகண்டப் பறவையைத் தேடி - ஒரே பாத்திரத்தையோ அல்லது அப்பாத்திரம் சம்பந்தப்பட்ட சம்பவங்களையோ மட்டும் வைத்துச் சொல்லப்படும் கதையல்ல. அது ஒரு பல்கோண ஆராய்ச்சியின் விளைவு. ரொமான்டிக் உணர்ச்சிப் பெருக்கு. குடும்பம் சீர்குலையும் பரிதாபம், பசி, பசிக்கு எதிரான போராட்டம், மதவெறி, மனித மதிப்பீடுகள் இவை எல்லாவற்றையும் காண்கிறோம். 

பத்தாண்டு கால உழைப்பில் உருவான இந்நாவலின் முன்னுரையில் மேற்கண்ட குறிப்பு உள்ளது. 

வங்காளத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சுதந்திரப் போராட்ட காலத்தில் நடக்கும் கதை நீலகண்டப் பறவையைத் தேடி. அவ்வூரின் இயற்கை, ஆறுகள், ஏரிகள், மக்கள் என விவரித்துச் செல்கிறது நாவல். காதல், காமம், பசி, அன்பு, துரோகம் என அனைத்து உணர்வுகளையும் தொட்டுச் செல்லும் நாவல் இது. 



கிராமத்தில் பெரிய மனிதரான மகேந்திர நாத்துக்கு மூன்று ஆண் பிள்ளைகள். செல்வாக்கான குடும்பம் கூட, அவர்களை ஊர் மக்கள் டாகுர் என அழைக்கிறார்கள். மூத்த பிள்ளையான மணீந்திரநாத் ஆங்கிலேயப் பெண்ணை காதலிக்கிறார். காதலை தந்தை எதிர்க்க, வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடைபெறுகிறது. காதல் கைகூடாத ஏக்கத்தால் அவர் மனநிலை பிறழ்ந்து விடுகிறார். 

படிப்பில் படுசுட்டியாக விளங்கிய, நல்ல திடகாத்திர உடல்நிலை கொண்ட மணீந்திரநாத் சில நாள்கள் குடும்பத்தை விட்டுப் போய் விடுகிறார். ஆற்றிலோ, நாணல் புதர்களிலோ, காடு கரைகளிலோ நீலக்கண்கள் கொண்ட அவரின் காதலியைத் தேடுகிறார் மணி. பின்னர் எப்போதாவது தன் மனைவியின் நினைவு வரவும் வீடு திரும்புகிறார். அவர் பேசும் ஒற்றை வார்த்தை 'கேத்சோரத் சாலா'. 

அதே ஊரில் நெசவு செய்யும் நரேன்தாஸின் தங்கை மாலதி கணவனை இழந்து நரேனின் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறாள். திருமணம் ஆன கொஞ்ச வருடங்களிலேயே போராட்ட கலகத்தில் கணவனை இழந்த மாலதி தன் நிலையை நினைத்து வருந்துகிறாள். அவளிடம் அத்துமீறவும் சிலர் முயற்சிக்கிறார்கள். அவளின் பால்ய கால நண்பனான ரஞ்சித் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்புகிறான். தேச சேவையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறான். உண்மையில் ஒரு அதிகாரியை கொலை செய்துவிட்டு, காவல் துறையிடம் மாட்டாமல் இருக்கவே கொஞ்ச நாட்கள் இந்த ஊரில் இருக்கிறான். மாலதிக்கு அவனைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வருகிறது. அவனைப் பார்த்ததும் அவள் கவலைகள் அனைத்தையும் மறந்து ரஞ்சித்தை காதலிக்கவும் செய்கிறாள். 

மகேந்திர நாத்தின் இன்னொரு மகனுக்குப் பிறக்கும் பேரனான சோனாவைச் சுற்றியே நாவல் வளர்கிறது. அவன் பிறப்பில் இருந்தே நாவல் தொடங்குகிறது. சோனாவுக்கு ரஞ்சித் மாமா முறை. தனது பெரியப்பாவான மணீந்திரநாத்துடன் அவன் பைத்தியக்கார மனிதர் என எண்ணாமல் பழகுகிறான். அவரும் அவனைப்  பல இடங்களுக்குச் கூட்டிச் செல்கிறார். சுற்றியுள்ள ஆறுகளையும், தர்மூஜ் பழத் தோட்டங்களையம், நாணல் காடுகளையும் அவர்கள் சுற்றுகிறார்கள். ஒருமுறை யானையின் மீதேறி பாகனைத் தவிக்க விட்டுவிட்டு மணி காட்டுக்குள் கிளம்பிவிடுகிறார்.  வழக்கம்போல் அந்த நீலக் கண்களைத் தேடி அவர் சென்றுவிட்டார். ஊர் மக்கள் தேடியும் கிடைக்காமல், நீண்ட நேரம் கழித்து ஒரு ராஜா போல திரும்பி வருகிறார் யானையுடன். 

இந்து குடும்பங்களைப் போலவே முஸ்லீம் குடும்பத்தினரும் அவ்வூரில் வசிக்கிறார்கள். நகரங்களில் இரு மதத்தினரிடையே கலவரம் ஏற்பட்டாலும் இங்கே அவ்வாறில்லாமல் இருக்கிறது அல்லது நீறுபூத்த நெருப்பாய் இருக்கிறது. மாலதியின் இன்னொரு பால்ய நண்பனான சாமு எனப்படும் சம்சுதீன் லீக் கட்சியில் இருக்கிறான். அவனுக்கும் மாலதிக்கும் கட்சி போஸ்டர் ஓட்டும்பொழுது சிறு சச்சரவு ஏற்படுகிறது. ரஞ்சித், மாலதி மற்றும் சம்சுதீன் ஆகிய மூவரும் பழைய நாட்களை நினைத்துப் பார்க்கிறார்கள். சம்சுதீனுக்கு பாத்திமா என்ற பெண் மகள் உண்டு. அவளும் சோனாவும் நண்பர்கள். பாத்திமாவை நேசிக்கும் சோனா போலவே, பாத்திமாவும் சோனாவை நேசிக்கிறாள். பாத்திமாவை கூட்டிக்கொண்டு சம்சுதீன் நகரத்துக்கு கிளம்பிவிடுகிறான். 

வயிற்றுப் பசிதான் உலகத்திலேயே தீராமல் கிடக்கிறது. பெரிய நெருப்பாக நாவல் முழுதும் பசி தொடர்கிறது. சுற்றியும் ஏரியும், ஆறுகளும் கிடந்தாலும் சாப்பிட அல்லி கிழங்கையும், காட்டுக் கீரைகளையம், கொஞ்சம் அவலையும் தின்று உயிர் பிழைக்க நேரும் அவலம். கொஞ்சம் சோறும் மீனும் இருந்தால் அது விருந்து போலவே தான். 

13 பிள்ளைகளைப் பெற்ற ஜோட்டனுக்கு வயிற்றுப் பசியுடன் கூடவே உடல் பசியும் வருகிறது. நான்கு கல்யாணம் முடிந்து தன் தம்பி ஆபேத் அலியின் வீட்டில் இருக்கும் ஜோட்டன், தன்னை யாராவது கல்யாணம் செய்து கூட்டிப் போக மாட்டார்களா என நினைக்கிறாள். அப்படியாவது தன் வயிறுக்கும், உடலுக்கும் உள்ள பசி நீங்காதா என எண்ணுகிறாள். அவளை கூட்டிப் போகிறேன் என்று சொன்ன பக்கிரி சாயபு நாட்களை கடத்திக் கொண்டே இருக்கிறார். ஒருநாள் வந்து அவளை அழைத்துக் கொண்டு செல்கிறார். 13 குழந்தைகளை பெற்ற எனக்கே தாம்பத்ய நாட்டம் இருக்கும்பொழுது மாலதி என்ன செய்வாள் என நினைக்கிறாள் ஜோட்டன். 

ஆபேத் அலியின் மனைவி ஜலாலியும் ஏழ்மை நிலைமையிலேயே உழல்கிறாள். மாற்றிக் கட்டுவதுக்கு ஒரு துணி இல்லாத கொடுமை அவளுடையது. ஒருநாள் மாலதியின் ஆண் வாத்தை பிடித்து சமைத்து விடுகிறாள் ஜலாலி. மாலதி வாத்தை தேடும்பொழுது அங்கே வரும் சாமு, நான் தேடி வருகிறேன் நீ வீட்டுக்குப் போ எனச் சொல்கிறான். ஜலாலி தான் திருடி இருக்கிறாள் என்பதை அறிந்த சாமு, அவளின் குடிசையை எட்டிப் பார்க்கிறான். அங்கே தீராத பசியில் வாத்து இறைச்சியை  உண்ட ஜலாலி தொழுகை செய்வதை பார்த்த அவன் ஒன்றும் பேசாமல் திரும்பி வந்து விடுகிறான். உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் இந்த ஏழைகளை கடைத்தேற்ற வேண்டும் என நினைக்கிறான். 

ஜலாலி ஒருநாள் அல்லிக் கிழங்கு தேடி ஏரியில் நீந்தும் பொழுது நீரில் மூழ்கி இறக்கிறாள். அந்த நிகழ்ச்சியை இரண்டு மூன்று பக்கங்கள் விவரிக்கிறது புத்தகம். அவளின் கனவில் வந்த மீன்கள், மீனின் உடம்பில் காலம் காலமாக ஆன தழும்புகள், அவளை நோக்கி வருபவை என.. அவளின் கனவா இல்லை நிஜமா என்பது போல இருக்கிறது. மூழ்கிப் போன அவளின் உடலை எல்லோரும் தேடுகிறார்கள். எதற்கும் பயப்படாத, சோனாவின் பெரியப்பா நேராக ஏரியில் இறங்கி ஒரு பொம்மையைத்  தூக்கி கொண்டு வருவது போல அலுங்காமல் நடந்து வருகிறார். 

தசரா பூஜைக்கு தன் தந்தை வேலை செய்யும் மாளிகைக்கு சகோதரர்களுடன் செல்கிறான் சோனா. மணீந்திர நாத் சோனாவுடனே புறப்பட தயாராகிறார். ஆனால் அவரைப்  படகில் இருந்து இறக்கிவிடுகிறார்கள். சோனாவுக்கு அங்கே அவனுக்கு அமலா, கமலா என இருவர் அறிமுகம் ஆகிறார்கள். அந்த வீட்டின் பேத்திகளான இருவரும் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பிறந்தவர்கள். அவர்களின் தந்தையும் காதல் திருமணம் செய்தவர். அதனால் குடும்பத்துடன் வசிக்காமல் கல்கத்தாவில் இருக்கிறார். தசராவுக்கு மட்டும் தன் குழந்தைகளுடன் வருவார். தன் வளர்ப்பு நாயுடன் சோனாவின் பெரியப்பா மணி எப்படியோ அங்கே வந்துவிடுகிறார். அப்பெண்களின் நீலநிறக் கண்களைப் பார்த்ததும் அவருக்குள் சிறு திடுக்கிடல் ஏற்படுகிறது. அதற்கு பின்னர் மற்றவர் சொல்வதை அவர் கேட்டுக்கொள்கிறார். சோனாவுக்கு தன் பெரியப்பா மனநிலை சரியானதால் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

தர்மூஜ் வயலில் வேலை செய்யும் வேலைக்காரன் ஈசம், பேலு, பேலுவின் மனைவி ஆன்னு, பக்கிரி சாயபு என ஒவ்வொரு கதாபாத்திரமும் நாவலில் வாழ்கிறார்கள். சோனா, நாவல் முழுதும் சிறுவனுக்கே உரிய ஆச்சரியத்துடனும், ஆவலுடனும் ஒவ்வொன்றையும் அணுகுகிறான். அழகுப் பையனாக இருக்கும் அவனை அமலா பயன்படுத்திகொள்ளும்போது அவனுக்கு தான் பெரியவன் என்ற மகிழ்ச்சியும், கூடவே பாவம் பண்ணியது போல பயமும் ஏற்படுகிறது.  மனிதர்களின் வாழ்க்கை விவரிப்புடன்  இயற்கையின் விவரிப்பு தான் நாவலை நிறைத்திருக்கிறது. 

நிகிலேஷ் குஹா தன் முன்னுரையில் இறுதியில் இப்படிச் சொல்கிறார்;
"மரத்தில் வாழ நேர்ந்தாலும் ஆகாயத்தில் சஞ்சரிக்க கூடிய நீலகண்டப் பறவை உலகத்துக்கும் சுவர்க்கத்துக்கும் மையமாக விளங்கும் ஞானி போல ஒரே நேரத்தில் புழுதியாலும் நட்சத்திரக் கூட்டத்தாலும் கவரப்பட்டு அந்தக் கவர்ச்சியில் தன்னையிழந்து விடும் நீலகண்டப் பறவை - இந்தப் பறவைதான் இந்நாவலின் குறியீடு..."

நீலகண்டப் பறவையைத் தேடி 
ஆசிரியர்: அதீன் பந்த்யோபாத்யாய 
தமிழாக்கம்: சு. கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு: நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்தியா

Monday, July 1, 2024

அர்ச்சுனன் தபசு - மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் - சா. பாலுசாமி

அர்ச்சுனன் தபசு எனப்படும் சிற்பத்தொகை மாமல்லபுரத்தில் காணப்படுகிறது. இதனை பகீரதன் தவம் என ஆய்வாளர்கள் சிலர் கூறியுள்ள கருத்துகளை மறு ஆய்வு செய்து இந்நூலை சா.பாலுசாமி அவர்கள் எழுதியுள்ளார். 

கடினமான பாறையில் செதுக்கப்பட்ட அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகையை மகாபாரத கதைகளில் சொல்லப்பட்டது போல அமைந்துள்ளது, அதில் உள்ள மிருகங்கள், பறவைகள், மரங்கள் என யாவும் இமய மலைத் தொடர்களில் உள்ளவையே என்றும் நிறுவுகிறார் பாலுசாமி. மேலும் அவர் இமய பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, பல்லாண்டுகள் முயற்சிக்கு பின்னரே இந்நூல் வெளிவந்துள்ளது.


கின்னர, கிம்புருடர்கள், நாக இணையர், கங்கையில் குளிப்பவர்கள், முனிவர்கள் என ஒவ்வொரு சிற்பம் பற்றியும் விளக்குகிறார். இது பகீரதன் தவம் அல்ல அவர் மறுக்க ஒரு பெரிய காரணத்தைச் சுட்டுகிறார். அதாவது, சிற்பத்தில் காட்டுவது கங்கை நதி என்பது எல்லோரும் ஒப்புக்கொள்வது. பகீரதன் தவம் செய்ததே கங்கை நதி பூமியில் இறங்க வேண்டும் என்பதற்காக, ஆனால் அவன் தவம் செய்யும்போதே கங்கை நதி பாய்ந்து கொண்டுள்ளது. மற்ற காரணங்கள் நிறைய இருந்தாலும், இது முதல் தவறு எனச்  சொல்கிறார். 

இப்பாறைச் சிற்பத்தில் வடிக்கப்பட்ட விலங்குகள், பறவைகளை இமைய மலையில் கண்டது பற்றி வியக்கிறார். சிற்பத்தின் ஒவ்வொன்றை பற்றியும் விளக்கும் அவர், சிற்பம் காட்டும் நேரத்தினையும் குறிப்பிடுகிறார். சிற்பத்தில் இரை எடுக்காமல் இளைப்பாறும் மான், சிங்கங்கள் மற்றும் ஆற்றில் குளிக்கும் யானைகள் ஆகியவற்றை கொண்டு மதிய நேரமே எனச் சொல்கிறார். 




மேலும் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் சிறப்பாக செதுக்கப்பட்ட யானைக் கூட்டம் பற்றியும் கூறுகிறார். பெரிய யானைகளுக்கு இடையில் காணப்படும் அனைத்து சிறு யானைகளும்  குட்டிகள் என்றே எல்லோரும் நினைப்பார்கள். அவை எல்லாமே சிறு குட்டிகள் அல்ல, வளர்ந்த யானைகளும் உண்டு, ஏனென்றால் சிலவற்றுக்கு தந்தம் உண்டு. அப்படி என்றால் ஏன் சிறிதாக காட்ட வேண்டும்?. ஆற்றின் கரையில் கொஞ்சம் தள்ளி, தள்ளி அந்த பெரிய யானைகள் குளித்துக் கொண்டிருக்கின்றன. கண்ணால் கண்ட காட்சியை சிற்பத்தில் கொண்டுவர சிற்பிகள் இந்த உத்தியை பயன்படுத்தியுள்ளனர் என்கிறார் பாலுசாமி. 

ஒரு சிற்பம் உணர்த்த வரும் நிகழ்வை பொத்தாம் பொதுவாக நாம் புரிந்து கொள்ளக்கூடாது. அதற்கு கதைகள், புராணம் பற்றிய தெளிவும்  நிகழும் இடம் போன்ற அனைத்தும் அறிந்துகொள்ள வேண்டும் எனத்  தூண்டுவது இந்நூல்.

அர்ச்சுனன் தபசு - மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் 
ஆசிரியர்: சா. பாலுசாமி
பதிப்பகம்: காலச்சுவடு