மதுரையை நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தை களமாக வைத்து ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு படையல். மராட்டியர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் என தொடர்ந்து படையெடுப்பு நடத்திய காலம். நாயக்கர் ஆட்சி சிறப்பாக நடந்தாலும் தொடர்ந்த போரின் விளைவாக அதிகாரத்தை கைப்பற்ற போராட்டம், அதிக வரி என மக்கள் சந்திக்கும் இன்னல்கள் அதிகம். இந்தத் தொகுப்பில் ஜெயமோகன் ஆறு கதைகளை எழுதியுள்ளார்.
Monday, October 2, 2023
படையல் - ஜெயமோகன்
கந்தர்வன்
மிகுந்த பக்தியுள்ள நாயக்க மன்னன் நல்லவன் தான். குறைகளை சொன்னால் வரியைக் குறைப்பான். ஆனால் அவனைச் சந்திக்க சுற்றி இருப்பவர்கள் விடுவதில்லை. எனவே ஊர்த் தலைவர்கள் சேர்ந்து மன்னன் முன்னால் யாராவது கையில் ஓலையுடன் விழுந்து தற்கொலை செய்ய வேண்டும் எனச் சொல்கிறார்கள். பின்னர் மன்னன் நிச்சயம் காது கொடுத்து கேட்பான்.
தாய்தந்தை இல்லாமல் கோவிலில் வளர்ந்து வரும் அணைஞ்ச பெருமாளிடம் சொல்கிறார்கள். நல்ல உடற்கட்டுடனும், தைரியமும் உள்ள அவன் சரியென்கிறான். மன்னன் கோவிலுக்கு வரும்போது கோபுரத்தில் இருந்து விழ வேண்டும் என்பது திட்டம். வரியே கட்டாத அவன் விழுந்தால் பிரச்சினை வருமென்பதால் அவனை அந்த ஊரில் அரிசிக்கடை வைத்திருக்கும் முருகப்பன் எனச் சொல்லிவிடலாம் எனத் தீர்மானிக் கிறார்கள்.
முருகப்பன் தன் மனைவி வள்ளியம்மையை திட்டிக்கொண்டே இருக்கிறான். கோவிலில் இருக்கும் அணைஞ்ச பெருமாளை அவள் நினைத்துக்கொள்வதாக எண்ணித் திட்டுகிறான். நல்ல திடகாத்திரமாக இருக்கும் அணைஞ்ச பெருமாளை ஊரில் உள்ள எல்லாப் பெண்களும் தான் கண்கொண்டு பார்க்கிறார்கள். திரும்ப திரும்ப அவன் பெருமாளுடன் தொடர்பு படுத்தி பேசுவதால், "அதனால் என்ன" என்று கேட்கும் வள்ளியம்மையை அவன் அடித்தும் விடுகிறான்.
திட்டமிட்டபடி அணைஞ்ச பெருமாள் கோபுரத்தில் இருந்து மன்னன் முன் வீழ்ந்து உயிர் துறக்கிறான். ஒரு கந்தர்வன் பறந்து வருவது போல கீழே வந்து மரணிக்கிறான். மன்னன் அவன் கையில் இருந்த ஓலையை வாங்கிப் பார்த்து, இவனுக்கு இறுதி மரியாதையை சிறப்பாகச் செய்யுங்கள், மற்ற விஷயங்கள் கண்டிப்பாக விசாரிக்கப்படும் என்று சொல்லிவிட்டு திரும்பிச் செல்கிறான். அவன் வீர மரணம் அடைந்ததால் கல் நட்டு வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள் அவனின் கூட்டத்தார். இறந்தது முருகப்பன் என்பதால் அவன் மனைவி வள்ளியம்மையை கூட்டி வருகிறார்கள். கதறிக்கொண்டே வரும் அவள், அணைஞ்ச பெருமாள் உடலைப் பார்த்ததும் திகைத்து நிற்கிறாள். உடலுக்கு சிதை மூட்டியதும் அவளும் உடன் சிதையில் குதித்து அவனைத் தழுவிக்கொண்டு இறக்கிறாள். முருகப்பன் ஊரைச் சேர்ந்தவர்கள் திகைத்து நிற்கிறார்கள்.
கோபுரத்தில் இருந்து விழுந்தவன் எறிமாடனாகவும், அவனுடன் சிதையேறிய மனைவி உடன் நின்ற நங்கையாகவும் கோவில் கொண்டு மக்களால் வணங்கப்படுகிறார்கள்.
யட்சன்
கந்தர்வன் கதையின் தொடர்ச்சியாக யட்சன் கதை. இப்பொழுது இறந்தது முருகப்பன். ஆனால் அவன் உயிரோடு இருக்கிறான். மனைவி சிதையேறிவிட்டாள் என்பதை அறிந்து திகைக்கிறான். அவன் ஊரைச் சேர்ந்த சிலர், 'நீ உயிரோடு இருப்பதால் கோபுரத்தில் இருந்து குதிக்கச் சொன்னவர்களுக்கு பிரச்சினை வரும். எனவே அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள் ' எனச் சொல்லவும் அவன் பயப்பட்டு ஊரை விட்டு போய்விடுகிறான்.
முருகப்பன் போன இடத்தில் நன்கு சம்பாதிக்கிறான். தாசிப் பெண்டிருக்கு எல்லாப் பணத்தையும் செலவழிக்கிறான். பெண்டிர் தொடர்பால் தொழு நோயாளி ஆகி, பின்னர் யாரும் அவனை அண்டவிடுவதில்லை. முருகப்பன் பல வருடங்கள் கழித்து தன் மனைவி கோவில் கொண்டுள்ள ஊருக்கு வருகிறான். உடல் மெலிந்து ஆளே மாறிப் போயிருப்பதால் அங்கே அவனை யாருக்கும் தெரியவில்லை. எறிமாடனின் கோவிலில் அமர்ந்து கொண்டு 'கட்டியவன் நான் இருக்க. கண்டவனுக்கு தீப்பாஞ்ச சிறுக்கி உங்களுக்கு தெய்வமா?' என்று வணங்க வருபவர்களைத் திட்டுகிறான். கோவில் கொண்டு அமர்ந்துள்ள அணைஞ்ச பெருமாளையும் வள்ளியம்மையையும் கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறான்.
ஒருநாள் அவன் அங்கேயே இறந்தும் போகிறான். அவனுக்கும் அங்கே ஒரு கல்லை எதிரில் நட்டி விடுகின்றனர். எறிமாடனையும், தன் மனைவியையும் வெறித்துப் பார்த்துக்கொண்டு யட்சனாக எதிரி ல் அமர்கிறான் முருகப்பன்.
எரிசிதை
பெரிய ராணி மங்கம்மாவின் புதல்வன் இறந்துவிட, மருமகள் சின்ன முத்தம்மாள் கர்ப்பமாக இருப்பதால் அவளைக் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறார்கள். அவளோ யாரிடமும் எதுவும் பேசாமல், உணவையும் குறைத்துக் கொள்கிறாள். தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை நினைத்து அவள் மகிழ்வதும் இல்லை. பிள்ளை பிறந்த பின்னர் தன்னை சிதையேற்றி விடுவார்கள் என நினைத்து பயப்படுகிறாள்.
வேலைக்காரியான நாகலட்சுமியிடம் கொஞ்சம் நெருங்கி பேசுகிறாள். ராணி படும் இன்னல் கண்டு தேற்றுகிறாள். ராணியின் கருவைக் கலைக்கவும் வேலைக்காரி மூலம் முயல்கிறார்கள். நாகலட்சுமியும் சின்ன முத்தம்மாளிடம் சென்று, இந்த மருந்தைக் குடித்தால் உங்களுக்கு எல்லாவற்றிலுமிருந்தும் விடுதலை என்கிறாள். சரி நான் அப்புறம் குடிக்கிறேன் என்று வாங்கி வைக்கிறாள் ராணி. ஆனால் அந்த இரவு அவளுக்கு வரும் ஒரு கனவின் மூலம் அந்த திட்டம் முறியடிக்கப்படுகிறது. தாய்மை வெல்கிறது.
====
இத்தொகுதியில் உள்ள மற்ற கதைகளான படையல், மங்கம்மா சாலை மற்றும் திரை ஆகிய கதைகளும் முக்கியமானவை. திரை கதையில் ராணி மீனாட்சி தாயுமானவர் மேல் கொண்ட விருப்பு பற்றி பேசுகிறது. திருச்சியை விட்டு சென்றுவிடும் அவரை திரும்ப வரவழைக்க ராணி விரும்புகிறார். அதற்கு தூதனையும் அனுப்புகிறார். அவன் மூலம் கதை சொல்லப்படுகிறது. அவர் திரும்ப வர மறுத்துவிடுகிறார். ராணி மீனாட்சி சந்தா சாகிப்பின் நயவஞ்சக படையெடுப்பால் இறக்கிறார்.
கள்வர்களும் கொலைகாரர்களும் உள்ள சாலையை ராணி மங்கம்மா எப்படி மாற்றினார் எனச் சொல்கிறது மங்கம்மா சாலை கதை. திறமை வாய்ந்த கள்வர்களை கொல்வது சுலபமில்லை என அறிந்து ராணி தன் படையுடன் சென்று எப்படி அவர்களை தன் ஆட்சியில் கீழ் கொண்டுவந்தார் என விவரிக்கிறது.
Monday, September 11, 2023
திருடன் மணியன்பிள்ளை - ஒரு திருடனின் சுயசரிதை
களவும் கற்று மற என்பது பழமொழி. ஒருமுறை நீங்கள் களவு செய்து மாட்டிக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் திருடன்தான் என்கிறார் மணியன்பிள்ளை. "களவென்பது கற்று மறக்கும் விசயமல்ல. முதல் வீழ்ச்சியே மிகப் பெரிய பாதாளத்தில்தான் முடியும்
சிறுவயதில் தந்தையை இழக்கிறார் பிள்ளை. உறவினர்கள் மணியன் பிள்ளை குடும்பத்துக்கு தர வேண்டிய சொத்தில் ஏமாற்றுகிறார்கள். ஒரு சிறு வீட்டை மட்டுமே ஒதுக்கித் தருகிறார்கள். அம்மா மற்றும் சகோதரிகளுடன் அந்த வீட்டில் வறுமையும் வாழ்கிறது. தந்தை இருக்கும் வரையில் பசி என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்த பிள்ளை, பசியால் வாடுகிறார். அதுவும் பதின் வயதில் இருக்கும் அவருக்கு, வீட்டில் உணவு என்பது கால் வயிறு நிறையும் அளவுக்கே கிடைக்கிறது.
முதன் முதலில் தான் திருட்டுக்கு எப்படி வந்தேன் எனச் சொல்கிறார் பிள்ளை. சொந்தத்தில் ஒரு அத்தை முறையுள்ள பெண், பக்கத்து வீட்டு குழந்தையின் தங்கச் சங்கிலியை திருடி வரச் சொல்கிறார். மணியன் பிள்ளை அந்தக் குழந்தையிடம் இருந்து சங்கிலியை கொண்டு வந்து தர, அத்தை பயந்து அதை வாங்க மறுக்கிறாள். பின்னர் சிறு சிறு திருட்டுகள், கொஞ்ச நாட்கள் சிறை வாசம் எனப் போகிறது.
ஒவ்வொரு முறை சிறைக்குச் செல்லும்போதும் அவரை ஜாமீனில் விடுவிக்க அவரின் அம்மா வருகிறார். ஆனால் மணியன்பிள்ளை தரும் எந்த பணத்தையும் அவரின் அம்மா வாங்குவதில்லை. அவரின் சகோதரிகளும் அவ்வாறே அதைத் தொடுவதில்லை. சில சமயங்களில் வழக்கறிஞர் இல்லாமல் அவரே வாதாடுகிறார். நீதிபதி ஒரு முறை ஏன் வக்கீல் இல்லை என்று கேட்க, "நீதிபதி அவர்களே, நான் பணம் கொடுத்து அமர்த்தும் ஒரு வக்கீலைக் காட்டிலும், நான் தவறு செய்யவில்லை என்று நிரூபிக்கும் பொறுப்பு எனக்குத்தானே அதிகம் " என்கிறார். பெரும்பாலான வழக்குகளில் மணியன் பிள்ளையே வாதாடி இருக்கிறார்.
திருடிய பின்னர் வரும் நகைகளை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் வாங்க மாட்டார்கள். அதற்கெனவே இருக்கும் ஆட்களிடம் சென்றால் அவர்கள் தரும் சொற்ப பணத்தை வாங்கி குடிப்பது, சிலருக்கு உதவுவது எனச் செலவழிக்கிறார். நண்பர்கள் யாரேனும் உதவி கேட்டால் மறுக்காமல் செய்திருக்கிறார். சில காவல் அதிகாரிகளும், உறவினர்களும் பிள்ளையிடம் வீண் வம்புக்கு வர, அவர்களை காத்திருந்து பழி வாங்குகிறார் பிள்ளை. சட்டத்துக்கும், போலீசுக்கும் பணிந்தே போகிறார் பிள்ளை. அவரை நீதிமன்றம் கூட்டிப் போகும்பொழுது கைவிலங்கு போடாமலே அழைத்துச் செல்கிறார்கள். பிள்ளை தப்பி போக மாட்டான் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையே பின்னாளில் அவர் காவல் நிலையத்தில் பணி புரியவும் வைக்கிறது.
திருடன் என்று தெரிவிக்காமல் ஒரு பெண்ணை கட்டி வைக்கிறார்கள். பின்னர் தெரிந்து அந்த பந்தம் முறிந்து போகிறது. இன்னொரு பெண்ணுடனான காதலும் அவளின் அம்மாவால் அழிந்து போகிறது. பின்னர் மெகருன்னிஸாவை மணக்கிறார். அவளையும் விட்டுவிட்டு வரும் அவர், சில மாதங்கள் கழித்து ஒருமுறை அவள் மாசமாக இருப்பதை பார்த்து பின்னர் அவளுடனே இருக்கிறார். மகன் பிறக்கிறான். இந்த திருட்டு வாழ்க்கை வேண்டாம் என்று மெகருன்னிஸா சொல்லிக்கொண்டே இருக்கிறாள். பிள்ளை கேட்பதாய் இல்லை.
கேரளாவில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நேரத்தில், ஒரு வீட்டில் புகுந்து கிடைத்த நகைகளுடன் மைசூர் வருகிறார்கள். அங்கே அவர் சலீமாக மாறுகிறார். சிறு டீக்கடை வியாபாரத்தில் துவங்கும் பிள்ளைக்கு அங்கே நன்கு படித்த யூசுபின் துணை கிடைக்கிறது. அவன் துணையுடன் புகையிலை தோட்டங்களில் முதலீடு செய்கிறார். முதலீட்டுக்கு நகைகள் உண்டு. தோட்டத்தில் வேலை செய்யும் பணியாட்களிடம் பணிவுடன் நடந்து கொள்வதால், இவரை அங்கே கொண்டாடுகிறார்கள். வருவாய் பெருகுகிறது. கூடவே பெரிய ஆட்களின் தொடர்பும். சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு வர, அங்கேயே பிறந்து வளர்ந்தவர் என சான்றிதழும் பெறுகிறார்.
இடையில் ஒருநாள் மைசூர் வந்து சென்ற மச்சினன் மூலம் கேரளா போலீஸ் அவரைக் கண்டடைகிறார்கள். ஒரே நாளில் கட்டிய கோட்டை சரிகிறது. அவர் அங்கே சம்பாதித்த சொத்துக்கள், நகைகள் என அத்தனையும் அரசுக்கு செல்கிறது. நீதிமன்ற தீர்ப்பில் மைசூரில் சம்பாதித்த சொத்துக்களில் அவரின் உழைப்பும் உண்டு என்பதால் அவருக்கும் கணிசமான தொகையை பெற உரிமை உண்டு என்கிறது. ஆனால் இரண்டு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அவருக்கு கடைசி வர அந்தப் பணம் கிடைப்பதில்லை.
இவர் சிறைக்குச் சென்றுவிட மனைவி வீட்டு வேலைக்கு வெளிநாடு செல்கிறார். இடையில் ஒரு முறை வந்த மெகருன்னிசா பிள்ளையை சந்திக்கிறார். திரும்பவும் வெளிநாட்டு வேலைக்கு சென்ற இடத்தில் இயற்கை எய்துகிறார். மனைவி இறந்ததில் மணியன் பிள்ளை கலங்கிப் போகிறார்.
ஒருமுறை காவல் துறையிடம் அகப்பட்டால் பழைய வழக்குகள் தோண்டி எடுக்கப்படுகின்றன. அவரின் கைரேகை பதித்திருந்த குற்றங்கள் மீண்டும் உயிர் பெறுகின்றன. வழக்குகளில் தண்டனை முடிந்து வெளியே வந்தாலும் எங்கேயோ நடந்து போய்க் கொண்டிருந்தால் கூட 'திருட முயற்சி' என்று காவலர்கள் சந்தேகப்படுகிறார்கள்.
வழக்குகளில் இருந்து வெளியே வந்த பின்னர் மகன் அவரைப் பார்த்துக்கொள்கிறான். அவனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் உண்டு. ஏதாவது தொழில் செய்யலாம் என்று அவர் முனைய ஒரு வங்கியில் கொஞ்சம் பணம் கொடுக்கிறார்கள். அந்தப் பணத்தை வாங்கிய இரவில் குடித்து விட்டு எங்கேயோ கிடக்கிறார். அடுத்த நாள் காலையில் போதை தெளிந்து பார்த்தால் கால் சட்டையில் வைத்திருந்த பணம் திருடு போய்விட்டது. ஒரு திருடனிடம் இருந்தே பணம் திருடப்பட்டதை நினைத்து பிள்ளை வருந்துகிறார்.
மகனிடம் இருந்து பணம் திருடு போன நாளில் பிள்ளை உண்மையிலேயே விதியை நினைத்து அழுகிறார். தொழிலுக்கென மகன் சென்னைக்கு கொண்டு போன 50,000 ரூபாய் திருடு போகிறது. மருமகளின் நகைகள் உட்பட எல்லாத்தையும் விற்று அந்தத் தொகையை அடைத்தாலும், அதற்கு பின்னர் முன்னேறவே முடியாமல் மகன் திணறுகிறான். நான் செய்த பாவங்களுக்கு கடவுள் எனக்கு தண்டனை வேண்டும் என்றாலும் தரட்டும், மகனை ஏன் கடவுள் தண்டிக்க வேண்டும் என்று புலம்புகிறார். தனக்கு மட்டும் வலி என்றால் கண்டுகொள்ள மாட்டார், ஆனால் உயிருக்கு மேலான மகனுக்கு நேர்ந்தால் தான் பிள்ளை வருந்துவான் என கடவுள் நினைத்திருக்க கூடும்.
இன்னும் சில வழக்குகள் நடந்து கொண்டிருப்பதாக கூறும் பிள்ளை, களவு வாழ்க்கை பெரும் கேடாய் முடியக் கூடியது என்கிறார். பிள்ளை சொல்கிறார், "களவென்பது கற்று மறக்கும் விசயமல்ல. முதல் வீழ்ச்சியே மிகப் பெரிய பாதாளத்தில்தான் முடியும் . கரையேற முயற்சிக்கும் போதெல்லாம் போலீசும் சமூகமும் மேலும் உதைக்கும்." .
==
திருடன் மணியன்பிள்ளை - ஜி.ஆர். இந்துகோபன்
தமிழில் மொழிபெயர்ப்பு : குளச்சல் யூசுஃ ப்
2018-ஆம் ஆண்டின் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்ற நூல்.
Subscribe to:
Posts (Atom)